Published:Updated:

16,627 கோடி நஷ்டமடைந்த அமெரிக்க விநியோக நிறுவனம்... என்னவாகும் திரைப்பட வணிகம்?

அமெரிக்காவில் எப்படி இயங்கப்போகின்றன திரையரங்குகள்?
அமெரிக்காவில் எப்படி இயங்கப்போகின்றன திரையரங்குகள்? ( FLICKR )

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மட்டும், 2.2 பில்லியன் டாலர் மதிப்பிலான இழப்புகளை அறிவித்திருக்கிறது AMC entertainment. இது, இந்திய மதிப்பில் சுமார் 16,627 கோடி ரூபாய்.

கொரோனா பாதிப்புகளால் உலகமெங்கும் பெரும்பாலான நாடுகளில் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. சில மாதங்களாகவே திரைப்படங்கள் எதுவும் திரையரங்குகளில் வெளியாகாத சூழல். இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியா தொடங்கி அமெரிக்கா வரை இதே பிரச்னைதான். உலகின் மிகப்பெரிய திரைப்பட விநியோக நிறுவனமான AMC Entertainment-ம் இதற்கு விதிவிலக்கல்ல!

AMC
AMC
Charles Krupa | AP

2020-ம் ஆண்டின் முதல் காலாண்டு வருமான விவரங்களைப் பல வாரங்களாக வெளியிடாமலேயே தள்ளிவைத்துக்கொண்டிருந்த நிறுவனம், இறுதியாக இன்று அந்த விவரங்களை வெளியிட்டிருக்கிறது. இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 2.2 பில்லியன் டாலர் இழப்பு என அறிவித்திருக்கிறது AMC. இது, இந்திய மதிப்பில் சுமார் 16,627 கோடி ரூபாய். அடுத்த காலாண்டு முடிவுகள் இன்னும் மோசமாகத்தான் இருக்கப்போகின்றன. ஜூலை முதல் நிலை மாறும் என நம்பப்படுகிறது. AMC entertainment-ம் 'அடுத்த மாதம் மீண்டும் முழுவதுமாக இயங்கத் தொடங்கிவிடுவோம்' என்றும் முதலீட்டாளர்களிடம் உத்தரவாதம் கொடுத்திருக்கிறது. ஒரு கட்டத்தில் திவாலாகும் சூழலைச் சந்தித்ததாகவும், இப்போது மீண்டும் நம்பிக்கை பிறந்துள்ளதாகவும் AMC தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

"தற்போது, திரையரங்கு வியாபாரம் இந்த கொரோனா என்னும் சுனாமி பேரலையால் பெரிதும் சேதமடைந்திருக்கிறது. ஆனால் இதையும் கடந்து வருவோம்."
AMC Entertainment CEO ஏடம் ஆரான்.
AMC Entertainment CEO ஏடம் ஆரான்.
AMC Entertainment CEO ஏடம் ஆரான்.

ஆம், இறுதியாகத் திரையரங்கு வியாபாரம் மீண்டும் அமெரிக்காவில் தொடங்கவிருக்கிறது. அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் Tenet (July 17), Mulan (July 24) திரைப்படங்களுடன் மீண்டும் திரையரங்கு வியாபாரம் சூடுபிடிக்கத்தொடங்கும் என நம்புகிறது AMC. AMC என்றில்லை இந்திய சினிமா வட்டாரமும்கூட கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் 'Tenet' படத்துக்கான வரவேற்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அனைத்து விதங்களிலும் இந்த வருடத்தின் மிக முக்கிய திரைப்பட வெளியீடு 'Tenet'தான். 'Mulan' திரைப்படமும் அதிக பொருட்செலவில் டிஸ்னி தயாரித்திருக்கும் படம். இதுவும் மக்களைத் திரையரங்குகளுக்கு வரவைக்கும் என நம்பப்படுகிறது.

Tenet
Tenet

கொரோனா பாதிப்புகள் உச்சம் தொட்டிருக்கும் நியூயார்க் போன்ற சில மாகாணங்கள் தவிர்த்து, திரையரங்குகள் திறக்க அமெரிக்காவில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கட்டுப்பாடுகள் ஏராளம். ஒவ்வொரு மாகாணமும் வேறு வேறு கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளன. சில மாகாணங்கள் கட்டுப்பாடுகளை அறிவித்தும்விட்டன. ஹாலிவுட்டின் தாயகமான கலிஃபோர்னியா மாகாணத்தில் என்ன கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என விரிவாகப் பார்ப்போம்.

கலிஃபோர்னியா திரையரங்கக் கட்டுப்பாடுகள்

ஹாலிவுட்
ஹாலிவுட்
Wikimedia

திரையரங்குகள் இயங்க, குறைந்தபட்ச கட்டுப்பாடுகளாகச் சிலவற்றை அறிவித்திருக்கிறது கலிஃபோர்னியா மாகாணம். உள்ளூர் நிர்வாகங்கள் இதை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும். சூழலுக்கேற்ப கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கவும் அவற்றுக்கு அனுமதி உண்டு. இந்தக் கட்டுப்பாடுகளில் சில முக்கிய அம்சங்கள் இதோ,

  • மொத்த இருக்கைகளில், அதிகபட்சமாக 25% மக்களுடன்தான் திரையரங்குகள் இயங்க வேண்டும்.

  • இன்று பெரும்பாலான திரையரங்குகள், 400-க்கும் குறைவான இருக்கைகளுடனே செயல்படுகின்றன. அந்தத் திரையரங்குகள் அனைத்திற்கும் இந்த விதி பொருந்தும்.

  • IMAX போன்ற அதிக இருக்கைகள் கொண்டிருக்கும் திரையரங்குகள், அதிகபட்சமாக 100 பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

  • சமூக இடைவெளியைக் கருத்தில்கொண்டு இருக்கைகள் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். மீதி இருக்கைகள் மூடப்பட வேண்டும். குழப்பங்கள் வராமல் இருக்கவும், வரிசைகளைத் தவிர்க்கவும் முடிந்த அளவு ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்கப்பட வேண்டும். ஒரே வீட்டில் தங்குபவர்களுக்கு மட்டுமே ஜோடியாகச் சேர்ந்து அமரும் இருக்கைகள் கொடுக்கப்பட வேண்டும். (இதை எப்படி கட்டுப்படுத்துவார்கள் எனத் தெரியவில்லை!)

  • உள்ளே செல்வதற்கும் வெளியே வருவதற்கும் வெவ்வேறு வழிகள் இருக்க வேண்டும். பார்க்கிங் 50% அளவிற்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  • முக்கியமாக, இருக்கைகளுக்கு உறைகள் போடப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு காட்சிக்குப் பிறகும் அவை மாற்றப்பட வேண்டும்.

இந்தக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது அவ்வளவு கடினமாக இருக்காது எனக் கணிக்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள். எப்படியும் அவ்வளவு மக்கள் வரப்போவதில்லை, கொரோனாவின் அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான மக்கள் OTT தளங்களில் வீட்டிலிருந்தே பொழுதைக் கழிப்பார்கள் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

திரைப்பட விநியோக நிறுவனங்களுக்கும் 25% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்குவது பெரிய பிரச்னையாக இல்லை. வார இறுதிகள், பெரிய வெளியீடுகள் இல்லாத பெரும்பாலான நாட்களில் அவ்வளவு கூட்டத்துடன் திரையரங்குகள் இயங்குகின்றனவாம். 'எதுவும் இல்லாததுக்கு இதுவே மேல்' என்பதாகவே இருக்கிறது அவர்களது மனநிலை.

ஆனால், இத்தனை மாதங்கள் செயல்படாமல் சந்தித்த இழப்பை இந்த 25% பார்வையாளர்களை வைத்து எப்படி சரிக்கட்டப்போகின்றன திரையரங்குகளும், விநியோக நிறுவனங்களும் என்பதுதான் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. மேலும், இந்தக் கட்டுப்பாடுகள் எவ்வளவு நாட்கள் தொடரும் என்பதையும் யாராலும் கணிக்கமுடியவில்லை. சிலர், இது இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கலாம் என்கின்றனர். அப்படியானால் பெரிய திரைப்பட ஸ்டூடியோக்கள் இன்னும் அதிகமாக OTT பக்கம் நகரும் என்கின்றனர்.

திரையரங்கு
திரையரங்கு
FLICKR

திரையரங்க அனுபவமே கூட்டமாகப் படம் பார்ப்பதுதான். அது இல்லாமல் திரையரங்குகளால் பார்வையாளனை ஈர்க்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. முதல் நாளில் அதிகம் பேர் பார்த்தால்தான், படம் நன்றாக இருக்கும்போது அது பலரது காதுகளையும் எட்டும். சினிமாவின் தொன்றுதொட்ட 'Word of mouth' கணக்கு இதுதான். இதுவும் இந்தப் புதிய கட்டுப்பாடுகளால் என்னவாகும் என்று தெரியவில்லை.

மொத்தமாக திரையரங்குகள் விரைவில் திறக்கப்படப்போகின்றன. திரைப்படங்கள் வெளியாகப்போகின்றன என்பது மட்டுமே நல்ல செய்தி. அது லாபகரமாக இருக்குமா, மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா, திரையரங்குகளின் எதிர்காலம் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

திரையரங்குகள் என்னவாகும், நம்மூரில் என்னென்ன கட்டுப்பாடுகளெல்லாம் விதிக்கப்பட வேண்டும்... உங்கள் கருத்துகளை கமென்ட்களாகப் பதிவிடுங்கள்!
அடுத்த கட்டுரைக்கு