Published:Updated:

கிரகணாதி கிரகணங்களுக்கு அப்பால்... `DUNE' - ஏன் இந்த ஆண்டின் மிகப்பெரியதொரு திரை அனுபவம்?!

யாரும் நிகழ்த்த முடியாததை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் இயக்குநர் டெனி வில்நௌ (Denis Villeneuve). Dune ஏன் ஸ்பெஷல்?!

கிரகணாதி கிரகணங்களுக்கு அப்பால்... `DUNE' - ஏன் இந்த ஆண்டின் மிகப்பெரியதொரு திரை அனுபவம்?!

யாரும் நிகழ்த்த முடியாததை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் இயக்குநர் டெனி வில்நௌ (Denis Villeneuve). Dune ஏன் ஸ்பெஷல்?!

Published:Updated:
10191-ம் ஆண்டு... கிரகணாதி கிரகணங்களுக்கு அப்பால் ஓர் உலகம் இயங்குகிறது. மீட்பர் வருவார் எனக் காத்துக்கொண்டிருக்கிறது ஓர் இனம். அவர்கள் யார், அவர்களுக்கு நடக்கும் துயரங்கள் என்ன, அந்தக் கிரகத்தின் சிறப்பு என்ன, இந்தப் பிரபஞ்சத்தின் எந்தத்துளியில், துகளில் இந்த மக்கள் சங்கமிக்கிறார்கள் என கதை, சூழல், கதைமாந்தர்கள் பற்றிய அறிமுகத்தைத் தந்து செல்கிறது டெனி வில்நௌ (Denis Villeneuve) இயக்கியிருக்கும் இந்த 'டியூன்' (DUNE) முதல் பாகம்.

தண்ணீரை உறிஞ்சித்திண்ணும் அராக்கிஸ் (டியூன்) கிரகத்தில் எல்லாமே மணல்தான். அந்த வறண்ட நிலப்பரப்பில் மணலோடு மணலாக எங்கும் ஜீவித்திருக்கிறது 'ஸ்பைஸ்'. அகண்ட பிரபஞ்சத்தில் ஸ்பேஸ் - டைம் டிராவலைச் சாத்தியப்படுத்தும் இன்றியமையாத பொருளாக இருக்கிறது ஸ்பைஸ். அதனாலேயே பிரபஞ்சத்தின் மதிப்புமிக்க செல்வமாகிறது 'ஸ்பைஸ்'. இது கொட்டிகிடக்கும் அராக்கிஸ் கிரகத்திற்கான அதிகார மோதலே DUNE. இந்த ஸ்பைஸுக்கான ஆட்டம் ஆடுவது ஆண்கள்தான். ஆனால், DUNE நாவலின் அடிநாதம் பெண்களே. எல்லாவற்றையும் தன் குரலால் அடக்கியாளும் பேரரசரின் Truthsayer, ரெவெரண்ட் மதர் ஹெலன் மொஹியாம் தொடங்கி ஹவுஸ் அட்ரெய்டீஸின் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் லேடி ஜெஸ்ஸிகா வரை பெண்கள்தான் அனைத்திற்கும் காரண காரணிகளாக உருமாறுகிறார்கள். படத்திலும் அப்படியே!

Zendaya | DUNE
Zendaya | DUNE

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிராங்க் ஹெர்பெர்ட்டின் இந்த 'Dune' நாவல்களைத் தழுவிதான் ஜார்ஜ் லூகாஸ் 'ஸ்டார் வார்ஸ்' படங்களை உருவாக்கினார் என்கிற குற்றச்சாட்டு இன்றும் உண்டு. பிராங்க் ஹெர்பெர்ட் ஜார்ஜ் லூகாஸின் மேல் வழக்குத் தொடரவும் தயாராக இருந்தார் என செய்திகள் உண்டு.

நாவலை மையமாக கொண்ட 'தூதுவன் வருவான் மாரி பொழியும்' டைப் 'Choosen One' படங்கள் ஹாலிவுட்டுக்குப் புதிதல்ல. எத்தனையோ படங்கள் இதற்கும் முன்பும் வந்திருக்கின்றன. இதற்கு பின்பும் வரும். சில விமர்சன ரீதியாக பாராட்டுப் பெறும், சில வியாபார ரீதியாக ஹிட் அடிக்கும். ஆனால், அதன் நாவல் தன்மையிலேயே அதற்கான அரசியலைப் பேசிய படைப்புகள் மிகக்குறைவு. காலனிய வரலாற்றை நினைவுபடுத்தும் ஒரு வருங்கால உலகத்தை DUNE-ல் கட்டமைத்திருப்பார் பிராங்க் ஹெர்பர்ட். பிராங்கின் உலகத்தில் தண்ணீர்தான் எல்லாமே. படத்தில் ஒரு கட்டத்தில் ஜெஸ்ஸிகா கதாபாத்திரம் தங்களை உயிருடன் விட்டுவிட வேண்டும் என மன்றாடும் போது, "என்ன செல்வம் வேண்டும், நாங்கள் தருகிறோம்" என்பார். "உங்கள் உடலிலிருந்து கிடைக்கும் நீரைவிடவா நீங்கள் மதிப்புமிக்க செல்வத்தைத் தந்துவிடப் போகிறீர்கள்?" என எதிர்க்குரல் வரும். அந்த அளவுக்கு அராக்கிஸில் நீர் விலைமதிப்பற்றது, எல்லாவற்றுக்கும் மேலானது. இப்படி அராக்கிஸில் நீரும், ஸ்பைஸும் இணைந்து ஓர் ஆட்டம் ஆடுகிறது. அதற்காக நடக்கும் துரோகங்களும், ரத்தக் கறைகளும்தான் DUNE.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'பிரிசனர்ஸ்', 'சிக்காரியோ' போன்ற படங்களை எடுத்திருந்தாலும் 'அரைவல்' படம் மூலமே ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநராக தன்னை நிலைநாட்டிகொண்டார் டெனி வில்நௌ. அந்தப் படத்தில் ஏலியன்கள் குறித்து புதியதொரு பார்வையை முன்வைத்திருந்தார் அவர். அதுவரை வெளியான ஏலியன் படங்களிலிருந்து தனித்து நின்றது 'அரைவல்'. அடுத்து அவர் இயக்கிய 'பிளேட் ரன்னர்' படத்தின் சீக்குவலிலும், சமகாலத்தின் ஆகச்சிறந்த இயக்குநர்கள் பட்டியலில் டெனி வில்நௌக்கான இடத்தை உறுதி செய்தது. ஆனால், அவருக்கு DUNE-ல் இருந்தது மாபெரும் சாவல். திரைக்குக் கொண்டுவர முடியாத கற்பனையாகக் கருதப்படுவது பிராங்க் ஹெர்பர்ட்டின் 'DUNE' நாவல். ஏற்கெனவே 1984-ல் இந்தக் கதையை படமாக்க முயன்று வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியுற்றார் டேவிட் லின்ச்.

Josh Brolin, Oscar Isaac | DUNE
Josh Brolin, Oscar Isaac | DUNE

டேவிட் லின்ச்சால் முடியாததை சாதித்திருக்கிறார் டெனி வில்நௌ. மன்னர்களும், போராளிகளும், சூனியக்காரிகளும், வீரர்களும், விநோதங்களும் எனக் கட்டுக்கடங்காமல் திமிறியெழும் நாவலின் முதல் பாதியை அதே பிரமாண்டத்துடன் திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஆஸ்கர் ஐஸக், ரெபெக்கா ஃபெர்குஸன், டிமோதி சாலமெட், சார்லட் ரேம்ப்லிங், ஜோஸ் ப்ரோலின், படிஸ்டா, ஜேசன் மோமோவா, ஸெண்டேயா என பல தெரிந்த முகங்கள் படத்தை இன்னும் பெரிய படமாக மாற்றுகின்றனர். அதிலும் ஸ்பைடர்மேன் நாயகி ஸெண்டேயாவுக்கு இந்தப் படத்தில் பெரிதாக வேலையே இல்லை. அடுத்த படத்தில்தான் அவரின் பாத்திரம் வலுவடையும்போல!

ஆனால், இப்படியான விஷுவல் ட்ரீட்டுக்கு நடுவில் மிகவும் சுமாராக வந்து விழுகின்றன வசனங்கள். அதனாலேயே சில இடங்களில் முக்கிய காட்சிகள் எமோஷனல் தருணங்களாக மாறாமல் தொக்கி நிற்கின்றன. 'கெட்டவன்' என்ற ஒற்றை குணாதியசத்தை மட்டுமே கொண்ட வில்லனும் மைனஸ்.

அடுத்து நாம் பேசவேண்டியது படத்தின் ஒளிப்பதிவு பற்றி! ஒவ்வொரு பிரேமும் 'பிரமாண்டம்' என்னும் வார்த்தையை சுவாசித்துச் செல்கிறது. பிளேட் ரன்னரில் நம்மை பிரமிக்க வைக்க வைத்த ரோஜர் டீகின்ஸ் இதில் இல்லை. ;லயன்' படம் மூலம் அறியப்பட்ட க்ரெய்க் ஃப்ரேசர்தான் டியூனுக்கு ஒளிப்பதிவு. ஆனால், ரோஜரின் அனுபவத்துடன் களமிறங்கியிருக்கிறார் டெனி வில்நௌ. ஐமேக்ஸ் திரையில் இதுவரையில் பார்த்த படங்களில் மிகச்சிறந்த திரை அனுபவம் என்றால், அது Duneதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

படத்தின் ஆகப்பெரும் பலம் ஹான்ஸ் ஸிம்மரின் பின்னணி இசை. யூடியூப் மூலம் தனக்கு அறிமுகமான கத்ரீ கோவனிடம் ஒரு காட்சிக்கான இசையை இப்படி விவரிக்கிறார் ஸிம்மர். "இது மணலைப் போன்று ஒலிக்க வேண்டும். மண் எப்படி ஒலிக்கும் என்று என்றாவது யோசித்துண்டா. காற்றுடன் மணல் சேரும் போது அதுவொரு புதிய ஓசையை உருவாக்குகிறது. ஆனால், அது கடற்கரைக்கு ஒன்றாகவும், பாலைவனங்களுக்கு ஒன்றாகவும் மாறுபட வேண்டும். ஏனெனில் காற்றிலிருக்கும் ஈரப்பதம், ஒரு புதிய சத்தத்தை அதனுள் சேர்க்கிறது. இரண்டும் வேறுபடுகிறது." அந்த அளவு DUNE படத்திற்கு இசையமைக்கும் செயல்முறையில் மூழ்கிபோய் இருந்திருக்கிறார் ஸிம்மர்! முன்பு சொன்னதுபோல படத்தின் பெரும்பகுதி மணலாலான பாலை நிலத்திலேயே நிகழ்கிறது. அதில் கொட்டிக்கிடக்கும் ஸ்பைஸாக இருப்பது ஹான்ஸ் ஸிம்மரின் இசை.

Dennis Villeneuve | Dune
Dennis Villeneuve | Dune

நோலனின் வணிக வியாபாரமும், பிரமாண்டமும், அது தரும் வீச்சும் அறியாதவரல்ல ஸிம்மர். அதற்கும் கடந்த தசாப்தத்தில் ஸிம்மரை எல்லோரும் நினைவுகூர்வது நோலன் படங்களுக்கான இசையில்தான். ஆனால், DUNE-க்கு தயாராவதற்காக 'டெனெட்'டை தியாகம் செய்திருந்தார் ஸிம்மர். தான் படித்த DUNE, தான் கற்பனை செய்த காட்சிகளுக்கான இசையை தயாரிக்க வேண்டும் என்கிற அந்த 64 வயது மனிதரின் அவா ஒவ்வொரு காட்சியிலும் மயிர்க்கூச்செரியச் செய்கிறது.

படத்தின் ஒரு பகுதியாக உட்டா பாலைவனத்துக்குப் பயணம் செய்தார் ஸிம்மர். பாலைவனத்தின் ஒலிகளை கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். 'Ripples in the sand'ல் வரும் பெண் குரல், ஒருவிதமான பயயுணர்வை ஏற்படுத்தாமல் அகலுவதில்லை. DUNE-க்கான பின்னணி இசை குறித்து இணையத்தில் தேடினால், DUNE OST, DUNE SKETCHBOOK-குடன், The art and Soul of Dune என்கிற ஒரு ஆல்பத்தையும் வெளியிட்டிருக்கிறார் ஸிம்மர். இது புத்தகத்துக்காக அவர் கம்போஸ் செய்த இசையாம். அடுத்தடுத்த பாகங்களில் இவை பயன்படுத்தப்படும் என நம்புவோமாக!

இத்தனை பிரமாண்டங்களுக்கு அறிமுகம் கொடுக்கும் படத்திற்கு ஒரு சாதாரண புள்ளியில் 'தொடரும்' போட்டது வருத்தம்தான். இருந்தும் திரையரங்குகளில், நல்ல சவுண்ட் சிஸ்டத்துடன் பார்த்து லயிக்க வேண்டிய பேரனுபவம் DUNE!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism