Election bannerElection banner
Published:Updated:

`வெனோம், ஜோக்கர், சூசைட் ஸ்குவாட், டெட்ஷாட், ட்ரெஞ்ச்...’ - இது சூப்பர் வில்லன்களின் காலம்

``சாதாரண படங்களில் ஹீரோக்களுக்குப் பின் கதை, முன் கதை, அவனுக்கு அந்த இலக்கு வரக் காரணம்... என்பவை விளக்கப்படும். அப்படியானால், இந்த சூப்பர் ஹீரோ படங்களின் ப்ரோட்டகானிஸ்டான சூப்பர் வில்லன்களுக்கும் இதேபோன்ற முன் கதை இருப்பது இயல்பே!"

Thanos

பொதுவாக, திரைமொழியில் படத்தின் முன்னணிப் பாத்திரத்தைப் `ப்ரோட்டகானிஸ்ட்' என்பார்கள். இந்தப் பாத்திரத்தின் வாழ்க்கை, இலக்கு, அதை அடைவதிலிருக்கும் சிக்கல்களைச் சுற்றியே ஒரு படத்தின் திரைக்கதை பின்னப்பட்டிருக்கும். பொதுவழக்கில் சொல்லவேண்டுமென்றால், படத்தின் `ஹீரோ'. பெண்களை முன்னிலைப்படுத்தும் படங்களில் `ஹீரோயின்'. ப்ரோட்டாகனிஸ்டுகளே ஒரு படத்தின் மையப்புள்ளியாக இருப்பார்கள். அவர்களைத் தடுப்பதே ஒரு வில்லனின் வேலையாக இருக்கும். ஆனால், இந்த டெம்ப்ளேட் `சூப்பர் ஹீரோ' படங்களுக்குப் பொருந்துவதில்லை.

அங்கே வில்லன்களே பெரும்பாலும் ப்ரோட்டகானிஸ்டுகளாக இருப்பார்கள். அவர்களுக்கே இலக்கு, லட்சியம், பயணம் எல்லாம் இருக்கும். உதாரணத்துக்கு `அவெஞ்சர்ஸ்' படத்தொடர். அங்கே தானோஸ்தான் ப்ரோட்டகானிஸ்ட். அவனை இலக்கை அடையவிடாமல் தடுப்பதுதான், அவெஞ்சர்ஸின் தலையாயக் கடமை.

சாதாரண படங்களில் ஹீரோக்களுக்குப் பின் கதை, முன் கதை, அவனுக்கு அந்த இலக்கு வரக் காரணம்... என்பவை விளக்கப்படும். அப்படியானால், இந்த சூப்பர் ஹீரோ படங்களின் ப்ரோட்டகானிஸ்டான சூப்பர் வில்லன்களுக்கும் இதேபோன்ற முன் கதை இருப்பது இயல்பே! ஹாலிவுட் இப்போது அதை நோக்கித்தான் தன்னை நகர்த்திக்கொண்டிருக்கிறது. இத்தனை காலம் சூப்பர் வில்லன்கள் உலகத்துக்கு ஆபத்தானவர்கள் என்ற கண்ணோட்டம்தானே இருந்தது. ஆனால், அவர்கள் பக்கம் இருக்கும் கதையும் சொல்லப்படவேண்டுமல்லவா. அப்படி வந்த, வரவிருக்கும் சூப்பர் வில்லன் படங்களில் சில...

Vikatan
2
Venom

வெனோம் (2018/2020)

மார்வெல் காமிக்ஸின் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தின் வாழ்நாள் விரோதியான வெனோம், ஒருவேளை நல்லவனாக, ஊரைக் காப்பாற்றும் சூப்பர் ஹீரோவாக இருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே இந்தப் படம். விண்வெளியிலிருந்து பூமிக்கு வந்த உயிரினமான சிம்பியோட்டின் ஆதிக்கத்தால், எட்டி ப்ராக் என்ற பத்திரிகையாளன் வெனோம் என்ற நிலைக்கு மாறிவிடுவான். அதன்பின் அந்த நிலையிலிருந்து நியூயார்க் நகரை அச்சுறுத்தும் பிறவகை சிம்பியோட்டுகளை எப்படி அழிக்கிறான் என்பதே இந்தப் படத்தின் கதை. அடுத்த ஆண்டு இதன் இரண்டாம் பாகம் வெளியாகவிருக்கிறது.

3
Joker

ஜோக்கர் (2019)

டி.சி காமிக்ஸின் மிகமுக்கியப் பாத்திரமான ஜோக்கர், பேட்மேனின் முதன்மை சூப்பர் வில்லன். பேட்மேனுக்கு எந்தளவுக்கு மனவலி இருக்கிறதோ, அதே அளவு வலியோடு இருப்பவன். என்றாலும், பேட்மேன் அந்த வலியை ஊரைக் காப்பாற்றுவதற்கான நேர்மறைச் சக்தியாக மாற்றிக்கொண்டான், ஜோக்கரோ சூப்பர் வில்லனாகிவிட்டான். அப்படியொரு வலி வருமளவுக்கு ஜோக்கர் வாழ்வில் என்னதான் நிகழ்ந்தது என்ற கதையைத்தான், இந்தப் படத்தில் சொல்லவிருக்கிறார்கள். அதிகமான நடிகர்களால் ஏற்று நடிக்கப்பட்ட வில்லன் பாத்திரம் ஜோக்கர்தான். வில்லனாகவே காட்டப்பட்டு, வில்லனாகவே இறந்தும்போவான். இந்தப் பாத்திரத்தில் நடித்ததற்காக ஹீத் லெஜ்ஜருக்கு ஆஸ்கர் விருதுகூட கிடைத்தது. ஆனாலும் ஜோக்கரின் கதை மட்டுமே இதுவரை ஒரு படமாக வரவில்லையென்பதால், இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகம்.

4
The Suicide Squad

சூசைட் ஸ்குவாட் (2016/2020)

மற்ற சூப்பர் வில்லன் படங்களைப்போல `சூசைட் ஸ்குவாட்' ஒரு வில்லனைப் பற்றிய படமல்ல. டி.சி யூனிவெர்ஸ்ஸின், டெட்ஷாட், ஹார்லே க்வின், சாண்டோ சண்டானா, டிக்கர் உள்ளிட்ட முக்கிய வில்லன்களையெல்லாம் ஒன்றிணைத்து ஒரு குழுவை உருவாக்கி, அவர்களை வைத்து உலகைக் காப்பாற்றினால் எப்படியிருக்கும் என்ற கதை. காமிக்ஸில் `சூசைட் ஸ்குவாட்' சூப்பர் ஹீரோக்களை எதிர்க்கும் சூப்பர் வில்லன்கள் கூட்டணியாகத்தான் தோன்றியது. அதைக் கொஞ்சம் மாற்றி, புதுமையான ஒரு முயற்சியை எடுத்தது வார்னர் ப்ரோஸ் தயாரிப்பு நிறுவனம். கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகம் எதிர்பார்த்த வெற்றியடையவில்லை என்றாலும், அடுத்து வரவிருக்கும் இதன் இரண்டாம் பாகத்தை `கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி' இயக்குநர் ஜேம்ஸ் கன் இயக்கவிருப்பதால், கண்டிப்பாக படம் இதுவரை வந்த டி.சி படங்களைவிட சிறந்ததாக இருக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.

Vikatan
5
Deadshot

டெட்ஷாட் (2021)

`சூசைட் ஸ்குவாட்' படத்தில் தோன்றிய டெட்ஷாட்டின் முன்கதையைப் பற்றி விவரிக்கும் இந்தப் படம். கொடூரனான தன் தந்தையைச் சுட்டுக்கொல்ல முயற்சி செய்யும்போது, குறி தவறி தம்பியைக் கொன்றுவிட்டதால், இனி தான் சுடும்போது குறிதப்பவே கூடாது என்ற சபதத்தோடு அசாஸினாக மாறியவன், டெட்ஷாட். மிக எமோஷனலான இந்த முன் கதையை வைத்து டெட்ஷாட் எப்படி அசாஸினாகிறான், ஏன் சிறைக்குப் போகிறான், எப்படி சூசைட் ஸ்குவாடில் இணைகிறான், அவனுக்கும் அவன் மகளுக்கும் இடையேயான உறவு எப்படியிருக்கிறது என்பதையெல்லாம் பேசும் இந்தப் படம்.

6
The Trench creature

தி ட்ரெஞ்ச் (2022)

`ஆக்வாமேன்' படத்தைப் பார்த்தவர்களுக்கு இந்த `ட்ரெஞ்ச்' சாம்ராஜ்ஜியத்தை மறக்க முடியாது. ரத்தம் குடிக்கும் கொடூரமான விலங்குகள் தண்ணீருக்கு அடியில் குடியிருக்கும் பகுதிதான், ட்ரெஞ்ச். ஆக்வாமேன் தன்னுடைய ட்ரைடெண்டை எடுப்பதற்காக இந்த ட்ரெஞ்ச் பகுதியைக் கடந்து, தன் உயிரைப் பணயம் வைத்து இறுதியில் அந்த ஆயுதத்தைக் கைப்பற்றுவான். அந்தப் படத்தில் இந்த ட்ரெஞ்ச் பகுதி ஒரு சில நிமிடங்களே காட்டப்படும். இப்போது அந்தப் படத்தை இயக்கிய ஜேம்ஸ் வான் ட்ரெஞ்சைப் பற்றிய ஒரு முழுநீளப் படத்தை இயக்கவிருக்கிறார். அதுவும் `கான்ஜுரிங்', `இன்சீடியஸ்' என அவருக்கே உரிய ஹாரர் ஜானரில்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு