Published:Updated:

நோமேட்லேண்ட், மேங்க், சோல்... இந்த வருட ஆஸ்கர் படங்களை எங்குப் பார்க்கலாம்?

கார்த்தி
ர.சீனிவாசன்

வார இறுதி... அரசியல் ரிசல்ட்டுக்கு நடுவே சற்று ஆஸ்கர் சினிமா பக்கம் ஒதுங்கலாமா ?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

NOMADLAND - HOTSTAR

Best Picture - WINNER

Best Director - WINNER - Chloé Zhao

Best Actress - WINNER - Frances McDormand

Nomadland
Nomadland

2009ம் ஆண்டு பெரும் பொருளியல் நிலைத் தேக்கம் (Great Recession) உலகின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்கிறது. 2011ம் ஆண்டு நெவாடா மாகாணத்தில் கணவருடன் வேலை செய்துவரும் அறுபது வயதையொத்த ஃபெர்ன் வேலையிழக்கிறாள். கணவரும் மரித்துப்போக தனக்கு வேண்டாத பொருள்களையெல்லாம் விற்று, ஒரு வேன் ஒன்றை வாங்குகிறார். வீடற்றவரான ஃபெர்னுக்கு இனி எல்லாமே இந்த வேன்தான். இலக்கற்று திரியும் நாடோடி வாழ்வு. ஆனாலும் வேலை என்று ஏதேனும் செய்தால் தான் மீதமுள்ள வாழ்க்கையைக் கழிக்க முடியும். ஃபெர்ன் சந்திக்கும் மனிதர்களும், அவர்கள் அவரின் வாழ்க்கைக்கு தரும் உந்து சக்திகளும் தான் Nomadland. ஃபெர்னாக நடித்திருக்கும் 63 வயதான ஃபிரான்சஸ் மெக்டொர்மாண்டு வாங்கியிருக்கும் மூன்றாவது ஆஸ்கர் விருது இது.

My octopus teacher ~Netflix

Best Documentary Feature ~ Winner

My octopus teacher
My octopus teacher

சின்ன சைஸ் ஆக்டோபஸ்ஸை சில உணவகங்களில் பார்க்க முடியும். என்ன டிசைன்றா இது என்பது போல, வித்தியாசமான லுக்கில் இருக்கும். தென் ஆப்பிரிக்க படைப்பாளரான க்ரெய்க் ஃபாஸ்டருக்கு, ஆக்டோபஸ்தான் போதிமரம். 2010ம் ஆண்டு கேப்டவுனில் ஒரு ஆக்டோபஸை சந்திக்கிறார். கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு, ஃபாஸ்டரை நம்பத் தொடங்குகிறது ஆக்டோபஸ். டாக்குமென்ட்ரி என்றாலே, சோர்வை வழங்கும் என்பதை மீறி பல காட்சிகள் சுவாரஸ்யமாய் இருக்கிறது. சுறாக்களிடமிருந்து தப்பிப்பது, தன் வாழ்க்கையின் அடுத்தக்கட்ட நகர்வுகள் என எல்லாவற்றையும் க்ரெய்கிடம் பகிர்ந்து கொள்கிறது. காட்டில் எடுக்கப்பட்டும் டாக்குமென்ட்ரிகளைவவிட இது சவாலான விஷயம். காரணம் பெருங்கடலில், ஒரு ஆக்டோபஸை தேடிக் கண்டுபிடித்து தோஸ்த் ஆவது எல்லாம் எளிதானதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Two Distant Strangers ~ NETFLIX 

Best Live Action Short Film ~ Winner 

Two Distant Strangers
Two Distant Strangers

காதலியுடன் இரவைக் கழித்துவிட்டு, தன் வீட்டுக்குக் கிளம்பும் ஆஃப்ரோ அமெரிக்கரை தடுத்து நிறுத்துகிறார் வெள்ளை நிற காவல்காரர். பதற்றப்படும் ஆஃப்ரோ அமெரிக்கரை கழுத்தில் அழுந்தி கொலை செய்கிறார் அந்தக் காவல்துறை அதிகாரி. கனவிலிருந்து விளிக்கிறார் அந்த ஆஃப்ரோ அமெரிக்க இளைஞர். இப்படியாகத் தொடர்ந்து வெவ்வேறு கனவுகள். எப்படித் தப்பிக்க ஆசைப்பட்டாலும், அந்த ஆஃப்ரோ அமெரிக்கரின் உயிர் அந்த வெள்ளை நிற காவல் அதிகாரியின் சட்டைப் பைக்குள் வந்துவிடுகிறது. Travon Free எழுதி இயக்கியிருக்கும் இந்தக் குறும்படத்தில் முதல் கொலை நமக்கு 2014ல் நடந்த எரிக் கார்னரின் கொலையையும், சமீபத்தில் நிகழ்ந்த ஜியார்ஜ் ஃபிளாய்டின் கொலையையும் நினைவுபடுத்துகிறது. படத்தின் இறுதியில் ஆஃப்ரோ அமெரிக்க இளைஞர் சொல்லும், 'எப்படியும் நான் என் இருப்பிடத்துக்கு என் செல்ல நாயைப் பார்க்கச் செல்ல வேண்டும். அதனால், எத்தனை முறை என்றாலும், நான் மீண்டும் மீண்டும் என் முயற்சிகளைத் தொடர்வேன்' என்பதில்தான் அத்தனை நம்பிக்கை. ஆனால், ஏன் ஒவ்வொருமுறையும் ஒடுக்கப்பட்டவர்களே போராட வேண்டும். ஆதிக்கம் பிடித்தவர்களின் சமூக அறிவு எப்போது செயல்பட ஆரம்பிக்கும் என்பதற்கு குறும்படத்தில் எந்தப் பதிலும் இல்லை. ஆனால், ஒரு அரை மணி நேரத்தில், நமக்கு எது சரி, தவறு எனக் காட்டி பொட்டில் அடிக்கிறது Two distant strangers.

Soul - HOTSTAR

Best Animated Feature Film - WINNER

Best Original Score - WINNER

Soul
Soul
Pixar

ஜாஸ் கலைஞராக தன் வாழ்வின் அற்புதத் தருணத்தை உணரும் முன்னர், ஒரு விபத்தில் சிக்கிக்கொள்கிறார் ஜோ. அவர் உடலைவிட்டு ஆன்மா மறுமைக்குச் சென்றுவிடுகிறது. ஆன்மாக்களினால் நிரம்பிய அந்த உலகத்தில், பூமியில் வாழ விருப்பமில்லாமல் சுற்றித் திரிகிறது ஓர் ஆன்மா. இந்த இரு ஆன்மாக்களும், வாழ்க்கையின் அர்த்தங்களை பகிர்ந்துகொள்ளுதல்தான் சோல் திரைப்படம். அனிமேஷன் படம் குழந்தைகளுக்கு என்னும் நிலையிலிருந்து முழுக்க முழுக்க பெரியவர்களுக்கானதாக மாற்றியிருக்கிறது இத்திரைப்படம்.

Ma Rainey's Black Bottom - Netflix 

Best Makeup and Hairstyling - WINNER

Best Costume Design - Ann Roth - WINNER

Ma Rainey's Black Bottom
Ma Rainey's Black Bottom

உங்களின் திறமை என்பதைத் தாண்டி உங்களின் நிறம், மொழி, இனம் போன்றவற்றால் உங்களை ஒரு குழு உதாசீனம் செய்தால், அந்த வலி எவ்வளவு ரணத்தைத் தரும் என்கிற அரசியலைப் பேசியது Ma Rainey's Black Bottom. சிகாகோவில் ஆஃப்ரோ அமெரிக்க பெண்மணியான மா ரெய்னியின் பாடல் பதிவு நடைபெற இருக்கிறது. அவர் குழுவில் இருக்கும் டிரம்பட் இசைக்கலைஞரான லெவிக்கோ தனியாக குழுவொன்றை அமைக்க வேண்டும் என ஆசை. பாடல் பதிவின் போது நடக்கும் ஈகோ யுத்தங்களைத் தாண்டி, படம் பேசும் அரசியல் அசுரத்தனமானது. மறைந்த பிளாக் பேந்தர் நாயகன் சாட்விக் போஸ்மேன் லெவியாக கலக்கியிருக்கிறார். இந்தக் கடவுள்கள் ஒருபோதும் ஆஃப்ரோ அமெரிக்கர்களுக்கு உதவியதில்லை என அழுதுகொண்டே சாட்விக் சொல்லும் பிளாஷ்பேக் கதையில் அவ்வளவு வலி. உடலை ஏற்றி இறக்கி நடிக்கும் ஆண்களுக்கு மத்தியில், மா ரெய்னி என்கிற ப்ளூஸ் பாடகிக்காக உடலைப் பருமனாக்கி அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டிருயிருக்கிறார் வயோலா டேவிஸ். 89 வயதான ஆன் ரோத் இந்தப் படத்துக்கு விருது வென்றதன் மூலம் ஆஸ்கர் வென்ற வயதான பெண்மணி என்னும் சிறப்பையும் பெற்றார்.

MANK - NETFLIX 

Best Production Design - WINNER

Best Cinematography - WINNER

MANK
MANK

இயக்குநர் டேவிட் ஃபின்ச்சரின் 'மேங்க்' படம், க்ளாசிக் படமான 'சிட்டிசன் கேன்' படத்துக்குத் திரைக்கதை எழுதிய குடிக்கு அடிமையான எழுத்தாளர் ஹெர்மன் மன்கிவிக்ஸ்ஸின் (Herman J. Mankiewicz) வாழ்க்கை அனுபவங்களைப் பேசியது. 1941-ல் வெளியான இந்த 'சிட்டிசன் கேன்' படம் அப்போது சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை மட்டுமே வென்றது. எழுத்தாளர் ஹெர்மன் மன்கிவிக்ஸ் இந்த விருதைப் படத்தின் இயக்குநர் ஆர்சன் வெல்ஸ் (Orson Welles) உடன் பகிர்ந்துகொண்டார். ஹெர்மனின் அனுபவங்களையும் 'சிட்டிசன் கேன்' படம் உருவான விதத்தையும் வைத்து எடுக்கப்பட்ட 'மேங்க்', தற்போது 'சிட்டிசன் கேன்' படத்தை விடவும் ஒரு ஆஸ்கர் அதிகமாக வென்றிருக்கிறது. 1930 - 40களின் ஹாலிவுட்டை கண்முன் நிறுத்தியதற்காகச் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் இந்தப் படம் ஆஸ்கரை வென்றிருக்கிறது.

SOUND OF METAL - AMAZON PRIME

BEST EDITING - WINNER

TENET - AMAZON PRIME

BEST VISUAL EFFECTS - WINNER

Tenet
Tenet

கதைல என்னங்க இருக்கு. ப்ரைம்ல படம் தமிழ்ல்லயே இருக்கு. நீங்களே பார்த்துட்டு வந்து கதைய கமெண்ட்ல சொல்லுங்க.

பரிந்துரை செய்யப்பட்ட மற்ற திரைப்படங்கள்

The Trial of the Chicago 7 ~ NETFLIX
DA5 BLOODS - NETFLIX
NEWS OF THE WORLD - NETFLIX
THE WHITE TIGER - NETFLIX
MULAN - HOTSTAR
Borat Subsequent movie film - AMAZON PRIME
One Night in Miami - AMAZON PRIME
GREYHOUND - Apple TV
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு