Published:Updated:

The Little Things: ஹாலிவுட்டின் மூன்று முக்கிய நடிகர்கள் இணைந்த க்ரைம் த்ரில்லர் எப்படியிருக்கிறது?

The Little Things | தி லிட்டில் திங்ஸ்
News
The Little Things | தி லிட்டில் திங்ஸ்

இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கும் அவர்கள் குற்றவாளி என நினைக்கும் ஒருவனுக்கும் இடையேயான குழப்பமான ஆடுபுலி ஆட்டமே இந்த 'தி லிட்டில் திங்ஸ்'. அமேசான் ப்ரைமில் கடந்த வாரம் வெளியாகியிருக்கும் இந்தப் படம் எப்படியிருக்கிறது?

டெபுட்டி ஷெரிஃப் ஜோ டீகன் தனிப்பட்ட முறையில் டிடெக்டிவ் ஜிம் பேக்ஸ்டருக்கு ஒரு கொலை வழக்கில் உதவி செய்கிறார், ஆலோசனை வழங்குகிறார். தொடர்ச்சியாகப் பெண்கள் ஒரே பாணியில் கொலை செய்யப்படுவதையடுத்து டீக் தன் அனுபவத்தைக் கொண்டு துப்புத் துலக்க, அது ஆல்பர்ட் ஸ்பார்மா என்ற ஒருவனின் மீது சந்தேகப் பார்வையை விழவைக்கிறது. க்ரைம் குற்றங்கள் தொடர்பாகத் தேடித் தேடி தகவல்களைச் சேகரிக்கும் அவன், இந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளின் மேல் நிகழ்த்தும் உளவியல் ரீதியான தாக்குதலே இந்த 'தி லிட்டில் திங்ஸ்'.

ஸ்பார்மாதான் நிஜத்தில் குற்றவாளியா, டீகனுக்கு இந்த வழக்கின் மேல் ஏன் தனிப்பட்ட அக்கறை, ஜிம் பேக்ஸ்டர் இதனால் எப்படிப் பாதிப்படைகிறார் ஆகிய கேள்விகளுக்குச் சற்றே எதிர்பாராத பதில்களைச் சொல்கிறது இந்தப் படம்.
The Little Things | தி லிட்டில் திங்ஸ்
The Little Things | தி லிட்டில் திங்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இறந்தகாலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையேயான ஒற்றுமைகள், ஒருவருக்கு நிகழ்ந்த ஒன்று மீண்டும் இன்னொருவருக்கு அப்படியே நிகழ்வது எனச் சற்றே குழப்பியடிக்கும் ஒரு தத்துவார்த்தத்தைப் படம் தன் சாராம்சமாகக் கொண்டு கதை சொல்கிறது. "இறந்தகாலம் எதிர்காலமாகிறது, பின்னர் அது மீண்டும் இறந்தகாலமாகவும், எதிர்காலமாகவும் உருமாற்றம் அடைகிறது" என்கிறார் டீகனாக டென்சில் வாஷிங்டன். அதாவது வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளின் வாழ்விலும் ஒரு 'தொடர் கொலை' (சீரியல் கில்லிங்) சம்பந்தமான வழக்கு எட்டிப்பார்க்கிறது. கொலை செய்யப்படும் முறை, கொலை செய்யப்படுபவர்கள் என அதில் நிறைய ஒற்றுமைகள் எட்டிப் பார்க்க, அது இருவரின் வாழ்க்கையையும் ஒரே ரீதியில் பாதிக்கிறது. உளவியல் ரீதியாக அவர்களை உடைக்கிறது.

மூடப்படாத வழக்குகளை, குற்றவாளிகள் யாரென்றே உறுதி செய்யப்படாத வழக்குகளை கோல்ட்கேஸ் (Cold Case) என்பார்கள். அத்தகைய வழக்குகள் கடமையே கண்ணான காவல்துறை அதிகாரிகளுக்கு எத்தகைய மன உளைச்சலைக் கொடுக்கும் என்பதைப் பேசுகிறது படம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

டெபுட்டி ஷெரிஃப் ஜோ டீகனாக சீனியர் டென்சில் வாஷிங்டனுக்குக் கனமான பாத்திரம். வழக்கம்போல் தன் அனுபவத்தால் ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக அவர் மற்றவர்களுடன் உரையாடும் வசனங்களிலேயே அவரின் பாத்திரம் எத்தகையது என்பதைப் புரியவைத்து விடுகிறார்கள். எப்பேர்ப்பட்ட இக்கட்டான நிலையையும் கூலாக ஹேண்டில் செய்யும் அவரே ஒரு கட்டத்தில் தன் கட்டுப்பாட்டை இழக்கிறார். ஸ்பார்மாவாக வரும் ஜாரெட் லெடோவை அந்த விசாரணைக் காட்சியில் டென்சில் வாஷிங்டன் மிரட்டும்போது நாமும் சற்று மிரண்டுதான் போகிறோம்.

The Little Things | தி லிட்டில் திங்ஸ்
The Little Things | தி லிட்டில் திங்ஸ்

அவர் கட்டுக்குள் வந்ததும் முகத்தில் உணர்ச்சிகளே இல்லாமல் "You have lost control" என்று எதிராளி ஜாரெட் லெடோ (ஸ்பார்மா) சொல்வது அவர் பாத்திரத்தின் குரூரத்துக்கும் அவரின் பிரமாதமான நடிப்புக்கும் சான்று. படத்தின் பாதியில் வந்தாலும் ஜாரெட் லெடோ இரண்டு காவல்துறை அதிகாரிகளையும் குழப்பியடித்து ஓடவிடுவது ரணகளம். குறிப்பாக, அவருக்கும் டென்சில் வாஷிங்டனுக்கும் இடையேயான ஹைவே காட்சி சுவாரஸ்ய விளையாட்டு.

The Little Things | தி லிட்டில் திங்ஸ்
The Little Things | தி லிட்டில் திங்ஸ்

டிடெக்டிவ் ஜிம் பேக்ஸ்டராக வரும் ரமி மாலிக் அந்தப் பாத்திரத்துக்குக் கனகச்சிதமாகப் பொருந்துகிறார். எல்லோரையும் லெஃப்ட்டில் டீல் செய்து கெத்தாகத் திரியும் அவரிடம் இளம் அதிகாரிக்கான கோபமும், விரக்தியும் ஆங்காங்கே வெளிப்படுகின்றன. டென்சில் வாஷிங்டனும் அவரும் வழக்குத் தொடர்பாகப் பேசிக்கொள்ளும் ஒவ்வொரு காட்சிகளுமே முக்கியமானவை. அதில்தான் கதை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்கிறது. கிளைமேக்ஸில், ஜாரெட் லெடோ ரமி மாலிக்கை அலைக்கழிக்கச் செய்து பித்துப்பிடிக்க வைக்கும்போது ரமியின் நடிப்பு உச்சம் தொடுகிறது. குறிப்பாக, நீச்சல் குளத்தின் அருகே எவ்வித உணர்ச்சிகளும் இல்லாமல் அவர் அமர்ந்திருக்கையில் நம்மையும் வருத்தம்கொள்ளச் செய்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது ஒரு முழுநீள க்ரைம் த்ரில்லராக விரியாமல் உளவியல் ரீதியாகப் பல தளங்களில் பயணிக்கிறது. தொடர் கொலைகளில் தொடங்கும் படம், பின்னர் அதைவிடுத்து, ஒரு சந்தேகத்துக்கு இடமானவனுக்கும் காவல்துறைக்கும் நடக்கும் விளையாட்டாக மட்டுமே தன் வெளியைச் சுருக்கிக் கொள்கிறது. இதுதான் இதன் பலம், பலவீனம் இரண்டுமே! குற்றவாளி யாரெனக் கண்டறியும் பயணம், அது தரும் மன உளைச்சல் ஒருபுறம், குற்றவாளி இவன்தான் என ஒருவனைச் சந்தேகித்த பின்னர் சாட்சிகள், ஆதாரங்கள் ஏதுமின்றி திரியும் குழப்பமான மனநிலை இன்னொரு புறம் என விரிகிறது கதை.

The Little Things | தி லிட்டில் திங்ஸ்
The Little Things | தி லிட்டில் திங்ஸ்

அதிலும் சந்தேகத்துக்கு இடமான குற்றவாளியே உளவியல் ரீதியாக ஓர் ஆட்டத்தை ஆடி சவால்விடுகையில் இரண்டு அதிகாரிகளும் விரக்தியின் உச்சிக்கே சென்று விடுகிறார்கள். கிளைமேக்ஸில் ஒரு தவற்றைச் செய்துவிட்டு அது தரும் குற்ற உணர்ச்சியால் அல்லல்படும் ரமி மாலிக்கிற்கு, அதே போன்ற ஒரு சூழ்நிலையை முன்னர் தன் வாழ்வில் எதிர்கொண்ட டென்சில் வாஷிங்டன் தரும் மன அமைதி எனும் பரிசு நெகிழச் செய்கிறது.

தாமஸ் நியூமேனின் இசையும், ஜான் ஸ்வார்ட்ஸ்மேனின் ஒளிப்பதிவும் கதைக்கு என்ன தேவையோ அதற்காக மட்டுமே உழைத்திருக்கிறது. பெரிதாக அதிர்ந்து ஒலிக்காத பின்னணி இசை ஓகே என்றாலும் ஒரு சில காட்சிகளில்கூட லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் பிரமாண்டத்தைக் காட்டாத ஒளிப்பதிவு, பட்ஜெட் சிக்கலா என்று கேட்க வைக்கிறது. அதே சமயம், கார்களின் நெடும்பயணத்தின்போது மாறும் நிலத்தோற்றங்கள், கிளைமேக்ஸில் அந்தப் பாலைவனத்தின் வெறுமைப் போன்றவற்றைச் சிறப்பாகவே காட்சிப்படுத்தியுள்ளனர்.

The Little Things | தி லிட்டில் திங்ஸ்
The Little Things | தி லிட்டில் திங்ஸ்

1990-களில் நடக்கும் கதையாகக் காட்டப்பட்டிருக்கும் இதை இதன் இயக்குநரும் எழுத்தாளருமான ஜான் லீ ஹேன்காக் 1993-லேயே எழுதிவிட்டார். ஸ்பீல்பெர்க்கை இயக்குமாறு கேட்டுக்கொள்ள, அவர் படத்தின் 'டார்க்' தன்மையைப் பார்த்து விலகிவிட, பின்னர் பல பேர் கை மாறி, தற்போது ஜான் லீ ஹேன்காக்கே படத்தை இயக்கியுள்ளார். முன்னரே எழுதப்பட்ட கதை என்றாலும், இதன் திரைக்கதை அமைப்பிலும் நிகழ்வுகளிலும் டேவிட் ஃபின்சரின் இயக்கத்தில் மார்கன் ஃப்ரிமேன் மற்றும் பிராட் பிட் நடித்த 'SE7EN' படத்தின் பாதிப்பு நிறையவே தெரிகிறது. ஆனால், இவர் குற்றவாளி, இவர் இதனால்தான் இந்தக் கொலைகள் செய்தார் என்பது போன்ற விடைகளை எல்லாம் எதுவும் சொல்லாமல் தனித்து நிற்கிறது படம்.

எனவே, ஒரு முழுநீள க்ரைம் படம் பார்க்கவேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இது ஏமாற்றம் அளிக்கலாம். அதே சமயம், டிவி மற்றும் வெப்சீரிஸ்களான 'ட்ரு டிடெக்டிவ்', 'மைண்ட்ஹன்டர்' போன்ற ஓர் உளவியல் பகுப்பாய்வு கதைகளை விரும்புபவர்கள் நிச்சயம் 'தி லிட்டில் திங்ஸ்'சை ஸ்ட்ரீம் செய்யலாம்.