Published:Updated:

ஆஸ்கர், கோல்டன் குளோப் எனப் பல விருதுகள்... தேர்ந்த திரைக்கதைகளின் பிதாமகன் உருவான கதை! #AaronSorkin

2001-ம் ஆண்டு போதைப்பொருள் வைத்திருந்ததற்காகக் கைதுசெய்யப்பட்ட ஆரோன், முறையான மருத்துவ ஆலோசனைகள் மூலம் போதைப்பழக்கத்திலிருந்து தன்னை மீட்டெடுத்தார். வாழ்க்கை தனக்குக் கொடுத்த இரண்டாவது வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"To make a great film, you need three things - the script, the script, and the script."
Alfred Hitchcock

ஒ.டி.டி-யில் மலை போல குவிந்திருக்கும் படங்களுக்கு நடுவில் திரையரங்கிற்கு மக்களைக் கூட்டிவருவதே மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அப்படியே வந்தாலும் முதல் பத்து நிமிடத்திலயே படத்தின் கிளைமாக்ஸை யூகிக்கும் அளவிற்கு ஆடியன்ஸும் தெளிவாகிவிட்டார்கள். இதையும் மீறி கோடிக்கணக்கில் செலவுசெய்து கிராஃபிக்ஸில் வித்தைக் காட்டினாலும், "இதெல்லாம் ஹாலிவுட் கொண்டாட்டம் டப்பிங் படத்துலயே பாத்தாச்சு, தண்ணிய குடி" என்ற மோடிலேயே கடந்துசெல்கிறார்கள். ஆடியன்சை திருப்திபடுத்தத் தேவையானது அவர்களின் கவனத்தை சிதறடிக்காத ஒரு நல்ல திரைக்கதை மட்டுமே.

அப்படிப்பட்ட நேர்த்தியான திரைக்கதைகள் பலவற்றை எழுதி உலகம் முழுக்க பாராட்டுகளையும் பல விருதுகளையும் வாங்கி குவித்தவர்தான் ஆரோன் சோர்கின். ஆஸ்கர், கோல்டன் க்ளோப், எம்மி என பல விருதுமேடைகளை பார்த்த இவரது எழுத்துப்பயணம் ஆரம்பமானது நியூயார்க் நகரத்தின் ஒரு பழைய டைப்ரைட்டரில்.
Aaron Sorkin
Aaron Sorkin

சிறுவயதில் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு 1988-ம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் வாய்ப்பு தேட கிளம்பினார் ஆரான். தன் தேவைகளுக்காக பிராட்வே தியேட்டர் அருகில் உள்ள ஒரு பாரில் பார்டெண்டராக வேலை பார்த்துக்கொண்டிருந்தவர், நண்பனின் வீட்டிலிருந்த ஒரு பழைய டைப்ரைட்டரில் விளையாட்டாக எழுதத் தொடங்கினார். நடிப்பைவிட எழுதுவது எளிமையாக தனக்கு வருகிறது என உணர்ந்த அந்தத் தருணத்தில் தன் முழு கவனத்தையும் அதில் செலுத்த ஆரம்பித்தார் ஆரான். இரண்டு மேடை நாடகங்கள் எழுதி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த ஆரோனுக்கு அடுத்த பாய்ச்சல் ஒரு போன்கால் மூலம் நிகழ்ந்தது. வழக்கறிஞராக பணிபுரிந்த தன் தங்கையிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன ஒரு வழக்கை அடிப்படையாக கொண்டு ஒரு கதையை எழுத ஆரம்பித்தார். நாடகத்திற்காக எழுதப்பட்ட அந்த கதைதான் 1992'ல் 'A Few Good Men' என்ற பெயரில் மிகப்பெரிய வெற்றிபடமாக வெளிவந்து ஆரோனின் திரையுலக வாழ்வை தொடங்கி வைத்தது.

