
பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகவிருக்கின்றன 2019-க்கான ஆஸ்கர் விருது முடிவுகள். எந்தெந்தப் படங்கள் எந்தெந்த விருதுகள் பெறும்? ஓர் அட்டவணை ஒப்பீடு.
Ford v ferrari
இரு நிறுவனங்களிடையே நடந்த பனிப்போர்க் கதை டிராக்கை, ரேஸ் டிராக்குக்கு அப்பால் வைத்துவிட்டு வேறொரு சுவாரஸ்யக் கதை சொன்னது இந்தப் படம். ஹென்றி ஃபோர்டு II-ன் கனவை நிஜமாக்கிய இரு நண்பர்களின் கதைதான் இது என்றாலும், அதற்குள் அவர்கள் சந்தித்த சவால்கள், சமரசமின்றி கார்ப்பரேட் அதிகாரத்துக்கு சிண்டு முடிந்த அவர்களின் பிடிவாதப் போராட்டம் எனப் பல்வேறு ஆச்சர்யங்களைப் புதைத்து வைத்துக் கைத்தட்டல் பெற்றது இந்தப் படம்.

கார் ரேஸ் காட்சிகளின் துல்லிய ஒலிப்பதிவுக்காக சவுண்ட் மிக்ஸிங்கில் ஆஸ்கர் வெல்ல வாய்ப்பிருக்கிறது.
The irishman
வாழ்ந்து முடிந்து மரணத்துக்காகக் காத்திருக்கும் ஹிட்மேன் ஃப்ராங்க் ஷீரனின் வாழ்வை மூன்றரை மணிநேரப் படமாக்கி அதில் மூத்த நடிகர்களை நடிக்கவைத்து, கிட்டத்தட்ட சீனியர் சிட்டிசன்களின் கலைப்படைப்பாகத் தனி முத்திரை பெறுகிறது இந்தப் படம். பாப்கார்ன் படங்களைத்தான் நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் என்ற கருத்தை உடைத்துப் படு சீரிஸான படமாக வந்திருக்கும் இந்தப் படத்தில், நடிப்பைத் தாண்டி நாயகர்களை இளமையாகக் காட்ட டிஜிட்டல் டீ ஏஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறது.

சிறந்த படம், நடிகர், துணை நடிகர், விஷுவல் எஃபெக்ட்ஸ், தயாரிப்பு வடிவமைப்பு உள்ளிட்ட ஆறு ஆஸ்கர்களை வெல்லும் வாய்ப்பு இந்த கேங்ஸ்டர் பட்டாளத்துக்கு உள்ளது.
JOJO RABBIT
இரண்டாம் உலகப்போர்க் களத்தில் நடக்கும் ஒரு நகைச்சுவை மென்சோகக் கதை. ஹிட்லர் நாஜிப் படைகளின் இளைஞர் முகாமில் , தாய் ரோஸியுடன் வளர்கிறான் `ஜோஜோ.’ முயலைக்கூட கொல்லத் துணியாத ஜோஜோவுக்கு ஹிட்லரின் உருவத்தை யொத்த கற்பனை மனிதன் நண்பனாகிறான்.

ஹிட்லர்தான் எல்லாம் என நம்ப ஆரம்பிக்கும் ஜோஜோவுக்கு, ரோஸி ஒரு யூதப் பெண்ணைக் காப்பாற்ற முயல்வது தெரியவருகிறது. அப்பெண்ணின் நட்பு, இறுதியில் ஜோஜோவுக்கு என்ன ஆகிறது போன்றவற்றைத் தன் நகைச்சுவை பாணியில் எழுதி இயக்கியிருக்கிறார் டைக்கா வட்டிட்டி. ஆறு விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு பெரிய தலைகள் மோதிக்கொள்ளும் தழுவிய திரைக்கதை பகுதியில்தான் டைக்காவுக்கு விருது வெல்ல வாய்ப்பிருக்கிறது.
Joker
DC காமிக்ஸில் முக்கிய வில்லன் கதாபாத்திரமான ஜோக்கரை மட்டும் தனியே எடுத்து, அவன் கோபத்துக்கான காரணத்தை செல்லுலாய்டில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் டாட் பிலிப்ஸ். ஹீத் லெட்ஜரை எங்கும் நினைவுபடுத்தாமல் அதே சமயம் ‘ஜோக்கர்’ பாத்திரத்தின் வலிகளையும் நமக்குள் கடத்தி மிரட்சி ஏற்படுத்தினார் நாயகன் வகீன் பீனீக்ஸ் (Joaquin Phoenix).

உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒரு சிறிய திரையரங்கில் படத்தைப் பார்த்தவர்கள்கூட ‘இந்த மனுஷனுக்குத்தான் இந்த வருஷம் ஆஸ்கர்’ என்று வகீன் பீனீக்ஸுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்திருப்பார்கள். அதிக வசூல் செய்த ‘R-Rated’ திரைப்படம் என்ற சாதனையையும் செய்திருக்கிறது. நடிகர், இசை, ஒப்பனை, தழுவி எழுதப்பட்ட திரைக்கதை, இயக்குநர் போன்ற ஆஸ்கர்களை இந்தப் படம் வெல்லும் என்று எதிர்பார்க்கலாம்.
Little Women
நான்கு ‘மார்ச்’ சகோதரிகளின் வாழ்வைப் பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கான அடிப்படை 1868-ல் இதே பெயரில் வெளியான நாவல். இந்தப் படத்தின் மூலம் ஏழு முறை வெள்ளித்திரையை ஆக்கிரமித்து ரெக்கார்டு செய்திருக்கிறது அந்த கிளாசிக் நாவல்! இந்த வருட ஆஸ்கர் ரேஸில் ஆறு விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப் பட்டிருக்கும் இந்தப் படத்தை இயக்கியிருப்பவர், நடிகை மற்றும் இயக்குநரான 36 வயது க்ரேட்டா கெர்விக்.

இயக்குநர் விருதுக்கு அம்மணியின் பெயர் பரிந்துரை செய்யப்படாதது அவர் பெண் என்ற காரணத்தால்தான் என்று ஒரு சாரர் கொடி பிடிக்கிறார்கள். படத்தில் வரும் ஏகப்பட்ட `மார்ச்’ கதாபாத்திரங்களில் ஏமி மார்ச்சாக நடித்திருக்கும் ஃப்ளோரன்ஸ் பக், துணை நடிகைக்கான விருதை வெல்ல வாய்ப்புகள் அதிகம்.
MARRIAGE STORY
திருமணத்துக்குப் பின்னான அழுத்தச் சூழலால் விலக நேரும் இருவரின் வாழ்க்கையை ஆத்மார்த்தமாய்ச் சொல்கிறது இயக்குநர் நோவாவின் `மேரேஜ் ஸ்டோரி.’ நியூ யார்க்கின் தலைசிறந்த மேடைநாடக இயக்குநர் சார்லியின் நாடகத்தில் நடிக்கிறார் மனைவியும் நடிகையுமான நிக்கோல்.

வெளியுலக வாழ்க்கை இப்படியிருக்க, குடும்பத்துக்குள் இருவரும் பொருமிக்கொண்டிருக்கிறார்கள். நிக்கோல் தன் மகனுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்ல, பிரச்னை விஸ்வரூபமெடுக்கிறது. இருவரின் வக்கீல்களும், இவர்களின் உறவினை மேலும் சிக்கலாக்குகி றார்கள். பிரிந்தபின்னும் அன்புடன் இருக்கலாம் என்னும் பார்வையை முன்வைத்து முடிகிறது `மேரேஜ் ஸ்டோரி.’ படத்துக்கான ஆறு விருதுகளுள், நடிகைக்கான விருதை நிக்கோலாக அசத்திய ஸ்கார்லெட் ஜொஹான்ஸனும், துணை நடிகைக்கான விருதை நிக்கோலின் வக்கீலாக நடித்த லாரா டெர்னும் வெல்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
1917
முதல் உலகப் போரில் ஜெர்மனியின் சூழ்ச்சியி லிருந்து 1,600 போர் வீரர்கள் தப்பிக்க இரு வீரர்கள் உதவுகிறார்கள். அந்த இருவரின் பயணத்தை விவரிக்கிறது `1917.’ டெலிபோன் ஒயர்கள் அறுபட்டு நிற்க, தோண்டப்படும் குழிகள் தங்களுக்கான மரணப்படுக்கைகள் என்பதே தெரியாமல், `வெற்றிவேல், வீரவேல்’ எனச் செல்கிறார்கள் 1,600 போர் வீரர்கள். வழி நெடுக இருக்கும் எதிரிக் கூடாரங்களைக் கடந்து இரு இளைஞர்களும் இவர்களைக் காப்பாற்றிய வரலாற்றைப் பெரிய திரைகளில், மீதமிருக்கும் மனிதத்துடன் சொல்கிறது 1917.

சினிமா என்னும் மாயவித்தையில், முழுப்படமும் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டதோ என நம்பும் அளவுக்கு அதன் ஒளிப்பதிவை நேர்த்தியாகச் செய்திருக்கும் ரோகர் டீகின்ஸ் கட்டாயம் விருது வெல்வார் என உலகமே கணித்திருக்கிறது. கோல்டன் குளோப், கிரிட்டிக்ஸ் சாய்ஸ் எனப் பலவற்றுள் இயக்கம், படம் போன்ற விருதுகளும் 1917க்குத்தான் என்பதால், ஆஸ்கரில் பெரிய தலைக்கட்டு இந்தப்படம் தான்.
Once Upon a Time in Hollywood
60-களின் இறுதியில், கனவு நகரமான லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் ஒரு நடிகர் மற்றும் அவரின் ஸ்டன்ட் டபுளைச் சுற்றி நடக்கும் கதையில், வரலாற்றுச் சம்பவம் ஒன்றைப் புகுத்தி, அதைச் சற்றே திரித்து, தன் டிரேட்மார்க் காட்சிகளை இணைத்து தம்ப்ஸ் அப் காட்டியிருப்பார் இயக்குநர் குவண்டின் டாரன்டினோ. பல நாள் தவமான ஆஸ்கர் விருதை 2016-ல் வென்ற பிறகு, பல சமூக முன்னெடுப்புகளை எடுத்து குளோபல் ஐகானாக இருக்கும் லியனார்டோ டிகாப்ரியோ மீண்டும் நடிகர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்.

