Published:Updated:

`வடசென்னை' அன்புவின் எழுச்சிபோல இது ஸ்கைவாக்கரின் எழுச்சி! #TheRiseofSkywalker #starwars

ஸ்டார் வார்ஸ்
ஸ்டார் வார்ஸ்

ஏதோ விளையாட்டாக ஒரு ஃபேன்டஸி கதை மூலம், பார்வையாளர்களுக்கு வெறும் காட்சி விருந்து மட்டும் வைத்துவிடலாமென முன்னெடுக்காமல், இந்த 43 ஆண்டுகளில் நிகழ்கால அரசியலையும், குடியரசு குறித்த பார்வையையும், மக்கள் புரட்சியின் அவசியத்தையும் சேர்த்தே பேசிவருகிறது 'ஸ்டார் வார்ஸ்'.

'ஒவ்வொரு திரைப்படத்துக்கும், அதற்கான உலகம், தர்க்கம், உணர்வுக் கட்டமைப்பு இருக்கவேண்டும். இவை மூன்றுமே பார்வையாளர்களின் கண்ணோட்டத்தையும் கடந்து விரியும் பேரனுபவமாக இருக்கவேண்டும்'
கிறிஸ்டோபர் நோலன்

`ஸ்டார் வார்ஸ்' அத்தகைய படத்தொடர்தான். இந்தப் பேரண்டத்தின் ஏதோவொரு தொலைதூர மூலையில் விரவிக்கிடக்கும் பல கோள்கள், விண்மீன்கள், விண்கற்கள் சூழ் உலகில் மன்னராட்சிக்கும், மக்களாட்சிக்கும் இடையே கலகம் நிகழ்வதாகக் கற்பனை செய்த இயக்குநர் ஜார்ஜ் லூக்காஸ், 1977-ம் ஆண்டு தொடங்கி வைத்த இந்தத் தொடர் தற்போது அதன் முடிவை எட்டியுள்ளது.

ஸ்டார் வார்ஸ்
ஸ்டார் வார்ஸ்

ஏதோ விளையாட்டாக ஒரு ஃபேன்டஸி கதை மூலம், பார்வையாளர்களுக்கு வெறும் காட்சி விருந்து மட்டும் வைத்துவிடலாமென முன்னெடுக்காமல், இந்த 43 ஆண்டுகளில் நிகழ்கால அரசியலையும், குடியரசு குறித்த பார்வையையும், மக்கள் புரட்சியின் அவசியத்தையும் சேர்த்தே பேசிவருவதுதான் 'ஸ்டார் வார்ஸ்' இன்றளவும் ஒரு தவிர்க்கவியலா படத்தொடராக இருப்பதன் காரணமாக இருக்கிறது. அதனால், இந்தத் தொடரைப் புரிந்துகொள்வது எல்லாத் தலைமுறைகளுக்கும் மிக எளிதாகிவிடுகிறது.

இந்தத் தொடரின் முதல் பகுதியின் பத்தாவது படமான 'ஸ்டார் வார்ஸ்: தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்' (வடசென்னை பட வழக்கில் சொன்னால் 'ஸ்கைவாக்கரின் எழுச்சி') இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்குத் திரைக்கு வருகிறது. 9 படங்களை உள்ளடக்கிய இந்த முதல் பகுதிக்கு 'ஸ்கைவாக்கர் சாகா' எனப் பெயரிட்டுள்ளார்கள். இதில் மூன்று முக்கதைகள் (ட்ரைலாஜி) அடங்கும். இதுபோக இரண்டு தனிக் கதைகளும் படமாக வெளியாகியிருக்கின்றன.

