Election bannerElection banner
Published:Updated:

`டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 2', `தோர் 4' மார்வெல் சினிமாவின் நான்காம் கட்ட அறிவிப்பில் வேறென்ன ஸ்பெஷல்?!

MCU Phase 4 Line up
MCU Phase 4 Line up

அண்மையில் வெளியான 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' கதையோடு எம்.சி.யூவின் முதல் மூன்று கட்டங்களை உள்ளடக்கிய 'இன்ஃபினிட்டி சாகா' நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் எம்.சி.யூவில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்களின் பட்டியல்தான் இந்த அறிவிப்பின் முக்கிய அம்சம்.

கடந்த 11 ஆண்டுகளில் மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (எம்.சி.யூ) செய்த பெரிய சாதனை என்றால், தன் ரசிகர்களை எப்போதுமே 'அடுத்து என்ன?' என்ற கேள்வி கேட்டபடியே வைத்திருக்கச் செய்ததுதான். ஒரு கொடிய வில்லனை அறிமுகப்படுத்தி, அவனை அழித்தால், அடுத்ததாக அவனைவிடக் கொடிய வில்லன் ஒருவன் வருவான். சரி என நமது சூப்பர் ஹீரோக்கள் அவனை அழித்தால், அடுத்ததாக அவனையும்விடக் கொடியவன் வருவான். இப்படி ஒவ்வொரு வில்லனாகக் கொன்று குவித்துக்கொண்டே வந்தால், இறுதியில் வில்லன்களுக்கெல்லாம் வில்லன் என சூப்பர் வில்லனான தானோஸ் வந்தான். கடைசியில் தானோஸையும், அவன் படையையும் டோனி ஸ்டார்க் (அயர்ன்மேன்) தன் உயிரைத் தியாகம் செய்து அழித்தபின் மீண்டும் மார்வெல் ரசிகர்களிடம் எழும்பியது அந்தக் கேள்வி... அடுத்து என்ன?!

MCU Phase 4 Announcement
MCU Phase 4 Announcement

அதற்குப் பதிலளிக்கும் விதமாக, கடந்த வாரம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனம். அண்மையில் வெளியான 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' கதையோடு எம்.சி.யூவின் முதல் மூன்று கட்டங்களை உள்ளடக்கிய 'இன்ஃபினிட்டி சாகா' நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் எம்.சி.யூவில் வெளியாகும் படங்கள் மற்றும் இணையத் தொடர்களின் பட்டியல்தான் இந்த அறிவிப்பின் முக்கிய அம்சம்.

அப்படி என்னதான் வரப்போகிறது அடுத்த இரண்டு ஆண்டுகளில்?!

அயர்ன்மேன், ப்ளாக்விடோ இறந்துவிட்டனர். கேப்டன் அமெரிக்கா, ஹாக்-ஐ ஓய்வுபெற்றுவிட்டனர். ஹல்க் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. தோர், கார்டியன்ஸ் ஆஃப் தி கேல்கஸியுடன் இணைந்து பேரண்டத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றுவிட்டார். இவர்களெல்லாம் இப்படியிருக்கையில், பிளாக் பேந்தர், ஸ்பைடர்மேன், ஃபால்கான், விண்டர் சோல்ஜர், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், ஆண்ட்மேன், ஸ்கார்லெட் விட்ச், கேப்டன் மார்வெல் எனப் புதிய ஹீரோக்கள் மட்டும் மீண்டும் இணைந்து உலகைக் காப்பாற்றப்போகிறார்கள் என எல்லோருக்கும் ஒரு யூகம் இருந்தது. அதை மொத்தமாகப் போட்டு உடைக்கும் விதமாக இந்த நான்காம் கட்ட அறிவிப்பு வந்தது.

Kevin Feige
Kevin Feige

பழைய ஹீரோக்கள் ஒருபுறம் இருந்தாலும், எம்.சி.யூவின் நான்காம் கட்டம் பெரும்பாலும் புதியவர்களை, புதிய முயற்சிகளை மட்டுமே உள்ளடக்கியதாக இருக்கிறது. 'பிளாக் பேந்தர்', 'ஆண்ட்மேன்', 'கேப்டன் மார்வெல்', 'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி' போன்ற படங்களின் அடுத்த பாகம் குறித்த அறிவிப்புகள் ஏதுமில்லை என்றாலும், மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தலைவர் கெவின் ஃபைகீ அறிவித்துள்ள பட்டியல் அதைவிட சுவாரஸ்யமானதாகத்தான் இருக்கிறது.

