Published:Updated:

ஸ்பைடர்மேன்... ஜேம்ஸ்பாண்ட்... தியேட்டர்களுக்கு ரசிகர்களை இழுக்கும் ஹீரோக்கள்!

MOVIES
பிரீமியம் ஸ்டோரி
News
MOVIES

இந்த வருடம் உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் சில முக்கியமான படங்கள் பற்றிய ஒரு சின்ன பிரிவ்யூ இதோ...

தியேட்டர்களின் கதவுகள் ஒருவழியாகத் திறந்துவிட்டன. ஓ.டி.டி புது வழியைக் காண்பித்தாலும் திரையரங்குகளில் மக்களோடு இணைந்து ஒரு ரசிகனாகப் படம் பார்க்கும் அனுபவமே அலாதியானது. அதற்கு மீண்டும் உயிர்கொடுக்க வருகின்றன சில பிரமாண்டங்கள்! இந்த வருடம் உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் சில முக்கியமான படங்கள் பற்றிய ஒரு சின்ன பிரிவ்யூ இதோ...
King Richard
King Richard

King Richard

`தி பர்சூட் ஆஃப் ஹேப்பினஸ்', 'செவன் பவுண்ட்ஸ்' வரிசையில் வில் ஸ்மித் என்னும் நடிகனை மீண்டும் அடையாளப்படுத்தப்போகும் படம். கொஞ்ச காலம் ஆக்‌ஷன் பக்கம் ஒதுங்கியவரை ஒரு பர்ஃபாமராகக் காட்டவிருக்கிறது ‘கிங் ரிச்சர்ட்.’ டென்னிஸ் விளையாட்டின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய சகோதரிகளான வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் செரினா வில்லியம்ஸின் தந்தையான ரிச்சர்ட் வில்லியம்ஸின் கதையைப் பேசுகிறது இந்த உணர்வுபூர்வமான படம். இரண்டு மாபெரும் வீரர்களை உருவாக்க அவர் செய்த தியாகங்கள், எடுத்துக்கொண்ட சிரத்தைகள் போன்றவற்றை ஒரு பயோகிராபிக்கல் படமாக இது பதிவு செய்யவிருக்கிறது. ரிச்சர்ட் வில்லியம்ஸாக வில் ஸ்மித் நம் மனங்களைக் கொள்ளைகொள்ளப் போகிறார் என டிரெய்லர்கள் ஆரூடம் சொல்கின்றன. ஆஸ்கரை இப்போதே எடுத்து வைக்கலாம் என்று செய்தி வாசிக்கிறது ஹாலிவுட் தரப்பு. நவம்பர் 19 அன்று உலகெங்கும் வெளியாகிறது `கிங் ரிச்சர்ட்.' வா தலைவா வா!

Eternals
Eternals

Eternals

கொரோனா லாக்டௌனால் சைலன்ட் மோடிலிருந்த டிஸ்னியும் மார்வெல்லும் அடுத்தடுத்துப் பெரிய படங்களைக் களமிறக்குகின்றன. `ஷாங்க் ச்சி’ தற்போதுதான் வந்தது என்றாலும் அடுத்து நவம்பர் 5 அன்றே ‘எட்டெர்னல்ஸ்' படத்தை ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். ‘அவெஞ்சர்ஸ்' படத்தில் உலகம் பாதி அழிந்தபோதுகூட அமைதியாகப் பதுங்கியிருந்த சூப்பர் ஹீரோ படை ஒன்று, புது எதிரிகளான டிவீயன்ட்ஸை அழிக்கக் கோதாவில் இறங்குகிறது. அழிவேயில்லாத இவர்கள் உலகைக் காத்தார்களா என்பதுதான் கதை. படத்தின் பெரும்பலம் அதன் நட்சத்திரப் படைதான். சீனியர் ஏஞ்சலினா ஜோலி தொடங்கி, ஜெம்மா சான், ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்' புகழ் ரிச்சர்ட் மேடன், கிட் ஹாரிங்டன், குமைல் நஞ்சியானி உள்ளிட்டோர் நடிக்க, இந்த வருடம் ‘நோமேட்லேண்ட்' படத்துக்காக ஆஸ்கர் விருது வென்ற க்ளோய் ஸோவ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். புதிய சூப்பர் ஹீரோக்கள், வித்தியாசமான சூப்பர் பவர்கள் என டிரெய்லரே களை கட்டுகிறது. மெயின் பிக்சருக்கு வெயிட்டிங்!

Spiderman: No Way Home
Spiderman: No Way Home

Spiderman: No Way Home

ஸ்பைடர்மேனுக்கு என எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. பலருக்கும் முதலில் பரிச்சயமான சூப்பர் ஹீரோ ஸ்பைடர்மேன்தான். பல ரீபூட்களுக்குப் பிறகு மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் நடக்கும் கதையில் டாம் ஹாலேண்ட் ஸ்பைடர்மேனாக மீண்டும் சாகசங்கள் செய்யவிருக்கிறார். இந்த பாகத்தில் ஸ்பைடர்மேனுடன் டாக்டர் ஸ்ட்ரேஞ்சும் இணைந்திருப்பதால் 'மல்டிவெர்ஸ்' (இணைப் பிரபஞ்சங்கள்) குறித்த விவாதங்கள் சூடுபிடித்தன. பழைய ஸ்பைடர்மேன்களான டோபி மக்குயர் மற்றும் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் இருவரும் இந்தப் படத்தில் தலைகாட்டுவார்கள், அவர்களின் உலகங்கள்தான் இதில் இணைப் பிரபஞ்சங்களாகக் காட்டப்படும் எனத் தகவல்கள் கசியவே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது. சமீபத்தில் வெளியான இதன் முதல் டிரெய்லரில் பழைய ஸ்பைடர்மேன் படங்களின் வில்லன்கள் தலைகாட்ட, அதைவைத்தே ‘மூன்று ஸ்பைடர்மேன்கள் படத்தில் நிச்சயம் உண்டு’ என சத்தியமே செய்கிறது காமிக்ஸ் ரசிகர் படை. அப்படி இருக்கும் பட்சத்தில் 90ஸ் கிட்ஸ் தொடங்கி 2K கிட்ஸ் வரை அனைவரின் ஃபேவரைட்டாக இந்தப் படம்தான் இருக்கும். சிலந்தி மனிதர்களின் சாகசங்கள், டிசம்பர் 17 முதல்!

No Time To Die
No Time To Die

No Time To Die

`பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்!' பட வரிசையில் 25-வது படம். டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் ஐந்தாவது படம். சோகம் என்னவென்றால், பாண்டாக இதுவே தன் கடைசிப் படம் என அறிவித்துவிட்டார் கிரேக். 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் ஜேம்ஸ் பாண்ட் பியர்ஸ் பிராஸ்னன் என்றாலும், ஜேம்ஸ் பாண்ட் நாவலின்படி, அந்தப் பாத்திரத்தைத் துல்லியத்துடன் திரையில் கொண்டு வந்தது டேனியல் கிரேக்தான். அதனால்தான் பலமுறை படம் தள்ளிவைக்கப்பட்டிருந்தாலும் அதன்மீதான எதிர்பார்ப்பு இன்னமும் குறையவில்லை. கடத்தப்பட்ட விஞ்ஞானி ஒருவரை மீட்க வழக்கம்போல உலகம் சுற்றும் வாலிபனாகும் ஜேம்ஸ் பாண்டின் பாதையில் பயங்கரமான டெக்னாலஜி ஒன்றுடன் வில்லன் ஒருவன் குறுக்கிடுகிறான். அவனை வென்று தன் மிஷனையும் பாண்ட் முடித்தாரா என்பதே கதை. படத்திற்கெனப் பல டிரெய்லர்கள் வெளியாகிவிட்ட நிலையில், எதிர்பார்த்ததுபோலவே பல வாவ் ரக ஸ்டன்ட்கள் எட்டிப்பார்க்கின்றன. செப்டம்பர் 30 அன்று, பெரிய திரையில் பாண்டின் சாகசங்கள் நம்மை விசிலடிக்க வைக்கும் என நம்புவோம்.

Venom: Let There Be Carnage
Venom: Let There Be Carnage

Venom: Let There Be Carnage

சோனி நிறுவனம் ஒரு பக்கம் மார்வெல் காமிக்ஸின் ‘ஸ்பைடர்மேன்' உலகின் கதாபாத்திரங்களை வைத்துத் தனியாகப் படங்களைத் தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. 2018-ம் ஆண்டு வெளியான ‘வெணம்' படத்தின் இரண்டாம் பாகம் இது. பத்திரிகையாளரான எட்டி பிராக்கின் உடம்பில்தான் ஏலியன் சிம்பியாட் உயிரினமான ‘வெணம்'மும் தற்போது உயிர் வாழ்கிறது. அதன்மூலம் விசேஷ சக்திகளைப் பெறும் எட்டி, இதில் தனது அடுத்த சாகசத்துக்குத் தயாராகிறான். வெணமின் எதிரியான மற்றொரு ஏலியன் சிம்பியாட் ‘கார்னேஜ்' ஒரு சீரியல் கில்லரின் உடலுக்குள் புகுந்துகொண்டு சண்டைக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும்? ‘வெணம்' என்பதே ஒரு வில்லன் என்னும்போது அதைவிட ஒரு வில்லனுடன் சண்டை என்பதாகக் கதை இருப்பதால் ‘பேய்க்கும் பேய்க்கும் சண்டை' என்ற ரீதியில் சுவாரஸ்யம் கூடியிருக்கிறது. எட்டியாக டாம் ஹார்டி தன் கலக்கல் நடிப்பால் முந்தைய பாகத்திலேயே நம் மனதில் ஆழமானதொரு இடத்தைப் பிடித்துவிட்டார். இதில் அவருக்கும் வெணமுக்குமான கெமிஸ்ட்ரி ஒரு பக்கா பொழுதுபோக்குப் படத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். அக்டோபர் 15 அன்று நிலவரம் தெரிந்துவிடும்.

West Side Story
West Side Story

West Side Story

ஹாலிவுட்டின் பிதாமகன் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், தான் இதுவரை தொடாத ஜானரான ‘காதல்' பக்கம் ஒதுங்கியிருக்கிறார். அதுவும் ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரிக்கு! ஆம், கேங்க்ஸ்டர் பின்னணியில் ரோமியோ - ஜூலியட் உலாவும் அதே கதைதான். இரண்டு குழுக்களுக்கிடையே நடக்கும் கேங் வார், அதனுள் காதல், இசை, நடனம் என எல்லாம் கலந்த எமோஷனல் டிராமா இந்தப் படம். இந்தக் கதை ஏற்கெனவே ‘புக் மியூசிக்கல்' வகைப் படைப்பாக, புகழ்பெற்ற பிராட்வே தியேட்டர் முதல் பலவற்றால் நாடகமாகப் போடப்பட்டிருக்கிறது. 1961-லேயே ஒருமுறை படமாக வெளிவந்து 10 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. ஸ்பீல்பெர்க் எடுக்கும் இந்த ரீபூட், பழைய படத்தின் பாதையைப் பின்பற்றாமல் ஒரிஜினல் வெர்ஷனான நாடகத்தை மையமாகக் கொண்டதாக இருக்கும் என்றே தெரிகிறது. ‘தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்', ‘பேபி டிரைவர்' போன்ற படங்களில் கலக்கிய ஏன்சல் எல்கார்ட் நாயகன் டோனியாகவும், அமெரிக்காவின் பிரபல யூடியூபரான ரேச்சல் ஸிக்லர் நாயகி மரியாவாகவும் நடிக்கின்றனர். படம் வரும் டிசம்பர் 10-ம் தேதி உலகெங்கும் வெளியாகவிருக்கிறது.

Last Night in Soho
Last Night in Soho

Last Night in Soho

வித்தியாசமான படைப்புகள் மூலம் தனித்துவமானதொரு இடத்தைப் பிடித்திருக்கும் பிரிட்டிஷ் இயக்குநர் எட்ஜர் ரைட்டின் அடுத்த படம். சைக்காலஜிக்கல் த்ரில்லரான இந்தப் படத்தின் டிரெய்லரே இதற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இளம் ஃபேஷன் டிசைனரான ஒரு பெண், 1960 காலகட்டத்தில் வாழ்ந்த தன் ஆதர்ச பெண் பாடகி ஒருவரின் உடலுக்குள் புகுந்து அவளாகவே வாழத் தொடங்குகிறாள். இறந்த காலக் குழப்பங்களும், நிகழ்காலப் பிரச்னைகளும் அவள் நினைத்த வாழ்வை வாழ விட்டுவிடுமா என்ன? தாமஸின் மெக்கென்ஸி, ஆன்யா டெய்லர் ஜாய் இருவரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, மேட் ஸ்மித் இவர்களின் காதலனாக நடித்திருக்கிறார். டாரண்டினோவின் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்' படம் எப்படி அந்தக் கால ஹாலிவுட்டுக்கு நம்மைக் கூட்டிச் சென்றதோ, அதேபோல் இந்தப் படம் அந்தக் கால பிரிட்டிஷ் கலையுலகுக்கு நம்மைக் கூட்டிச் செல்லவிருக்கிறது. கூடவே த்ரில் கலந்த சுவாரஸ்யமானதொரு உளவியலைப் பேசும் படம் என்பதால், வித்தியாசமான படங்களைத் தேடித் தேடிப் பார்க்கும் ரசிகர்கள் ரிலீஸ் தேதியான அக்டோபர் 29-ஐ இப்போதே டிக் அடித்து வைத்திருக்கிறார்கள்.

Dune
Dune

Dune

ஹாலிவுட்டின் பாப் கலாசாரத்தின் முகவரியாக ‘ஸ்டார் வார்ஸ்' படங்களைச் சொல்லலாம் என்றால், அதற்கெல்லாம் முன்னோடி இந்த ‘டியூன்.' ஸ்டார் வார்ஸில் டியூனின் பாதிப்பு தூக்கலாகவே இருக்கும். எந்த அளவுக்கு என்றால், டியூன் எழுத்தாளர் ஃப்ராங்க் ஹெர்பெர்ட்டே ஸ்டார் வார்ஸை உருவாக்கிய ஜார்ஜ் லூகஸ் மீது வழக்கு பதிவேன் என்றார். இரண்டு பாகங்களாக வரவிருக்கும் இந்தப் படத்தின் முதல் பாகம் அக்டோபர் 22 அன்று வெளியாகிறது. தன் ராஜ குடும்பத்தை மீட்க மிகவும் ஆபத்தான டியூன் கிரகத்துக்குச் செல்லும் ஓர் இளைஞனின் பயணத்தைப் பின்தொடர்கிறது படம். அங்கிருக்கும் ‘ஸ்பைஸ்' என்னும் வளத்தைச் சுரண்ட நினைக்கும் கூட்டத்தின் நடுவே அந்த இளைஞன் தன் விதியின் ரகசியத்தை அறிந்துகொண்டானா என்பதுதான் படத்தின் ஒன்லைன். தற்போது ஹாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் இயக்குநர் டெனிஸ் வல்னொவ் இயக்க, நடிகர்களாக ரைசிங் ஸ்டார் டிமோத்தி சாலமெட், ஸெண்டயா, ரெபக்கா ஃபர்குசன், ஆஸ்கர் ஐசக் எனப் பெரியதொரு பட்டாளமே இணைந்திருக்கிறது. வார்னர் பிரதர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் பிரமாண்ட படம்தான் உலகெங்கும் ரசிகர்களை மீண்டும் திரையரங்குக்கு இழுத்துவரும் என நம்புகிறது ஹாலிவுட். நம்பிக்கை, அதானே எல்லாம்!