Published:Updated:

சிரிப்பும், கொண்டாட்டமும், காந்தியவாதியும்! - எப்படியிருக்கிறது `ஸாம்பிலேண்டு டபுள் டேப்?'

அனுபவமின்றி ஸாம்பிக்களைக் கொல்லும் இதே அணி, 10 வருடங்கள் கழித்து ஸாம்பிக்களைக் கொல்வதில் டாக்டர் பட்டம் பெற்றவர்களாக அவற்றைப் பந்தாடுகிறார்கள். 4 பேர் கொண்ட இந்தக் குழுவோடு, எக்ஸ்ட்ராவாக சிலர் சேர்ந்துள்ளனர். 

Zombieland Double Tap
Zombieland Double Tap

ஸாம்பிக்களைக் குரூரமாகக் கொலை செய்யும் கொலைகாரன், பகுத்தறிந்து செயல்படும் துறுதுறு இளைஞன், அக்காவுக்காக தங்கையும், தங்கைக்காக அக்காவும் எதை வேண்டுமானாலும் செய்யும் பாசக்கார சகோதரிகள்... ஸாம்பிக்கள் சூழ் அமெரிக்காவில் இவர்கள் அனைவரும் தப்பிப்பிழைப்பதே, `ஸாம்பிலேண்டு : டபுள் டேப்'.

10 வருடங்களுக்கு முன் வெளியான ஸாம்பிலேண்ட் படத்தின் 2-ம் பாகமே இப்படம். முதல் பாகத்தில் தட்டுத்தடுமாறியும், அனுபவமின்றியும் ஸாம்பிக்களைக் கொல்லும் இதே அணி, 10 வருடங்கள் கழித்து ஸாம்பிக்களைக் கொல்வதில் டாக்டர் பட்டம் பெற்றவர்களாக அவைகளைப் பந்தாடுகிறார்கள். 4 பேர் கொண்ட இந்தக் குழுவோடு, எக்ஸ்ட்ராவாக சிலர் சேர்ந்துள்ளனர்.

ஸாம்பீலேண்டு டபுள் டேப்
ஸாம்பீலேண்டு டபுள் டேப்

முதல் பாகத்தில் விட்சிட்டாவுடன் (எம்மா ஸ்டோன்) காதல் வயப்பட்ட கொலம்பஸ் (ஜெஸ்ஸி எய்சன்பெர்க்), அவளிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி மோதிரத்தைப் பரிசளிக்கிறான். `கல்யாணம் ஆனவங்க பண்ற ஒரே விஷயம், விவாகரத்து' என `நோ' சொல்லும் எம்மா, தனது சகோதரி லிட்டில் ராக்கை (அபிகெய்ல் ப்ரெஸ்லின்) அழைத்துக்கொண்டு, `ஸாரி' என்ற துண்டுச் செய்தியை அவரது கூட்டாளியான டல்ஹேஸ்ஸிக்கும் (வுட்டி ஹாரல்ஸன்), காதலன் கொலம்பஸுக்கும் எழுதிவிட்டு பறந்துவிடுகிறார்கள். 

பிறகு ஒரு மாதம் கழித்து, `லிட்டில் ராக் எனக்கு டிமிக்கி கொடுத்துட்டு ஓடிட்டா' என்றபடி எம்மா மட்டும் இவர்களைப் பார்க்க வருகிறாள். அதற்குப் பின் என்ன... வழக்கமான அதே தேடுதல் வேட்டைதான். `ரத்தத்தின் ரத்தமான' தனது அக்காவையே விட்டு ஓடுமளவிற்கு லிட்டில் ராக் வேறு யாரைச் சந்தித்தார், இறுதியில் என்னவானது என்பதே மீதிப் படம்.

ஒவ்வொரு வித ஸாம்பிக்களுக்கும் ஒவ்வொரு பெயர்கள். அமைதியாக எவ்வித ஆர்ப்பரிப்புமின்றி உலாவும் ஸாம்பிக்களுக்குப் பெயர், `ஹோமர்'. ஓரளவுக்கு ஆக்ரோஷமான ஸாம்பிக்களுக்குப் பெயர், `ஹாக்கிங்'. சத்தமின்றி வெறித்தனமாய் வேட்டையாடும் ஸாம்பிக்களுக்குப் பெயர், `தி நின்ஜா'.

