'அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்', 'எண்டு கேம்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர்கள் ரூஸோ ப்ரதர்ஸ் (ஆண்டனி & ஜோ) இயக்கத்தில் நம்ம ஊர் ஸ்டார் தனுஷ் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, உருவாகி இருக்கும் 'The Gray Man' படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் டிரெய்லரில் தனுஷ் இரண்டு மூன்று பிரேம்களில்தான் வருகிறார். இது அவரின் ரசிகர்களுக்கு சின்ன ஏமாற்றத்தைக் கொடுத்தது. இதனிடையே, 'அப்படிக் கிடையாது... தனுஷின் கேரக்டர் வேற லெவலில் இருக்கும்' எனப் பேசியுள்ளனர் ரூஸோ பிரதர்ஸ்.
ட்விட்டர் ஸ்பேசஸில் 'தி கிரே மேன்' படம் குறித்து ரூஸோ பிரதர்ஸ் பேசியதாவது, "தனுஷ் இதில் உலகின் சிறந்த கொலையாளிகளில் (அசாசின்களில்) ஒருவராக நடித்திருக்கிறார். படத்தின் நாயகர்களில் ஒருவரான ரியான் கோஸ்லிங் கேரக்டரை பின் தொடர்ந்து செல்லும் கேரக்டர் இவருடையது. படத்தில் அசாத்தியமான இரண்டு சண்டைக் காட்சிகள் தனுஷுக்கு உண்டு. நானும் ஆண்டனியும் தனுஷின் ரசிகர்கள். இந்த கேரக்டரை அவருக்காகவே எழுதியுள்ளோம். ஹீரோவோடு சண்டையிட்டு, திருப்பத்தை உண்டாக்கும் கிளாசிக்கான கெட்டவன் ரோல் இது."

மேலும், "தனுஷ் நகைச்சுவையான மனிதர், தனித்துவமானவர். கேமராவில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது கேரக்டர் கொஞ்சம் மாயத்தன்மைகளையும் உள்ளடக்கியது. ரசிகர்களுக்கு இந்த கேரக்டர் பிடித்திருந்தால் நாங்கள் இந்தப் பாத்திரத்தை வைத்துக்கூட புதிய கதைகளைத் தொடர்வோம். அப்படியானதொரு சுவாரஸ்யமான கதாபாத்திரம் இது" என இயக்குநர்கள் தெரிவித்தனர்.
தனுஷின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இதன் சீக்குவல் படங்கள் உருவாகலாம் என்கிற ஹின்ட்டைதான் இயக்குநர்கள் கொடுத்திருக்கின்றனர். தனுஷ் ஆபத்தை விளைவிக்கும் சக்தி; ரியான் கோஸ்லிங் பிடிபடாதவர்; கிறிஸ் ஈவன்ஸ் தடுத்து நிறுத்த முடியாதவர்; அனா டி ஆர்மஸ் தொட முடியாதவர் என நடிகர்களுக்கான கேரக்டர் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். படம் ஜூலை 15 குறிப்பிட்ட சில திரையரங்குகளில் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து 22-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது.
