
சினிமா

2020-ம் ஆண்டு என்பதாலோ என்னவோ, பல ஹாலிவுட் படங்கள் வரும் ஆண்டில் டி-20 விளையாடக் காத்திருக்கின்றன. காமெடி, ஆக்ஷன், சூப்பர் ஹீரோ, ஸ்லாஷர், த்ரில்லர், சயின்ஸ் ஃபிக்ஷன், ஹாரர் என ஒரு ஜானரையும் விட்டுவைக்காமல் எல்லா ரகத்திலும் ரகளை செய்யவிருக்கின்றன. அப்படி வெளியாகும் படங்களின் லிஸ்ட்...

The Eternals
‘அவெஞ்சர்ஸ்: எண்டுகேம்’ படத்துக்குப் பிறகு எம்.சி.யூ-வின் அடுத்த பிரமாண்ட முயற்சி. காரணம், இதன் மொத்தக் கதையும் விண்வெளியிலும், பேரண்டம் உருவான காலகட்டத்திலும் நடப்பதுபோல அமைக்கப்பட்டிருக்கிறது. ‘தி எட்டர்னல்ஸ்’ என்ற சூப்பர்ஹீரோ கூட்டமைப்பு புதிதாக உருவாகியுள்ள பிரபஞ்சத்தையும், குறிப்பாக பூமியையும் ‘டெவியன்ட்ஸ்’ என்ற சாத்தான் கூட்டமைப்பிடமிருந்து காப்பாற்றும் கதை. இதன் க்ளைமாக்ஸ் ஒரு பெரிய போர்க் காட்சியாக அமைக்கப்பட்டிருப்பதாகத் தகவல். விஷுவலாக அசாத்தியமான சில மாயங்களையும் செய்திருக்கிறார்களாம். அகில உலக லேடி சூப்பர்ஸ்டாரான ஏஞ்சலினா ஜோலிதான் இப்படத்தின் நாயகி என்பதால், எதிர்பார்ப்புக்கும் பஞ்சமில்லை.

Tenet
மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் கிறிஸ்டோஃபர் நோலன் படம். நான்-லீனியர் வகைத் திரைக்கதைகளைப் படமாக்குவதில், நோலனுக்கு நிகர் அவர் மட்டுமே எனலாம். ஆகஸ்ட் மாதம்தான் டீசரும் வெளியானது. ‘ஒரு புதிய நாயகனுக்கான காலம் வந்துவிட்டது’, ‘ஒரு புதிய பணிக்கான காலம் வந்துவிட்டது’ என்ற வாக்கியங்கள் இந்த டீசரில் இடம்பெற்றிருந்தன. படத்தின் டைட்டிலில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், அதை இடமிருந்து வலமோ, வலமிருந்து இடமோ படித்தால் ‘TENET’ என்று ஒரே சொல்லாகத்தான் தெரியும். இதுவே படத்தின் நான்-லீனியர் தன்மையைக் குறிப்பாக வெளிப்படுத்துகிறது என்பதால் சினிமா ஆர்வர்களைக் கையில் பிடிக்க முடியவில்லை.

A Quiet Place 2
ஜான் கிராசின்ஸ்கி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளினான படம், `எ கொயட் ப்ளேஸ்.' வசனமே இல்லாமல் வெளியான இந்தப் படம், மக்கள் மத்தியில் மாபெரும் ஹிட்டடித்தது. வெறும் சைகைகளால் மட்டுமே படத்தில் பேசிக்கொள்வார்கள். சைகையில் பேசும் சில நிபுணர்களைவைத்து இந்தப் படத்தில் நடிப்பவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது. போக, படத்தில் இடம்பெற்றிருக்கும் ஜந்துகளுக்கு ஸ்பெஷலான முறையில் கிராபிக்ஸ் செய்யப்பட்டிருந்தது. இதுபோல் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் இது. இப்போதிருக்கும் டெக்னாலஜியான `டால்பி அட்மாஸ்’ சவுண்டு தொழில்நுட்பத்தில் படம் பார்த்தவர்கள் தியேட்டருக்குள் தெறித்தனர். முதல் பாகத்தில் முடிந்த கதையோடுதான் இரண்டாம் பாகத்தின் கதை தொடங்கவிருக்கிறது. முதல் பாகத்தில் வேலை பார்த்த அதே படக்குழுதான் இந்தப் பாகத்தில் கமுக்கமாகக் களமிறங்குகிறது.

Birds of Prey
ஒரு புறம் மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (எம்.சி.யூ) வசூலைக் குவித்துக்கொண்டிருந்தாலும், மறுமுனையில் அதன் போட்டி நிறுவனமான டி.சியோ புதிய முயற்சிகளைப் பரிசோதித்துக்கொண்டே வருகிறது. முதலில் `பேட்மேன் Vs சூப்பர்மேன்’ படத்தின் மூலம் இருபெரும் சூப்பர் ஹீரோக்களை மோதவிட்டு ஒரு முயற்சியை எடுத்தது. அதை ஜெராக்ஸ் எடுத்த எம்.சி.யூ., ‘சிவில் வார்’ படம் மூலமாக `கேப்டன் அமெரிக்கா’வையும், `அயர்ன்மேனை’யும் மோதவிட்டது. `வொண்டர் வுமன்’ படத்தின் மூலம் தனி சூப்பர்ஹீரோயின் படம் ஒன்றை எடுத்தது டி.சி. அதைப் பார்த்த மார்வெல், `கேப்டன் மார்வெல்’லை இறக்கிவிட்டது. இதைத் தொடர்ந்து ‘ஹார்லி குவின்’ மூலம் சூப்பர் வில்லியின் கதையை மட்டும் எடுத்துப் படமாக்கியிருக்கிறார்கள். முதன்முறையாக ஒரு சூப்பர் வில்லியின் கதை திரைப்படமாகவிருக்கிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதில் வரவிருக்கும் `பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே’ முழுக்க முழுக்க பெண் சூப்பர் ஹீரோயின்களாலான ஓர் அணி. அதனால் இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகம். `அக்வாமேன்’, `ஷாஸாம்’ படங்களுக்குப் பிறகு டி.சி-யின் ஒரு நம்பிக்கையாகவுமிருக்கிறது இந்தப் படம்.

The Conjuring 3
ஹாரரில் எத்தனை படங்கள் வந்தாலும் கான்ஜூரிங்கை ஓவர்டேக் செய்வது எளிதல்ல. எட் வாரன் மற்றும் லோரைன் வாரன் தாங்கள் சந்திக்கும் ஒரு குறிப்பிட்ட கேஸிலிருந்து தொடங்கும் 2013-ம் ஆண்டில் வெளிவந்த `கான்ஜூரிங்.’ அதன் பின்னர் இவர்கள் இந்தப் பட பாகங்களின் பிரத்யேக கதாபாத்திரங்களானார்கள். அனபெல் பொம்மை, வாலக் என்ற கன்னியாஸ்திரி, க்ரூக்கட் மேன் என்ற மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற துணைக் கதாபாத்திரங்களை வைத்து, தனித்தனிப் படங்களாக வெளிவந்தன; வந்துகொண்டும் இருக்கின்றன. தற்போது அனபெல் மற்றும் க்ரூக்கட் மேன் எப்படி வாரன் தம்பதியிடம் வந்து சேர்கிறார்கள் எனபதை வரும் பாகத்தில் சொல்லவிருக்கிறார்கள்.

Wonder Woman 1984
அழகே பொறாமைப்படும் பேரழகியான கால் கேடட் நடிப்பில் வெளியான படம், `வொண்டர் வுமன்.’ ஆனால், இந்தப் பெயரைச் சம்பாதிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் சாதாரணமானவையல்ல. பல்வேறு விமர்சனக் கணைகளுக்கு ஆளாகித்தான் இந்த இடத்தை அவர் அடைந்திருக்கிறார். `பேட்மேன் Vs சூப்பர்மேன்’ படத்தின் மூலம் முதன்முறையாக வொண்டர் வுமனாக அறிமுகமானார். வழக்கம்போல் விமர்சனத்தில் வதைபட்டார். பின், வொண்டர் வுமனின் கதையை மையமாகவைத்துத் தனிப்படமாக வெளிவந்தது. பேட்டி ஜென்கின்ஸ் என்பவர்தான் அதை இயக்கினார். படம், பட்ஜெட்டைவிட எட்டு மடங்கு வசூலைக் குவித்தது. அதற்கு முன்னர்வரை விமர்சனம் பேசிய வாய்களனைத்தும், கால் கேடட் புகழ் பாடியது. தற்போது இதன் இரண்டாம் பாகம் வரும் ஆண்டு வெளியாகிறது.

Halloween Kills
ஹாலிவுட்டில் எக்கச்சக்க ஜானர் படங்கள் வெளிவந்திருந்தாலும், ஈவு இரக்கமற்று எதையும் காட்சிப்படுத்தும் `ஸ்லாஷர்’ என்ற ஜானருக்கு எப்போதுமே மவுசு உண்டு. இந்த ஜானரைக்கொண்டு 2018-ம் ஆண்டில் வெளியான படம்தான், `ஹாலோவீன்.’ இந்தக் கதாபாத்திரங்களையும், கதையையும் மையமாக வைத்து ஹாலிவுட்டில் எக்கச்சக்க சினிமாக்கள், தனி நாவல், வீடியோ கேம் எனப் பல படைப்புகள் வெளியாகியிருந்தாலும், கடந்த ஆண்டு வெளியான படத்துக்கு ஏக வரவேற்பு. பாக்ஸ் ஆபீஸிலும் கல்லா கட்டியது. அதே கையோடு 2020-ம் ஆண்டில் `ஹாலோவீன் கில்ஸ்’, 2021-ம் ஆண்டில் `ஹாலோவீன் எண்ட்ஸ்’ என முன்கூட்டியே படத்துக்கான வேலைகளைத் திட்டமிட்டுவிட்டது, படக்குழு. திட்டமிட்டபடியே வரும் ஆண்டு வெளியாகிறது ராவடியான `ஹாலோவீன் கில்ஸ்.’

Bad Boys for Life
நாஸ்டால்ஜி ஹாலிவுட் படங்களின் பட்டியலில் இந்தப் படம்தான் டாப்பில் இடம்பெற்றிருக்கிறது. 1995-ம் ஆண்டில் முதல் பாகமும், 2003-ம் ஆண்டில் இரண்டாம் பாகமும் வெளியாகின. இந்த இரண்டு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைப் பார்த்த வில் ஸ்மித், அடுத்ததாகத் தயாராகவிருந்த பாகத்துக்கு அதிக சம்பளம் எதிர்பார்த்தாராம். அந்தச் சமயத்தில் பட்ஜெட்டில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால் வரவிருந்த பாகத்தின் வேலைகள் பாதியிலே நின்றுபோயின. இப்போது மீண்டும் அதைத் தூசிதட்டி, மூன்றாவது பாகமாகத் தயாரித்துவருகின்றனர். முதல் இரு பாகங்களிலும் நடித்த மார்ட்டின் லாரன்ஸ் - வில் ஸ்மித் இந்த பாகத்திலும் நடிக்கின்றனர். காமெடிகளை அள்ளித்தூவியிருக்கும் இந்தப் படத்தை அடில் எல் அர்பி மற்றும் பிலால் ஃபல்லா இயக்குகிறார்கள்.

No Time to Die
‘ஜேம்ஸ் பாண்டு’ கதாபாத்திரத்தின் 25-வது படம் என்பதால் இந்தப் படத்துக்கு எதிர்ப்பார்ப்பு அதிகம். இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் வென்ற ராமி மேலக், இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஒரு பிரபல விஞ்ஞானி கடத்தப்பட்டதும், விடுப்பில் இருக்கும் ஜேம்ஸ் பாண்டை மீண்டும் பணிக்குத் திரும்பச் செய்கிறது, எம்.ஐ6 உளவு அமைப்பு. அந்த விஞ்ஞானியைக் காப்பாற்றப்போகும்போது இந்த உலகம் இதுவரை பார்த்திராத ஒரு வகை ஆபத்தைச் சந்திக்கிறார் பாண்ட்.

Fas t and Furious 9
2001-ல் தொடங்கியது இவர்களின் ஃப்யூரியஸான பயணம். நடுவே ஸ்பீடு பிரேக்கர்களில் வேகம் இழந்தாலும் மீண்டும் டாப் கியரைப் போட்டு அடுத்தடுத்த பாகங்களில் பட்டையைக் கிளப்பியது. இதுவரை 8 பாகங்கள் வந்திருக்கும் நிலையில், வரும் 2020-ல் இதன் 9-ம் பாகம் வெளிவர இருக்கிறது. `ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ்’ 3-வது பாகத்திலிருந்து 6-ம் பாகம் வரை ஜஸ்டின் லின் என்பவர்தான் இயக்கினார். இதே இயக்குநர்தான் தற்போது 9-ம் பாகத்தையும் இயக்கிக்கொண்டிருக்கிறார். இதற்கு முன் நடித்த அதே குடும்பத்தார்தான் இந்தப் படத்திலும் நடிக்கின்றனர். குடும்பத்தின் செல்லப் பிள்ளை பால் வாக்கம் மட்டும் மிஸ்ஸிங்!

Top Gun: Maverick
சீக்குவல்கள் ஹாலிவுட்டில் மிக இயல்பானவை. ஆனால், டாப் கன்: மேவரிக் ஓர் அரிய வகை சீக்குவல். 34 ஆண்டுகள் கழித்து இந்த இரண்டாம் பாகம் திரைக்குவருகிறது. `மிஷன் இம்பாசிபிள்’ போன்ற ஒரு உலகப்புகழ்பெற்ற ஆக்ஷன் படத்தொடரால் சினிமா ரசிகர்களிடையே தனக்கென ஒரு பெயரைக் கட்டமைத்துக்கொண்டவர், டாம் க்ரூஸ். அதற்குப் பேருதவி செய்த படம், `டாப் கன்.’ ஆக்ஷன் சினிமா ரசிகர்களுக்கு கண்டிப்பாக இது ஒரு பெரிய விருந்துதான்.

The King’s Man
`கிங்ஸ் மேன்’ எனும் காமிக்ஸை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம், `தி கிங்ஸ்மேன் சீக்ரெட் சர்வீஸ்’ மற்றும் `தி கிங்ஸ்மேன் கோல்டன் சர்க்கிள்.’ இந்தப் படங்களின் பாகங்களுக்கான வேலைகள் ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க, இதன் `ஸ்பின் ஆஃப்’ பணிகளும் தற்போது பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கின்றன. காமெடி ஸ்பை த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது ப்ரீக்குவலாக, அதாவது முன்னதின் தொடர்ச்சியாக வெளியாகவிருக்கும் படம்தான், `தி கிங்’ஸ் மேன்.’ இதற்கு முன் வெளியான படங்களை இயக்கிய மாத்யூ வாகன்தான் இதையும் இயக்குகிறார். ஆனால், இப்படத்தில் வேறு நடிகர்கள் நடிக்கின்றனர்.