Published:Updated:

Johnny Depp vs Amber Heard: அவதூறு வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு இருவரும் சொல்வது என்ன?

ஆம்பர் ஹெர்ட் - ஜானி டெப்

ஜானி டெப் vs ஆம்பர் ஹெர்ட்: இந்தத் தீர்ப்பு குறித்து ஆம்பர் ஹெர்ட், ஜானி டெப் இருவருமே தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

Johnny Depp vs Amber Heard: அவதூறு வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு இருவரும் சொல்வது என்ன?

ஜானி டெப் vs ஆம்பர் ஹெர்ட்: இந்தத் தீர்ப்பு குறித்து ஆம்பர் ஹெர்ட், ஜானி டெப் இருவருமே தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

Published:Updated:
ஆம்பர் ஹெர்ட் - ஜானி டெப்
ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட் வழக்குகள் ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கின்றன. விர்ஜினியா நீதிமன்றத்தில் ஆறு வாரங்களுக்கு மேலாக நடந்த வழக்கில், மே 27 அன்று இருதரப்பிலான வாதங்கள் முடித்து வைக்கப்பட்டன. மூன்று நாள்கள், நடுவர்கள் வாத - பிரதிவாதங்களை ஆராய்வதற்கு எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு நேற்று (ஜூன் 1) அதிகம் பேசப்பட்ட இந்த ஹை-ப்ரொபைல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது போலவே ஜானி டெப்புக்கு ஆதரவாக இந்த வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறது. 10.35 மில்லியன் டாலர்கள் இழப்பீடாக ஜானி டெப்புக்கு ஆம்பர் ஹெர்ட்டு வழங்க வேண்டும். 10 மில்லியன் இழப்பீட்டுத் தொகை, 5 மில்லியன் தண்டனைக்குரிய இழப்பீட்டுத் தொகை. ஆனால் அந்த 5 மில்லியன் என்பதில் அதிகபட்சம் (அங்கிருக்கும் சட்டப்படி) 3.5 லட்சம்தான் தண்டனைக்குரிய இழப்பீடாக அனுமதிக்க முடியும் என்பதால் 10.35 மில்லியன் டாலர் மொத்த இழப்பீட்டுத் தொகை.

அதே நேரத்தில் ஆம்பர் மீதான அவதூறின் ஒரு பகுதி உண்மையாக இருப்பதால் அவருக்கு 2 மில்லியன் டாலர் இழப்பீடாக கிடைக்கத் தீர்ப்பு வலியுறுத்துகிறது. இந்தத் தீர்ப்பு குறித்து ஆம்பர் ஹெர்ட், ஜானி டெப் இருவருமே தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

ஆம்பர் ஹெர்ட்
ஆம்பர் ஹெர்ட்

ஆம்பரின் அறிக்கை:

ஆம்பர் தனது சமூக வலைதளத்தில் தான் எவ்வாறு உணர்கிறேன் என்பதை அறிக்கையாக பகிர்ந்துள்ளார். அதில், "இன்றைக்கு நான் உணர்கிற ஏமாற்றம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. மலையளவிலான ஆதாரங்கள் அதிகாரத்துக்கு, செல்வாக்குக்கு, புகழுக்கு முன்பு பெரிதில்லை.

இந்தத் தீர்ப்பு மற்ற பெண்களுக்கு என்னவாகச் சென்றிருக்கும் என்பதை யோசிக்கும் போது இன்னும் மோசமாக உணர்கிறேன். இந்த தீர்ப்பு, பெண்கள் பொதுவில் முன்வந்து பேசினாலோ பேச முற்பட்டாலோ அவர்களை அவமானப்படுத்துகிற அவமதிக்கிற காலத்துக்கு பின்நோக்கி கூட்டிச் செல்கிறது. பெண்கள் மீதான வன்முறையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்கிற நிலைக்கு இது கொண்டு செல்கிறது."

மேலும், "ஐரோப்பாவில் எந்த ஆதாரங்கள் போதுமானதாக இருந்தனவோ, அதனை நடுவர்களின் கவனத்திலிருந்து மறைத்த வகையில் ஜானியின் வழக்கறிஞர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என நான் நம்புகிறேன்.

இந்த வழக்கில் தோல்வியுற்றதற்கு வருத்தப்படுகிறேன். ஆனால் அதனைவிட ஓர் அமெரிக்கராக சுதந்திரமாக பேசும் உரிமையை இழந்தது இன்னும் சோகத்தை உணரச் செய்கிறது."

ஜானி டெப்
ஜானி டெப்

ஜானி டெப் அறிக்கை:

"ஆறு வருடங்களுக்கு முன்பு, என்னை பல ஆண்டுகளாக ஆதரித்து, நம்பி வந்தவர்களின் நம்பிக்கை எப்போதைக்குமாக மாறியது. கண் சிமிட்டும் நேரத்தில் பொய்யான, அபாயகரமான மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கள், மீடியா வழியாக என் மீது சுமத்தப்பட்டன. என்னுடைய வாழ்விலும் கரியரிலும் அவை அதிர்வுகளை ஏற்படுத்தின.

ஆறு வருடங்களுக்கு பிறகு, நடுவர்கள் எனக்கு வாழ்க்கையைத் திருப்பி அளித்திருக்கின்றனர். நான் உண்மையாகவே தலைவணங்குகிறேன்.

ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கின் நோக்கம் உண்மையை வெளிகொண்டுவருவதுதான். என்னுடைய குழந்தைகளுக்கு எனக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு நான் சொல்ல விரும்பிய உண்மை. கடைசியாக நான் அதை நிறைவேற்றி இருக்கிறேன். அமைதியாக உணர்கிறேன்."

மேலும், "உலகம் முழுவதும் இருந்து வந்த ஆதரவும் அன்பும் என்னை நிறைவாக உணரச் செய்து கொண்டிருக்கிறது. உண்மைக்கான எனது தேடுதல் பலருக்கு உதவக்கூடும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, என்னுடைய நிலையில் இருப்பவர்களுக்கு, அவர்கள் தங்களின் முயற்சிகளைக் கைவிடாமல் இருக்க இந்த உதாரணம் ஆதரவு தரும். நான் இப்போது நீதிமன்ற பார்வையிலும் மீடியா பார்வையிலும் குற்றமற்றவன் என்கிற நிலைக்குத் திரும்பியிருக்கிறேன். சத்தியம் வெல்லும்” என்கிறார் ஜானி டெப்.