
டாப் 10
சூப்பர் ஹீரோ என்று சொன்ன வுடனேயே பெரும்பாலும் நினைவுக்கு வருவது பேட்மேன், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் போன்ற `மேன்'களே. ‘மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸ்' படங்கள் மூலம் கடந்த பத்து ஆண்டுகளில் அயர்ன்மேன் முதல் ஆன்ட்மேன் வரை மேலும் சில மேன்களையும் உலகம் முழுக்கப் பிரபலப்படுத்தியது ஹாலிவுட். `சூப்பர் ஹீரோ' என்ற சொல் இவ்வளவு ஜனரஞ்சகப் பயன்பாட்டில் இருக்கும்போது, ‘சூப்பர் ஹீரோயின்' என்ற வார்த்தை இருக்கிறதா என்றுகூட நம்மை யோசிக்கவிடாமல், இந்த வகைப் படங்கள் ஆண்களை மையப்படுத்தியே சென்றன.
எனினும், இதே படங்களுக்குள் சில பெண் சூப்பர் ஹீரோக்களும் (இனிமேல் சூப்பர் ஹீரோயின்கள்) உலகை - குறைந்தபட்சம் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தையாவது காப்பாற்றப் போராடியுள்ளனர் என்பதே உண்மை. அந்த டாப்-10 சூப்பர் ஹீரோயின்கள் யார்... எவர்?
10.தி இன்விஸிபிள் வுமன்
‘மார்வெல்’ நிறுவனத்தின் சூப்பர் ஹீரோ குழுமமான ‘ஃபெண்டாஸ்டிக் 4’-ன் ஒரே சூப்பர் ஹீரோயின் படம் இது. `ஜெஸ்ஸிகா ஆல்பா'தான் அந்த இன்விஸிபிள் வுமன். ஒரு விண்வெளிப் பயணத்தின்போது ஏற்படும் கதிர்வீச்சு விபத்தால், கண்களுக்குத் தெரியாமல் மறையும் சக்தி கிடைக்கும். அதைக்கொண்டு மற்ற மூன்று ஹீரோக்களுடன் இணைந்து தி இன்விஸிபிள் வுமனாக உலகத்தைக் காப்பாற்றுவார். சில அனிமேட்டட் சீரிஸ்கள், நான்கு திரைப்படங்கள் எனப் பல வடிவங்களில் இந்தப் பாத்திரம் தோன்றியிருந்தாலும், 2005-ம் ஆண்டு வெளியான ‘ஃபெண்டாஸ்டிக்-4’ படம்தான் இந்த கேரக்டரை உலக அளவில் பரவலாக்கியது.
9.தி வாஸ்ப்
சூப்பர் ஹீரோயின் ஆசை, குவாண்டம் வெளியில் சிக்கிய அம்மாவைக் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம்... விளைவு, உடல் உருவத்தை ஒரு குளவியின் அளவுக்குச் சுருக்கும் சக்திகொண்ட உயர் தொழில்நுட்பம் வாய்ந்த உடை அணிந்து அம்மாவை மீட்டு `வாஸ்ப்' ஆனவள் ஹோப் வேன் டைன். அதேபோன்ற உடையணிந்து எறும்பு அளவுக்கு மாறும் ஆன்ட்மேனுடன் கூட்டணிவைத்து ‘வாஸ்ப்' உலகைக் காப்பாற்றுவாள். ‘ஆன்ட்மேன் அண்டு தி வாஸ்ப்' படத்தின் இறுதிக் காட்சியில் தானோஸால் பலியாவாள். இவளை மீட்க. காதலன் ஸ்காட் லேங் என்கிற ஆன்ட்மேன் எடுக்கும் முயற்சிகள்தாம் ‘எண்டுகேம்'மில் மற்ற எல்லா சூப்பர் ஹீரோக்கள் மீண்டும் உயிர்பெறுவதற்கான காரணம்.