ஆனால், இதில் துணை நடிகராக ப்ராட் பிட் அசத்தியிருப்பதால் லியோவைவிட இவருக்கே ஆஸ்கர் வாய்ப்பு அதிகம் எனலாம். பத்து ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் இந்தப் படம் துணை நடிகர், தயாரிப்பு வடிவமைப்பு, திரைக்கதை உள்ளிட்ட ஆஸ்கர்களை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது.
Parasite
வேலைக்கே செல்லாமல் எல்லா வளங்களையும் பெற நினைக்கும் குடும்பம் `கிம்.’ ஊரிலேயே பணக்காரக் குடும்பம் ‘பார்க்.’ `பார்க்’ குடும்பத்தில் `கிம் கி வூ’வுக்கு வாத்தியார் வேலை கிடைக்கிறது. நூல் கிடைத்தால் சேலை நெய்யும் கிம் குடும்பம், அங்கிருக்கும் பணியாளர்களை விரட்டியடித்து அப்பணிகளுக்கு ஒவ்வொருவராக நுழைகிறார்கள். ‘மின்சார கண்ணா’ கதையாக இருக்கிறதே என்றால், நிச்சயமாக இல்லை என்கிறார்கள் `பாராசைட்’ படத்தின் ரசிகர்கள்.

தென்கொரியத் திரைப்படமான `பாராசைட்’ ஆஸ்கரின் தலைசிறந்த விருதான சிறந்த படத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஆனால், தி ஹோஸ்ட், ஸ்நோபீயர்ஸர், ஓக்ஜா போன்ற தன் முந்தைய படங்களின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் போங் ஜூங் இம்முறை ஆஸ்கரில் விருதுகளை அள்ளுவது நிச்சயம்.
கடந்த ஆண்டைப்போலவே, இந்த முறையும் தொகுப்பாளர்கள் இல்லாமல் நிகழவிருக்கிறது ஆஸ்கர் விழா. விருது வழங்குபவர் வந்து வெற்றியாளரை அறிவிக்க, வெற்றியாளர்கள் விருதைப் பெற்றுக் கொள்வார்கள்.
இந்தியாவின் பரிந்துரையாக இந்த முறை ஆஸ்காருக்குச் சென்ற படம் பாலிவுட்டின் `கல்லி பாய்.' ஆனால், அப்படம் இறுதிப்பட்டியலுக்குக்கூடத் தகுதி பெறவில்லை.
ஜோஜோ ரேபிட் படத்துக்காக `துணை நடிகை’, மேரேஜ் ஸ்டோரி படத்துக்காக `நடிகை’ என ஸ்கார்லெட் ஜொஹான்ஸனுக்கு இம்முறை இரண்டு பரிந்துரைகள். இதுவரை எந்த நடிகரும் இரண்டு பரிந்துரைகளையும் விருதுகளாக மாற்றியதில்லை. ஸ்கார்லெட் வரலாறு படைப்பதும் சந்தேகம் என்கிறார்கள்.
இந்த ஆண்டு, நெட்ஃபிளிக்ஸின் படங்கள் ஆஸ்கரை அலங்கரிக்கவிருக்கின்றன. `தி ஐரிஷ்மேன்' - 10, `மேரேஜ் ஸ்டோரி' - 6, `தி டூ போப்ஸ்' - 3 என நெட்ஃபிளிக்ஸ் 24 விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. டாக்குமென்ட்டரி, குறும்பட டாக்குமென்ட்டரி, அனிமேஷன் விருதுகளும் அவற்றுள் அடக்கம்.
சூப்பர் ஹீரோ படமான வார்னர் பிரதர்ஸின் ஜோக்கர், இந்த ஆண்டு 11 பரிந்துரைகளைப் பெற்று ரேஸில் முதலிடத்திலிருக்கிறது.
14வது முறையாக பிளேடு ரன்னருக்கு (2017) பரிந்துரை செய்யப்பட்ட போதுதான், எழுபது வயதான ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. 1917 மூலம் 15வது முறையாகப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்.
50 தடவைக்கும் மேலாக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் இசையமைப்பாளர் ஜான் வில்லியம்ஸ் இந்த ஆண்டும் ஸ்டார் வார்ஸ் படத்துக்காகப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். இவர் `ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ பட்டத்துக்காக ஆஸ்கர் வென்று 25 ஆண்டுகள் ஆகிவிட்டன.