அதில் அனைவரின் கவனமும் திரும்பியிருப்பது, 'ஷாங்-சி' படத்தின் மீதுதான். காரணம், படத்தின் முழுமையான டைட்டில், 'ஷாங்-சி அண்டு தி லெஜெண்ட் ஆஃப் தி டென் ரிங்ஸ்'.
shang-chi
shang-chi

இந்த டென் ரிங்ஸ் என்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புதான், எம்.சி.யூவின் முதல் படமான 'அயர்ன்மே'னில் டோனி ஸ்டார்க்கைக் கடத்தி அவனை ஒரு சூப்பர் ஹீரோவாக மாறுவதற்கான சூழலை ஏற்படுத்தும். தற்போது அந்த அமைப்பு மீண்டும் கதைக்குள் வரவிருப்பதால், இந்தப் படத்துக்கான எதிர்ப்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அது மட்டுமின்றி ஷாங்-சிதான் எம்.சி.யூ.வின் முதல் ஆசிய சூப்பர்ஹீரோ என்பதால் சீனா, ஜப்பான் உள்ளிட்ட இடங்களிலும் எம்.சி.யூ. தன் ரசிக ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

இதுவரை, 'தி வாஸ்ப்' மற்றும் 'கேப்டன் மார்வெல்' என இரு பெண் சூப்பர் ஹீரோயின்கள் பெயரில் மட்டும்தான் எம்.சி.யூவில் படங்கள் வெளியாகியுள்ளன. அதிலும் கேப்டன் மார்வெல் மட்டும்தான் தனிப்பெரும் சூப்பர்ஹீரோயினாக வந்துள்ளார். தற்போது அந்த வரிசையை நீட்சியடையச் செய்கிறது மார்வெல் நிறுவனம்.

Eternals
Eternals

'பிளாக் விடோ', 'வாண்டா விஷன்', 'இட்டர்னல்ஸ்' என மூன்று சூப்பர் ஹீரோயின்களின் கதைகள் வரவிருக்கின்றன. இட்டர்னல்ஸ் ஓர் அமைப்பாக இருந்தாலும் அதன் முன்னணிப் பாத்திரம் தேனா என்கிற ஒரு பெண். அந்தப் பாத்திரத்தில் நடிக்கப்போவது சர்வதேச லேடி சூப்பர்ஸ்டாரான ஏஞ்சலீனா ஜோலி.

அதில், 'வாண்டா விஷன்' மட்டும் இணையத் தொடராக (Web Series) வரவிருக்கிறது. ஹியூமனாய்டு ரோபோட் விஷன் ஏற்கெனவே இறந்துவிட்டாலும், பிளாக் பாந்தரின் தங்கை ஷூரியின் உதவியோடு மீண்டும் விஷனை மீட்டுருவாக்கம் செய்து வாண்டா அவனோடு இணைவாள் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. அல்லது, சிவில் வார் நிகழ்வுகளுக்குப் பின்னர் தானோஸின் வருகை வரை கிளாஸ்கோவில் தலைமறைவாக இருந்த வாண்டாவும், விஷனும் என்ன ஆனார்கள் என்பதைக் குறித்த ப்ரீக்குவெலாகவும் இது இருக்கலாம் என்பது ஒரு யூகம்.

Wanda Vision
Wanda Vision
``சினிமாவைக் காப்பாற்ற வால்ட் டிஸ்னி நிறுவனம் உடையவேண்டும்!'' - ஏன் இப்படிச் சொல்கிறார்கள்?!

அதேபோல, 'பிளாக் விடோ' திரைப்படமும் ஒரு ப்ரீக்குவெலாக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அது சீக்வெல்தான். கடந்த காலத்துக்குச் சென்று அவளை நிகழ்காலத்துக்குக் கூட்டிவரும் முயற்சிகளில் ப்ரூஸ் பேனர் ஈடுபடுவான் என்றும் சில தியரிகள் உள்ளன.

Black Widow
Black Widow

இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், கேப்டன் அமெரிக்காவுக்கு நிகராக ரஷ்யா உருவாக்கிய ரெட் கார்டியன் என்ற மற்றொரு மார்வெல் கதாபாத்திரமும் 'பிளாக் விடோ' படத்தில் இடம்பெறுகிறது.

கேப்டன் அமெரிக்கா ஓய்வு பெற்றாலும், அவரைத் தொடர்ந்து அவருடைய வைப்ரேனியம் கேடயத்தைப் பெற்ற ஃபேல்கனும், விண்டர் சோல்ஜரும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது, எம்.சி.யூவின் நான்காம் கட்டம். அதன்படி, 'தி ஃபேல்கன் அண்டு தி விண்டர் சோல்ஜர்' என்ற இணையத் தொடரையும் உருவாக்கியுள்ளது.

The Falcon and The Winter Soldier
The Falcon and The Winter Soldier

இதில் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், 'கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்' படத்தின் வில்லன் பேரன் ஜீமோ இதில் மீண்டும் தோன்றுகிறான். அநேகமாக அவன் தன்னுடைய சூப்பர் வில்லன் வடிவமான ஹெல்மட் ஜீமோவாக மாறி, மீண்டும் விண்டர் சோல்ஜருக்கு அச்சுறுத்தல் தருவதுதான் இதன் கதையாக இருக்கும்.

பிளாக் விடோவுக்குத் திரைப்படம் என்றால், அவளுடைய பார்ட்னரான ஹாக்-ஐக்குத் தொடர். அவெஞ்சர்ஸ் கூட்டணியில் ஒருவனான ஹாக்ஐ, இன்ஃபினிட்டி வார் நிகழ்வுகளுக்குப் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு ரோனின் என்ற மர்ம ஆன்டி ஹீரோவாக இருந்தான்.

Hawkeye
Hawkeye

அந்தக் காலகட்டத்தில் தன் குடும்பத்தைப் பறிகொடுத்த துயரத்தில் இருந்த அவன், நல்லவர்கள் எல்லோரும் தானோஸின் சொடுக்கினால் இறந்துவிட்டார்கள், உண்மையில் இறக்கவேண்டியது தீயவர்கள்தானே எனக் கூறி, உலகில் உள்ள குற்றவாளிகளையெல்லாம் வரிசையாகக் கொன்று குவித்தான். அப்போது அவன் நிகழ்த்திய சாகசங்கள்தான் இந்தத் தொடரின் கதை.

'எல்லாமே புதியதுதானா' எனக் கேட்கும் ரசிகர்களுக்காகவே இரண்டு அறிவிப்புகளைக் கொடுத்திருக்கிறது, மார்வெல். அதுதான், 'டாக்டர் ஸ்ட்ரேஞ்'சின் இரண்டாம் பாகம், 'தோர்' தொடரின் நான்காம் பாகம். இதில், 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்' படத்துக்கு 'இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ்' எனப் பெயரிட்டு, அதன் கதைச் சுருக்கத்துக்கு ஒரு குறிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

Doctor Strange
Doctor Strange

ஏற்கெனவே அதன் முதல் பாகத்தில் இப்போது இருக்கும் இயல்பு கோணத்தைத் தாண்டி, இந்தப் பேரண்டத்தில் இருக்கும் மாற்றுக் கோணங்களையெல்லாம் காட்டியிருந்தார்கள். இது ஒரு ஹாரர் படமாகக்கூட இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். மேலும் ஒரு தகவல், மார்வெலின் இரண்டு மந்திரவாதிகளுமான ஸ்கார்லெட் விட்சும், டாக்டர் ஸ்ட்ரேஞ்சும் இணைந்து இந்தப் படத்தில் தோன்றவிருக்கின்றார்கள்.

'தோர்' படத்துக்கு 'லவ் அண்டு தண்டர்' எனப் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் ஜேனாக முன்னர் கலக்கிய நட்டாலி போர்ட்மேன் மீண்டும் தோருடன் இணைகிறார், அதுவும் 'லேடி தார்' பாத்திரமாக! இந்தப் படத்தில் ஹேலாவால் உடைக்கப்பட்ட தாரின் மியால்னிர் என்ற சுத்தியல் மீண்டும் கொண்டுவரப்பட இருக்கிறது. அது பிரத்யேகமாக 'லேடி தார்' பயன்படுத்துவதற்கே!

Thor
Thor

மியால்னிர் கடைசியாக கேப்டன் அமெரிக்கா மேற்கொண்ட டைம் டிராவலின்போது 'எண்டுகேம்' க்ளைமாக்ஸில் மீண்டும் கடந்த காலத்துக்கே எடுத்துச் செல்லப்பட்டது. அப்படியென்றால், மீண்டும் எங்கிருந்து அது வருகிறது என்பதைப் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் எனக் கூறிவிட்டது, மார்வெல் ஸ்டூடியோஸ்.

ரசிகர்கள், தாங்கள் காணும் சினிமாவில் வரும் வில்லன்களை ரசிப்பது ஓர் அரிதான நிகழ்வு. அதிலும், சூப்பர் ஹீரோ படமென்றால் சொல்லவே வேண்டாம்; அங்கே ஹீரோதான் வலியவன். ஆனால், 'தி டார்க் நைட்'டின் ஜோக்கர் போன்ற ஒரு சில சூப்பர் வில்லன்கள் அதில் விதி விலக்கு. அப்படி எம்.சி.யூவில் பெருவாரியான ரசிகர்களால் விரும்பப்பட்ட வில்லனென்றால், அது கண்டிப்பாக லோக்கிதான். அதனாலேயே, 'லோக்கி' என்ற இணையத் தொடரையும் உருவாக்கியிருக்கிறார்கள்.

Loki
Loki

'எண்டுகேம்' படத்தில் டெஸ்ஸராக்டை எடுத்து நியூயார்க்கிலிருந்து தப்பிய லோக்கி எங்கே சென்றான், என்ன ஆனான் என்பதுதான் இந்தத் தொடரின் கதையாம். அது வேறொரு காலக்கோட்டில் நடைபெறும் நிகழ்வு என்பதாலும், அந்தக் காலக்கோட்டில் தானோஸ் உயிரோடு இருக்கிறான் என்பதாலும், 'ஒருவேளை டெஸ்ஸராக்டை லோக்கி தானோஸிடம் கொண்டு சேர்த்திருந்தால், மீண்டும் தானோஸ் வருவானா?' என்ற கேள்வியும் எழாமலில்லை.

அதற்கு விடையளிக்கும் விதமாக, 'வாட் இஃப்?' என்ற அனிமேஷன் தொடரையும் அறிவித்திருக்கிறார்கள். 'வாட் இஃப்' என்றால் 'ஒருவேளை' என்று பொருள். அதன் காஸ்ட் பட்டியலில் தானோஸ், லோக்கி, தார், ஹல்க், கில் மாங்கர், ஜேன் ஃபாஸ்டர், நிக் ஃப்யூரி, ஹாக்ஐ, ஆண்ட்மேன், ஹாவர்டு ஸ்டார்க் என மார்வெலின் முதல் மூன்று கட்டங்களில் வந்த பல கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர்.

What If...?
What If...?

அநேகமாக இது 'எண்டுகேம்'மில் டைம்-டிராவலை மாற்றி மாற்றிப் பயன்படுத்தியதால் என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதைக் குறித்த கதையாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதே சமயம், இந்த மார்வெலின் 'What If...' காமிக்ஸ் தொடரை மையமாக வைத்து இது எடுக்கப்படலாம் என்றும், இல்லையென்றால் 'Marvel Zombies' உலகைச் சுற்றும் கதையாகவும் இது இருக்கலாம் என்றும் தியரிகளை அள்ளி வீசுகிறார்கள் நெட்டிசன்கள்.

ரசிகர்களைக் குழப்பி, சுவாரஸ்யப்படுத்தி, பிறகு பெரிய பொழுதுபோக்கு விருந்தை அளிப்பது மார்வெலின் இயல்பு. அந்த வகையில், இந்த நான்காம் கட்டம் குறித்த அறிவிப்பு சில ஏமாற்றங்களோடு இருந்தாலும், ஆவலையும் தூண்டத்தவறவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு