தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

உங்கள் பாதையில் உள்ள ரோஜாக்களை ரசியுங்கள்!

ஜெனி பிரிட்டன் பார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெனி பிரிட்டன் பார்

22 வயதைத் திரும்பிப் பார்க்கிறேன்!

அன்னா கேம்ப்

ஹாலிவுட் நடிகை, இப்போது வயது 35

``உனக்குக் கிடைத்திருப்பது ஒரே வாழ்க்கைதான். கலக்கம் வேண்டாம். என்றாவது ஒருநாள் வெற்றி உன்னைத் தேடிவரும். அதனால் நிம்மதியாக, மகிழ்வாக, பாதையில் உள்ள ரோஜாக்களை ரசித்துக்கொள்''

- அன்னா கேம்ப்.

இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே அன்னாவுக்கு நடிப்பின் மீது ஆர்வம். சிறு வயதில் வகுப்பில் கதைகள் சொல்லவும், பாடல்கள் பாடவும் அதிகம் ஆசைப்பட்டார் அன்னா. பிரபல நடிகையாக வேண்டும் என்று மட்டுமே இருந்த ஆர்வம் பின்னாளில் சிறந்த திரைப்படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று மாறிப்போனது.

அன்னா கேம்ப்
அன்னா கேம்ப்

`20 வயதுகளில் நிராகரிப்புகள் நிறையவே இருக்கும். அவற்றை எதிர்கொண்டு கடக்க வேண்டும்' என்று சொல்கிறார் அன்னா.

கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் நியூயார்க்கின் 189-வது தெருவுக்குக் குடிபோனார் அன்னா. தினமும் ஒவ்வொரு விளம்பர ஏஜென்சி. புதிது புதிதாக ஆடிஷன்கள். சில நாள்களில் மூன்று ஆடிஷன்கள்கூட! இப்படி நடையாக நடந்து தொடர் நிராகரிப்புகளைச் சந்தித்தார் அன்னா. வேலை கிடைக்கவில்லை என்றாலும், தேடலில் சுணக்கம் இருக்கவே கூடாது என்று நம்பினார். 2005-ம் ஆண்டு, முதல் வாய்ப்பு கொலம்பினஸ் என்ற படத்தில் கிடைத்தது. பிராட்வே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். தி சீன், இகஸ் என மேடை நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பும், அதன்பின் காஷ்மீர் மாஃபியா என்ற தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

2009-ம் ஆண்டு முதல் படங்களில் நடிக்கத் தொடங்கினாலும், சூப்பர் டூப்பர் ஹிட் படம் 2012-ம் ஆண்டு வெளிவந்த பிட்ச் பர்ஃபெக்ட். குடும்ப வாழ்க்கை அப்படி ஒன்றும் நிம்மதியாக இல்லை. அடுத்தடுத்து தோல்வியில் முடிந்த இரண்டு திருமணங்கள். ஆனால், தன் பணியில் தெளிவாகவே இருந்தார் அன்னா. ஃபிட்னஸ் மீது அதிக ஆர்வம்கொண்ட அன்னா, தினமும் மைல்கணக்கில் நடக்கிறார். நடை மட்டுமே எடையைக் குறைக்கக்கூடியது என்று நம்பும் அன்னா, பிட்ச் பர்ஃபெக்ட் படத்தில் நடனம் ஆட வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தொடர் நடனப் பயிற்சி எடுத்தார்.

இப்போது நெட்ஃப்ளிக்ஸ் சீரிஸில் நடித்துவரும் அன்னா, பாதையில் உள்ள ரோஜாக்களை ரசித்துக்கொண்டுதான் இருக்கிறார். 22 வயது அன்னாவுக்கு அவரே இப்போது சொல்ல விரும்புவதுதான் முதல் பாராவில் நீங்கள் படித்தது!

ஜெனி பிரிட்டன் பார்

நிறுவனர் - ஜெனிஸ் ஸ்ப்லெண்டிட் ஐஸ்க்ரீம்ஸ், இப்போது வயது 45

“22 வயதுப் பெண்ணுக்கு என்ன அறிவுரை சொல்வது? எதுவும் இல்லை. அந்த வயதில் பயத்துடனும் எதுவும் எளிதில் கிடைத்து விடாது என்ற எண்ணத்துடனும் இருந்ததால் தான் என்னால் வெற்றி பெற முடிந்தது”

- ஜெனி பிரிட்டன் பார்.

`உங்களுக்குப் பிடித்த பெண் ஆளுமை யார்?' என்ற கேள்விக்கு ‘ஹைபேஷியா’ என்று பதில் சொல்கிறார் ஜெனி. எகிப்தின் தலைசிறந்த பெண் அறிஞரான ஹைபேஷியாவின் தத்துவ வாதத்தைத் தாங்கமுடியாமல் அவரைக் கல்லால் எறிந்து கொன்றார்கள் ஆண்கள்!

ஒஹையோ நகரின் சிறிய ஐஸ்க்ரீம் கடையில் பணியாளராகச் சேர்ந்தார் ஜெனி. சிறு வயது முதலே ஐஸ்க்ரீம் மேல் இருந்த காதல்தான் காரணம். பின்னர், ஒஹையோ பல்கலைக்கழகத்துக்கு நடந்து செல்லும் பாதையில் உள்ள பிரெஞ்ச் பேக்கரி ஒன்றில் ஆரம்பத்தில் பகுதிநேர சர்வராக வேலை செய்தார். அதற்கு எதிர் வரிசையில் இருந்த ஐஸ்க்ரீம் கடை ஈர்க்கவே, ஒரு வேகத்தில் கல்லூரிப் படிப்பையும் பேக்கரி வேலையையும் உதறிவிட்டார்.

ஜெனி பிரிட்டன் பார்
ஜெனி பிரிட்டன் பார்

வாசனைப் பொருள்களில் பெரும் ஆர்வம் ஜெனிக்கு. `செடிகளில் உள்ள வாசனையை ஏன் ஐஸ்க்ரீமுக்குக் கொண்டுவரக் கூடாது' என்ற எண்ணம் ஒருநாள் தோன்ற, வீட்டிலேயே லாவண்டர், ரோஸ் என வாசனையூட்டப்பட்ட ஐஸ்க்ரீம்களை செய்துபார்த்தார். நண்பர்களிடம் அதை விநியோகிக்க, சூப்பர் ஹிட்! அப்புறம் என்ன? கொலம்பஸ் பகுதியில் சிறிய கடை ஒன்றை வாடகைக்குப் பிடித்து தனக்குப் பிடித்த ஐஸ்க்ரீம் விற்பனையைத் தொடங்கினார். ‘`எட்டு ஆண்டுகள் அந்தக் கடையும், அதன் வாடிக்கையாளர்கள் தந்த கருத்துகளும் மட்டுமே தன் எதிர்காலத்துக்கான முதலீடு’’ என்று சொல்கிறார் ஜெனி.

``சாதாரண வாடிக்கையாளரின் கருத்துதான் பவர்பாயின்ட் கொண்டு செய்யப்படும் வணிகத் திட்டமிடலைவிட முக்கியமானது'' என்று சொல்லும் ஜெனி, வேலைப்பளுவைக் குறைக்க பள்ளி மாணவர்களைப் பகுதிநேரப் பணியில் அமர்த்தினார். கடை விரிவடைந்தது; புதிய கிளைகள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு கிளையும் ஒரு புதிய கான்செப்டில் என்று புதுமைகளைப் புகுத்தினார். சமையல் புத்தகம் ஒன்றை எழுதினார். ``எனக்கு மிகவும் பிடித்த டார்க் சாக்லேட் ஐஸ்க்ரீமுக்கான செய்முறையை சீர்செய்ய ஐந்து ஆண்டுகள் பிடித்தது'' என்கிறார் ஜெனி.

``இளம் வயதில் வாழ்க்கை போகும் போக்கில் பயத்துடன் பயணித்தால் போதும், வெற்றி உண்டு'' என்கிறார் ஜெனி.

உங்களுக்காக ஒரு கேள்வி!

இந்தப் பெண்கள் இளவயது முதலே தனித்துப் போராடி வாழ்க்கையில் வென்றவர்கள். அவர்களது 22-வது வயதை திரும்பிப் பார்த்தால் அந்த இளம்பெண்ணுக்கு அவர்களே தரும் அறிவுரை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கான விடைகளை இங்கே தந்திருக்கிறோம்.

உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளவும் இதுவொரு வாய்ப்பு. 22 வயது ‘உங்களுக்கு’ உங்கள் அறிவுரை என்ன? அவளுக்கு எழுதுங்களேன்!

22 வயது, அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002, மின் அஞ்சல்: avalbrand@vikatan.com