1977-ம் ஆண்டு வெளியான 'எ நியூ ஹோப்', அதைத் தொடர்ந்து 1980-ல் வெளியான 'தி எம்பையர் ஸ்ட்ரைக்ஸ் பேக்' மற்றும் 1983-ல் 'ரிட்டர்ன் ஆஃப் தி ஜெடாய்' என மூன்று படங்களும் சேர்த்து ஆதி முக்கதை (ஒரிஜினல் ட்ரைலாஜி) என்பார்கள். இந்த ஆதி முக்கதையைச் சுற்றித்தான் ஸ்டார் வார்ஸின் முன்கதைகள், பின்கதைகள், தனிக்கதைகள் எல்லாம் உருவாக்கப்பட்டுவருகின்றன.

டார்த் வேடர்
டார்த் வேடர்

மேலும், இந்த 'ஸ்கைவாக்கர் சாகா'வை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கின்றனர். குடியரசு யுகம் (ஏஜ் ஆஃப் ரிபப்ளிக்), கலக யுகம் (ஏஜ் ஆஃப் ரிபெல்லியன்), புரட்சி யுகம் (ஏஜ் ஆஃப் ரெஸிஸ்டன்ஸ்). பேரண்டம் முழுக்க, கொடுங்கோல் ஆட்சி முறையைப் பின்பற்றும் 'எம்பையர்' என்ற குழுவுக்கும், அதை அழித்து மக்களாட்சியை நடைமுறைப்படுத்த முயலும் 'ரிபப்ளிக்' என்ற குழுவுக்கும் இடையே நடக்கும் போரும், இந்த இருவரையுமே ஃபோர்ஸ் என்ற ஆற்றல் எப்படி வழிநடத்துகிறது என்பதும்தான் இந்தத் தொடரின் முதன்மைக் கதை. பொது வழக்கில், நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் நடக்கும் சண்டை, அதை நடத்தும் கடவுள். இந்தப் பின்னணியில், சினம், அச்சம், ஐயம், வன்மம், துரோகம், வலிமை, அன்பு, நட்பு, காதல் என அடிப்படை மனித உணர்வுகளெல்லாம் ஒரு பெரும் அரசாங்கத்தின் மீது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதே 'ஸ்டார் வார்ஸி'ன் மறைபொருள்.

இதுவரை வந்துள்ள படங்களின் கதைப்படி எம்பையரின் பாதுகாவலர்களும் இருள்சார்ந்த படைவீரர்களுமான 'சித்' சேனைக்கும், ரிபப்ளிக்கின் பாதுகாவலர்களும் ஒளிசார்ந்த வீரர்களுமான 'ஜெடாய்' சேனைக்கும் இடையே கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்கும் மேலாக போர் சூழ்ந்து வருகிறது. இதில் சித்தின் முன்னாள் தலைவன் டார்த் வேடர், அவனுடைய இளவயதில் பாத்மீ இளவரசி மீது காதல் கொண்டு அவர்களுக்கு லூக், லியா என்கிற மகனும் மகளும் பிறக்கிறார்கள். டார்த் ஆரம்பகாலத்தில் ஜெடாயாகப் பயிற்சி எடுத்துக்கொண்டவன். என்றாலும், சித்தின் சூழ்ச்சியால் தீயவனாக மாறி ரிபப்ளிக் குழுவுக்கு துரோகம் இழைக்கிறான்.

சோலோ
சோலோ
உங்களுக்கு இது புரிய வாய்ப்பே இல்லை!

பின்னர், அவன் சித்தின் தலைவனாகவும் மாறுகிறான். அவனுடைய மகனும் மகளும் வளர்ந்து அவனை எதிர்க்கிறார்கள். அதில் லூக் ஜெடாய் வீரனாகவும், லியா ரிபப்ளிக்கின் தலைவியாகவும் மாறுகின்றனர். அதே நேரத்தில் சோலோ என்ற இன்னோரு வீரனின் உதவியுடன் டார்த் வேடரையும் அவனுடைய சித் சேனையையும் எம்பையரின் தலைமைச் செயலகத்தையும் அடியோடு அழிக்கிறான் லூக். தொடர்ந்து தலைமறைவாகிறான். இதற்கிடையில் லியாவும் சோலோவும் காதலித்து மணம் முடிக்கிறார்கள். அவர்களுக்குப் பிறக்கும் மகன் கைலோ மீண்டும் எம்பையரின் பக்கம் சேர்ந்து அதை வழி நடத்துகிறான். மேலும், தன் தந்தையான சோலோவையும் கொல்கிறான், கைலோ. அவனை எதிர்க்க, லூக்கின் உதவியுடன் வருகிறாள் ரே என்ற வீராங்கனை.

