Published:Updated:

"நாட்டுக்கு ஆதார் அட்டையும் சினிமாவுக்கு கதையும் ஒண்ணு !”

ம.கா.செந்தில்குமார், படம்: கே.ராஜசேகரன்

"நாட்டுக்கு ஆதார் அட்டையும் சினிமாவுக்கு கதையும் ஒண்ணு !”

ம.கா.செந்தில்குமார், படம்: கே.ராஜசேகரன்

Published:Updated:

'' '36 வயதினிலே’ ஷூட்டிங் ஸ்பாட். ஜோதிகா தன் தோழிகிட்ட பேசுற காட்சி. 'என்னை மனைவினு சொல்ல அவருக்கு அவமானமா இருக்கு. 'அம்மா’னு கூப்பிட அவ கூச்சப்படுறா. அப்ப நான் என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கேன்னே தெரியலை. நான் எல்லாருக்கும் உண்மையாத்தானே இருந்தேன். என்னை மாதிரி என் பொண்ணு இருக்கக் கூடாதுனு அவர் சொன்னப்பவே நான் செத்திருக்கணும்’னு சொல்லும்போதே ஜோதிகாவுக்கு கண்ணு கலங்கிருச்சு. அப்புறம் தியேட்டர்கள்ல அந்த சீன் வந்தப்ப, பெண்களின் கண்களும் கலங்கிப்போச்சு. இப்படி அந்தக் கதாபாத்திரத்தின் வலியை, வேதனையை, உற்சாகத்தை... சில வார்த்தைகளிலேயே ஒரு வசனம் கடத்தணும். அதுக்கு அதுல நிறைய உண்மை இருக்கணும்!'' - நிதானமாகப் பேசுகிறார் விஜி. 

'36 வயதினிலே’ படத்தின் வசனகர்த்தா.  முன்னரும் 'அழகிய தீயே’, 'மொழி’ என வசீகரித்தவர். 'அள்ளித்தந்த வானம்’, 'வெள்ளித்திரை’ இயக்கிய விஜிக்கு, இப்போது 'வசனம்’தான் அடையாளம்.  

''சினிமாவுக்கு வந்த இத்தனை வருஷங்கள்ல மொத்தமே 10 படங்களுக்குத்தான் வசனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எழுதியிருக்கேன். கௌரவக் குறைவான விஷயத்தை எந்த மனிதனும் பண்றது இல்லை. அதை நான் சினிமாவிலும் பண்றது இல்லை. அவ்வளவுதான்.

'36 வயதினிலே’ படத்துக்கு முன்னே அஞ்சு வருஷமா சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தேன். 'சினிமாவில் தோத்ததா ஒப்புக்கிட்டியா?’னு சிலர் மறைமுகமாகக் கேட்டாங்க. ஜெயகாந்தன், 'ஒரு போர்வீரன் உயிரோடு இருக்கும் வரை அவன் தோற்றுவிட்டதாகக் கருத முடியாது’னு சொல்வார். அதுதான் என் பதிலும்!''

   "நாட்டுக்கு ஆதார் அட்டையும் சினிமாவுக்கு கதையும் ஒண்ணு !”

''இயக்குநராக இருந்த நீங்கள், முழுநேர வசனகர்த்தா ஆனது ஏன்?''

'' 'அள்ளித்தந்த வானம்’ 43 சென்டர்ல 50 நாட்கள் ஓடிய படம். அப்போ, 'வாடி... வாடி... நாட்டுக்கட்டை...’னு நான் ஒரு கட்டையைத்தான் உருட்டினேன். அதுக்குப் பிறகு இப்போ வரை ஏகப்பட்ட கட்டைகளை உருட்டிக்கிட்டே இருக்காங்க. அந்தப் படத்தோடு சம்பந்தப்பட்டவர் எனக்காக 'பாலா’னு ஒரு படத்தைத் தொடங்கினார். ஆனா, சில காரணங்களால அதை நான் இயக்க முடியலை. 'விட்டுட்டுப் போயிடாதீங்க. நீங்க இருந்து டயலாக் எழுதிக் கொடுத்துட்டுப் போங்க’ன்னார். பண்ணித் தந்தேன். அந்தப் படத்தின் வசனங்களுக்கு நல்ல ரீச். பிறகு 'மாயாவி’, நண்பன் ராதாமோகனின் 'அழகிய தீயே’, 'பொன்னியின் செல்வன்’, 'மொழி’, விக்ரமின் 'மஜா’... இப்படித் தொடர்ந்து வசனம் எழுதிட்டே இருந்துட்டேன். பிறகு, 'வெள்ளித்திரை’ டைரக்ஷன். இடையில் 'கௌரவம்’ படத்துக்கு வசனம். இப்ப '36 வயதினிலே’!''

'' 'வெள்ளித்திரை’ பட தோல்வியால்தான் தொடர்ந்து இயக்கலையா?''

''தோல்வினு சொல்ல முடியாது. ஆனா, அந்தப் படம் கொடுத்த கசப்பால கொஞ்ச நாள் விலகியிருந்தேன். இன்னைக்கு பட பட்ஜெட்டைவிட, பப்ளிசிட்டி பட்ஜெட்னு ஒண்ணு இருக்கு. அதுக்கு குறைந்தபட்சம் ரெண்டு கோடி ஒதுக்க வேண்டியிருக்கு. இல்லைன்னா, இருட்டுக்குள்ள ஒரு பொண்ணைப் பார்த்துக் கண்ணடிக்கிற மாதிரி இருக்கும். நாம என்ன பண்றோம்னு நமக்குத் தெரியும். ஆனா, அந்தப் பொண்ணுக்குத் தெரியாது. அந்த மாதிரிதான் 'வெள்ளித்திரை’யில் நான் மட்டும் கண்ணடிச்சுட்டே இருந் திருக்கேன். இனி ரசிகர்களுக்கும் தெரியிற மாதிரி கண்ணடிக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன்! ஆமாம், அடுத்து ஒரு படத்தை இயக்கப்போறேன்.''

   "நாட்டுக்கு ஆதார் அட்டையும் சினிமாவுக்கு கதையும் ஒண்ணு !”

''சம்பளமாக, மரியாதையாக... எழுத்தாளர்களுக்கான அங்கீகாரம் சினிமாவில் கிடைச்சிருச்சா?''

''ஹா...ஹா...ஹா.. இந்தக் கேள்வி கேட்கணும்னாவது தோணியிருக்கே! இங்கே 'ஆதார் அட்டை அவசியம்’னு சொல்வாங்க. அப்புறம், 'அது இருந்தாலும் நல்லது; இல்லைன்னாலும் பிரச்னை இல்லை’னு கோர்ட்டே சொல்லிடும். சும்மாச்சுக்கும் 'அந்த எண் அவசியம்... அவசியம்’னு சொல்லிட்டே இருப்பாங்க. அந்த மாதிரிதான் சினிமாவில் கதையும். 'கதைதான்... கதை மட்டும்தான் முக்கியம்’னு எல்லாரும் சொல்லிட்டே இருப்பாங்க. ஆனா, கடைசி வரை சொல்லிட்டு மட்டும்தான் இருப்பாங்க. அதிசயமா 'மொழி’, 'அழகிய தீயே’ மாதிரி எப்பவாவதுதான் கதையை நம்பி படம் எடுப்பாங்க. தவிர, இங்கே நடிகர்களின் கால்ஷீட் இருந்தாதான் சினிமா எடுக்க முடியும். அதனால் அந்த கமர்ஷியலும் முக்கியம். சம்பளம்னு கேட்டீங்கன்னா நண்பர்கள் மட்டும்தான் என்னை ஏமாற்ற முடியும். மத்தவங்ககிட்ட இருந்து சரியா வந்துடும்!''

''சினிமாவில் உங்களுக்குப் பிடிச்ச ரைட்டர்ஸ்?''

''வசனத்துக்காகப் பேசப்பட்ட என் மூத்த தலைமுறைகள்ல ஏ.பி.நாகராஜன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கே.பாலசந்தர். என் தலைமுறையில பரதன், பிருந்தா சாரதி, 'மூடர்கூடம்’ நவீன், ராஜுமுருகன், 'சதுரங்க வேட்டை’ வினோத்!''

'' 'இந்தக் கதையை சினிமாவா எடுக்கணும்’னு உங்களுக்குத் தோன்றிய நாவல்கள்?''

''நிறைய நல்ல நாவல்கள் இருக்கு. ஆனா, ஜெயகாந்தனின் 'கோகிலா என்ன செய்துவிட்டாள்?’ சினிமாவா எடுக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்ட நாவல்.''

''பழைய படங்களைப் பார்க்கையில், 'ச்சே... இப்படிலாம் அப்பவே எழுதியிருக்காங்களே’னு உங்களை ஆச்சர்யப்படுத்திய படங்கள்?''

''1960-ல இருந்து 1970 வரை 10 வருஷம்... தமிழ் சினிமாவின் பொற்காலம். ஏ.பி.நாகராஜன்னா புராணப் படங்கள், பீரியடு படங்களுக்கு பி.ஆர்.பந்துலு, முக்கோணக் காதல் கதைகளுக்கு ஸ்ரீதர், குடும்பக் கதைகளுக்கு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், எல்லா நாடகங்களையும் சினிமாவாக்கிய பி.மாதவன், ஜேம்ஸ்பாண்ட் டைப் படங்கள் பண்ணின டி.ஆர்.ராமண்ணா, சிவாஜி சாருக்காக 'ப’ வரிசை படங்கள் எடுத்த பீம்சிங்,  என் தலைமுறையைச் சிந்திக்கத் தூண்டிய கே.பாலசந்தர்னு அன்னைக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒரு அடையாளம் இருந்தது. இவ்வளவு தனித்துவமிக்க மனிதர்கள், மொத்தமா இனி தமிழ் சினிமாவுக்கு எந்தக் காலத்துலயும் அமைய மாட்டாங்க!''

   "நாட்டுக்கு ஆதார் அட்டையும் சினிமாவுக்கு கதையும் ஒண்ணு !”

''பிரபல இலக்கியவாதிகள் வசனம் எழுத வர்றது பற்றி..?''

''இதழ்கள்ல வர்ற தொடர்களைப் பிச்சு எடுத்து சேகரிச்சு பைண்ட் பண்ணி ஒருத்தருக்கொருத்தர் பகிர்ந்து படிச்ச காலம் ஒண்ணு இருந்துச்சு. ஆனா, இப்ப 'தொடரும்...’னு போட்டா, அடுத்த வாரம் யாரும் அந்தக் கதையைத் தொடர மாட்றாங்க. ஆனா, இன்னைக்கு நாம சினிமா பார்த்து சினிமா எடுத்துட்டிருக்கோம். இதுல இலக்கியவாதிகள் பங்களிப்பு பத்தி என்ன சொல்ல? ஆனா, எழுத்தாளர்களின் கதைகள் சினிமாவாச்சுனா புதுசா இருக்கும்; வேற வேற சினிமாக்கள் வரும்; புதுப்புதுச் சிந்தனைகள் வளர்ச்சி பெறும்!''

''சினிமாவுக்கு வசனம் எழுத என்ன தகுதிகள் இருக்கணும்?''

'' ஹாலிவுட்ல எல்லாம் டயலாக்னு ஒரு கேட்டகிரியே கிடையாது; இந்திய சினிமாவுல மட்டும்தான் அது உண்டு. பைபிள், குர்ஆன்-ஐ எல்லாம் வசனம்னுதான் சொல்வாங்க. நீங்க அந்த அளவுக்கு முயற்சி எடுக்காட்டியும், ஒரு சின்ன மெனக்கெடலாவது இருக்கணும்னு நினைக்கிறேன். ஏன்னா, 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’னு போட்டுக்கிற எல்லாருமே எழுத்தாளர்கள் லிஸ்ட்ல வர மாட்டாங்க!''

''மறக்க முடியாத பாராட்டு?''

''பேசி நடிக்கும்போதே நிறைய பாராட்டுவாங்க. சமீபத்துல 'கூத்துப்பட்டறை’ ராமசாமி சார் '36 வயதினிலே’ படம் பார்த்திருக்கார். படம் விட்டு வெளியில வந்து போஸ்டர்ல பார்த்து 'வசனம் யார்?’னு தெரிஞ்சுக்கிட்டு நண்பர்கள்கிட்ட என் நம்பரை வாங்கிப் பேசினார். 'மொழி’ பார்த்துட்டு அமெரிக்காவில் இருந்து ஒரு நண்பர் போன் பண்ணினார். படத்துல, 'ஏன் எதுக்குனு கேள்வி கேட்காம சில விஷயங்களை நம்பித்தான் ஆகணும்.

நீ நம்பலை’னு ஒரு வசனம் வரும். அந்த வசனத்தைச் சொல்லி அழுதவர், 'இங்க பல கோடி சம்பாதிச்சுட்டேன். ஆனா, வாழ்க்கையைத் தொலைச்சுட்டேன். இந்த வார்த்தையை நான் முன்னாடியே கேட்டிருந்தேன்னா, என் வாழ்க்கை மாறியிருக்கும்’னு பேசினார். இப்படி நிறைய...''

''வீட்ல உங்க வசனங்களுக்கு என்ன ரெஸ்பான்ஸ்?''

''என் மனைவி ரசிப்பாங்க. ஆனா, என் பையன் அமெரிக்க சீரியல்களை ஆர்வமா பார்த்துட்டு இருக்கான். ஒட்டுமொத்த அமெரிக்காவே இப்ப சீரியலுக்கு அடிமையா இருக்கு. அங்க மக்கள் கியூவுல நின்னு கடைசியா பார்த்த படம் 'ஹாரி பார்ட்டராம்’. ஸ்பீல்பெர்க் உள்பட மிகப் பெரிய இயக்குநர்கள், நடிகர்கள்லாம் சீரியலும் பண்றாங்க... சினிமாவும் பண்றாங்க. சினிமாவில உள்ள சில தடங்கல்கள் சீரியல்ல இல்லை. என் பையன் அவன் நண்பர்கள்லாம்  1 டி.பி, 2 டி.பினு அந்த மொத்த சீரியலையும் டவுண்லோடு பண்ணிப் பார்த்துட்டு இருக்காங்க. பார்க்கிறது, படிக்கிறது உள்பட, எல்லாமே வேற விதத்தில் பண்ணும் தலைமுறையிடம் நம்ம வேலைக்கு பாராட்டை எதிர்பார்க்க முடியுமா?''