Published:Updated:

The Whale Review: 15 வருடங்களுக்குப் பிறகு திரையில் `மம்மி' நாயகன்; ஆனால் வேறொரு பரிமாணத்தில்!

The Whale

இத்தனை வருடங்கள் தான் தேக்கி வைத்திருந்த நடிப்பை ஒட்டுமொத்தமாக இறக்கிவைத்த உணர்வைத் தருகிறார் பிரெண்டன். வெல்டன்!

Published:Updated:

The Whale Review: 15 வருடங்களுக்குப் பிறகு திரையில் `மம்மி' நாயகன்; ஆனால் வேறொரு பரிமாணத்தில்!

இத்தனை வருடங்கள் தான் தேக்கி வைத்திருந்த நடிப்பை ஒட்டுமொத்தமாக இறக்கிவைத்த உணர்வைத் தருகிறார் பிரெண்டன். வெல்டன்!

The Whale
The Whale - உடல் பருமனால் உயிர் இழக்கக்கூடும் என்னும் நிலையில் தன்னிடம் இருந்து பிரிந்த மகளின் உறவை மீட்டெடுக்க முயலும் தந்தையின் கதை.

சமீபத்தில் வெளியாகி இருக்கும் 'தி வேல் (The Whale)' என்கிற ஆங்கில திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதில் 90ஸ் கிட்ஸ் பார்த்து ரசித்த ‘மம்மி’ திரைப்பட வரிசையின் கதாநாயகன் ‘பிரெண்டன் ஃபிரேசர்’ (Brenden Fraser) 15 வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் வெள்ளித்திரையை ஆக்கிரமித்துள்ளார். பல்வேறு சர்ச்சைகள் நிரம்பிய அவரின் கரியருக்கு ஓர் இரண்டாவது இன்னிங்ஸாக இந்தப் படம் அமைந்திருக்கிறது எனலாம்.

இப்படத்தை 'ரெக்யும் ஃபார் எ ட்ரீம்' (Requiem for a Dream), 'தி ஃபவுண்டெய்ன் (The Fountain), 'பிளாக் ஸ்வான்' (Black Swan) போன்ற உணர்ச்சி ரீதியாகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்களை இயக்கிய டேரன் அரோனோஃப்ஸ்கி (Darren Aronofsky) இயக்கியுள்ளார்.

Brenden Fraser - மம்மி படங்களிலும், 'தி வேல்' படத்திலும்...
Brenden Fraser - மம்மி படங்களிலும், 'தி வேல்' படத்திலும்...

தந்தை சார்லி மற்றும் அவரது மகள் எல்லி இடையேயான உறவைப்பற்றிப் பேசுகிறது இந்த 'தி வேல்'. சார்லி என்ற 600 பவுண்டுகள் எடையுள்ள மனிதர், மற்றவர்களிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு ஒரு சிறிய குடியிருப்பில் வசித்து வருகிறார். அவரது மகள் எல்லி, டீன் ஏஜ் பருவத்தை அடைந்த இளம்பெண். 8 வயதில் ஏற்பட்ட தந்தையின் பிரிவால் உலகத்திலுள்ள அனைத்து நபர்களையும் வெறுக்கும் மனோபாவம் கொண்டிருக்கிறாள். உடல் பருமனால் உயிர் இழக்கக்கூடும் என்னும் நிலையில் சார்லியை எல்லி மீண்டும் சந்திக்கிறார்.

மகளுடனான உறவைத் தந்தை மீட்டெடுக்க முயல்கிறார். அதில் வெற்றி பெறுகிறாரா என்பதே கதை.

ஐந்தே நபர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் ஒவ்வொருவரின் நடிப்பும் பிரமாதமாக உள்ளது. ஆனால் எல்லோரையும் தாண்டி தனிக்கவனம் ஈர்ப்பது பிரெண்டன் ஃபிரேசர்தான்! சார்லியாக நடித்திருக்கும் அவருக்கு  இது வாழ்நாள் கதாபாத்திரம் என்றே சொல்லலாம். உடல் பருமனால் ஏற்படும் அவதிகளை வெளிப்படுத்துவதிலும், கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்காகக் குற்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும், இயலாமையால் தன்னை தானே வருத்திக்கொள்ளும் காட்சியிலும் அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இத்தனை வருடங்கள் தான் தேக்கி வைத்திருந்த நடிப்பை ஒட்டுமொத்தமாக இறக்கிவைத்த உணர்வைத் தருகிறார் பிரெண்டன். வெல்டன்!

Brendan Fraser - The Whale
Brendan Fraser - The Whale
Brendan Fraser - The Whale
Brendan Fraser - The Whale
"என் வாழ்வில் ஏதாவது ஒன்றையாவது நான் சரியாகச் செய்திருக்கிறேனா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்."
சார்லி

குறிப்பாக “என் வாழ்வில் ஏதாவது ஒன்றையாவது நான் சரியாகச் செய்திருக்கிறேனா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்” என்று தன் மனைவியிடம் உடையும் காட்சி காண்போரைக் கலங்கடிக்கிறது. இத்திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது இவரது நடிப்பைப் பாராட்டும் விதமாக ஆறு நிமிடங்கள் இடைவெளியின்றி கைதட்டப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. அதேபோல மனைவி, மகளாக வரும் 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' புகழ் சேடி சிங்க், அவரைப் பராமரிக்கும் செவிலியர் எனத் திரையில் தோன்றும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் பணியை நேர்த்தியாகச் செய்துள்ளனர்.

Sadie Sink - The Whale
Sadie Sink - The Whale

தனிமை, இணைப்பிற்கான மனித தேவை, உடல் பருமனால் ஏற்படக் கூடிய தாழ்வு மனப்பான்மை, சிறு வயதில் ஏற்படக்கூடிய மன அழுத்தம் எனப் பல முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேசியுள்ளார் இயக்குநர் டேரன் அரோனோஃப்ஸ்கி. காட்சிகள் பொறுமையாக நகர்ந்தாலும் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் கதையோடு ஒன்றிச் செல்ல வைக்கிறது.

இந்த வருடம் மூன்று அஸ்கர் விருதுகளுக்கு இத்திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை பிரெண்டன் நிச்சயம் வெல்வார் என்பதே பலரின் கணிப்பாக இருக்கிறது.

படத்தில் “நேர்மையான எழுத்துக்கள் எப்போதும் வெற்றி பெரும்“ என்னும் வசனம் வரும். அது போலவே படமும் வெற்றிபெற்றிருக்கிறது.