இந்த ரேதான் ஸ்கைவாக்கர் சாகாவின் புரட்சி யுக நாயகி. இவளுக்குப் பக்க பலமாக கைலோவை எதிர்க்க அவனுடைய அம்மாவான லியாவே ரிபப்ளிக்கின் புதிய சேனையான ரெஸிஸ்டன்ஸை வழி நடத்திவருகிறாள். இந்தப் பத்தாவது படத்தைப் பொறுத்தவரை, இப்போது பேரண்டத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து ஆள நினைக்கும் கைலோவைக் கொன்று மீண்டும் கொடுங்கோல் ஆட்சியை அழித்து குடியரசை ரே நிறுவப் போகிறாள் என்று நம்பப்படுகிறது.

கைலோ
கைலோ
Vikatan

ஸ்டார் வார்ஸின் சிறப்பம்சம் என்னவென்றால், இது நடக்கும் உலகில் மனிதர்கள், வேற்றுகிரகவாசிகள், இயந்திரங்கள், மிருகங்கள் என எவற்றுக்கு இடையிலும் உருவத்தைத் தவிர எந்த வேறுபாடும் இருக்காது. எல்லாமே இதன் முக்கியக் கதாபாத்திரமாகத்தான் இருக்கும். சி-3பிஓ எனப் பெயர் கொண்ட ஒரு ரோபோ தொடங்கி, யோடா என்ற ஏலியன் ஜெடாய் பயிற்சியாளர் வரை எல்லோரும் ஒரே உலகில் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து வாழ்வார்கள்.

அந்த அடிப்படையில் ஸ்டார் வார்ஸ் உலகம் எல்லா வயதினருக்கும் ஏதோவொரு வகையில் மாறுபட்ட அனுபவம் ஒன்றைத் தரும். சக்கரங்கள் இல்லாமல் நகரும் வண்டிகள் குழந்தைகளைக் கவருமென்றால், லேஸர்மூலம் செயல்படும் வாள்(லைட் சேபர்) சண்டை இளைஞர்களுக்கானது. அதேபோல இந்தக் கதையின் மறைபொருளான மனித உணர்வுகளும் அவற்றுக்கு இடையில் நடக்கும் போராட்டங்களும் உலக சினிமா ரசிகர்களுக்கானது.

ஸ்டார் வார்ஸ் ரோபோக்கள்
ஸ்டார் வார்ஸ் ரோபோக்கள்

'அவெஞ்சர்ஸ்' உலகம், 'அவதார்' உலகம் எல்லாம் ஒருபுறம் பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைத்துக்கொண்டிருந்தாலும், எப்போதெல்லாம் ஒரு ஸ்டார் வார்ஸ் படம் வெளியாகிறதோ அப்போதெல்லாம் அங்கே ஒரு பாக்ஸ் ஆபீஸ் சாதனையும் சத்தமில்லாமல் நிகழ்ந்துவிடும் என்பதே உண்மை. அதிலும், இந்தப் படம் 43 ஆண்டுக்கால ஒரு நெடுங்காப்பிய வரலாற்றின் ஒரு முற்றுப் புள்ளியாகவும் அடுத்த கட்டத்துக்கான ஒரு தொடக்கப் புள்ளியாகவும் இருப்பதால், இப்போதே இந்தப் படத்துக்காக உலகத் திரையரங்குகளின் டிக்கெட் கவுன்ட்டர்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. எடுத்துவைத்திருங்கள் பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டுகளை, ஸ்கைவாக்கார் வந்துகொண்டிருக்கிறான்.

அடுத்த கட்டுரைக்கு