இந்த மூன்று ஸாம்பிக்களும் முதல் பாகத்திலே வந்துபோகும். ஆனால், இந்த ஸாம்பிக்களோடு நான்காவதாக `டி-800' என்ற ஒரு ஸாம்பி வகையராவும் இணைகிறது. மற்ற மூன்று ஸாம்பிக்களும் நெற்றிப்பொட்டில் ஒரு தோட்டாவைப் பாய்ச்சினால் போதும், மாய்ந்துவிடும். ஆனால், இந்த ஸாம்பிக்களைக் கொல்ல நிறையவே எக்ஸ்ட்ரா எஃபோர்ட் போட வேண்டும். எதிர்பார்த்தது போலவே இந்த வகை ஸாம்பிக்களுடன்தான் கிளைமாக்ஸ் ஃபைட்!

ஸாம்பீலேண்டு டபுள் டேப்
ஸாம்பீலேண்டு டபுள் டேப்

கதையில் பெரிதாக திருப்புமுனை இல்லாமலிருந்தாலும் நகைச்சுவையும் குதூகலமுமாய் நகர்கிறது படம். `Now you see me' படத்தில் இணைந்து நடித்திருந்த ஜெஸ்ஸி - வுட்டி காம்போ இந்தப் படத்திலும் நடித்திருப்பதால் நகைச்சுவைக்குப் பஞ்சமேயில்லை. இந்த சர்வைவல் ஓட்டத்தில் முதன்முதலில் இணைந்தவர்களும் இவர்கள்தாம். இரண்டாம் பாகத்தில் அதிக கவனம் பெறுபவர், மேடிஸனாக நடித்த ஸோயி டியூச். இவர் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியிலும் `ஜஸ்ட் லைக் தட்' எனக் காமெடியைத் தெளித்துவிட்டுப்போகிறார்.

இவரைத் தவிர இன்னும் இரண்டு கதாபாத்திரம் இப்பாகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காந்தியவாதியாக, பெர்க்லி. இவர், ஒரு பேசிஃபிஸ்ட் (Pacifist). அப்படியென்றால், வன்முறையை விரும்பாத ஒரு மனிதர். இந்த கான்செப்ட்டை வைத்து இன்னுமே இவருக்கு காமெடிகளைச் செதுக்கியிருக்கலாம். இவரை வெறும் `ஹிப்பி' என்ற பெயரில் ரோடு ரோடாக அலையவிட்டிருக்கிறார் இயக்குநர். மற்றொருவர், நெவடா (ரொஸாரியோ டாஸன்). போகிறபோக்கில் இந்தக் குடும்பத்துக்கு அறிமுகமாகும் நெவடாவுக்கு கிளைமாக்ஸில் வெயிட் ரோல். அடுத்தடுத்த பாகங்களில் இடம்பெறுவார் எனத் தெரிகிறது.

ஸாம்பிக்களை மையப்படுத்தி பல சீரியஸான படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதையே லேசாக பட்டி டிங்கரிங் பார்த்து `ஷான் ஆஃப் தி டெட்', `வார்ம் பாடீஸ்', பாலிவுட்டில் `கோ கோவா கான்' என ஸாம்பிக்களில் காமெடி படங்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன. மற்ற படங்களோடு ஒப்பிடுகையில் ஸாம்பிலேண்டின் இரண்டு பாகத்திலும் காமெடி சிறப்பாகவே வொர்க் அவுட் ஆகியிருந்தது. ஆனால், முதல் பாகத்தோடு ஒப்பிடுகையில், `இதுக்கா பாஸ் 10 வருஷம்' என்றே தோன்றியது.

படத்தில், அவ்வப்போது போடப்படும் ஒன்லைனர்களே சிரிப்புப் பட்டாசு என்கிற நிலையில், இயக்குநரின் பேனா, காமெடி டிராக்கை இன்னுமே வலுப்படுத்தியிருக்கலாம். முதல் பாகத்தில் ஒரே காட்சியில் வந்து, `போய் சேர்ந்திருக்கும்' பில் முரேவுக்கு இப்படத்தின் எண்டு கிரேட்டில் தனியாக ஒரு காட்சி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஸாம்பீலேண்டு டபுள் டேப்
ஸாம்பீலேண்டு டபுள் டேப்

முதல் பாகத்தோடு கனெக்ட் செய்வதற்காக ஓரிரு காட்சிகளைப் புகுத்தியிருக்கிறார்கள். தவிர, நேரடியாகவே 2-வது பாகத்தைப் பார்க்கலாம்தான். என்றாலும், ஃபுல் ஃபன் ரோலர் கோஸ்டரை அனுபவிக்க, முதல் பாகத்தைப் பார்த்துவிட்டு இரண்டாம் பாகத்தோடுப் பயணிக்கலாம். 

`` `பிகில்'ல நடிச்சிருக்கேன்; ஆனா, படத்துல வருமானு தெரியல!" - மனோபாலா