ஸ்பெஷல் -1
Published:Updated:

நாய்கள் ஜாக்கிரதை - சினிமா விமர்சனம்

நாய்கள் ஜாக்கிரதை - சினிமா விமர்சனம்

னைவியைக் கடத்திய முகம் தெரியாத வில்லனை எப்படிக் கண்டுபிடித்தார் ஹீரோ? 'நாய்கள் ஜாக்கிரதை’!

நாய்கள் ஜாக்கிரதை - சினிமா விமர்சனம்

சிபிராஜ் ஒரு காவல் துறை அதிகாரி. கடத்தல் கும்பலிடம் சிக்கியிருக்கும் ஒரு பெண்ணைக் காப்பாற்றச் செல்கிறார். அங்கே நடக்கும் மோதலில் தன் சக போலீஸ் நண்பனை இழக்கிறார். காயம் பட்டு வீட்டில் ஓய்வெடுக்கும்போது, ராணுவப் பயிற்சி பெற்ற பெல்ஜியன் ஷெப்பர்ட் நாய் அவரிடம் வந்துசேர்கிறது. சிபிராஜின் மனைவி அருந்ததியை, முகம் தெரியாத வில்லன்கள் கடத்திவிடுகிறார்கள். நாயோடு மனைவியை மீட்கக் கிளம்புகிறார். யார் கடத்தினார்கள்... எதற்குக் கடத்தினார்கள்?  

'வேட்டையாடு விளையாடு’, 'அஞ்சாதே’ டைப் கதையில், நாயைக்   களம் இறக்கியிருக்கிறார் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன். கடத்திய பெண்ணின் அப்பாவையே வில்லன் ரிமோட்டில் இயக்குவது, வில்லனின் தம்பி யார் என சஸ்பென்ஸ் உடைப்பது... என, சில இடங்களில் பலே ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார். ஆனால், நாய்க்கு வில்லன்  பயப்படும் பின்பாதி... லொள் லொள்!  

சிபிராஜுக்கு இது 'கம்பேக்’ படம். நாயைப் பார்த்து பம்மி, பிறகு பழகி, துப்பாக்கி சத்தம் கேட்டு ஃப்ரீஸ் ஆகி நிற்பது... என நடிக்க முயற்சித்திருக்கிறார். 'மனைவியை உயிரோடு புதைத்துவிட்டார்கள். ஆனால், எங்கே என தெரியவில்லை’ எனும்போது எத்தனை தவிப்பு வரவேண்டும்? ஹ்ம்..! படத்தின் 'நாய்’கன்... அந்த நாய் சுப்பிரமணி. வெடிகுண்டு சூட்கேஸைக் கண்டுபிடித்து எக்ஸ் குறி போடுவது, கயிறு ஏணியில் அநாயசமாக ஏறுவது, வில்லனை மோப்பம் பிடித்ததும் கோபத்தில் உறுமுவது... என படம் முழுக்க சூப்பர்மணி. பூனையை நினைத்து திகிலாவது, சிபிராஜுடன் கோபப்படுவது, வில்லனிடம் சவால்விடுவது... என அருந்ததி அளவான ஏரியாவில் அழகாக நடித்திருக்கிறார். காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த பாலாஜிக்கு இதில் வில்லன் வேஷம். முகமூடி வில்லன், மிரட்டல் குரல்... என வில்லனுக்கான இன்ட்ரோவில் மட்டும் டெரர்.

தேங்கி நிற்கும் திரைக்கதையில் முடிந்தவரை சுவாரஸ்யம் சேர்ப்பது, தரண் குமாரின் பின்னணி இசை. ட்ரக்கிங் செய்யும் ராணுவ வீரரை சுப்பிரமணி காப்பாற்றும் காட்சியில் பின்னியெடுக்கிறது பின்னணி.

நாய்கள் ஜாக்கிரதை - சினிமா விமர்சனம்

முதல் பாதியில் சுப்பிரமணியுடன் சிபி செய்யும் கலாட்டா ஜாலியாக நகர்ந்தாலும், கடத்தல் அத்தியாயங்களுக்குப் பிறகும் டெம்போவில் எந்த முன்னேற்றமும் இல்லையே... ஏன் சாரே? அம்மாம் பெரிய ஊட்டியில் நான்கு நாய்களை வைத்துக்கொண்டு அருந்ததி புதைக்கப்பட்ட இடத்தை தேடுவது... ஊப்ஸ் ஊட்டி பப்ஸ்!

பாலாஜி எதற்காகப் பெண்களைக் கடத்துகிறார், கடத்திய பிறகு என்ன செய்கிறார், அவர்களை உயிரோடு புதைப்பதற்கு என்ன காரணம்?... ஒண்ணுக்கும் பதில் இல்லையே பிரதர்?  

படம் பார்த்ததும், இது குழந்தைகள் படமா, த்ரில்லர் படமா, இல்லை... நாய் பற்றிய படமா என வருகிற சந்தேகம்தான் இந்தப் படத்தின் பலவீனம். உடனே வருகிற, 'ஏதோ ஒண்ணு’ என்ற நினைப்புதான் இதன் சின்ன பலம்!

- விகடன் விமர்சனக் குழு