ஸ்பெஷல் -1
Published:Updated:

“20 வருஷமாவா ஒருத்தரை அரசியலுக்குக் கூப்பிடுவீங்க?”

போட்டுப் பொளக்கும் பாரதிராஜாம.கா.செந்தில்குமார், நா.சிபிச்சக்கரவர்த்தி

'' 'எல்லா ஸ்டில்ஸையும் பார்க்க விட மாட்டேன். பார்த்தா 'என்னா இது 'முதல் மரியாதை - பார்ட்-2’ மாதிரி இருக்கே?’னு வம்பு வளர்க்கிறதுக்காகவே ஏதாச்சும் கேள்வி கேட்பீங்க. ஏன்னா, நான் சும்மா பேசுறதே வம்புதும்பைக் கிளப்பும். பிகாஸ், ஐ’ம் அன் அவுட்ஸ்போக்கன் பெர்சன் யு நோ!'' - அறை அதிரச் சிரிக்கிறார் பாரதிராஜா.

'ஓம்’ படத்தில் நடிப்பதற்காக புதுப்புது கெட்டப்களில் மோல்டு ஆகிக்கொண்டிருக்கிறார் '16 வயதினிலே’ இயக்குநர். ''இந்த 'ஓம்’ ஸ்கிரிப்ட்டை நான் வாங்கி எய்ட் இயர்ஸ் ஆச்சு. நடுவுல 'பொம்மலாட்டம்’ பண்ணேன். அந்தப் படத்துல நான் நடிக்கலையே தவிர, படம் முழுக்க என் வைப்ரேஷன்ஸ் இருக்கும். திடீர்னு இப்போ 'நீங்க நடிக்க வாங்க சார்’னு கேட்டு நிறையப் பேர் வர்றாங்க. 'இது என்னடா? நாம நடிக்கிற அளவுக்கு நம்மகிட்டயே ஒரு கதை இருக்கே’னு திடீர்னு எனக்கு ஸ்ட்ரைக் ஆச்சு. 'ஓம்’... 'ஓல்டு மேன்’னு அர்த்தம். பியூட்டிஃபுல் டைட்டில் யு நோ! நான் நடிக்கிறதுக்கு ரொம்பப் பொருத்தமா இருந்தது. ஒரு சின்னப் பொண்ணுக்கும் ஒரு  கெழவனுக்குமான உணர்ச்சிப் போராட்டம்தான் படம். ரொம்ப அற்புதமான ஸ்க்ரிப்ட். அவன் சின்னப் பிள்ளை மாதிரி இருப்பான். அவ பெரிய மனுஷி மாதிரி இருப்பா. இந்தியாவுல இருந்து ரிட்டையர்டு ஆகி அமெரிக்கா போறான் கெழவன். அவ அங்கேயே இருக்கிறவ. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் எப்படி ஃபேஸ் பண்ணிக்கிறாங்க. ஹவ் தே டிராவல் டுகெதர்... அவ்வளவுதான். ஒரு மியூசிக்... ஒரு மேஜிக். ஆனா, நிச்சயம் 'முதல் மரியாதை’ சாயல் இருக்காது!

“20 வருஷமாவா ஒருத்தரை அரசியலுக்குக் கூப்பிடுவீங்க?”

படத்துக்கு யுவன் மியூசிக் பண்றான். பார்க்கும்போதெல்லாம், 'அங்கிள், உங்க படம் எப்போ மியூசிக் பண்றது?’னு கேட்டுட்டே இருப்பான். 'இருடா, உங்க அப்பன்கிட்ட இன்னும் சில ஜோலி இருக்கு. முடிச்சுட்டு வரேன்’னு சொல்லிட்டே இருந்தேன். இப்பத்தான் நேரம் வந்திருக்கு. கூப்பிட்டேன். 'ஆரம்பிச்சுடலாம் அங்கிள்’னு  உடனே வந்துட்டான்!''

