Published:Updated:

சூடோபல்பர் எஃபெக்ட், வித்தியாச உடல்மொழி, சாடிஸ்டிக் சிரிப்பு... `ஜோக்கர்' பார்க்க ரெடியா?!

Joker
Joker

ஜோக்கர் கதாபாத்திரத்தினுடைய 'ஸ்டாண்டு அலோன்' படம், ஜாக்வின் ஃபீனிக்ஸ் நடிப்பில் நாளை வெளியாகிறது. அதைப் பற்றிய ஒரு சிறப்புப் பகிர்வு! 

ஜோக்கர் என்ற கதாபாத்திரத்தின் சித்திரிப்பு, காமிக்ஸில் ஆரம்பித்து கார்ட்டூன், படங்கள், வீடியோ கேம் எனப் பல்வேறு படைப்புகளில் வந்தாகிவிட்டது. ஒவ்வொன்றிலும் ஒரு விதம். காலம் செல்லச்செல்ல சூப்பர் ஹீரோக்களின்மீதிருந்த ஈர்ப்பு, மெதுமெதுவாக சூப்பர் வில்லன்களின் பக்கமும் திரும்ப ஆரம்பித்தது. அதில் குறிப்பாக, ஜோக்கர் கதாபாத்திரத்தைச் சுட்டிக்காட்டிச் சொல்லலாம். முதன்முறையாக ஜோக்கருடைய 'ஸ்டாண்டு அலோன்' படம், ஜாக்வின் ஃபீனிக்ஸ் நடிப்பில் நாளை (அக்.2) வெளியாகவிருக்கிறது. அதைப்பற்றிய ஒரு சிறப்புப் பகிர்வு. 

Joker
Joker
Joaquin Phoenix

1940-ல், DC நிறுவனம், 'ஜோக்கர்' கதாபாத்திரத்தை காமிக்ஸ் மூலம் அறிமுகம் செய்துவைத்தது. இந்த 'ஜோக்கர்' கதாபாத்திரத்துக்கு, பல்வேறு பின் கதைகள் காமிக்ஸ் உலகில் தற்போதும் உலா வருகின்றன. ஆனால், இந்தக் கதாபாத்திரத்துக்கான பிரத்யேக பின் கதை, ஒரு முழுநீள லைவ் ஆக்ஷ்ன் திரைப்படமாக இதுவரை எடுக்கப்பட்டதே இல்லை. வித்தியாசமாக, அனிமேஷன் படமான 'கில்லிங் தி ஜோக்', ஜோக்கரின் பின் கதையை அலசியிருக்கும். அதேபோல, 1989-ல் டிம் பர்டன் இயக்கத்தில் வெளிவந்த `பேட்மேன்' படம், ஜோக்கருக்கான பின் கதை ஒன்றை காரணத்துடன் எடுத்துரைத்தது. ஆனால், அதுவுமே ஒரு துணைக் கதை போலதான் விரியும்.

அந்தப் படத்தின் கதைப்படி, ப்ரூஸ் வெயினின் பெற்றோரை ஒருவர் கொன்றுவிடுவார். இதில் கடுப்பான ப்ரூஸ், தன்னை பேட்மேனாக உருமாற்றிக்கொண்டு, அநியாயங்களை எதிர்த்துப் போராடுவார். தனக்கே தெரியாமல் ஒரு பிரச்னையை எதிர்த்துப் போராடும்போது, கெமிக்கல் ஆலைக்குள் ஒருவரைத் தள்ளிவிடுவார். இதனால், அவர் முகம் மாறிவிடும். அந்த ஒருவர்தான் ஜோக்கர். அவர்தான், ப்ரூஸின் பெற்றொரைக் கொன்றதும் என்பது பின்னரே தெரியவரும். அந்த கெமிக்கல் ஆலையிலிருந்து மீளும் அந்தக் கொலைகாரன், தன்னை ஜோக்கராக உருமாற்றிக்கொண்டு, பேட்மேனைப் பழிவாங்கக் கிளம்புவார். இப்படி ஒரு பின் கதை, ஜோக்கர் கதாபாத்திரத்துக்கு அப்போது அந்தப் படத்தில் எழுதப்பட்டது. 

ஜோக்கர்
ஜோக்கர்
ஹீத் லெட்ஜர்

ஜாக் நிக்கல்சன், சீஸர் ரொமீரோ போன்ற நடிப்பு ஜாம்பவான்கள் ஏற்கெனவே, 'ஜோக்கர்' கதாபாத்திரத்தின் தன்மையை வலுப்படுத்தி இருந்தனர். மார்க் ஹேமில் போன்ற சில கலைஞர்கள், திரைக்குப் பின்னாலிருந்து கார்ட்டூன்களுக்கு டப்பிங் கொடுத்தனர். ஆனால், 1989-ல் வந்த 'பேட்மேன்' படத்திற்குப் பிறகு, திரையுலகில் ஜோக்கர் கதாபாத்திரத்தின்மீது மீண்டும் பெரியதொரு லைம் லைட் விழத் தொடங்கியது. ஜோக்கருடைய கதாபாத்திரத்தன்மையும் மெருகேறியது. அதன் பின்னர், ஜோக்கரை வைத்து வெளிவந்த அனைத்துப் படைப்புகளும் கவனம்பெற்றன. அந்த வரிசையில், அழுத்திச் சுட்டிக்காட்டவேண்டிய படமென்றால் அது, `பேட்மேன் : தி டார்க் நைட்'. மிகவும் கொண்டாடப்படவேண்டிய கலைஞனென்றால் அது, ஹீத் லெட்ஜர். இந்தக் கொண்டாட்டத்தில், அவர் நம்முடன் இல்லையென்பதுதான் வேதனையளிக்கும் ஒன்று.

இவ்வளவு ஏன், அவரது அந்த நடிப்புக்குக் கிடைத்த ஆஸ்கரை வாங்குவதற்குக்கூட அப்போது அவர் உயிருடன் இல்லை. பேட்மேன் என்ற சூப்பர் ஹீரோவின் கருவையும், கான்செப்ட்டையும் அறிவு சார்ந்த தொழில்நுட்பங்களுடன் இணைத்து எளிமைப்படுத்தியவர், இயக்குநர் கிரிஸ்டோபர் நோலன். வழக்கமான சூப்பர் ஹீரோக்களின், படங்களுக்கு மத்தியில் தனித்துத் தெரிந்தது இவருடைய `பேட்மேன்' பட சீரிஸ்.

கிறிஸ்டோபர் நோலன்... நேர விளையாட்டுக்களின் மாய வித்தகன்...! #HBDChristopherNolan

இயக்குநரின் இந்த வித்தியாச முயற்சிக்கு, பேட்மேனாக நடித்த கிறிஸ்டியன் பேல் எந்த அளவிற்கு உயிரோட்டம் கொடுத்தாரோ அதற்கு நிகரான உழைப்பை ஹீத் லெட்ஜரும் கொடுத்திருந்தார். அந்தக் கதாபாத்திரத்தை தனக்குள் கொண்டுவர ஹீத் கொடுத்த விலை, 43 நாள்கள் தனிமை. யாரையும் பார்க்காமல், ஒரு மோட்டலின் அறைக்குள் 43 நாள்கள் தன்னைத்தானே தனிமைப்படுத்தி பதப்படுத்திக்கொண்டார். அதன் பயன்தான், படத்தில் பிரதிபலித்த அவரின் அசகாய நடிப்பு. அதுதான் அவரது வசன உச்சரிப்பில் ஆரம்பித்து, வித்தியாசமான உடல்மொழி வரை காரணமாக இருந்திருக்கும். அதுமட்டுமன்றி, ஸ்க்ரிப்ட்டில் இல்லாத பல விஷயங்களை இம்ப்ரொவைஸ் செய்து தன்னுடைய நடிப்பின்மூலம் நோலனையே வியக்கவைத்தாராம், ஹீத். 

இப்படி ஜோக்கருடைய கதாபாத்திரத் தன்மை ஹீத் லெட்ஜரால் வேறொரு பரிமாணத்தை அடைந்தது. இதற்குப் பின், டி.சி காமிக்ஸின் `சூசைடு ஸ்குவாடு' படத்தில் நடித்த ஜேரட் லீடோ, ஜோக்கரின் நற்பெயரைத் தக்கவைக்கத் தவறிவிட்டார்; பல்வேறு விபரீத விமர்சனங்களுக்கும் ஆளானார். பொதுவாக, சூப்பர் ஹீரோக்களுக்கு ஸ்டாண்டு அலோன் கதை என்று ஒரு படமோ, அடுத்த பாகங்களோ வெளியாகும். மார்வெல்லின் மொத்த சூப்பர் ஹீரோக்களின் குவியலாக `அவெஞ்சர்ஸ்' படம் வெளியாகும். மறுபக்கம், டி.சி.காமிக்ஸின் சூப்பர் ஹீரோக்களின் மொத்தக் குவியலாக `ஜஸ்டிஸ் லீக்' வெளியானது. இப்படி அவ்வப்போது நிகழ்ந்தாலும், தொடர்ந்து தனித்தனி சூப்பர் ஹீரோக்களுக்கென்று ஸ்டாண்டு அலோன் படங்கள் வெளியாகும்.

ஜாக்வின் ஃபீனிக்ஸ்
ஜாக்வின் ஃபீனிக்ஸ்
ஜோக்கர்

மார்வெல்லின் முதல் சூப்பர் ஹீரோவான அயர்ன்மேன் ஆரம்பித்து, கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், சமீபத்தில் வந்த கேப்டன் மார்வெல், ஸ்பைடர் மேன் வரையில் அனைவருக்கும் அவரவர்களது ஸ்டாண்டு அலோன் படங்கள் வெளியாகிவிட்டன. இதே ஃபார்முலாதான் டி.சி-க்கும். அந்தப் பக்கம் ஒவ்வோர் சூப்பர் ஹீரோவுக்கும் ஒவ்வொரு ஸ்டாண்டு அலோன் படம் இருக்கிறது. இந்த வரிசையில், சூப்பர் வில்லனான ஜோக்கருக்கும் ஒரு படத்தைத் தற்போது எடுத்திருக்கிறது டி.சி.

டாட் ஃபிலிப்ஸ் இயக்கத்தில் ஜாக்வின் ஃபீனிக்ஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் `ஜோக்கர்' படத்தின் டிரெய்லர், மொத்த ஹாலிவுட் ரசிகர்களையும் திரும்பிப்பார்க்கவைத்தது. `இந்த மனுஷனுக்குள்ள என்னமோ இருக்கு' என்ற வியப்பை பார்ப்பவர்களுக்குள் வரவைத்தார், இதில் ஜோக்கராக நடித்திருக்கும் ஜாக்வின் ஃபீனிக்ஸ். படத்தின் இயக்குநர் டாட் ஃபிலிப்ஸ் நமக்கு மிகவும் பரிச்சயமான `ஹேங்ஓவர்' படத்தை இயக்கியவர்தான் இவர். வித்தியாசமான இந்தக் கூட்டணியே நம்முடைய எதிர்பார்ப்பை எகிறவைத்தது.

 Joker
Joker

அதிலும், இப்படம் சமகால விஷயங்களுக்குள் பொருந்திப்போகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. `சூடோபல்பர் எஃபெக்ட் (Pseudobulbar affect (PBA))' என்று ஒரு நோய் உள்ளது. மனதில் ஏற்படும் அழுத்தத்தினால் வரக்கூடிய இந்த நோய்க்கு சமூகம்தான் காரணி. ஏதோவொரு சூழலில் சமூகத்தால் ஒடுக்கப்படும்போது ஏற்படும் ஒருவித மன அழுத்ததை மனிதர்களாகிய நாம் ஏதோ ஒரு வகையில் அனுபவித்திருப்போம். குறைந்தபட்சம் கேள்விப்பட்டாவதிருப்போம். இந்த அழுத்தம் தொடர்ந்து ஒருவனுக்கு ஏற்படும்போது, அவனுடைய மனநிலை எப்படியாக இருக்கும்... அந்த விரக்தி வெடித்த பிறகு எவ்வளவு கோரமானதாக இருக்கும்? இதுபோன்ற கேள்விகளுக்குத்தான் பதில் சொல்ல வருகிறான், ஜோக்கர். இந்த அழுத்தத்தினால், தொடர்ந்து செய்யக்கூடிய இரண்டு... வெடித்துச் சிரிப்பது, குமுறி அழுவது. டிரெய்லரில் அந்த இரண்டையுமே செய்திருப்பார், ஃபீனிக்ஸ்.

ஹீத் ஏற்று நடித்த ஜோக்கர், வரலாற்று நிகழ்வு. அந்தக் கதாபாத்திரம் கொஞ்சமும் தனக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக நிறைவே உழைத்திருக்கார், ஜாக்வின் ஃபீனிக்ஸ். அதில், முதல் முயற்சியாக எடையை 24 கிலோ வரை குறைத்திருக்கிறார். அதேபோல், ஆரம்பக் காலத்து ஜோக்கர்களில் ஆரம்பித்து தற்போது வரை ஜோக்கரின் உடல்மொழியிலும், சிரிக்கும் விதத்திலும் அதிக கவனம் செலுத்தப்பட்டிருப்பது தெரியவரும். ஒருவித `சாடிஸ்டிக்' பிம்பம் இந்த இரண்டிலுமே பிரதிபலிக்க வேண்டும். அதற்கான முயற்சியையும் ஜாக்வின் ஃபீனிக்ஸ் சிறப்பாகவே செய்திருக்கிறார்.

ஜாக்வின் ஃபீனிக்ஸ்
ஜாக்வின் ஃபீனிக்ஸ்
ஜோக்கர்

சூப்பர் ஹீரோக்களின் படங்களென்றாலே பிரமாண்ட விஷுவலும், சூப்பர் ஹீரோக்களின் அசாத்திய திறன்களும்தான் கண்முன் தோன்றும். இதற்கு மூலப்பொருள் அதிக பட்ஜெட். இதுபோன்ற பிரமாண்டத்தைத் தகர்த்தது ஜோக்கர். இவரது கதாபாத்திரத்திலிருக்கும் எளிமைதான், ஜோக்கர் படத்தின் பட்ஜெட்டிலும் பிரதிபலிக்கப்போகிறது. படத்தின் மொத்த பட்ஜெட்டே 55 மில்லியன்தான். இப்படியான சூழலில், ஜோக்கரின் 'ஸ்டாண்டு அலோன்' படம் முதன்முறையாக வெளியாகப்போவதால், மொத்த ரசிகர்களும் இந்தப் படத்திற்கு வெயிட்டிங்!

யதார்த்தத்தோடு பொருந்திப்போகும் ஜோக்கரின் கதாபாத்திரத் தன்மையை மாற்றிய பெருமை, இயக்குநர் நோலனையும் அவரது எழுத்துக்கு உயிர்கொடுத்த ஹீத்தின் நடிப்பையுமே சேரும். இந்த வரிசையில், ஜாக்வின் ஃபீனிக்ஸ் என்ற கலைஞனின் நடிப்பும் இடம்பெறுமா என்பதை விரைவில் பார்த்துவிடுவோம்.

அடுத்த கட்டுரைக்கு