Published:Updated:

ஸ்பைடர்மேன் குடும்பத்தார்!

ஸ்பைடர்மேன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்பைடர்மேன்

கிட்டத்தட்ட இருபது வருடங்கள்... இப்போது சூப்பர்ஹீரோ படங்கள்தான் ஹாலிவுட்டின் மிகப்பெரிய வர்த்தகம்.

ஸ்பைடர்மேன் குடும்பத்தார்!

கிட்டத்தட்ட இருபது வருடங்கள்... இப்போது சூப்பர்ஹீரோ படங்கள்தான் ஹாலிவுட்டின் மிகப்பெரிய வர்த்தகம்.

Published:Updated:
ஸ்பைடர்மேன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்பைடர்மேன்

2002-ம் ஆண்டு. ஹாலிவுட்டில் சூப்பர்ஹீரோ படங்கள் பரீட்சார்த்த முயற்சிகளாக மட்டுமே பார்க்கப்பட்ட காலகட்டம். அப்போதுதான் சாம் ரைமி இயக்கத்தில் டோபி மெக்யூர் நடிப்பில் வெளியானது `ஸ்பைடர்-மேன்.' டோபியின் பெயரெல்லாம் யாருக்கும் நினைவில் நிற்கவில்லை. `ஸ்பைடர்-மேன்' என்பதுகூட படத்தின் பெயராக மட்டுமே அறியப்பட்டது. `பீட்டர் பார்க்கர்' என்ற அந்தப் பாத்திரத்தின் பெயர்தான் அந்தப் படத்தின் முகம், முகவரி எல்லாமே! இதற்குக் காரணம் சூப்பர்ஹீரோவின் சாகசங்களுக்கு அப்பாற்பட்டு, அந்தச் சிலந்தி உடையினுள்ளே இருக்கும் மனிதனின் இருத்தலியல் பிரச்னைகள், பள்ளி வாழ்க்கை, காதல், நட்பு, துரோகம் என எல்லாமுமே நம் சொந்தக் கதையை, சோகக் கதையை ஏதோ ஒரு வகையில் நினைவூட்டின.

ஸ்பைடர்மேன் குடும்பத்தார்!
ஸ்பைடர்மேன் குடும்பத்தார்!

கிட்டத்தட்ட இருபது வருடங்கள்... இப்போது சூப்பர்ஹீரோ படங்கள்தான் ஹாலிவுட்டின் மிகப்பெரிய வர்த்தகம். குறிப்பாக அத்தகைய படங்களுக்கு இந்தியாவிலும் மிகப்பெரிய வணிகம் தற்போது உருவாகியிருக்கிறது. இப்போதும் ‘ஸ்பைடர்மேன்' சூப்பர்ஹீரோ பாத்திரம் கவனம் ஈர்த்துக்கொண்டிருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் ‘தி அமேசிங் ஸ்பைடர்மேன்'ஆக வந்துவிட்டுப் போய்விட்டார். ஆனாலும், டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவான இந்தப் புதிய ரீ-பூட் ‘ஸ்பைடர்மேன்', ‘அவெஞ்சர்ஸ்' போன்ற மற்ற மார்வெல் பாத்திரங்களுக்குச் சமமான, சொல்லப்போனால் அதைவிட அதிகமான வரவேற்பைப் பெற்றுவருகிறது.

தற்போது, மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) 27-வது படமாக வெளியாகி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது டாம் ஹாலண்டின் ‘ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம்.' இந்தியாவில் மட்டுமே ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது இந்தப் படம். இதன் மிக முக்கியக் காரணம், மார்வெல்லின் இந்நாள் ஹீரோக்கள் மட்டுமல்ல. 20 வருடங்களுக்கு முன்பு ‘ஸ்பைடர்மேன்' பாத்திரத்துக்கு உயிர்கொடுத்த டோபி மெக்யூர் இதில் நடித்திருக்கிறார் என்றதும் விடிய விடிய டிக்கெட்களை புக் செய்து தூக்கத்தைத் தொலைத்தது 90ஸ் கிட்ஸ் படை. கூடவே ஆண்ட்ரூ கார்ஃபீல்டும் வருகிறார் என்றதும் 2K கிட்ஸும் ‘மன்னன்' பட ரஜினி, கவுண்டமணி கணக்காகக் கோதாவில் குதித்தனர்.

ஸ்பைடர்மேன் குடும்பத்தார்!
ஸ்பைடர்மேன் குடும்பத்தார்!

இந்த இரண்டு பழைய ஸ்பைடர்மேன்களுடன், அவர்கள் சந்தித்த வில்லன்களான க்ரீன் காப்ளின், டாக்டர். ஆக்டோபஸ், சேண்ட் மேன், லிசார்ட், எலக்ட்ரோ என அனைவருமே மொத்தமாகத் திரையில் தோன்றியிருந்தனர். மூன்று ஸ்பைடர்மேன்களுடன் ‘டாக்டர்.ஸ்ட்ரேஞ்ச்' பெனடிக்ட் கம்பர்பேட்ச்சும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணம், இத்தனை கதாபாத்திரங்களும் வெறுமனே ஏதோ ஒரு பைட், ஒரு சீன் என வந்து போகவில்லை என்பதுதான். அவர்களின் பாத்திரங்களும் கதையினூடே அழுத்தமாக எழுதப்பட்டிருந்தன. பழைய ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் ஸ்பைடர்மேன், இன்றைய ஸ்பைடர்மேனின் காதலியைக் காப்பாற்றும் காட்சி, டாக்டர்.ஆக்டோபஸ் மற்றும் டோபிக்கு இடையேயான உரையாடல், மூன்று ஸ்பைடர்மேன்களும் முதன்முதலில் சந்தித்து, தங்களின் இழப்பைப் பற்றிப் பேசும் அந்த வசனங்கள், கறுப்பின ஸ்பைடர்மேன் குறித்து வில்லன் எலக்ட்ரோ பேசும் அந்த வசனம் என அனைத்துமே நெகிழ்ச்சியான தருணங்கள். சீனியர் நடிகர்களான வில்லம் டேஃபோ, ஆல்ஃப்ரெட் மொலினா, டோபி மெக்யூர் ஆகியோருடன் ஜூனியர்களான ஆண்ட்ரூ கார்ஃபீல்ட், டாம் ஹாலண்ட், ஸெண்டயா போன்றோரும் தங்களின் பாத்திரங்களை உள்வாங்கிச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஸ்பைடர்மேன் குடும்பத்தார்!

இருபது வருடங்களுக்கு முன்னர், டோபியின் ‘ஸ்பைடர்-மேன்' வெளியானபோது, பீட்டர் என்ற அவனின் மனித முகத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். காரணம், சாகசக் காட்சிகளை இப்போதுபோல் அப்போது எடுத்துவிட முடியாது. உதாரணமாக டாக்டர் ஆக்டோபஸின் எட்டு இயந்திரக் கைகளும் அப்போது ‘பப்பட்' கொண்டு இயக்கப்பட்டிருக்கும். ஆனால், இப்போது அதே பாத்திரத்தின் இயந்திரக் கைகளுக்கு CG கிராபிக்ஸ் தொழில்நுட்பம் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ, பழைய ஸ்பைடர்மேன் படங்களில் உயிர்பெற்ற இந்த மனிதம்தான் அந்தப் படங்களுக்குப் பெரும் ரசிகர் கூட்டத்தைச் சேர்த்தது. இத்தகைய நெகிழ்ச்சியும், சென்டிமென்ட்டும் டாம் ஹாலண்டின் புதிய ஸ்பைடர்மேன் படங்களில் இல்லையே என்ற கருத்து இதற்கு முன்னர் வைக்கப்பட்டது. இப்போது, அந்த விமர்சனத்தை உடைத்திருக்கிறது இந்த ‘ஸ்பைடர்-மேன்: நோ வே ஹோம்.'

மெகா பட்ஜெட், தொழில்நுட்பம், நிறைய நடிகர்கள் எனப் பல புதிய சக்திகள் கிடைத்துவிட, விண்ணளவுக்கு எகிறிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இயக்குநர் ஜான் வாட்ஸ் மற்றும் திரைக்கதை எழுதிய கிறிஸ் மெக்கென்னா, எரிக் சோம்மர்ஸ் ஆகியோரின் தலையில் விழுந்திருக்கிறது. அதை அவர்கள் குறையேதுமின்றிச் செய்து முடித்துள்ளனர். பீட்டர் பார்க்கரின் அங்கிள் பென்னும், ஆன்ட்டி மேவும் சொல்வதுபோல, ‘‘அளப்பரிய சக்திகள் கிடைக்கும்போதுதான், அதீத பொறுப்புகளும் தன்னாலே உருவாகும்.’’ வாழ்த்துகள் ஜான் வாட்ஸ்! வெல்கம் ஹோம் பீட்டர்!