கட்டுரைகள்
பேட்டிகள்
Published:Updated:

உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக...

உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக...
பிரீமியம் ஸ்டோரி
News
உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக...

தொடர்ந்து ‘ஜஸ்டிஸ் லீக்’ படத்தில் நடித்தவர்களே ‘#ReleaseTheSnyderCut’ என்று ஸ்னைடருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஒரு கலையின் ரசிகன் நினைத்தால் எதையும் மாற்ற முடியும் என்பதை அழுத்தமாய் நிரூபித்திருக்கிறது ஹாலிவுட். ஆம், மீண்டும் வெளியாகவிருக்கிறது `ஜஸ்டிஸ் லீக்.’ இந்த முறை உண்மையிலேயே ஜாக் ஸ்னைடர் இயக்கியதை வெளியிடவிருக்கிறார்கள் என்பதுதான் ரசிகர்களின் மகிழ்ச்சிக்குக் காரணம்.

இயக்குநர் ஜாக் ஸ்னைடர் ஏற்கெனவே ‘300’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். டிசி எக்ஸ்டன்டட் சினிமாட்டிக் யுனிவர்ஸின் முதல் படமான ‘மேன் ஆஃப் ஸ்டீல்’ படமும் இவர் இயக்கியதுதான்; கதை கிறிஸ்டோபர் நோலன். இதில் சூப்பர்மேனின் கதையைச் சொன்ன ஸ்னைடர் அடுத்து ‘பேட்மேன் vs சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ்’ படத்தின் மூலம் சூப்பர்மேன் உலகில் பேட்மேனையும் கொண்டு வந்தார். அடுத்து பல சூப்பர்ஹீரோக்கள் இணையும் ‘ஜஸ்டிஸ் லீக்’ படத்தையும் இயக்கினார் ஸ்னைடர். இங்கேதான் சிக்கல் தொடங்கியது.

‘ரொம்ப சீரியஸ்; புரியறதும் கஷ்டம்; காமெடியே இல்லையே... இந்த வெர்ஷன் மார்க்கெட் ரிஸ்க்’ என நினைத்தது ‘வார்னர் பிரதர்ஸ். அந்தப் பக்கம் போட்டியாளரான டிஸ்னியின் மார்வெல் காமிக்ஸ் ‘அயர்ன்மேன்’, ‘தோர்’, ‘அவெஞ்சர்ஸ்’ என வரிசையாக வெற்றிகளைக் குவிக்க, வார்னர் பிரதர்ஸ் தன் மீதுள்ள அழுத்ததைச் சமாளிக்க இயக்குநர் ஜாஸ் வீடனை அழைத்து வந்தது. ஜாஸ்தான் ‘அவெஞ்சர்ஸ்’ படத்தொடரின் முதல் இரண்டு பாகங்களை இயக்கியவர். அவரோடு இணைந்து ஸ்னைடரைப் பணியாற்ற வைத்தது வார்னர் பிரதர்ஸ். ஆனால், அப்போது ஸ்னைடரின் மகள் தற்கொலை செய்துகொள்ள, ‘ஜஸ்டிஸ் லீக்’ படத்திலிருந்து விலகுவதாக ஸ்னைடர் அறிவித்தார்.

அதன் பின்னர் படத்தை முடிக்கும் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்ட ஜாஸ் வீடன், படத்தில் எண்ணற்ற மாற்றங்கள் செய்தார். 90 நிமிடங்களுக்கு மேல் காட்சிகள் கட் செய்யப்பட்டன. 80 பக்கங்கள் ஸ்க்ரிப்ட்டில் கூடுதலாக இணைத்துப் புதிய காட்சிகளை எடுத்தார் ஜாஸ். வார்னர் பிரதர்ஸ் கேட்டுக் கொண்டபடி, 2 மணிநேரத்துக்கும் குறைவாக ஓடக்கூடிய வகையில் படத்தை எடிட் செய்து மார்வெல் படங்களைப் போலவே நகைச்சுவையைத் தூக்கலாகச் சேர்த்துவிட்டார். சில இரட்டை அர்த்த வசனங்கள், பேட்மேனையே காமெடி செய்ய வைத்தது என ஸ்னைடரின் கதாபாத்திரங்களை மாற்றியமைத்தார். இசையமைப்பாளரையும் மாற்றினார். ஆனால், படத்தின் இயக்குநர் என ஜாக் ஸ்னைடரே விளம்பரப்படுத்தப்பட்டார். நவம்பர் 17, 2017-ம் வருடம் இந்த ‘ஜஸ்டிஸ் லீக்’ வெளியானது. பேட்மேன், சூப்பர்மேன், வொண்டர்வுமன், தி ஃப்ளாஷ், அக்வாமேன், சைபோர்க் என ஒரு சூப்பர்ஹீரோ படையே இருந்தாலும் படம் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. அப்போது, ‘படத்தின் இயக்குநர் ஜாக் ஸ்னைடர் எடுத்த வெர்ஷன் இதுவல்ல, இது தயாரிப்புத் தரப்பு வேறு இயக்குநரை வைத்து மாற்றியமைத்திருக்கிறது’ என்ற சர்ச்சை கிளம்பியது.

உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக...
உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக...

#ReleaseTheSnyderCut என்ற ஹேஷ்டேக்கின் மூலம் ரசிகர்கள் அசல் படத்தை ரிலீஸ் செய்யுமாறு சமூக வலைதளங்களில் போர்க்கொடி தூக்குவது, ஆன்லைன் பெட்டிஷன் மூலம் 2 லட்சம் கையெழுத்துக்கும் மேல் திரட்டி, தயாரிப்புத் தரப்புக்குக் கடிதம் எழுதுவது, சினிமா தொடர்பான முக்கிய நிகழ்வுகளில் ஸ்னைடருக்கு ஆதரவாக பேனர்கள் வைப்பது, விமானம் மூலம் வானில் பறக்கவிடும் விளம்பரங்கள் செய்வது போன்ற பல போராட்டங்களை முன்னெடுத்தார்கள். கிரவுட்சோர்சிங் மூலம் கிடைத்த பணத்தில் ஸ்னைடரின் மகள் நினைவாக அமெரிக்காவின் தற்கொலைத் தடுப்பு மையத்துக்கு (American Foundation for Suicide Prevention (AFSP)) அவ்வப்போது நிதியுதவி செய்தார்கள். (2020 ஜனவரி நிலவரப்படி, 1,50,000 டாலர் நிதியுதவி செய்திருக்கிறார்கள்) ஒரு கட்டத்தில், ‘` `ஸ்னைடர் கட்’ என்று ஒன்று இல்லவே இல்லை, இது ரசிகர்களின் கற்பனை’’ எனச் சில மீடியாக்கள் செய்தி வாசித்தன. அதுவரை அமைதியாக இருந்த ஜாக் ஸ்னைடர் வெளியே வந்தார். ஸ்னைடர் கட் ஃபுட்டேஜ் அடங்கிய ஹார்டுடிஸ்க் படங்களை போஸ்ட் செய்து தன்னுடைய கனவுப்படம் இருப்பது உண்மை என்று நிரூபித்தார். ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி என்றும் படம் தயாரிப்புத் தரப்பு நினைத்தால் ரிலீஸாகும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து ‘ஜஸ்டிஸ் லீக்’ படத்தில் நடித்தவர்களே ‘#ReleaseTheSnyderCut’ என்று ஸ்னைடருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த ஆண்டு பிப்ரவரியில், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் தலைவர் டோபி எமரிச் ‘#ReleaseTheSnyderCut’ இயக்கத்தின் வீரியத்தையும் ஆதரவையும் புரிந்துகொண்டு ஸ்னைடர் தரப்பை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த 20-ம் தேதி, தன் ‘மேன் ஆஃப் ஸ்டீல்’ படத்தை ஃபேஸ்புக் வாட்ச்பார்ட்டியில் ஸ்ட்ரீமிங் செய்த ஸ்னைடர், ‘ஜஸ்டிஸ் லீக்’ படத்தின் ஒரிஜினல் வெர்ஷன் அடுத்த வருடம் வார்னர் மீடியாவின் புதிய OTT தளமான ‘HBO மேக்ஸ்’ஸில் ரிலீஸாகும் என்று அறிவித்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.

ரசிகர்கள் ஒரு கலைஞனுக்காகப் போராடி ஒரு பெரிய நிறுவனத்தை அடிபணிய வைத்திருக்கிறார்கள். ‘ஜஸ்டிஸ் லீக்’குக்கே ‘ஜஸ்டிஸ்’ கிடைத்துள்ளது.