Published:Updated:

"ஒரு ஹீரோவை, ஒரே படத்துல காலி பண்ணிட முடியாது!”

KANNAN S

எஸ்.கலீல்ராஜா

''ஃபுல் ஆக்ஷன் சார்... போலீஸ் பைக்ல அப்படியே வீலிங் பண்ணி ஒரு சுமோவை முட்டித் தூக்கிப் பறக்கவிட்டு, வில்லன் பறக்கிற ஹெலிகாப்டரை மோதி வானத்துல தீபாவளி கொண்டாடுறோம். கட் பண்ணா அடுத்த அசைன்மென்ட் அமெரிக்காவுல... இப்படி தயவுசெஞ்சு எதிர்பார்க்காதீங்க. இது வழக்கம்போல நம்ம ஸ்டைல் படம்தான். காமெடிக்கு நடுவுல ஒவ்வொரு படத்துலயும் ஒவ்வொரு ஃப்ளேவர் கொஞ்சம் தூக்கலா இருக்கிற மாதிரி, இந்தப் படத்துல ஆக்ஷன் கொஞ்சம் எக்ஸ்ட்ரா தூக்கல். அவ்வளவுதான்'' - கேப் கொடுக்காமல் கலகலக்கிறார் சினாகானா. முதல் போலீஸ் படம், முதல் ஆக்ஷன் படம் என சிவகார்த்திகேயன் 'காக்கி சட்டை’யில் வருகிறார்.

"ஒரு ஹீரோவை, ஒரே படத்துல காலி பண்ணிட முடியாது!”

''காமெடி உங்களுக்கு நல்லா வருதுனு அந்தக் கோட்டைத் தாண்டாமலே படம் பண்றீங்களே... புதுப் புது முயற்சிகள் பண்ற ஐடியா இல்லையா?''

''இந்தா... இப்படியொரு கேள்வி கேட்டுப் புட்டீங்கள்ல! எல்லா ஏரியாவிலும் புகுந்து புறப்பட எனக்கும் ஆசைதான். அதுக்கான முதல் முயற்சி ப்ளஸ் பயிற்சிதான் 'காக்கி சட்டை’. 'இவன் பயங்கரமா கதை சொல்வான்’னு எதிர்பார்த்து யாரும் என் படத்துக்கு வர்றது இல்லை. ஜாலியா இருக்கும்னு வர்றாங்க. எங்கே போனாலும், 'என் மூணு வயசுப் பொண்ணு உங்க ஃபேன்’, 'என் அஞ்சு வயசுப் பையன் உங்களை மாதிரியே பண்ணுவான்’னு சொல்றாங்க. குழந்தைங்களுக்கு என் காமெடி, பாடி லாங்வேஜ் பிடிச்சிருக்கு. அதனால அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி படம் பண்ணணும்னு யோசிச்சுத்தான் கதை கேட்கிறேன். வித்தியாசமா பண்றோம்னு ஏடாகூடமா ஏதாவது பண்ணி அவங்களைப் பயமுறுத்திடக் கூடாதுங்கிறதுல கவனமா இருக்கேன். அதே சமயம் ஆக்ஷன், எமோஷன், காதல்னு எல்லா ஃபீல்லயும் அடுத்தடுத்த லெவல் போகணும்னு ஆசை இருக்கு.''

''ஒரு மாஸ் ஹீரோவா நிலைச்சு நிக்க ஆக்ஷன் படம் முக்கியம்னுதான் 'காக்கி சட்டை’யா?''

''நீங்க சொல்றது கரெக்ட். காமெடி, நம்ம மக்களுக்குப் பிடிக்கும்தான். ஆனா, அதுக்காக முழுநீளக் காமெடி படமா நடிச்சுட்டு இருந்தாலும் போரடிச்சிடும். அதான் வழக்கமான காமெடி ஃபார்முலாவில் ஆக்ஷனைக் கொஞ்சமா சேர்த்திருக்கோம். பார்க்கிறதுக்கும் நிஜ போலீஸ் மாதிரி தெரியணும்னு ஜிம்முக்கு எல்லாம் போய் 69 கிலோவுல இருந்து 76 கிலோவுக்கு வெயிட் ஏத்திக்கிட்டேன். போலீஸ் கதைதான்... ஆனா, கொஞ்ச சீன்லதான் யூனிஃபார்ம் போடுவேன். மத்தபடி வழக்கமான கிண்டல் கேலி இருக்கும். ஒரு சீன்ல ஹீரோயினைப் பத்தி ஃபுல் டீடெய்ல் சொல்வேன். 'எப்படி என்னைப் பத்தி இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வைச்சிருக்கே?’ன்னு அவங்க ஆச்சர்யமா கேட்டதும், 'பொண்ணுங்க பின்னாடி ஃபாலோ பண்ணினதுக்கு புக் பின்னாடி ஃபாலோ பண்ணிருந்தா ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் என்ன... அமெரிக்க அதிபராவே ஆகியிருப்போம்!’ன்னு காமெடி பன்ச் பேசுவேன். இப்படி காமெடி ஆக்ஷன் பேக்கேஜ்தான் இந்தப் படம். இந்த ஃபார்முலா ஹிட் ஆச்சுன்னா, இதே டிரெண்ட்ல அடுத்தடுத்து படங்கள் பண்ணலாம்... பார்க்கலாம்.''  

''தனுஷ், விஜய் சேதுபதியை வெச்சு படம் தயாரிக்கிறார். அதனால தனுஷுக்கும் உங்களுக்கும் பிரச்னைனு வர்ற தகவல்கள் உண்மையா?''

''தோ... இப்போகூட அவர், நான், அனிருத் மூணு பேரும் பசங்களோட சேர்ந்து கிரிக்கெட் விளையாடிட்டு வந்தோம். முன்னாடி எல்லாரும் கொஞ்சம் ஃப்ரீயா இருந்தோம்... சேர்ந்து சுத்தினோம். அதனால ஒண்ணாவே இருக்கிற மாதிரி இருந்துச்சு. இப்போ அவர் இந்தி சினிமா வரைக்கும் பரபரப்பாகிட்டார். நான் அவுட்டோர் படப்பிடிப்புகள்ல மாட்டிக்கிட்டேன். அதனால முன்னாடி மாதிரி அடிக்கடி சந்திச்சுக்க முடியலை. மத்தபடி, நான் எவ்வளவு உயரம் போனாலும் அதைவிட அதிக உயரத்தில் தனுஷ் சாரை என் மனசில் வெச்சிருப்பேன். அவரை சும்மா 'நண்பர்’னு சொல்லி சுருக்கிட முடியாது. வெல்விஷர்னுகூட சொல்ல முடியாது.  எனக்கு எப்பவும் அவர் அதுக்கும் மேல!

"ஒரு ஹீரோவை, ஒரே படத்துல காலி பண்ணிட முடியாது!”

'சிவகார்த்திகேயன் வளர்ச்சியைத் தடுக்க தனுஷ், விஜய் சேதுபதி - நயன்தாராவை வெச்சு 'நானும் ரௌடிதான்’ படத்தைத் தயாரிக்கிறார்’னு செய்தி வந்தப்ப சிரிப்புதான் வந்துச்சு. தனுஷ் சாரோட 'வொண்டர் பார்’ தயாரிப்பு நிறுவனம் வெவ்வேறு ஆட்களை வெச்சு நிறையப் படங்கள் தயாரிக்கும். அது சினிமா பிசினஸ். அதுக்கு நடுவுல, 'நீங்க என் படத்தை மட்டும்தான் தயாரிக்கணும்’னு நான் போய் அவர்கிட்ட சண்டை போட முடியுமா? இன்னொண்ணு... தனுஷ் சார் பல வருஷங்களா சினிமாவுல இருக்கார். ஒரு படத்தைத் தயாரிக்கிறது மூலமா ஒரு ஹீரோவை அழிக்க முடியாதுனு அவருக்கு நல்லாவே தெரியும். அதைவிட முக்கியமா... அவர் அப்படி யோசிக்கிற ஆள் இல்லை. அவர் ரொம்ப நல்ல மனுஷன்.''

''சரி... உங்களுக்குப் போட்டியா  விஜய் சேதுபதியை சொல்றாங்க. நீங்க அவரோட சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தா நடிப்பீங்களா... பளிச்னு பதில் சொல்லுங்க?''

''யாருக்கு யார் போட்டிங்கிறதை காலமும் மக்களும்தான் தீர்மானிக்கணும். நானா போய் 'வாங்க... நாம சண்டை போடலாம்’னு யாரையும் கூப்பிட முடியாது. நடிக்க வந்தப்ப வறுமையை ஜெயிக்கிறது பெரிய விஷயமா இருந்தது. இப்போ முந்தின படங்களைவிட ஒரு படி மேல தாண்டிப் போறது சவாலா இருக்கு. இதுல எங்க போட்டி போட!? நான் 'எதிர் நீச்சல்’ நடிக்கும்போது, விஜய் சேதுபதி நடிச்ச 'பீட்சா’ படம் ரிலீஸ் ஆச்சு. அவரோட நம்பர் கேட்டு வாங்கிப் பேசி பாராட்டினேன். நேர்ல பார்த்தா, நல்லா பேசிப்போம். சேர்ந்து நடிக்கணும்னா... இப்போதைக்கு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் பண்ற ஐடியா இல்லைங்க. முதல்ல தனி ஹீரோவா சக்சஸ் காட்டணும். ரெண்டு பேரையும் ரசிக்கிற மாதிரி சுவாரஸ்யமான ஸ்கிரிப்ட் வந்தா, சேர்ந்து நடிக்கலாம். ஆனா, இதுவரை யாரும் என்கிட்ட அப்படி ஒரு ஐடியாவோடு வரலையே!''

"ஒரு ஹீரோவை, ஒரே படத்துல காலி பண்ணிட முடியாது!”

''சிம்பு ஒரு பேட்டியில் பேர் சொல்லாம 'இன்னொருத்தர் முதுகில் ஏறி வளர்றவரைப் பத்திச் சொல்ல ஒண்ணுமில்லை’னு சொல்லியிருந்தார். அதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?''

''இதையெல்லாம்விட பெரிய அடியெல்லாம் பார்த்தாச்சு. இது ஒரு விஷயமா? முதல்ல அந்தப் பேட்டியில் என் பேர் இல்லை. அதனால அதுக்கு நான் ரியாக்ட் பண்ணலை. அப்படியே அவர் என்னைத்தான் குறிப்பிட்டிருந்தாலும், அது அவரோட கருத்து. அவர் கருத்தை அவர் சொல்றதுக்கு அவருக்கு உரிமை உண்டு!''

''ரஜினி, விஜய்னு குழந்தைகளுக்குப் பிடிச்ச ஹீரோ லிஸ்ட்ல உங்க பேர்.. அவங்க இடங்களைப் பிடிக்கிற ஐடியா இருக்கா?''

''சத்தியமா இல்லை. அந்த வரிசையில் என் பெயர் வர்றதே பெரிய சந்தோஷம். மத்தபடி அவங்களோடு என்னை ஒப்பிட்டுப் பேசுறதே தப்பு!''

''கூட நடிச்சதுல பிடிச்ச ஹீரோயின் யார்?''

''என்கூட நடிச்சதுக்காகவே எல்லாரையும் பிடிக்கும் பாஸ்!''