8.கமோரா
பிரபஞ்சத்தின் மக்கள் தொகையில் பாதியை அழித்துவிட்டால் இங்கிருக்கும் வளங்கள் எஞ்சியிருப்பவருக்குப் போதுமானதாக இருக்கும் என்பது தானோஸின் கருத்தியல். அந்த நோக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன், கமோராவின் தாய் தந்தை உட்பட அவள் பிறந்த கிரகத்தின் பாதி மக்களைக் கொன்றுகுவித்த தானோஸ், அவளைத் தத்தும் எடுத்துக்கொண்டான். அவனைப் பழிவாங்க வேண்டும், எஞ்சியிருக்கும் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என அப்போது அவள் மனத்தில் பற்றிய சிறு தீப்பொறி பல ஆண்டுகள் கழித்தும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. ஆனால், அன்புக்குரிய ஒருவரின் உயிரைத் தியாகம் செய்தால்தான் ‘சோல் இன்ஃபினிட்டி கல்' கிடைக்கும் என்பதால், கமோராவின் உயிரைத் தியாகம் செய்தான் தானோஸ். எனினும், ‘எண்டுகேம்‘ படத்தில் மீண்டும் ஒருமுறை கடந்த காலத்தி லிருந்து நிகழ்காலத்துக்கு வந்தாள் கமோரா.

7.ப்ளாக் விடோ
‘அவெஞ்சர்ஸ்' நிறுவனத்தின் முதல் சூப்பர் ஹீரோயின் `ப்ளாக் விடோ’. நடிகை ஸ்கார்லெட் ஜான்சனுக்காகத்தான் இந்தப் படத்தை ரசிகர்கள் விரும்பிப் பார்த்தனர். `அயர்ன்மேன் 2’வில் டோனி ஸ்டார்க்கின் உதவியாளராக அறிமுகமாகி, ஹல்க்கை ‘அவெஞ்சர்ஸ்' டீமுக்கு அழைத்துவருவது, கேப்டன் அமெரிக்காவுடன் இணைந்து விண்டர் சோல்ஜரைக் கண்டுபிடிப்பது, ஹல்க்கின்(ப்ரூஸ் பேனர்) கேர்ள் ஃபிரெண்டாக இருப்பது என அவளுக்கான இடம் மார்வெல் பட உலகில் மிகப் பிரதானமானது. அடிப்படையில் ஒரு அஸாஸினான (பயிற்சியளிக்கப்பட்ட போராளி) இவள், அவெஞ்சர்ஸ் கூட்டணியின் ஒரிஜினல் சிக்ஸில் ஒரே பெண். இவளுடைய முன்கதையைத் தனிப்படமாக உருவாக்கிவருகிறது, மார்வெல் நிறுவனம்.
6.ஜீன் க்ரே
எக்ஸ் மென் யூனிவர்ஸ்ஸில் மிகப் பெரும் பலம் பொருந்தியவள் இவள்தான். மேக்னீட்டோ, புரொபசர் எக்ஸ் போன்றவர்களால்கூட இவளை எதிர்த்துவிட முடியாது. டெலிபதி மற்றும் டெலிகைனெட்டிக் சக்திகள் கொண்ட இவளால் ஏகப்பட்ட ட்விஸ்டுகள் நிகழ்ந்திருக்கின்றன. மக்களைக் காப்பாற்றும் சூப்பர் ஹீரோயினாக இருப்பவள் திடீரென சூப்பர் வில்லியாகவும் மாறிவிடுவாள். தொடக்கத்தில் மார்வெல் கேர்ள் என்ற பெயரில் வலம்வந்தவள் பின்னர் இறந்து, மீண்டும் உயிர்பெற்று ‘டார்க் ஃபீனிக்ஸ்’ நிலையை எட்டினாள். இந்த நிலையில் இவள் மரணமில்லாத ஒரு சூப்பர் ஹீரோயினாக மாறிவிடுவாள். `எக்ஸ்மேன்' படங்களில் ஃபேம்கீ ஜேன்ஸனும் சோஃபீ டர்னரும் இந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

5.கேப்டன் மார்வெல்
மார்வெல் பட உலகில், தன் பாத்திரப் பெயரில் தனித் திரைப்படம் கொண்ட ஒரே சூப்பர் ஹீரோயின் இவள். மேலும், ஒட்டுமொத்த மார்வெல் சூப்பர் ஹீரோ - ஹீரோயின்களில் மிகவும் பலசாலியும் இவளே (சிலர் தார் என்றும் ஹல்க் என்றும் சொல்வார்கள்). பிரபஞ்சம் உருவான காலத்திலேயே வடிவம்பெற்ற ஆறு இன்ஃபினிட்டி கற்களில் ஒன்றான ‘ஸ்பேஸ்' கல் மூலம் தன் சக்தியைப் பெற்றவள், கேப்டன் மார்வெல். சூப்பர் வில்லனான தானோஸை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் பலமும் இவளுக்கு உண்டு. கரோல் அவெஞ்சர் டேன்வர்ஸ் என்ற இவளது இயற்பெயரில் இருந்துதான் ‘அவெஞ்சர்ஸ்' கூட்டணிக்கே பெயர் சூட்டப்பட்டுள்ளது, இவளுக்கான இன்னொரு பெருமை. டைம் டிராவல் செய்யும் திறனும், விண்வெளியில் எந்தவித உபகரணங்களும் இல்லாமல் செயல்படும் சக்தியும் இவளுக்கு இயற்கையிலேயே உண்டு.
4.ஹார்லெ க்வின்
இந்த மொத்தப் பட்டியலிலும் ஒரு குழப்பமான கேரக்டர் இவள்தான். அடிப்படையில் சூப்பர் வில்லனாகத்தான் அறிமுகமானாள். இருந்தாலும், ‘சூசைடு ஸ்குவாடு’ போன்ற குழுக்களில் இணைந்து உலகத்தையும் காப்பாற்றி இருக்கிறாள். அநேகமாக சூப்பர் வில்லன், சூப்பர் ஹீரோயின், ஆன்ட்டி ஹீரோயின் என எல்லா வகைமைக்குள்ளும் அடங்கும் ஒரே கதாபாத்திரம் இவள் மட்டுமே. தொடக்கத்தில் மனநல மருத்துவராகத் தோன்றி சூப்பர் வில்லனான ‘ஜோக்கர்’ அடைபட்டிருக்கும் ஆர்க்கம் அசைலத்தில் பணிக்குச் சென்று, அங்கே அவனை குணப்படுத்த முயன்று பின்னர் அவனைப் போன்றே சைக்கோவாக மாறியவள் ஹார்லெ. இவளுடைய இந்த நிலைக்கு ஜோக்கர்தான் காரணம் என்றாலும், அவள் மேல் இருந்த காதலால்தான் அவன் அப்படிச் செய்தான் என்பது காமிக்ஸ் சொல்லும் கதை. டி.சி யூனிவர்ஸ் படங்களில் ‘சூசைடு ஸ்குவாடு’, ‘பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே’ உள்ளிட்டவற்றில் இவள் இடம்பெறுகிறாள்.
3.ஸ்கார்லெட் விட்ச்
கிட்டத்தட்ட கேப்டன் மார்வெல் அளவுக்கு இவளுக்கும் பலம் உண்டு. இவளுடைய சக்தியும் இன்ஃபினிட்டி கற்களில் ஒன்றான ‘மைண்டு' கல் மூலம் கிடைக்கப்பெற்றது. ஆனால், மிகவும் எமோஷனலான பாத்திரம் என்பதால், பல நேரங்களில் மனதளவில் பலமிழந்துவிடுவாள். அனைத்து சூப்பர் ஹீரோயின்களிலும் வயதில் மிகச் சிறியவள் இந்த ஸ்கார்லெட் விட்ச் எனும் வாண்டா மேக்ஸிமாஃப். தன் காதலனான ‘விஷன்' என்ற பாத்திரம் இவள் கையாலேயே சாகவேண்டிய நிலை வந்தது. அதுபோன்ற நேரத்தில் எமோஷனுக்கு ஏற்றார்போல இவள் சக்தி பல மடங்கு உயரும். எந்த அளவுக்கு என்றால், கடவுளின் பலம் பொருந்திய ஓர் இன்ஃபினிட்டி கல்லையே அழிக்கும் அளவுக்கு! அப்படி ஒரு கல்லை அழித்தவளின் விதியும் தானோஸ் கையால் முடிவுக்கு வந்ததுதான் துயரம். என்றாலும், மீண்டும் உயிர்பெற்று தானோஸுக்கே `எண்டுகேம்' படத்தில் டஃப் கொடுத்தாள் ஸ்கார்லெட்.

2.கேட் வுமன்
இவளும் ஹார்லே க்வின் போன்ற குணாதிசயங்களைக் கொண்டவள்தான். ஜோக்கர் அளவுக்கு பேட்மேனுக்குத் தொல்லை கொடுக்கும் வில்லியாகவும் இருந்திருக்கிறாள், அதேவேளையில் அவனைக் கண்மூடித்தனமாகக் காதலிக்கும் ரோமான்டிக் கேரக்டராகவும் இருந்திருக்கிறாள். பணக்காரர்களிடமிருந்து திருடி ஏழைகளுக்குக் கொடுக்கும் ராபின்ஹுட் வகை கதாபாத்திரம் என்பதால், பெரும் பணக்காரனான பேட்மேன் (ப்ரூஸ் வேன்) வீட்டில் திருடச் செல்லும்போது இருவருக்கும் முதன்முதலாக மோதல் ஏற்பட்டது. இந்தக் கதை கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ‘தி டார்க் நைட் ரைஸஸ்’ படத்திலும் காட்டப்பட்டது. சிறப்பு சக்திகள் இல்லையென் றாலும், இவளுடைய அறிவாற்றலும் தற்காப்புக் கலை ஞானமும் இன்றளவும் சூப்பர் ஹீரோயின்களின் பட்டியலில் இவளை முன்னணியில் வைத்திருக் கின்றன.
1.வொண்டர் வுமன்
ஹாலிவுட்டின் நவீன யுகத்தில் சூப்பர் ஹீரோயின்களுக்கு அதிக முக்கியத்துவம் வர, டி.சி நிறுவனத்தின் ‘வொண்டர் வுமன்' படம் மிகப்பெரிய காரணம். ஒரு சூப்பர் ஹீரோயினை வைத்துப் படம் எடுத்தால், அதிலும் கேல் கெடாட் போன்ற ஒரு லேடி சூப்பர் ஸ்டாரைவைத்து எடுத்தால் வணிகரீதியாக வெற்றியடைய முடியும் எனக் கற்றுக்கொடுத்த படம். அது தந்த நம்பிக்கைதான், டி.சி-யின் போட்டி நிறுவனமான மார்வலை ‘கேப்டன் மார்வெல்' படம் எடுக்கத் தூண்டியது. டி.சி யூனிவர்ஸ், மார்வெல் யூனிவர்ஸ், எக்ஸ் மேன் யூனிவர்ஸ் என சர்வதேச சூப்பர் ஹீரோ யூனிவர்ஸ்கள் தொடங்கி, சக்திமான் யூனிவர்ஸ், முகமூடி யூனிவர்ஸ், வேலாயுதம் யூனிவர்ஸ் என உள்ளூர் யூனிவர்ஸ்கள் வரை, ஒட்டுமொத்த சூப்பர் ஹீரோ/ஹீரோயின்களையும் பட்டியலிட்டால் அதில் மிகப் பலசாலி இவளே. சூப்பர்மேனுடனேயே ஒண்டிக்கு ஒண்டி நிற்கும் பலம் பொருந்திய ஒரே கேரக்டரும் இவள்தான்!