Published:Updated:

West Side Story: ஐயா ஸ்பீல்பெர்க் ஐயா... ஒன்றரை நிமிட டீசரில் எத்தனை குறியீடுகள், எமோஷன்கள் ஐயா!

West Side Story Team with Steven Spielberg ( Amblin Entertainment )

கடந்த வருடம் டிசம்பரில் வெளியாக வேண்டிய படம், கொரோனா பரவல் காரணமாக இந்த வருட டிசம்பரில் வெளியாகிறது. அதுவும் 1961-ல் பழைய 'வெஸ்ட் சைடு ஸ்டோரி' வெளியான அதே டிசம்பர் 10-ம் தேதி இந்தப் படமும் வெளியாகிறது.

West Side Story: ஐயா ஸ்பீல்பெர்க் ஐயா... ஒன்றரை நிமிட டீசரில் எத்தனை குறியீடுகள், எமோஷன்கள் ஐயா!

கடந்த வருடம் டிசம்பரில் வெளியாக வேண்டிய படம், கொரோனா பரவல் காரணமாக இந்த வருட டிசம்பரில் வெளியாகிறது. அதுவும் 1961-ல் பழைய 'வெஸ்ட் சைடு ஸ்டோரி' வெளியான அதே டிசம்பர் 10-ம் தேதி இந்தப் படமும் வெளியாகிறது.

Published:Updated:
West Side Story Team with Steven Spielberg ( Amblin Entertainment )

ஹாலிவுட்டின் பிதாமகன் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கிற்கு வயது 74. இன்றும் படங்கள் இயக்குகிறார், தயாரிக்கிறார். குறிப்பாக அவர் தொடங்கிவைத்த 'இண்டியானா ஜோன்ஸ்', 'ஜூராசிக் பார்க்' உள்ளிட்ட படத்தொடர்கள் இன்றும் ரீபூட் செய்யப்பட்டு வசூலை வாரிக் குவிக்கின்றன. 'மென் இன் பிளாக்', 'டிரான்ஸ்ஃபார்மர்ஸ்' என இவர் நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்து மெருகேற்றிய படத்தொடர்களும் நிறைய உண்டு. சொல்லப்போனால் 'டிரான்ஸ்ஃபார்மர்ஸ்' படத்தை மைக்கேல் பே இயக்கினால் சரியாக இருக்கும் என முன்மொழிந்தவரே ஸ்பீல்பெர்க்தான். இப்படி ஹாலிவுட்டில் கவனம் ஈர்த்த பெரும்பாலான சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களில் ஸ்பீல்பெர்க்கின் பங்கு நிச்சயம் ஏதேனும் ஒரு வகையிலிருந்தே தீரும் எனலாம்.

West Side Story 2021
West Side Story 2021

அதே சமயம் இயக்குநராக சயின்ஸ் ஃபிக்ஷன் என்ற எல்லைக்குள் மட்டும் நிற்காமல் அனிமேஷன், பயோகிராஃபி, போர் குறித்த படங்கள், கோர்ட் ரூம் டிராமாக்கள், சர்வதேச அரசியலைப் பேசும் படங்கள், எமோஷனல் கதைகள் என எல்லா இடங்களிலும் இறங்கி அடித்திருக்கிறார். 2018-ல் வெளியான 'ரெடி ப்ளேயர் ஒன்' என்ற கேமிங் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை இயக்கியவர் தற்போது மீண்டும் இயக்குநர் நாற்காலியில் அமர்ந்திருப்பது 'வெஸ்ட் சைடு ஸ்டோரி' எனும் மீயூசிக்கல் லவ் ஸ்டோரிக்கு! ஆம், இரண்டு குழுக்களுக்கிடையே நடக்கும் கேங் வார், அதனுள் காதல், இசை, நடனம் என எல்லாம் கலந்த எமோஷனல் டிராமா இந்தப் படம். இவ்வருட டிசம்பரில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. 90 நொடிகள் மட்டுமே ஓடும் டீசரில் ஏகப்பட்ட குறியீடுகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதன் வரலாறு என்ன?

1950-களில் நியூயார்க் நகரின் 'அப்பர் வெஸ்ட் சைடு' (Upper West Side) எனும் இடத்தில் நடக்கும் இந்தக் கதை, ஏற்கெனவே 'புக் மியூசிக்கல்' வகை படைப்பாகப் புகழ்பெற்ற பிராட்வே தியேட்டர் முதல் பலவற்றால் நாடகமாகப் போடப்பட்டிருக்கிறது. அமரக்காவியமான 'ரோமியா ஜூலியட்' கதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த நாடகத்துக்குக் கிடைத்த வரவேற்பு இந்தக் கதையை சினிமாவுக்கும் எடுத்து வந்தது. 1961-ல் 'வெஸ்ட் சைடு ஸ்டோரி' படமாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றதோடு ஒரு கல்ட் கிளாசிக் படமாக பலரின் இதயங்களைக் கொள்ளை கொண்டது. மொத்தம் 11 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படம், சிறந்த படம், சிறந்த இயக்குநர் உட்பட 10 விருதுகளை வென்றது, ஒரு மியூசிக்கல் படம் 10 ஆஸ்கர் விருதுகளை வென்றது இன்றளவும் ஒரு மாபெரும் சாதனை. ஆம், படத்தில் மொத்தம் 19 பாடல்கள். கிட்டத்தட்ட 54 வாரங்கள், பில்போர்ட் சார்ட்டில் நம்பர் 1 இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருந்தது இதன் ஆல்பம்.

வெஸ்ட் சைடு ஸ்டோரி 1961
வெஸ்ட் சைடு ஸ்டோரி 1961

சரி, 'வெஸ்ட் சைடு ஸ்டோரி'யின் கதை என்ன?

அமெரிக்கர்களை உள்ளடக்கிய ஜெட்ஸ் கேங்கிற்கும் புவேர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய ஷார்க்ஸ் கேங்கிற்கும் முட்டல் மோதல். அரசியல் ரீதியாகப் பல பிரச்னைகள். டீன் ஏஜ் குழுக்களான இவற்றில் ஜெட்ஸ் கேங்கின் தளபதி டோனிக்கும், ஷார்க்ஸ் கேங்கின் தலைவனான பெர்னார்டோவின் தங்கை மரியாவிற்கும் காதல். எந்த கேங்க் இங்கே கிங் என்பதான அரசியல் போட்டிக்கு இடையே எதிர் துருவங்களிலிருந்து வந்த இந்த இருவரின் காதல் என்னவாகிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

ஸ்பீல்பெர்க் எடுக்கும் இந்த ரீபூட் 1961-ல் வெளிவந்த படத்தின் பாதையைப் பின்பற்றாமல் ஒரிஜினல் வெர்ஷனான நாடகத்தை மையமாகக் கொண்டதாக இருக்கும் என்றே தெரிகிறது. 'தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்', 'பேபி டிரைவர்' போன்ற படங்களில் கலக்கிய ஏன்சல் எல்கார்ட் நாயகன் டோனியாகவும், அமெரிக்காவின் பிரபல யூடியூபரான ரேச்சல் ஸிக்லர் நாயகி மரியாவாகவும் நடிக்கின்றனர். ஏகப்பட்ட துணை கதாபாத்திரங்கள் படத்தில் இருப்பதை அதன் டீசரே எடுத்து உரைக்கின்றன.

டீசர் சொல்ல வரும் சேதி என்ன?

ஒரு சர்ச், நியூயார்க்கின் அப்பர் வெஸ்ட் சைடு பகுதியின் கலாசாரம், புவேர்ட்டோ ரிக்கோர்களில் வழிபாடு போன்றவற்றை பறைசாற்றும் ஓப்பனிங் ஷாட்கள் நம் கண் முன்னே விரிகின்றன. மியூசிக்கல் படம் என்பதைத் தாண்டி அங்கே இசை என்பது அந்த மக்களின் வாழ்வியலிலேயே கலந்த ஒன்றாக இருக்கிறது. தூய்மைப் பணியாளர் ஒருவரின் விசில் இசையுடன் தொடங்கும் டீசரில் அடுத்தடுத்து வரும் ஷாட்கள் அங்கிருக்கும் இரண்டு கேங்குக்கு இடையேயான அரசியலை நம் கண்முன் நிறுத்துகின்றன.

வெஸ்ட் சைடு ஸ்டோரி | This is our place
வெஸ்ட் சைடு ஸ்டோரி | This is our place
வெஸ்ட் சைடு ஸ்டோரி | This is our time
வெஸ்ட் சைடு ஸ்டோரி | This is our time

குறிப்பாக, சுவர்களில் புவெர்ட்டோ ரிக்கோ மக்களுக்கு எதிரான போராட்ட வாசகங்களைக் காண முடிகிறது. அவர்களின் கொடி தாங்கிய சுவரில், "This is our place" என்றும், அதற்கடுத்து மற்றொரு ஷாட்டில், மற்றொரு சுவரில் அதன் தொடர்ச்சியான "This is our time" என்ற வாசகமும் கறுப்பு கலரில் ஒரே கையெழுத்தில் இடம்பெற்றிருப்பதைப் பார்க்கலாம். அமெரிக்கர்கள் தங்களின் எதிர்ப்பை இப்படி வெளிப்படுத்துகின்றனர். இங்கே கவனிக்க வேண்டியது இது இரண்டுமே படத்தின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேரங்களில் வரும் ஷாட்டாக இருக்கலாம். ஆனால், அதை ஒன்றிணைத்து டீசரில் அடுத்தடுத்து காட்டியிருப்பதன் மூலம், அங்கு நிலவும் அசாதாரண போராட்ட சூழலைச் சுலபமாகப் புரிய வைக்கிறார் ஸ்பீல்பெர்க்.

டீசரில் இதற்கேற்றவாறே ஒலிக்கும் பழைய 'வெஸ்ட் சைடு ஸ்டோரி' நாடகத்தின் "Somewhere (There's a Place for Us)" பாடலின் புதிய வெர்ஷன் எமோஷன்களை எகிறச் செய்கிறது.

வெஸ்ட் சைடு ஸ்டோரி
வெஸ்ட் சைடு ஸ்டோரி

பின்னொரு ஷாட்டில், இந்தக் கொடியையும் அழிக்க முற்படும் ஜெட்ஸ் கேங்கை தடுத்து நிறுத்த ஷார்க்ஸ் கேங் வருகிறது. இதையும் டீசரில் பார்க்கலாம்.

அதேபோல அந்த இரண்டு கேங்குக்கும் இடையே நடக்கும் மோதலைத் தடுக்க காவல்துறையைச் சேர்ந்தவர்கள் வருகின்றனர். அதிகாரிகளான ஸ்க்ரான்க், க்ருப்கே எனப்படும் இந்த இருவருக்கும் இந்தக் கதையில் பெரும்பங்கு இருக்கிறது. நாயகன், நாயகி தவிர்த்து இந்த இரண்டு கேங்கிலும் முக்கியமானவர்கள் ஜெட்ஸின் தலைவனான ரிஃப், ஷார்க்கின் தலைவனான ஃபெர்னார்டோ, அவனின் காதலியான அனிதா மற்றும் மரியாவுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் சீனோ.

வெஸ்ட் சைடு ஸ்டோரி | Gang Fights
வெஸ்ட் சைடு ஸ்டோரி | Gang Fights

டீசரில் பலரின் கவனத்தையும் ஈர்த்த ஷாட் என்றால் ஒரு கேரேஜில் இரண்டு கேங்கும் சந்திக்கின்றனர். கேரேஜின் இரண்டு பக்க இரும்பு ஷட்டர்களும் திறக்கப்பட, இரண்டு அணிகளும் உள்ளே எதிரெதிர் திசையில் நுழைகின்றனர். நடுவில் அவர்கள் அனைவரின் நிழலும் தெரியும்படி ஒரு வித அழகியலுடன் அந்த ஷாட் எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் நடுவே 'A Steven Spielberg Film' என்ற எழுத்துகள். அந்த ஒரு ஷாட் மொத்தப் படத்தின் கதையையும் அழகாகச் சொல்கிறது.

இந்த டீசரில் மற்றொரு கவனிக்கத்தக்க விஷயம், படத்திலிருக்கும் க்ளோசப் ஷாட்கள். வெவ்வேறு எமோஷன்களைக் கடத்தும் அவை அத்தனை சிரத்தையுடன் படமாக்கப்பட்டிருக்கின்றன. காதலர்கள், எதிரிகள், நண்பர்கள் என அனைவருக்கும் வரும் இந்த ஷாட்கள் வெவ்வேறு விஷயங்களை வெளிப்படுத்துகின்றன. செட்களில் எடுக்கப்பட்ட சினிமாதான் என்றாலும் இவ்வகை எமோஷன்களை யதார்த்தமாகக் காட்டுவதன் மூலம் அந்தக் கதை நடக்கும் வெளியையும் யதார்த்தமான ஒன்றாக மாற்றி உயிர்கொடுக்க முடியும். அதைத்தான் ஸ்பீல்பெர்க் இதில் செய்திருக்கிறார்.

கடந்த வருட டிசம்பரில் வெளியாக வேண்டிய படம், கொரோனா பரவல் காரணமாக இந்த வருட டிசம்பரில் வெளியாகிறது. அதுவும் பழைய 'வெஸ்ட் சைடு ஸ்டோரி' 1961-ல் வெளியான அதே டிசம்பர் 10-ம் தேதி இந்தப் படமும் வெளியாகிறது. அதாவது அதன் 60-வது வருடத்தில் இது வெளியாகும். சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில்தான் இந்தப் படத்தின் டீசர் வெளியானது.

முந்தைய படத்தின் 10 ஆஸ்கர் என்ற மிகப்பெரும் சாதனையை இந்தப் படம் மிஞ்சுமா? 1998-ல் தன்னுடைய 'Saving Private Ryan' படத்திற்காகச் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்ற ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அதன்பிறகு ஆஸ்கர் வெல்லவே இல்லை. இந்தக் குறை அடுத்த வருடம் தீருமா? காத்திருப்போம்!