கடந்த இருபதாண்டுகளில் வந்த வில்லன்களின் அணிவகுப்பு; மல்ட்டிவெர்ஸ்; பழைய ஸ்பைடர்மேன்கள் வருவார்களா என்ற ஏக்கம் என எந்த ஸ்பைடர்மேன் படத்துக்கும் இல்லாத எதிர்பாப்பு இந்த 'Spiderman: No Way Home' படத்துக்கு உண்டு. அத்தனை எதிர்பார்ப்பையும் படம் பூர்த்தி செய்திருக்கிறதா?
முந்தைய பாகத்தில் இறந்துபோகும் மிஸ்டீரியோ, தன்னைக் கொன்றது ஸ்பைடர்மேன் என்றும், அந்த முகமூடிக்குப் பின் இருக்கும் ஸ்பைடர்மேன் யார் என்றும் சொல்லிவிடுகிறார். ஒட்டுமொத்த உலகத்துக்கும் ஸ்பைடர்மேன் யார் என்பது தெரிந்துவிட, மீடியா, காவல்துறை என எல்லாமும் பீட்டர் பார்க்கரைத் துரத்துகின்றன. அதன் பாதகங்கள் பீட்டர் பார்க்கரைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்க, டாக்டர் ஸ்ட்ரேஞ்சின் உதவியை நாடுகிறார். பீட்டர் பார்க்கர்தான் ஸ்படைர்மேன் என்பதை அனைவரும் மறந்துவிட வேண்டும் என மந்திரத்தை சொடுக்கிறார் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். ஆனால், அது கைமீறி மாறிப்போக டிரெய்லரில் வருவது போல பல்வெறு பழைய வில்லன்கள் உள்ளே நுழைந்துவிடுகிறார்கள். தன்னையும், தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் காப்பாற்ற பீட்டர் பார்க்கர் செய்யும் சாகசங்களே இந்த 'Spiderman: No Way Home'.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
படத்தின் மிகப்பெரிய பலம் அதன் கதை. மார்வெல் படங்கள் என்றாலே காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன்தான். இந்த மூன்றையும் சரியான விகிதத்தில் கலந்து ஒவ்வொரு படத்தையும் ஹிட் அடித்துவிடுவார்கள். அதனாலேயே என்னவோ, அதிலிருந்து விலகி வெளியான 'எடர்னல்ஸ்' பெரிய அளவில் அதன் ரசிகர்களை சென்றடையவில்லை. இந்த ஸ்பைடர்மேன் பாகத்தில் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. வெறுமனே ஒரு பள்ளி மாணவனாக அல்லாமல், டாம் ஹாலண்டுக்கு நிறைய எமோஷனல் காட்சிகள். அதேபோல, சோனி மார்வெல் இணையால் இந்தக் கதைக்களம் அவ்வளவு சுவாரஸ்யமாக மாறியிருக்கிறது.
சாம் ரெய்மி இயக்கிய படங்களில் நடித்த டோபி மக்யூர், மார்க் வெப் படங்களில் நடித்த ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் ஆகியோருக்குக் கிடைக்காத வாய்ப்புகள் டாம் ஹாலண்டுக்குக் கிடைத்தன. இந்தக் கதாபாத்திரத்தை அவர்களால் எளிதாக மார்வெல்லின் அவெஞ்சர்ஸ் குழுவுக்குள் புகுத்த முடிந்தது. அயர்ன்மேன் & ஸ்பைடர்மேன்; டாக்டர் ஸ்ட்ரேஞ் & ஸ்பைடர்மேன் என கதைக்களங்கள் விரிவடைய இந்த இணைப்பு பெரிய அளவில் உதவிகரமாக இருந்தது.
அதன் அடுத்தக் கட்டத்தை எட்டிப் பிடித்திருக்கிறது இந்த Spiderman: No Way Home. மேலே சொன்ன படங்களின் பழைய வில்லன்களை இந்தப் படத்தில் இணைப்பதுதான் அது. மிகவும் சவாலான விஷயம். நடிகர்கள், அவர்களின் வயதுப் என பல விஷயங்களை கணித்து இதை கதைக்கேற்ப சேர்க்க வேண்டும். சில சிக்கல்களும் உண்டு. அதை முடிந்த அளவுக்கு வெற்றிகரமாகச் செய்திருக்கிறார்கள் கிறிஸ் மெக்கன்னா மற்றும் எரிக் சோமர்ஸ்.

டிரெய்லரில் வருவது போல கிரீன் காப்லின், டாக்டர் ஆக்டோபஸ், எலக்ட்ரோ, சாண்ட் மேன், லிசார்ட் எனப் பல வில்லன்கள் இதில் பீட்டர் பார்க்கரைப் போட்டுத்தள்ள வருகிறார்கள். இவர்கள் போகவும் சில சுவாரஸ்ய ஆச்சர்யங்கள் படத்தில் உண்டு. அத்தனை வில்லன்களில் வழக்கம் போல மிரட்டுகிறார் கிரீன் காப்லினாக வரும் வில்லியம் டேஃபோ. எழுபது வயதை நெருங்கும் டேஃபோவுக்கு துளியும் வில்லத்தனம் குறையவில்லை. சூழ்ச்சிக்கார நரியாக இதிலும் ஜொலித்திருக்கிறார். டாக்டர் ஆக்டோபஸாக வரும் ஆல்பிரெட் மொலினாவை இளமையாகக் காட்ட டிஜிட்டல் டி-ஏஜிங் (Digital De-aging) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனால் 2004-ம் ஆண்டு வெளியான ஸ்பைடர்மேன் இரண்டாம் பாகத்தில் வந்தது போல, இதிலும் அச்சு அசலாகத் தோற்றமளிக்கிறார்.
எலக்ட்ரோவாக ஜெய்மி ஃபாக்ஸ். பிளாக் ஸ்பைடர்மேன் தொடர்பாக அவர் பேசும் வசனம் படத்திலேயே ஆகச்சிறந்தது. ஃபால்கன் தொடரிலேயே இதுகுறித்து மார்வெல் குழுமம் பேசியிருந்தாலும், அதை இன்னும் அழுத்தமாக ஜெய்மியின் குரல் மூலம் பெரிய திரைகளில் உரக்கச் சொல்லியிருக்கிறார்கள். இத்தனை வில்லன்களை என்ன செய்வது என்பதில் டாக்டர் ஸ்ட்ரேஞ்சுக்கும், பீட்டர் பார்க்கருக்கும் குழப்பம் வர, அடுத்தடுத்து நிகழும் திருப்பங்கள் கதையின் அடுத்தக்கட்ட எமோஷனல் பாய்ச்சலுக்கு நம்மைத் தயார்படுத்துகிறது.

சுவாரஸ்யமான கதையில், சரியான விகிதத்தில் எமோஷனல் கோணத்தையுன் தூவியிருக்கிறார்கள். வாழ்க்கையில் நம் அனைவருக்குமான இரண்டாம் வாய்ப்பு குறித்து பேசுகிறது இத்திரைப்படம். பல்வேறு சூப்பர் ஹீரோக்கள் தோன்றும் படம், அதிரடி சாகசங்கள் நிறைந்த படம் என்பதையெல்லாம் கடந்து, இந்தத் திரைப்படம் பலரையும் தங்கள் பால்ய காலத்துக்கு இட்டுச் செல்லும். அதற்கேற்ப சில வசனங்கள், காட்சிகள் என ஒவ்வொரு விஷயத்தையும் இணைத்திருக்கிறார்கள்.
'With great power comes great responsibility!'
இயக்குநர் சாம் ரெய்மியைப் போலவே, மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் ஜான் வாட்ஸ். படத்தின் பின்னணி இசை இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம்.
படத்தில் இரண்டு போஸ்ட் கிரெடிட் காட்சிகள் உண்டு. முதல் போஸ்ட் கிரெடிட் காட்சி ஏற்கெனவே வெளியான 'வெனம்: லெட் தேர் பி கார்னேஜ்' படம் தொடர்புடையதாக எடுக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு போஸ்ட் கிரெடிட் காட்சி, அடுத்து வரவிருக்கும் டாக்டர் ஸ்ட்ரேஞ் படத்துக்கான துவக்கமாக அமைந்திருக்கிறது.
படத்தில் ஆங்காங்கே சில தொய்வுகள் இருந்தாலும், கடந்த இருபது வருடங்களாக காமிக்ஸ் படங்களைத் திரையில் பார்த்து வரும் ரசிகர்களுக்கு, இந்தப் படம் மிகப்பெரிய அனுபவமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அவெஞ்சர்ஸ்: எண்டு கேமில் அனைத்து சூப்பர்ஹீரோக்களும் ஒன்றுக்கூடும் காட்சி இன்னமும் நம்மால் மறக்க முடியாத ஒன்று. அதற்கு இணையாக, நாஸ்டால்ஜியாவையும் கலந்து ஒரு பேரனுபவத்தை இந்தப் படம் கொடுக்கிறது.

ஸ்பாய்லர் அலெர்ட்!
பீட்டர் பார்க்கர் விசாரணை வளையத்துக்குள் வர, அவருக்கு ஒரு கண்பார்வையற்ற வழக்கறிஞர் ஒருவர் உதவி செய்ய வருகிறார். அதேபோல, பீட்டர் பார்க்கரைக் காப்பாற்ற அவரின் தோழன் நெட் செய்யும் காமெடியால் இன்னும் சில சம்பவங்கள் நடக்கின்றன. இந்த இரண்டு காட்சிகளுக்கும் திரையரங்கில் கைத்தட்டல் சத்தம் காதுகளைக் கிழிக்கிறது.