அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. இதில் `RRR' படத்தின் `நாட்டு நாட்டு' பாடல் இந்தியாவுக்காக ஆஸ்கர் விருதை வென்று பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
இப்பாடல் ஏற்கெனவே 'கோல்டன் குளோப்' மற்றும் 6வது ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் (Hollywood Critics Association) விருது வழங்கும் விழா என இரண்டிலும் சிறந்த பாடலுக்கான விருதுகளை வென்றிருந்த நிலையில் தற்போது ஆஸ்கர் விருதையும் வென்று பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தை ராஜமெளலி, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் உள்ளிட்டப் படக்குழுவினர் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் வென்றது குறித்துக் கூறியுள்ள ராம் சரண், "'RRR' திரைப்படம் எங்கள் வாழ்க்கையிலும், இந்திய சினிமா வரலாற்றிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த படமாக எப்போதும் நிலைத்து இருக்கும். ஆஸ்கர் விருது வென்று கொடுத்ததற்காக உங்கள் அனைவருக்கும் எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது. நான் இன்னும் கனவில் வாழ்வது போல் உணர்கிறேன். எஸ்.எஸ்.ராஜமௌலியும், எம்.எம்.கீரவாணியும் நமது இந்தியத் திரையுலகின் விலைமதிப்பற்ற ரத்தினங்கள். இந்தத் தலைசிறந்த படைப்பின் ஒரு பகுதியாக இருக்க எனக்கு வாய்ப்பளித்த இருவருக்குமே நன்றி.
'நாட்டு நாட்டு' பாடல் உலகம் முழுவதும் உணர்வலைகளாகப் பரவியிருக்கிறது. இதைச் சாத்தியப்படுத்திய பாடலாசிரியர் சந்திரபோஸ், கால பைரவா மற்றும் நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றிகள். என் சக நடிகரான தாரக்கிற்கு (ஜூனியர் என்.டி.ஆர்) நன்றி - நன்றி சகோதரா! உங்களுடன் நடனமாடி மீண்டும் சாதனை படைப்பேன் என்று நம்புகிறேன். இனிமையான இணை நடிகராக இருந்த ஆலியா பட்டிற்கு நன்றி. இந்த விருது ஒவ்வொரு இந்திய நடிகர், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைப்படப் பார்வையாளர்களுக்குச் சொந்தமானது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது நம் நாட்டின் வெற்றி!” என்று நெகிழ்ச்சியுடன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.