''சமீபத்தில் உங்களைப் பிரமிக்கவைத்த படங்கள் என்னென்ன?''

''ஏழெட்டு படங்கள் சொல்லலாம்! 'ஹவ் தே டிட் திஸ் மூவி?’னு ஆச்சர்யப்படுத்திட்டாங்க. 'அட்டக்கத்தி’ பார்த்தே ரஞ்சித்தைப் பாராட்டியிருந்தேன். இப்போ 'மெட்ராஸ்’னு வொண்டர்ஃபுல்லா படம் பண்ணிட்டான். 'பீட்சா’ கார்த்திக் சுப்புராஜும் சம்திங் ஸ்பெஷல். 'சூது கவ்வும்’ நலன் குமரசாமியோட மூவி மேக்கிங், அன்பிலீவபிள் டேலன்ட். ஆனா, இவங்க எல்லாரும் ஆலமரம் மாதிரி நிலைச்சு நின்னு தழைக்கணும். கறிவேப்பிலை மாதிரி சின்ன வாசம் அடிச்சுட்டுப் போயிடக் கூடாது. 'பராசக்தி’, 'பாசமலர்’ பத்தி இப்பவும் பேச முடியுதுல்ல. அப்படி ராக்கிங் கிளாசிக்ஸ் பண்ண மெனக்கெடணும்!''

“20 வருஷமாவா ஒருத்தரை அரசியலுக்குக் கூப்பிடுவீங்க?”

''இளைஞர்கள் அசத்துறாங்கனு சொல்றீங்க. ஆனா, கதைகளைத் திருடுறாங்க... வெளிநாட்டுப் படங்களைத் தழுவி தமிழ்ப் படங்களை எடுக்கிறாங்கனு குற்றச்சாட்டுகள் குவியுதே!''

''சார்... கதைங்கிறது என்ன? அஞ்சு அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் உட்கார்ந்து பேசிட்டு இருக்கிறதுதான் இங்கே கதை. ஒருத்தன் கதை சொல்வான்... இன்னொருத்தன் கதை கேட்பான்... ரெண்டு பேர் சீன் சொல்வான். அவங்கள்ல ஒருத்தன் டைரக்டர் ஆகும்போது, அதுல இருந்து கொஞ்சம் பிச்சிவெச்சுருவான். இது அந்தக் காலத்துலயும் இருந்துச்சு. இந்தக் காலத்துலயும் நடக்குது. 'ஒரு பெண் தாலி அறுத்துட்டு விதவையா இருந்தா, பக்கத்துல இன்னோருத்தன் இருப்பான். ரெண்டு பேருக்கும் காதல் வந்துச்சாம்’னு ஒருத்தன் கதை வெச்சிருப்பான். இதே மாதிரி இன்னொருத்தன் கிட்டயும் ஒரு தாட் கைவசம் இருக்கும். ஆனா, அது வேற ஸ்டைல்ல, வேற ட்ரீட்மென்ட்ல இருக்கும். இங்கே காலங்காலமா இப்படித்தானே நடக்குது.

“20 வருஷமாவா ஒருத்தரை அரசியலுக்குக் கூப்பிடுவீங்க?”

முன்னாடி எல்லாம் கிராமம்னு ஒண்ணு இருந்துச்சு. அங்கே புளியம்பட்டியில இருந்தவ சின்னாளப்பட்டிக்கு வாக்கப்பட்டுப் போனா, மக்கமாருகளோடு புழங்கிட்டுக் கெடப்பா.  கூட்டுக் குடும்பம்னு ஒண்ணு இருந்தது. வீட்ல எவன் கல்யாணம் முடிச்சாலும், மருமகப் பிள்ளைங்க ஒரே வீட்லதான் இருந்தாகணும். அப்போ நம்ம ஆளுங்க கதை பேசிட்டே கெடப்பாங்க. அப்படி ஒரு பின்னணியில இருந்து வந்தவன்கிட்ட, ஏகப்பட்ட கதைகள் கிடைச்சது. ஆனா, கூட்டுக் குடும்பங்கள் என்னைக்குப் போச்சோ, அன்னைக்கே கதைகளும் போயிடுச்சு.  

இப்போ வர்ற பசங்க எப்படி வர்றாங்க? கக்கத்துல ஒரு ஃபைலோ, லேப்டாப்போ வெச்சுக்கிட்டு வந்து நிக்கிறான். 25 வயசு வரைக்கும் வாழ்க்கையில அதிகபட்சம் அஞ்சாறு பேரோடுதான் பேசிப் பழகியிருப்பான். அவன்கிட்ட என்ன கதை இருக்கும்? சினிமா பார்த்து சினிமா எடுத்தால்லாம் கதை வராது. வாழ்க்கையைப் படிக்கணும். கொரியன் ஃபிலிம், இத்தாலி சினிமா, ஜப்பான் மூவி எல்லாம் பார்த்து ஃபீல் பண்ணலாம். ஆனா, அதையே கதையா பண்ணக் கூடாது!''

 ' 'கத்தி’ படத்தின் கதை சம்பந்தமா இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும், கோபி என்பவருக்கும் பிரச்னை வந்ததே... அதைப் பத்தி உங்க கருத்து என்ன?''

'' 'இந்தப் பஞ்சாயத்துக்கு நீங்கதான் தலைவர்’னு யாராவது என்கிட்ட சொல்லி யிருந்தா, அதைப் பத்தி நான் ஏதாவது விசாரிச்சிருப்பேன்; என் மனசுல பட்டதைச் சொல்லியிருப்பேன். எங்கேயோ நடக்கிறதைப் பத்தி நீங்க சொல்றதை மட்டும் கேட்டுட்டு நான் என்னன்னு பதில் சொல்றது?''

''சரத்குமார்-விஷால் இடையிலான பிரச்னைக்கு என்ன தீர்வு?''

''நான் அந்தச் சங்கத்துல உறுப்பினரே இல்லை. அப்புறம் அதைப் பத்தி எப்படிக் கருத்து சொல்ல முடியும்? மனஸ்தாபங்கள் எல்லாருக்கும் இருக்கும். அதே மாதிரி அவங்களுக்கும் இப்போ இருக்கு. அதை எல்லாம் கண்டுக்கக் கூடாது!''

“20 வருஷமாவா ஒருத்தரை அரசியலுக்குக் கூப்பிடுவீங்க?”
“20 வருஷமாவா ஒருத்தரை அரசியலுக்குக் கூப்பிடுவீங்க?”

''இப்போதைய ஹீரோ - ஹீரோயின்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்?''

''ரீசன்ட் டைம்ஸ்ல நான் பார்த்து ரசித்தது தனுஷ். ஐ லைக் தட் பாய். சினிமாத்தனம் இல்லாம, எந்த ஒப்பனையும் இல்லாம, ரொம்ப இயல்பா என்னைப் பாதிக்கிறான். ஹீரோயின்ஸ்...'' (சலித்துக்கொள்கிறார்) ''ஐ’யம் வெரி ஸாரி. சாவித்திரி, பத்மினி மாதிரி எல்லாம் இப்போ எங்கே ஹீரோயின்ஸ் வர்றாங்க. யாராவது ஒருத்தரைச் சொல்லித்தான் ஆகணும்னா, நயன்தாரா. கிளாமர், மாடர்ன் லுக்ஸ்ல இருந்தாலும் ஹெர் பெர்ஃபார்மன்ஸ் சூப்பர்!''

''விஜயகாந்த், ரஜினி, விஜய்... இப்படி நடிகர்கள் அரசியலுக்கு வர்றதுக்கு சினிமாதான் பாதையா?''

''இதுக்கு அடிப்படையான காரணம் யார் சொல்லுங்க? ஊடகம்தான். நடிகர்களைத் தூண்டிவிட்டு, 'அரசியலுக்கு வருவீங்களா?’னு முதல் கேள்வி கேட்குது. 'சினிமாவில் சிறந்த படைப்புகளைக் கொடுத்திருக்கீங்க. மேடையில உணர்ச்சிகரமாப் பேசுறீங்க. நீங்க ஏன் அரசியலுக்கு வரக் கூடாது’னு என்கிட்டயே கேக்கிறாங்க. ஒய் தே ஆர் டூயிங் லைக் திஸ்? ஒரு நடிகன்கிட்ட, 'எப்போ ஆஸ்கர் விருது ஜெயிப்பீங்க?’னு கேளுங்க. அதை விட்டுட்டு அரசியல் பத்தி எல்லாம் ஏன் கருத்து கேக்கிறீங்க? சரி... அப்படியே யாராவது கேட்டாலும், அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும்.

“20 வருஷமாவா ஒருத்தரை அரசியலுக்குக் கூப்பிடுவீங்க?”

அது கலைஞர் மேடையாக இருக்கட்டும், மேடம் மேடையாக இருக்கட்டும். எல்லா மேடையிலயும் நான் இதைச் சொல்லியிருக்கேன். 'தயவுசெஞ்சு எங்களை ரொம்பப் பக்கத்துல வெச்சுக்காதீங்க. ஏன்னா, பேசும்போது நீங்க எங்களுக்குத் தெரியுறது இல்லை; உங்க நாற்காலிகள்தான் கண்ணுக்குத் தெரியுது’னு. அரசியலில் ஈடுபட எனக்கு என்ன தகுதி இருக்கு? சமூகத்தில் என் பொறுப்பு... ஒரு கதை சொல்லி! அதுக்கு மேல எனக்கு எந்த முக்கியத்துவமும் வேண்டாம்.

ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல்... ஒரு நடிகனுக்கு அரசியலில் ஈடுபட என்ன தகுதி இருக்கு? இந்த நாட்ல எத்தனை ஜீவநதிகள் ஓடுதுனு சொல்லச் சொல்லுங்க. 'எத்தனை நதிகள் வற்றி வறண்டு காணாமல்போச்சுனு தெரியுமா?’னு கேளுங்க.  'இந்தியாவுல எத்தனை டேம் இருக்கு?’னு கேட்டுப் பாருங்க. வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் கலாசாரரீதியா என்ன வித்தியாசம்னு தெரியுமா? சும்மா நாலு ரசிகர் மன்றங்கள் வெச்சு 50 பேருக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்துட்டா, அரசியலுக்கு வந்துரலாமா? வாட் இஸ் திஸ்? எனக்கு எந்தப் பயமும் இல்லை. நான் சொல்றதை அப்படியே போடுங்க. கர்நாடகா, கேரளாவில் இப்படிப் பண்ண முடியுமா? ஏன் தமிழ்நாட்ல மட்டும் இப்படி எல்லாம் நடக்குது?''  

''சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரவே கூடாதா?''

''சினிமாவில் இருந்து விலகி 10 வருஷம் மக்கள் மத்தியில் வேலை பார்த்து, சோஷியல் சர்வீஸ் எல்லாம் செய்து, மேடையில் பேசி அப்புறமாத்தான் அரசியலுக்கு வரணும். கோ அண்ட் வொர்க் ஃபர்ஸ்ட்!

நேத்து நடிக்க வந்துட்டு நாளைக்கு சி.எம் ஆக ஆசைப்படக் கூடாது. 20 வருஷமாவா ஒருத்தரை அரசியலுக்குக் கூப்பிட்டுட்டே இருப்பீங்க. வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்? அட்லீஸ்ட் முனிசிபாலிட்டி, பஞ்சாயத்துத் தேர்தல் நின்னு ஜெயிச்சுட்டு, அப்புறம் அரசியல் கட்சியில சேர்ந்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யட்டும்!

சார்... ஒரு உண்மையைச் சொல்றேன். ஐ’யம் டெல்லிங் ஃபிராங்க் ட்ரூத். ஒரு நல்ல கலைஞன் அரசியலுக்குப் போக மாட்டான். மகாத்மா காந்தி என்னைக்காவது சேர்ல உட்காந்தாரா? அன்னை தெரசா, போஸ்ட்டிங் எடுத்துக்கிட்டா சேவை செஞ்சாங்க? அவங்களைவிடவா இவங்க எல்லாம்

“20 வருஷமாவா ஒருத்தரை அரசியலுக்குக் கூப்பிடுவீங்க?”

நல்லது பண்ணிடப்போறாங்க? காமராஜர் ஒருத்தர் மட்டும்தான் அரசியல்ல இருந்தாலும், சமூகம் சார்ந்து சேவை செய்தவர்!''

''அரசியல் பத்தி இவ்வளவு பேசுறீங்க. தற்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கு?''

''அவர் நல்லவர். தர்மம், நியாயத்தோடு இல்லைன்னா, அந்த மனிதருக்கு அந்த இடம் கிடைச்சிருக்காது. சார், அவர் எங்க ஊர்க்காரர். ஸோ, ஐ’யம் வெரி மச் பிரவ்டு அபௌட் ஹிம்!''

''பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாவதில் சிக்கல் வரும்போது, சினிமா உலகத்தினர்கூட ஆதரவு தர மாட்றாங்களே?''

''திரும்பவும் அரசியல் பேச வைக்கிறீங்க? 'வேதம் புதிது’ எடுத்தேன். யார் பிரச்னை பண்ணா?  'அலைகள் ஓய்வதில்லை’ எடுத்தேன். யார் பிரச்னை பண்ணினா? அதுல பூணூலை அறுத்து எறியுற மாதிரி காட்சி வெச்சேன். ஆனா, அதே படத்தை இப்போ எடுத்தா என்ன  நடக்கும் தெரியுமா? 'அந்தப் படத்துல பூணூலை அறுத்து எறியுறாங்க. நீங்க இந்து சமூகத் தலைவர்... இதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?’னு யாராச்சும் யார்கிட்டயாவது கேட்பாங்க. உடனே, 'அது தப்பு’னு சொல்லிட்டு கும்பல் கும்பலாக் கிளம்பிடுவாங்க. சென்சார் போர்டு அப்ரூவ் பண்ண படத்தைத் தடுக்க, இவங்க எல்லாம் யாரு?

“20 வருஷமாவா ஒருத்தரை அரசியலுக்குக் கூப்பிடுவீங்க?”

இப்போ உசிலம்பட்டி பத்தி ஒரு படம் எடுக்குறோம். உடனே உசிலம்பட்டிக்காரன் போராட்டம் பண்ணி, 'எங்க ஊரை எப்படி எல்லாம் காட்டியிருக்கீங்கனு நாங்க பாக்கணும். போட்டுக் காட்டு. இல்லேன்னா, படத்தை விட மாட்டோம்’னு சொல்வான். உடனே அவன் முகத்தைத் திரும்பத் திரும்ப டி.வி-யில காட்டுவீங்க. சாயங்காலம் சேனலுக்கு நாலைஞ்சு பேரு ஒண்ணு கூடி, நடுவுல ஒருத்தன் கோட் சூட் போட்டு உக்காந்துக்கிட்டு, அது பத்தி பரபரப்பா பஞ்சாயத்தை ஆரம்பிப்பீங்க.  பிரச்னை பண்ணவனுக்கு பப்ளிசிட்டி கூடும். உடனே அவன் 'அடுத்து எங்கே பிரச்னை பண்ணலாம்?’னு பாய் விரிச்சுக் காத்திருப்பான். அதான் இங்கே நடக்குது. நம்ம கலைகளை வாழவிடுங்கப்பா!''