Published:Updated:

இனி 10 வருஷத்துக்கு நாங்கதான்... வார்னர் பிரதர்ஸ் vs டிஸ்னி... கில்லி யார்?

வார்னர் பிரதர்ஸ் vs டிஸ்னி

வார்னர், டிஸ்னிக்கு இடையில் இது ஒரு பெருவணிகப் பனிப்போராகவே இருக்கிறது. இதன் விளைவாக, இந்த இரு நிறுவனங்களும் அவ்வப்போது யார் வலியவன் எனக் காட்டிக்கொள்ள, சில அறிவிப்புகளையும் செய்துவந்துள்ளன. அதன் ஒரு பகுதிதான், டிஸ்னியின் இந்தப் பட்டியல் என்பது திரைப்பட ஆர்வலர்களின் கருத்து.

இனி 10 வருஷத்துக்கு நாங்கதான்... வார்னர் பிரதர்ஸ் vs டிஸ்னி... கில்லி யார்?

வார்னர், டிஸ்னிக்கு இடையில் இது ஒரு பெருவணிகப் பனிப்போராகவே இருக்கிறது. இதன் விளைவாக, இந்த இரு நிறுவனங்களும் அவ்வப்போது யார் வலியவன் எனக் காட்டிக்கொள்ள, சில அறிவிப்புகளையும் செய்துவந்துள்ளன. அதன் ஒரு பகுதிதான், டிஸ்னியின் இந்தப் பட்டியல் என்பது திரைப்பட ஆர்வலர்களின் கருத்து.

Published:Updated:
வார்னர் பிரதர்ஸ் vs டிஸ்னி

ஹாலிவுட்டில் 8 ஆண்டுகாலத் திட்டமாக, தன்னுடைய அடுத்த சில படங்களின் பட்டியலை வெளியிட்டது, டிஸ்னி நிறுவனம். கோலிவுட்டில் எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் என ரசிகர்களின் இரு துருவச் சண்டைகள் காலம் காலமாக நடந்துவருபவைதான். சினிமா என்றாலே இப்படியான ரசிகர்களின் சண்டைகள் இருப்பதும் உலகம் முழுக்க இயல்புதான். இவற்றால், யூ-டியூபில் டிரெய்லர் வியூஸ் எகிறுவது முதல், பாக்ஸ் ஆபீஸ் வசூல் வரை... தொட்ட இடங்களிலெல்லாம் லாபம் என்பதால், பல தயாரிப்பு நிறுவனங்களும் இதைத்தான் விரும்புகின்றன. சில நிறுவனங்கள் சண்டையைத் தூண்டியும் விடுகின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இங்குள்ள சினிமா இப்படி நடிகர்களின் ரசிகர்களை வைத்து இயங்குகிறதென்றால், ஹாலிவுட்டில் கொஞ்சம் வித்தியாசமாக டிஸ்னி - வார்னர், மார்வெல் - டி.சி, கேமரூன் - ஸ்பீல்பெர்க் என வேறுவகையான வாய்க்கால் தகராறாக இருக்கிறது.

அவதார்
அவதார்

அந்த வகையில், ஹாலிவுட்டின் பெரும் பகுதியை ஏற்கெனவே குத்தகைக்கு எடுத்திருக்கும் டிஸ்னி நிறுவனம், விரைவில் மொத்த ஹாலிவுட்டையும் வாங்கிவிடும் என ஒரு சாரர் கூறிக்கொண்டிருக்கையில், `அதற்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை' எனச் சொல்கிறது, வார்னர் பிரதர்ஸ் தரப்பு. டுவன்டியத் சென்சுரி ஃபாக்ஸ், மார்வெல் ஸ்டூடியோஸ், பிக்ஸார், ப்யூனா விஸ்டா என ஹாலிவுட்டின் பல முன்னணித் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களை தன் வசம் வைத்திருக்கிறது, டிஸ்னி. அதேபோல, மார்வெல்லின் போட்டி நிறுவனமான டி.சி ஃபிலிம்ஸ், நியூ லைன் சினிமா, லெஜண்டரி பிக்சர்ஸ், கேஸ்டில் ராக் என்டர்டெயின்மென்ட் உட்பட பல நிறுவனங்களை வாங்கி வைத்திருக்கிறது, வார்னர் ப்ரோஸ்.

