Published:Updated:

`அயன்மேனை'த் தொடர்ந்து..!' - டாக்டர் ஜான் டுலிட்டிலாக வருகிறார் ராபர்ட் டௌனி ஜூனியர்

`டுலிட்டில்' படத்தின் டிரெய்லர் வெளியாகி யூடியூபின் டிரெண்டிங் லிஸ்டில் இடம்பெற்றிருக்கிறது.

Robert Downey Jr.
Robert Downey Jr. ( Ironman )

`அவெஞ்சர்ஸ்' படத்தொடரின் டோனி ஸ்டார்க்கை யாராலும் மறக்க முடியாது. படத்தின் கதைபடி `அவெஞ்சர்ஸ்' உலகுக்காகவும் தனது அணிக்காகவும் தன் உயிரை `எண்டு கேம்' படத்தில் மாய்த்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் `டுலிட்டில்' படத்தின் டிரெய்லர் வெளியாகி யூடியூபின் டிரெண்டிங் லிஸ்டில் இடம்பெற்றிருக்கிறது.

ஹாலிவுட்டின் முன்னணி நடிகரான ராபர்ட் டௌனி ஜூனியரை நமக்கு `அவெஞ்சர்ஸ்' படத்தொடரின் அயன்மேனாகத் தெரியும். ஏறத்தாழ 1970-களில் இருந்து கலைத்துறையில் பயணித்து வருகிறார். மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வெளியான `அயன்மேன்' படத்தொடர் மற்றும் `அவெஞ்சர்ஸ்' படத்திலிருந்துதான் இவர் நமக்குப் பரிச்சயம்.

சிலருக்கு இவர் நடித்த `ஷெர்லாக் ஹோம்ஸ்' ஃபேவரைட்டாக இருந்தாலும், பலருக்கும் இவரை டோனி ஸ்டார்க் (எ) அயன்மேனாகத்தான் அடையாளம் தெரியும். அதுவும் சமீபத்தில் வெளியான `எண்டு கேம்' படத்தில் அவெஞ்சர்ஸ் அணிக்காக உயரிழந்ததையடுத்து ரசிகர்களின் மத்தியில் உயர்ந்து நின்றார், டோனி ஸ்டார்க். இவரை மிஸ் செய்த ரசிகர்களுக்கு அண்மையில் வெளியான `டுலிட்டில்' படத்தின் டிரெய்லர் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

ராபர்ட் டௌனி ஜூனியர்
ராபர்ட் டௌனி ஜூனியர்

ஃபேன்டஸி ஜானரில் உருவாகியிருக்கும் `டுலிட்டில்' படத்தை ஸ்டீபன் ககன் என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கும் ராபர்ட் டௌனி ஜூனியர், டாக்டர் ஜான் டுலிட்டில் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர், யூடியூபின் டிரெண்டிங் லிஸ்டில் இடம்பெற்றிருக்கிறது.

மேலும், அன்டோனியோ பாண்ட்ரியாஸ், மைக்கேல் ஷீன், ஜெஸ்ஸி பக்லேய் போன்றவர்களும் இவருடன் இணைந்து நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி டாம் ஹோலண்டு, ஜான் சீனா, செலினா கோம்ஸ் போன்ற நட்சத்திரங்கள் படத்தில் இடம்பெற்றிருக்கும் சில கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்துள்ளனர். 2020-ம் ஆண்டும் ஜனவரி 17-ம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது.