Published:Updated:

`புரூஸ்லீ, ஷாரன் டேட்; இது ஹிஸ்டரி இல்லையே!’ இந்த முறை என்ன சர்ச்சையை கிளப்பியிருக்கிறார் டாரன்டினோ?

Tarantino's Once Upon a Time in Hollywood

வரலாற்றை மாற்றி எழுத ஒரு படைப்பாளியால் முடியும் என்ற நம்பிக்கையோடு 'ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்' படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார் டாரன்டினோ. (Spoilers Ahead)

`புரூஸ்லீ, ஷாரன் டேட்; இது ஹிஸ்டரி இல்லையே!’ இந்த முறை என்ன சர்ச்சையை கிளப்பியிருக்கிறார் டாரன்டினோ?

வரலாற்றை மாற்றி எழுத ஒரு படைப்பாளியால் முடியும் என்ற நம்பிக்கையோடு 'ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்' படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார் டாரன்டினோ. (Spoilers Ahead)

Published:Updated:
Tarantino's Once Upon a Time in Hollywood

நாயக பிம்பம், காட்சிகளில் கவர்ச்சி, வணிக சமரசங்கள் எல்லாவற்றையும் கடந்து, ஓர் இயக்குநரின் பெயருக்காக ஒரு படைப்பு பார்க்கப்படுகிறது, பாராட்டப்படுகிறது என்றால், அந்த சினிமா சரியான திசையில் செல்கிறது என்றே சொல்லலாம். ஆனால், இயக்குநருக்காகப் படம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் தீவிர சினிமா ஆர்வலராகவோ, உலக சினிமா ரசிகராகவோதான் இருக்கின்றனர் என்பதும் இங்கே இயல்பான உண்மையாக இருக்கிறது.

Quentin Tarantino
Quentin Tarantino

இன்றைய அளவில், சினிமா ஆர்வலர்கள் என்ற வட்டத்தைத் தாண்டி, ஓர் இயக்குநருக்கு பெரும்பான்மைப் பொதுமக்கள் மத்தியில் பெரும்வரவேற்பு இருப்பது அரிதாகிவிட்டது. தன் வாழ்நாளில் மொத்தம் 10 படங்கள் மட்டுமே இயக்கப்போவதாக அறிவித்திருந்தவரின் ஒன்பதாவது படமான 'ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்' இந்த வாரம் வெளியாகியுள்ளதால், உற்சாகத்தின் உச்சவரம்பை எட்டியுள்ளார்கள் சினிமா விரும்பிகள். நாண்-லீனியர் வகை திரைக்கதைகளில், தான் ஒரு வித்தைக்காரன் என்பதை இந்தப் படம் மூலமாக மீண்டும் நிறுவியுள்ளார், டாரன்டினோ. அதேவேளையில், சில சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்படி என்னதான் இந்தப் படத்தில் கூறிவிட்டார்?

ஹோமேஜ் வகைப் படங்கள், பல நினைவுகளையும் நாஸ்டால்ஜியா உணர்வுகளையும் கிளறிவிடுவதற்காகவே எடுக்கப்படுவன. தமிழில் இத்தகைய படங்கள் பல வெளியாகியுள்ளன. உதாரணத்துக்கு, நுற்றாண்டுக்கால இந்திய சினிமாவுக்கு ஹோமேஜ் தருவதற்காக, பார்த்திபன் இயக்கிய 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்', அதேபோல, ரெட்ரோ காலத்து ரஜினியை நினைவுபடுத்த, கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'பேட்ட'. அதேபோல ஹாலிவுட்டின் பொற்காலமான 1960-களை மீண்டும் நினைவுகூற இந்தப் படத்தை இயக்கினார் டாரன்டினோ. ஹோமேஜ் வகைப் படங்கள், டாரன்டினோவுக்கு ஒன்றும் புதிய ஜானர் அல்ல. 'பல்ப் ஃபிக்‌ஷன்' என ஏற்கெனவே, க்ரைம் கதைகளை உள்ளடக்கிய பல்ப் மேகசின்களுக்கு ஹோமேஜ் தரும் படத்தை இயக்கினார். அந்தப் படம் இன்று வரை ஹாலிவுட்டின் சிறந்த நாண்-லீனியர் கல்ட் படமாக இருக்கிறது.

Dicaprio and Brad Pitt in OUATIH
Dicaprio and Brad Pitt in OUATIH

'ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்'டும் அதைப் போலவே ஒரு நாண்-லீனியர் வகை திரைக்கதையோடு உருவாகியுள்ள படம்தான். ஆனால், படம் பார்த்த பலரும் இது டாரன்டினோவின் பெஸ்ட் இல்லை என்றும், இன்னும் சிலரோ இது டாரன்டினோவின் படமே இல்லை என்றும் சொல்கிறார்கள்.

'வரலாற்றை மாற்றி எழுத ஒரு படைப்பாளியால் முடியும்' என்ற நம்பிக்கையோடு ஒரு திரைக்கதையை எழுதியுள்ளார், டாரன்டினோ. இது ஏற்கெனவே அவர் தன் 'இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்' படத்தில் காட்டிய வித்தைதான்.

பிரபல இயக்குநர் ரோமன் போலன்ஸ்கியின் மனைவி ஷாரன் டேட்டையும் அவருடன் இருந்த நண்பர்களையும் மேன்ஸன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வீடு புகுந்து கொடூரமாகக் கொன்ற நிகழ்வைப் பின்னணியாக வைத்து, அதில் ரிக் டால்டன், க்ளிஃப் பூத் என்ற இரண்டு கற்பனை கதாபாத்திரங்களை இணைத்து, அந்த நிகழ்வுக்கு வேறொரு முடிவைக் கொடுத்து 'ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்' படத்தை எடுத்திருக்கிறார் டாரன்டினோ.

Margot Robbie as Sharon Tate in OUATIH
Margot Robbie as Sharon Tate in OUATIH

டேட்டை கொல்ல வரும் மேன்ஸன் குடும்ப உறுப்பினர்கள், ஹாலிவுட்டின் அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு நடிகனான டால்டனைப் பார்த்ததும் அவனைக் கொல்ல அவன் வீட்டுக்குள் செல்ல, அவனுடைய ஸ்டண்ட் டூப்பான பூத்தும், அவனது நாய் ப்ராண்டியும் இணைந்து கொல்ல வந்தவர்களையே தற்காப்புக்காகக் கொன்று, அந்த சம்பவத்தை மாற்றியமைக்கின்றனர். இதனால், நீண்டநாள்களாக போலன்ஸ்கியுடன் நட்பு கோர வேண்டும் என்ற டால்டனின் கனவு நிறைவேறுவதாகப் படம் முடிகிறது.

டால்டனும் பூத்தும் கற்பனை கதாபாத்திரங்கள் என்பதால், அவர்களை வெவ்வேறு சூழ்நிலைகளில் பொருத்திப்பார்க்கிறார் டாரன்டினோ. அதில் மற்றொரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது, புரூஸ் லீயை காட்டும் அந்தக் காட்சி. எதிர்க்க முடியாத ஒரு தற்காப்புக் கலைஞன் என போற்றப்படும் புரூஸை கேலி செய்வதுபோல ஒரு காட்சியை அமைத்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு டூப்பான பூத்தும் புரூஸ் லீயும் மோதிக்கொள்ளும் காட்சியில், பூத்திடம் லீ அடிவாங்குவதைப் போலவும், கோபத்தில் பூத் தன் மனைவியையே கொன்றவன் என்பதை அறிந்ததும் பூத்தைக் கண்டு ஒரு நொடி லீ பயம்கொள்வது போன்றும் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

Bruce Lee look alike in OUATIH
Bruce Lee look alike in OUATIH

இவையன்றி, ஷாரனுக்கும் அவருடைய முன்னாள் காதலனான ஜே செப்ரிங்குக்கும் இடையே இருந்த உறவு, படத்தில் பெண் கதாபாத்திரங்களைக் காட்டும் விதம் என இன்னும் சில சர்ச்சைகளைச் சேர்த்து படத்தை உருவாக்கியுள்ளார், டாரன்டினோ. இந்த சர்ச்சைகளையெல்லாம் படம் வெளியாவதற்கு முன்பே போலன்ஸ்கி குடும்ப தரப்பும், புரூஸ் லீயின் குடும்ப தரப்பும் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கினர்.

சர்ச்சைக்குரிய பகுதிகள் ஒரு பக்கம் இருந்தாலும், படத்தின் சில காட்சிகள் தனித்து நிற்கின்றன. அதில் முதன்மையானது, ரிக் டால்டன், ஷூட்டிங்கில் தான் செய்யும் தவற்றை திருத்தி, ஒரு சிறந்த நடிகன் என தன்னை பறைசாற்றிக் கொள்ளும் காட்சி. டிக்காப்ரியோவின் கரியரில், இது கண்டிப்பாக ஒரு முக்கியமான காட்சியாக அமையும். அதேபோல ஷாரன் டேட், தான் நடித்த 'தி ரெக்கிங் க்ரூ' படத்தைப் பார்த்து, தன்னைத்தானே வியக்கும் மற்றொரு காட்சி. படத்தின் இன்னொரு சிறப்பம்சம், க்ளிஃப் பூத்தின் கதாபாத்திர வடிவமைப்பு. கடைசி வரை ஒரு விஸ்வாசமான நண்பனாக, தன் குறிக்கோளிலிருந்து, தன் மரபுகளிலிருந்து தவறாத ஒருவனாக இருப்பதும், அதை ப்ராட் பிட் அப்படியே திரையில் கடத்தியிருப்பதும் பார்ப்பதற்கே அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கின்றன.

A still from the film
A still from the film

ஒருபுறம் சர்ச்சைகள், மறுபுறம் சுவாரஸ்யங்கள் என இரண்டுமே இருந்தாலும், படத்தில் ஏதோவொன்று குறைகிறது என்ற ஏமாற்றமே பல ரசிகர்களுக்கு மிஞ்சியதாகத் தெரிகிறது. படம் வெளியாவதற்கு முன் அவ்வளவு பிரச்னைகள் அதைச் சுற்றி எழுப்பப்பட்டாலும், அந்தத் தீவிரம் திரைக்கதையில் இல்லாதது ஒருவேளை அந்த குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து காட்சிகள் நீக்கப்பட்டனவோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளன.