இயக்குநர்கள் ரூஸோ ப்ரதர்ஸ் (ஆண்டனி & ஜோ) இயக்கத்தில் நடிகர் தனுஷ் 'அவிக் சான்' (Avik San) என்னும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த 'The Gray Man' படம் கடந்த ஜூலை 22-ம் தேதி, உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. இதையடுத்து இப்படத்தின் ஸ்பின்-ஆஃப்பாக இதன் முக்கிய கதாபாத்திரங்களை வைத்து தனியாக ஒரு படத்தொடர் ஆரம்பிக்க ரூஸோ ப்ரதர்ஸ் முடிவு செய்துள்ளனர். இதில் தனுஷ் மீண்டும் நடிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து வந்தனர்.
இந்நிலையில் புதிதாக எடுக்கவிருக்கும் இப்படங்களின் ஒன்றில், தனுஷ் கதாபாத்திரம் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று இயக்குநர் ஜோ ரூஸோ கூறியுள்ளார்.

இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் ஜோ ரூஸோ, "உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் அனைவரும் 'The Gray Man' படத்தை உற்சாகத்துடன் வரவேற்றுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. இத்திரைப்படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்படம் ஒரு புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டது. இதில் பல அற்புதமான கதாபாத்திரங்கள் இருப்பதால், இப்படத்தை எடுக்கும்போதே இதில் உள்ள முக்கிய கதாபாத்திரங்களை வைத்து தனியாக ஒரு தொடர் உருவாக்கலாம் என்று எண்ணி இருந்தோம். எனவே 'Netflix' உடன் இணைந்து இதற்கான ஸ்கிரிப்டைத் தயார் செய்யவுள்ளோம்.
இதில் உள்ள எல்லா கதாபாத்திரங்களும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் ரசிகர்கள் விரும்பும் கதாபாத்திரங்களை இந்தப் புதிய தொடரில் கொண்டுவர முடிவு செய்துள்ளோம். இதில் தனுஷின் கதாபாத்திரம் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.
