'அயர்ன்மேன்' நடிகர் ராப்ர்ட் டௌனி ஜூனியருக்கு ஆஸ்கர் வழங்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளது, மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனம். அந்த நிறுவனம் உருவாக்கிய 'அவெஞ்சர்ஸ்: எண்டுகேம்' படத்தின் இயக்குநர்கள் ரூஸோ சகோதரர்கள், முதலில் ராபர்ட்டுக்கு விருது வழங்க வேண்டும் என்று கூறினர். இதை, அப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரான டிரின் டிரானும் வழிமொழிந்தார்.

பொதுவாக, காமிக் புக் படங்களுக்கு ஆஸ்கரில் பெரிய மரியாதை இருக்காது. மிஞ்சிப்போனால் விஷுவல் எஃபெக்ட்ஸ், சவுண்ட் எஃபெக்ட்ஸ், உடையலங்காரம் போன்ற பிரிவுகளில் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படும். 91 வருட ஆஸ்கர் வரலாற்றில் முதல்முறையாகக் கடந்த ஆண்டுதான் ஒரு காமிக் கதாபாத்திரத்தின் திரைப்படமான 'பிளாக் பேந்தர்' சிறந்த படத்துக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. அதற்கான விருதை அப்படம் வாங்கவில்லை என்றாலும், சிறந்த கலை இயக்கம், சிறந்த பின்னணி இசை, சிறந்த உடையலங்காரம் என மூன்று பிரிவில் விருதுகளைப் பெற்று ஆஸ்கர் வென்ற முதல் எம்.சி.யூ படம் என்ற புகழையும் சூடிக்கொண்டது 'பிளாக் பேந்தர்'.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தற்போது ராபர்ட்டை பரிந்துரை செய்வதன் மூலம், மார்வெல் நிறுவனம் மீண்டும் ஒரு முறை ஆஸ்கரில் சாதனைப் படைப்பதற்கான திட்டத்தில் இருப்பதாகத் தெரிகிறது. ஏற்கெனவே, 'எண்டுகேம்' படத்தின் ஒலி வடிவமைப்பு, திரைக்கதை, விஷுவல் எஃபெக்ட்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் ஆஸ்கருக்குச் செல்வதற்கான தரத்தில் இருப்பதாக, சில திரை ஆர்வலர்கள் கருத்து கூறினர். இப்போது ராபர்ட் டௌனியையும் அந்தப் பட்டியலில் சேர்க்கவிரும்புகிறது மார்வெல்.