வார்னர், டிஸ்னிக்கு இடையில் இது ஒரு பெருவணிகப் பனிப்போராகவே இருக்கிறது. இதன் விளைவாக இந்த இரு நிறுவனங்களும் அவ்வப்போது யார் வலியவன் எனக் காட்டிக்கொள்ள, சில அறிவிப்புகளையும் செய்துவந்துள்ளன. அதன் ஒரு பகுதிதான், டிஸ்னியின் இந்தப் பட்டியல் என்பது திரைப்பட ஆர்வலர்களின் கருத்து.

DC vs Marvel
DC vs Marvel

தொடக்கத்தில் ஸ்பைடர் மேன், ஹல்க், ஃபென்டாஸ்டிக் ஃபோர், எக்ஸ் மேன் யூனிவெர்ஸ்... எனத் தன் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை எல்லாம் ஃபாக்ஸ், சோனி, யூனிவர்சல் போன்ற நிறுவனங்களிடம் விற்றது, மார்வெல் நிறுவனம். அதன் பிறகும் பெரும் நஷ்டத்தில் இருந்த மார்வெல் ஸ்டூடியோஸ், தன்னிடம் மிச்சமிருந்த சூப்பர் ஹீரோ கேரக்டர்களை வைத்து, கடந்த 2008-ம் ஆண்டு தன் மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸின் (எம்.சி.யூ) தொடக்கமாக `அயர்ன் மேன்' படத்தை வெளியிட்டது. தொடர்ச்சியாக, `தோர்', `கேப்டன் அமெரிக்கா', `கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி', `ஆன்ட் மேன்', `ப்ளாக் பாந்தர்', `டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்', `கேப்டன் மார்வெல்',  எல்லாவற்றுக்கும் மேலாக `அவெஞ்சர்ஸ்' என எம்.சி.யூவைப் 10 ஆண்டுகளில் அபாரமாகப் பரவலாக்கி உலகம் முழுக்க பல வசூல் சாதனைகளையும் நிகழ்த்தியது. இதன் வெற்றியைக் கண்டு, பேரமவுன்ட், சோனி (ஸ்பைடர் மேனின் தற்போதைய குத்தகைக்காரர்) போன்ற நிறுவனங்கள் மார்வெலுடன் இணைந்து படங்களைத் தயாரிக்க முன் வந்தன.

இந்த வளர்ச்சியைப் பார்த்த டி.சி, தன்னுடைய கேரக்டர்களை வைத்து `டி.சி. எக்ஸ்டண்டட் யூனிவெர்'ஸை (டி.சி.இ.யூ) உருவாக்கியது. `மேன் ஆஃப் ஸ்டீல் (சூப்பர் மேன்)', `வொண்டர் வுமன்', `சூசைட் ஸ்குவாட்', `ஆக்வா மேன்', `ஷாஸாம்' என அந்த நிறுவனமும் தன்னுடைய கேரக்டர்களை எல்லாம் வைத்து டி.சி.இ.யூவை விரிவுபடுத்தியது. என்றாலும், அதனால் மார்வெல் அளவுக்கு வசூல் சாதனைகளைப் படைக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் எம்.சி.யூவில் எந்தப் படம் வந்தாலும், அது பில்லியன் டாலர் வசூல் செய்துவிடும் என்றாகிவிட்டது. ஆனால், இதுவரை டி.சி எடுத்த படங்களில் `ஆக்வா மேன்' மட்டும்தான் பில்லியன் டாலர்களுக்கு மேல் வசூல் செய்துள்ளது. நல்ல பெயர் வாங்கிய வொண்டர்வுமன் திரைப்படம்கூட 900 மில்லியங்களைதான் தொட்டது.

இனி 10 வருஷத்துக்கு நாங்கதான்... வார்னர் பிரதர்ஸ் vs டிஸ்னி... கில்லி யார்?

அதேபோல, உலக பாக்ஸ் ஆபீஸ் சாதனைப் பட்டியலின் டாப் 25 படங்களில், 8 படங்கள் மார்வெல் ஸ்டூடியோஸுக்குச் சொந்தமானவை. ஆனால், அதிலும் `ஆக்வா மேன்' மட்டும்தான் டி.சி.க்குச் சொந்தமானது. இதுபோக, பிற நிறுவனங்களை வாங்கியுள்ளதால், `அவதார்' படத்தொடர், `ஸ்டார் வார்ஸ்' படத்தொடர், `இன்க்ரிடிபில்ஸ்' தொடர் போன்றவையும் தற்போது டிஸ்னியிடம் உள்ளது.

அதனால், வார்னர் ப்ரோஸ் தோல்வி நிறுவனம் என்றும் சொல்லிவிட முடியாது. சூப்பர் ஹீரோக்கள் படங்களைப் பொறுத்தவரைதான் எதிர்பார்த்த வெற்றிபெற முடியாமல் தவிக்கிறது, அந்த நிறுவனம். மற்றபடி, ஹாரிபாட்டர் யூனிவெர்ஸையும், ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் யூனிவெர்ஸையும் உள்ளடக்கிய `விஸார்டிங் வேர்ல்டு', `கான்ஜூரிங்' யூனிவெர்ஸ், `லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' யூனிவெர்ஸ், 'காட்ஸில்லா' யூனிவெர்ஸ், புதிதாக உருவாகிவரும் `போக்கிமான்' யூனிவெர்ஸ் என வார்னர் ப்ரோஸ் நிறுவனத்திடமும் பல பண வேட்டைப் படத்தொடர்கள் இருக்கத்தான் செய்கின்றன.

இனி 10 வருஷத்துக்கு நாங்கதான்... வார்னர் பிரதர்ஸ் vs டிஸ்னி... கில்லி யார்?

இந்தத் தொடர்களையெல்லாம் வலுவாக வளர்க்க பல யுக்திகளையும் கடைப்பிடித்து வருகிறது, வார்னர் நிறுவனம். `கான்ஜூரிங் 3', `ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்' 3, 4 மற்றும் 5-ம் பாகங்கள், `ஸ்கூபி-டூ' படங்கள், `டாம் அண்டு ஜெர்ரி' படங்கள், `காட்ஸில்லா: கிங் ஆஃப் மான்ஸ்டர்ஸ்' மற்றும் அதன் தொடர்ச்சியாக `கிங்காங்' படங்களுடன் இணைந்து `மான்ஸ்டர்வெர்ஸ்' எனப் புதிய யூனிவெர்ஸை உருவாக்குவது எனத் தன் எதிர்காலத் திட்டத்தை வைத்துள்ளது.

`விடுவேனா நான்' எனக் கூறிக்கொண்டு, 2027- ம் ஆண்டு வரை என்னென்ன படங்களை வெளியிடப்போகிறோம் எனத் தன்னுடைய குழுமத்தில் உள்ள எல்லா நிறுவனங்களுக்கும் சேர்த்து ஒரே அறிவிப்பாக வெளியிட்டுள்ளது, டிஸ்னி. பெரும் பொருட்செலவில் கடந்த 2009-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான `அவதார்' படத்தின் அடுத்த நான்கு பாகங்கள், எம்.சி.யூவின் அடுத்த எட்டுப் படங்கள், ஸ்டார் வார்ஸின் அடுத்த நான்கு படங்கள், எக்ஸ் மேனின் அடுத்த இரண்டு படங்கள், கிங்ஸ்மென் மற்றும் இண்டியானா ஜோன்ஸ் தொடர்களில் தலா ஒரு படம்... எனப் பல லைவ் ஆக்‌ஷன் படங்களையும், `தி லயன் கிங்', `அலாவுதின்', `டாய் ஸ்டோரி 4', `ஃப்ரோஸன் 3' உட்பட 25-க்கும் மேற்பட்ட தன்னுடைய கிளாசிக் ரீ-பூட் படங்களையும் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது, டிஸ்னி.

`இப்படியே சென்றால், போகிறபோக்கில் வார்னர் ப்ரோஸ் நிறுவனத்தையே டிஸ்னி வாங்கிவிடும்போல!' என சினிமா விமர்சகர்கள் முணுமுணுக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், `அப்படியெல்லாம் விட்டுவிடமாட்டோம்' என வார்னர் நிறுவனமும் விரைவில் தன் பத்தாண்டு காலத் திட்டத்தை வெளியிடப்போவதாகத் தகவல்கள் சொல்கின்றன. எது எப்படியோ... இத்தனை படங்களைப் பார்க்கப்போகிறோம் என்றால், நம்ம காட்டுல மழைதான் என உற்சாகத்தின் விளிம்பில் திளைக்கின்றனர் சினிமா ஆர்வலர்கள்.