Published:Updated:

ஒபாமா தயாரித்த கம்யூனிசப் படம்... புற்றுநோயுடன் போராட்டம்... ஆஸ்கர் விழாவில் ஜொலித்த பெண்கள்! 

ஆஸ்கர்

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும், மிஷேல் ஒபாமாவும் இணைந்து உருவாக்கிய ஹையர் கிரவுண்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படம் இது.

ஒபாமா தயாரித்த கம்யூனிசப் படம்... புற்றுநோயுடன் போராட்டம்... ஆஸ்கர் விழாவில் ஜொலித்த பெண்கள்! 

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும், மிஷேல் ஒபாமாவும் இணைந்து உருவாக்கிய ஹையர் கிரவுண்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படம் இது.

Published:Updated:
ஆஸ்கர்

அமெரிக்க ஆஸ்கர் விருதுகளின் 92-வது மேடை உணர்ச்சிவயப்பட்ட பல தருணங்களைக் கண்டது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் வென்ற வாகீன் ஃபீனிக்ஸ் ‘தனக்கு மீட்பராக இருந்தவர்களுக்கு நன்றி’ என்று பேசியபோது குரல் உடைந்துபோனார்.

23 ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு பெண், சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறார். அவ்விருதை வென்ற ஐஸ்லாந்தின் ஹில்டர் குத்நாடூர்டைர், ``சிறுமிகளே, பெண்களே, அம்மாக்களே, அம்மாக்களின் மகள்களே... உங்களுக்குள் இசை, குமிழிகளாகக் கொப்பளித்துக் கொண்டிருக்கிறது. எனவே, பேசத் தொடங்குங்கள். உங்கள் குரல்களை உலகம் கேட்கட்டும்” எனச் சிரிப்புக் கொப்பளிக்க மேடையில் பேசினார்.

சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்ற பிராட் பிட் நகைச்சுவையாகப் பேச்சைத் தொடங்கினாலும், தான் திரைப்படத்துறைக்கு வந்தது குறித்துப் பேசியபோது அவரின் கண்கள் கலங்கிவிட்டன.

அவரது முப்பது வருட சினிமாத்துறை அனுபவத்தில் ஒரு நடிகராக அவருக்கான முதல் ஆஸ்கர் இது. ஆனால், இந்தத் தருணங்கள் அத்தனைக்கும் உச்சக்கட்டமாக அமைந்தது சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் அறிவிக்கப்பட்ட தருணம்.

american factory
american factory

ஒபாமாக்களின் முதல் தயாரிப்பு

2020-ம் ஆண்டுக்கான சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை ஜூலியா ரிக்கர்ட் - ஸ்டீவன் போக்னர் தம்பதி இணைந்து இயக்கிய `அமெரிக்கன் ஃபேக்டரி' வென்றது. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் மிஷல் ஒபாமாவும் இணைந்து உருவாக்கிய ஹையர் கிரவுண்ட்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இது. இழுத்துமூடப்பட்ட ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் தனது பிசினஸைத் தொடங்க வரும் சீன நிறுவனம் எதிர்கொள்ளும் சிக்கல்களை ஜூலியாவின் ஆவணம் காட்சிப்படுத்துகிறது.

மிஷல் மற்றும் பராக் ஒபாமாவுடன் ஜூலியா மற்றும் ஸ்டீவ்
மிஷல் மற்றும் பராக் ஒபாமாவுடன் ஜூலியா மற்றும் ஸ்டீவ்

73 வயதான ஜூலியா ரிக்கர்ட், அமெரிக்கச் சுயாதீனத் திரைத்துறையின் தாயாக அறியப்படுபவர். தனது படக்குழுவினருடன் சேர்ந்து விருதைப் பெற்றதும் மேடையில் பேசிய ஜூலியா, ``எங்கள் சக சகோதர சகோதரிகள் சிரியா, பிரேசில் என ஆபத்தானப் பகுதிகளுக்குச் சென்று படம் இயக்கி வந்திருக்கிறீர்கள். ஆஸ்கர் விருதை யார் வென்றார்கள் என்று காகிதத்தைப் பிரித்து அவர்கள் பெயரை வாசிப்பதற்கு முன்பு உங்களைப் போன்றவர்களுடன் இங்கே இணைந்திருப்பதே பெருமைக்குரியதாக இருக்கிறது.

ஜூலியா
ஜூலியா

எங்களின் படம் உள்ளூரிலேயே ஒஹாயோவில்தான் எடுக்கப்பட்டது. ஆனால், உலகத்தில் எந்த மூலையில் இருக்கும் உழைக்கும் மக்களாலும் இந்தப் படத்துடன் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும். உழைக்கும் மக்களுக்கு இங்கே காலம் கடினமாகத்தான் கடந்து கொண்டிருக்கிறது. உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட்டால் இதற்கான விடிவுகாலம் நிச்சயம் பிறக்கும்” என்று தனது உரையை முடித்துக்கொண்டார். உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும் என்பது கம்யூனிச அறிக்கையில் (Communist Manifesto) இடம்பெறும் வாசகம்.

ஜூலியா இதுவரை நான்கு முறை ஆஸ்கருக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர். ஆனால், இதுவே அவரது முதல் ஆஸ்கர் வெற்றி. ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டது குறித்து சில தினங்களுக்கு முன்பு ஊடகத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ஜூலியா, ``நான் இதற்கு நேர்மையாகவே பதிலளிக்க விரும்புகிறேன். ஆஸ்கருக்காக நான், நான்காவது முறையாகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறேன். இந்த வயதில் அதுவும் என்னுடைய உடல்நிலைச் சூழலில் ஒருவேளை நான் வெற்றிபெற்றால் அது எனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும்" எனக் கூறியிருந்தார். ஜூலியா தனது உடல்நிலைச் சூழல் எனக் குறிப்பிட்டது அவருக்கு ஏற்பட்டிருந்த புற்றுநோய்ப் பாதிப்பை.

மழிக்கப்பட்டத் தலையில் ஒரு முத்தம்

``ஆம், நான் பித்தப்பை புற்றுநோய்த் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஏற்கெனவே ஒருமுறை நோய்த்தாக்கம் ஏற்பட்டு அதிலிருந்து முற்றிலுமாக மீண்டு வந்தேன். ஆனால், தற்போது மீண்டும் நோய் உருவாகி இருக்கிறது. நான் மீண்டும் அதனுடன் போராட வேண்டும். இது உயிருக்கே ஆபத்தானது என்பது எனக்கு நன்கு தெரியும். இன்னும் 6 மாதமோ, ஒரு வருடமோ அல்லது அதற்குமேலான காலமோ... எனது வாழ்நாள் எவ்வளவு எனத் தெரியாது.

அமெரிக்கன் ஃபேக்டரி குழு
அமெரிக்கன் ஃபேக்டரி குழு

நான் இதுபற்றி நிறையவே பேசினாலும் இறுதியில் மிகவும் நம்பிக்கையுடன் இதை எதிர்கொண்டு வருகிறேன். எனக்கும் என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது எது என்பதில் என்னால் அதிகக் கவனம் செலுத்த முடிகிறது” என்றும் அதே பேட்டியில் கூறியிருந்தார் ஜூலியா.

தனது மோசமான உடல்நிலையின் அறிகுறியைத் துளியும் வெளிப்படுத்தாமல் வெள்ளை நிறச் சட்டை, கறுப்பு நிறக் குட்டைப் பாவாடை, மொட்டை மழித்த தலைக்குப் பொருந்திப் போகும் கண்ணாடி... எனக் கம்பீரமாக மேடையேறி, கம்யூனிச சித்தாந்தம் பேசிய ஜூலியாவின் உரையை அவ்வளவு அமைதியுடன் அந்த அரங்கம் கேட்டுக்கொண்டிருந்தது. ஜூலியாவுக்குப் பக்கபலமாகத் தனது தலையையும் மழித்துக் கொண்டிருந்த ஸ்டீவ் விருதைப் பெற்றுக்கொண்டதும், தன் ஜூலியின் மொட்டைத்தலையில் ஆழ முத்தமிட்டது ஆஸ்கருக்குக் கிடைக்கப்பெற்ற கௌரவம்.