திரைப்படங்கள் மூலம் வெற்றிக்கண்ட ஆரோன் தொலைக்காட்சி தொடர்களிலும் கால் பதித்தார். அமெரிக்காவின் அடையாளமாக திகழக்கூடிய வெள்ளை மாளிகையை மையமாக கொண்டு 1999-ம் ஆண்டு அவர் உருவாக்கிய தொலைக்காட்சி தொடர்தான் 'The West Wing'. முதல் சீசனிலேயே ரசிகர்களின் வரவேற்பும் விமர்சகர்களின் பாராட்டும் கிடைத்தது. இவையனைத்திற்கும் மேலாக 9 எம்மி விருதுகளையும் வென்று சாதனை படைத்தது அந்தத் தொடர். இப்படி சினிமா, டிவி, நாடகங்கள் என எழுத்தின் எல்லா வடிவங்களிலும் வெற்றிகண்ட ஆரோனுக்கு வலிகள் நிறைந்த ஒரு காலகட்டமும் இருந்தது. எப்படி விளையாட்டாக எழுதத் தொடங்கினாரோ, அதேபோல போதைப்பழக்கத்திற்கும் அடிமையானார் ஆரோன். 2001-ம் ஆண்டு போதைப்பொருள் வைத்திருந்ததற்காகக் கைதுசெய்யப்பட்ட ஆரோன், முறையான மருத்துவ ஆலோசனைகள் மூலம் போதைப்பழக்கத்திலிருந்து தன்னை மீட்டெடுத்தார். வாழ்க்கை தனக்குக் கொடுத்த இரண்டாவது வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ஆரோன் மீண்டும் வெற்றிப்படிகளில் ஏறத்தொடங்கினார்.

Aaron Sorkin
Aaron Sorkin

ஃபேஸ்புக் என்ற வலைதளம் மட்டும்தான் நமக்கு தெரியுமே தவிர அதன் பின்னால நடந்த பல சுவாரஸ்யமான கதைகள் நமக்கு தெரியாது. அந்தக் கதைகளை நேர்த்தியான திரைக்கதையாக ஆரோன் உருமாற்ற, டேவிட் ஃபின்ச்சரின் அட்டகாசமான இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் 'The Social Network'. காதலியிடம் கூட இயல்பாக பேசத் தெரியாத ஓர் இளைஞன், எப்படி உலகம் முழுதும் ஒரே இடத்தில் உரையாட ஓர் இணைய வழி உலகத்தை உருவாக்குகிறான் என்பதை கொஞ்சம் கூட சலிப்புதட்டாமல் சொல்லியிருப்பார் ஆரோன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

படத்தின் முதல் காட்சியிலேயே மார்க் சக்கர்பெர்க் கெட்டவன் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடுவோம். இது ஆரான் எழுதும் எல்லாப்படத்திற்க்கும் பொருந்தும். சமூகம் வைத்திருக்கும் நல்மதிப்பீடுகளுக்கு நேரெதிராக தன் கதாநாயகர்களை வடிவமைப்பார் ஆரான்.

இது குறித்து கேட்கும்பொழுது, "என் படத்தின் கதாநாயகர்களை பார்த்த கணத்திலேயே இவன் நரகத்திற்குதான் செல்ல வேண்டும் என அனைவரும் நினைப்பார்கள். ஆனால் அவனை சொர்க்கத்திற்கு அனுப்ப வேண்டுமென நான் கடவுளிடம் வைக்கும் வாதமே என் திரைக்கதைகள்" என்று பதிலளித்தார். இந்தப் படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர், கோல்டன் க்ளோப், பாஃப்தா விருதுகளையும் வென்றார் ஆரோன்.

Aaron Sorkin
Aaron Sorkin
அதைத்தொடர்ந்து Moneyball, Steve Jobs போன்ற படங்களில் பணியாற்றிய ஆரோன், வெறும் எழுத்தாளராகவே இருந்துவிடாமல், தற்போது திரைப்படங்களை இயக்கவும் தொடங்கியுள்ளார். Molly's Game என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், கடந்த ஆண்டு வெளியான தன் இரண்டாவது படமான 'The Trial of Chicago 7' படத்திற்காக மீண்டும் சிறந்த திரைக்கதைக்கான கோல்டன் க்ளோப் விருதினை வென்றுள்ளார்.
The Trial of Chicago 7
The Trial of Chicago 7

1968-ம் ஆண்டு சிகாகோ மாகாணத்தில் நடந்த மாணவர் போராட்டத்தை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் வரும் நீதிமன்ற காட்சிகள் இன்றும் அமெரிக்காவின் உண்மை முகத்தைப் பிரதிபலிக்கிறது. ஆரோனின் எழுத்துப்பாணியை பற்றி அவரிடம் கேட்கும்பொழுது அவர் சொன்ன வார்த்தைகள் உலகத்தில் உள்ள அனைத்து இளம் எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.

"மக்களுக்கு என்ன பிடிக்கும் என யோசித்து எழுதத் தொடங்காதீர்கள். உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துக்கொண்டு எழுதுங்கள். உங்களுடைய தனித்த குரல் உங்களின் எழுத்துகளில் எதிரொலிக்க வேண்டும்."
ஆரோன் சோர்கின்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு