அமெரிக்காவின் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றாக கோல்டன் குளோப் விருது கருதப்படுகிறது. HFPA (Hollywood Foreign Press Association) நடத்தும் இந்த விருதானது 1944-ல் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. HFPA என்ற இந்த அமைப்பானது 55 நாடுகளைச் சேர்ந்த 90 நபர்களை உள்ளடக்கிய அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. சில ஆண்டுகளாகவே இந்த அமைப்பின் மீது இனவெறி, பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் எனப் பல குற்றச்சாட்டுகள் இந்த அமைப்பைச் சார்ந்த முக்கிய நபர்கள் மீது வைக்கப்பட்டிருக்கின்றன.

'Black Lives Matter' என உலகமே இனவெறிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறது. HFPA-ன் தேர்வுக்குழுவிலும், முக்கியமான பொறுப்புகளிலும் ஆஃப்ரோ அமெரிக்கர்கள் ஒருவர் கூட கடந்த இருபது வருடங்களாக நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு வலுவாக அதன் மீது வைக்கப்படுகிறது. இதனை மாற்றியமைக்கச் சீர்திருத்தங்களைக் கொண்டு வருகிறோம் என அந்த அமைப்பு சில ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது. ஆனால், செயல்பாடுகளில் எந்த வித முன்னேற்றத்தையும் காட்டவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இவ்வளவு முக்கியமான ஒரு பிரச்னையில் விரைவாகச் செயல்படாமல், காலம் தாழ்த்திக் கொண்டிருப்பதற்கு ஸ்கார்லெட் ஜோஹான்ஸன், மார்க் ரஃப்பல்லோ உள்ளிட்ட நடிகர்கள் பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். HPFA-வின் இந்தச் செயல்பாடுகளால், நெட்ஃபிளிக்ஸ், வார்னர் பிரதர்ஸ் மற்றும் அமேசான் ஆகிய முக்கிய நிறுவனங்கள் அதனுடனான தங்கள் உறவைப் புறக்கணித்திருக்கின்றன. மேலும், 2022-ம் ஆண்டின் கோல்டன் குளோப் விருதுகளை தாங்கள் ஒளிபரப்பப்போவதில்லை என NBC தெரிவித்திருக்கிறது. இவற்றுள் முக்கியமாக, HFPA-வின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத் தான் பெற்ற மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும் திருப்பி அளித்திருக்கிறார் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்.

ஆஃப்ரோ அமெரிக்கர்கள் தொடர்பான ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் வரை HFPA உடனான உறவை பல ஹாலிவுட் நிறுவனங்கள் புறக்கணித்திருக்கின்றன. மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளில் 13 ஆஃப்ரோ அமெரிக்கர்களைத் தங்கள் உறுப்பினர்களாக இணைப்போம் என்ற HFPA-வின் அறிவிப்பும் கடும் கண்டனங்களைச் சந்தித்துள்ளது. "ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கக் கூறினால் கணக்குக் காட்டுகிறீர்களா" எனப் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, நிச்சயம் நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவோம் எனத் தெரிவித்திருக்கிறது HFPA அமைப்பு.