Published:Updated:

Uncharted Review: வீடியோ கேம் டு ஹாலிவுட் சினிமா! மார்க் வால்பெர்க் - டாம் ஹாலண்ட் கூட்டணி எப்படி?

Uncharted Review

பழங்கால புதையலைத் தேடி, பெரிதாகப் பயணப்படாத இடங்களுக்குச் செல்லும் நாயகனும், அவனின் சகோதரனின் நண்பனும் சவால்களைச் சமாளித்து, புதையலைக் கண்டெடுத்தார்களா என்பதுதான் இந்த 'Uncharted'.

Uncharted Review: வீடியோ கேம் டு ஹாலிவுட் சினிமா! மார்க் வால்பெர்க் - டாம் ஹாலண்ட் கூட்டணி எப்படி?

பழங்கால புதையலைத் தேடி, பெரிதாகப் பயணப்படாத இடங்களுக்குச் செல்லும் நாயகனும், அவனின் சகோதரனின் நண்பனும் சவால்களைச் சமாளித்து, புதையலைக் கண்டெடுத்தார்களா என்பதுதான் இந்த 'Uncharted'.

Published:Updated:
Uncharted Review

மெஜல்லன் கடற்பயணம் (Magellan Expedition) குறித்த மேப் ஒன்றைத் திருட முற்படும்போது மாட்டிக் கொள்கிறார்கள் டிரேக் சகோதரர்கள். காவல்துறையிடம் இருந்து தப்பிக்க, மூத்த சகோதரன் சாம் டிரேக் தன் 10 வயது தம்பியான நாதன் டிரேக்கைப் பிரிந்து செல்கிறார். 'நிச்சயம் திரும்பி வருவேன்' என்று வாக்களித்துச் செல்லும் சாமிடம் இருந்து நாதனுக்கு வெறும் போஸ்ட்கார்டுகள் மட்டுமே வருகின்றன. 15 வருடங்கள் கழித்து, பார்டெண்டராக வேலை செய்யும் நாதனுக்கு, சாமின் நண்பர் விக்டர் சல்லிவன் அறிமுகமாகிறார். சாம் விட்டுச் சென்ற மெஜ்ஜலன் கடற்பயணத்தின் புதையலைத் தேடும் சாகசப் பயணத்தை நாம் தொடரவேண்டும் என்றும், அதன் மூலம் சாமை கண்டுபிடிக்கலாம் என்றும் நம்பிக்கைத் தெரிவிக்கிறார். இருவரும் தங்களின் சாகசத்தைத் தொடங்க, அவர்களின் வழியில் நண்பர்களும், நண்பர்களின் போர்வையில் துரோகிகளும் வருகிறார்கள். பல சவால்களையும், சாகசங்களையும் கடந்து இவர்கள் இருவரும் புதையலை எடுத்தார்களா என்பதே படத்தின் கதை.

Uncharted Review
Uncharted Review
'ஸ்பைடர்மேன்'ஆகப் பார்த்துப் பழகிய டாம் ஹாலண்ட் இதில் கொஞ்சம் சீரியஸ் முகம் காட்டியிருக்கிறார். காமெடி டிபார்ட்மென்ட்டைக் கூட சீனியரான மார்க் வால்பெர்க்கிற்குத் தாரை வார்த்துவிட்டு நாதன் டிரேக்காகப் பொருந்திப் போயிருக்கிறார். ஆனால், அவரின் குரலும், உடல்மொழியும் மட்டும் நமக்கு இன்னமும் ஸ்பைடர்மேனைத்தான் கண்முன் கொண்டு வருகின்றன. இருந்தும், 25 வயதேயான இளம் நடிகர், கதாபாத்திரத்தை உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்றவாறு தன் உடலையும் (ஃபிட்னெஸ்) மாற்றியிருப்பது பாராட்டுக்குரியது.

படத்தின் இன்னொரு நாயகன் மார்க் வால்பெர்க். 50 வயதான சீனியர் நடிகர் இனி தன்னால் பெரியளவில் சாகசமெல்லாம் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, தன்னால் முடிந்த அடாவடிகளை மட்டும் செய்திருக்கிறார். "கண்ணாடி போடலைப்பா, படிக்க முடியாது", "கணுக்கால் வலியிருக்கு. தாவியெல்லாம் குதிக்கமுடியாது" என்ற அவரின் சதாய்ப்புகள் நிதர்சனமும்கூட. முதல் பாதி டிராமா கலகலவென நகர, மார்க்கின் பாத்திரம் பெரியளவில் உதவியிருக்கிறது.

Uncharted Review
Uncharted Review

தோழியாக வரும் சோபியா அலியின் பாத்திரம் கதையை நகர்த்த உதவியிருக்கிறது. தடம்மாறும் அவர் கதாபாத்திரத்துக்கான கிராஃப், அதற்கு அவரின் நடிப்பு போன்றவை சிறப்பாக வெளிப்பட்டுள்ளன. படத்தின் வில்லனாகப் புகழ்பெற்ற ஸ்பெயின் நடிகர் ஆண்டானியோ பெண்டாரஸ். ஸ்பை கிட்ஸ் படத்தொடர், தி ஸ்கின் ஐ லிவ் இன், ஒரிஜினல் சின் போன்ற படங்களின் மூலம் உலக அளவில் கோலோச்சியவரை இதில் ஏக பில்டப் மட்டுமே கொடுத்து கடைசியில் வேஸ்ட் செய்திருக்கிறார்கள். இதுக்கு எதுக்குங்க இவரு?

Uncharted Review
Uncharted Review

டூம்ப் ரெய்டர், அசாசின்ஸ் க்ரீட், பிரின்ஸ் ஆஃப் பெர்சியா, ரெசிடன்ட் ஈவில், ஹிட்மேன் வரிசையில் மற்றுமொரு உலகப் புகழ்பெற்ற 'அன்சார்டட்' (Uncharted) வீடியோ கேமை படமாக மாற்றியிருக்கிறார்கள். 'நாட்டி டாக்' என்ற நிறுவனத்தின் தயாரிப்பான இந்த கேமை ஒரு சாகசப் படமாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார் 'ஜோம்பி லேண்ட்' படப்புகழ் இயக்குநர் ரூபென் ஃப்ளெச்சர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். இரண்டு மணிநேரப் படத்தில், இரண்டாம் பாதியை க்ளூக்களை வைத்துப் புதையலைக் கண்டறியும் ஒரு கேம் போலவே வடிவமைத்து சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார். குறிப்பாக க்ளைமேக்ஸில் பழங்கால இரண்டு பிரமாண்ட கப்பல்களை அந்தரத்தில் மிதக்கவிட்டுச் செய்யும் சாகசங்கள் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் பாதி சாகசங்களுக்கு வருவதற்கு நாம் முதல் பாதியின் டிராமாக்களைச் சிரமப்பட்டே கடக்க வேண்டியிருக்கிறது. நிஜமான கேம் போலவே, முதலில் ஸ்டோரி மோடில் கதை சொல்வது போலவே வெறும் வசனங்களாகக் காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்கள். 'அன்சார்டட்' கேம் ஆடியவர்கள் 'ஸ்கிப் ஸ்டோரி' பட்டனை நிச்சயம் தேடியிருப்பார்கள். என்னதான் மார்க் வால்பெர்க் காமெடி செய்து கலகலப்பாக்கினாலும் 'சாகசம்லாம் எப்பங்க ஸ்டார்ட் பண்ணுவீங்க?' என்றே பல காட்சிகள் கேட்க வைக்கின்றன.

Uncharted Review
Uncharted Review

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்', 'வெஸ்ட்வேர்ல்டு' புகழ் ரமின் ஜவாடியின் (Ramin Djawadi) பின்னணி இசை படத்தின் பெரும்பலம். க்ளைமேக்ஸில் வரும் பிரமாண்டக் காட்சிகளுக்கு மேலும் பிரமாண்டம் சேர்த்திருக்கிறது. வானில் அந்தரத்தில் தொங்கும் இரண்டு கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கு இடையே எல்லாம் புகுந்து தனியாகச் சாகசம் செய்கிறது ஒளிப்பதிவாளர் சுங்-ஹுன்-சுங்கின் (Chung-hoon Chung) கேமரா.

முதல் பாதி டிராமாவை சற்றே சுருக்கி, சாகசங்களை அங்கிருந்தே கூட்டியிருந்தால், சோனி தொடங்கவிருக்கும் புதியதொரு கேம் பிரான்சைஸின் பிளாக்பஸ்டர் தொடக்கமாக இது இருந்திருக்கும். இப்போதைக்கு அடுத்த பார்ட் வரும்வரை, இதை வெயிட்டிங் லிஸ்ட்டில்தான் வைக்க வேண்டியிருக்கிறது.