Published:Updated:

எல்லா ‘வுட்’ லயும் வூடுகட்டி அடிக்கிறாங்கோ !

பா.ஜான்ஸன்

ந்த சம்மருக்கு 'ஆல்வுட்’ சினிமாக்களில் என்ன விசேஷம்? ஒரு ட்ரெய்லர் ரவுண்டு அடிக்கலாமா? 

மிஷன் இம்பாசிபிள்  ரோக் நேஷன் (ஹாலிவுட்)

ஜேம்ஸ்பாண்டுக்கு செம சவால் கொடுக்கும் ரகசிய உளவாளி... 'ஐ.எம்.எஃப்’-ன் ஈதன் ஹன்ட். முதல் பாகம் முதல், வெற்றியின் அடுத்தடுத்த உச்சத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் 'மிஷன் இம்பாசிபிள்’ படத்தின் ஐந்தாவது பாகம் தயார். டாம் க்ரூஸ் பணிபுரியும் 'இம்பாசிபிள் மிஷன் ஃபோர்ஸ்’ அமைப்புக்கு எதிராக, போட்டி அமைப்பு ஒன்று செயல்படத் தொடங்குகிறது. அந்த அமைப்பை அழிக்கும் அசைன்மென்ட்டில் டாம், இந்த முறை விமானத்தில் ஃபுட்போர்டு அடித்திருக்கிறாராம். ட்ரெய்லரிலேயே அதிரடிக்கும் அந்தக் காட்சியை 'கிரீன் மேட்’ தொழில்நுட்பத்தில் ஸ்டுடியோவுக்குள் படம்பிடிக்கவில்லை. விமானத்தைப் பறக்கச்செய்து தரையில் இருந்து 5,000 அடி உயரம் செல்லும் வரை டாம் க்ரூஸை நிஜமாகவே 'ஃபுட்போர்டு’ அடிக்கவைத்திருக்கிறார்கள். இப்படி ஒரு முறை இரண்டு முறை அல்ல, முழுதாக எட்டு டேக் எடுத்திருக்கிறார்கள். 'பிசினஸ் க்ளாஸைவிட ஃபுட்போர்டு நல்லாத்தான் இருந்தது’ எனச் சிரிக்கிறார் டாம். வி ஆர் வெயிட்டிங்!

எல்லா ‘வுட்’ லயும் வூடுகட்டி அடிக்கிறாங்கோ !

டெர்மினேட்டர் ஜெனிசிஸ் (ஹாலிவுட்)

'ஐ’யம் பேக்’ என அதிரடிக்கிறார் அர்னால்டு. 2029-ம் ஆண்டு உலகை இயந்திரங்கள் ஆள, இயந்திரங்களுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றியின் விளிம்பில் இருக்கிறான் ஜான் கானர். அதனால், '2029-ம் ஆண்டில் இருந்து கிளம்பி 1984-ம் ஆண்டுக்குச் சென்று ஜான் கானரின் தாயைக் கொன்றுவிட்டால், ஜான் கானர் பிறப்பையே தடுக்கலாம். மனிதர்களுக்கு எதிரான போரில் வெல்லலாம்’ எனத் திட்டமிடுகிறார்கள் இரும்பு மூளைக்காரர்கள். 'டெர்மினேட்டர்-2 ஜட்ஜ்மென்ட் டே’ காலகட்டத்துக்குச் செல்கிறது படம்.

ஜான் கானரின் தாயைக் காப்பாற்ற வருகிறார் 'எந்திரன்’ அர்னால்டு. ஆனால், இப்போது புதிதாக என்ட்ரி கொடுக்கிறான் செம மிரட்டல் வில்லன் ஒருவன். அவன்... ஜான் கானர். ஆம், தன் தாயைக் கொல்ல ஜான் கானரையே அனுப்பிவைக்கின்றன மெஷின்கள். பலமுனைத் தாக்குதல்களில் இருந்து ஜான் கானரின் தாயைக் காப்பாற்றவேண்டிய சவால் அர்னால்டுக்கு. பல்வேறு விதமான உத்திகள் மூலம் இளமையான அர்னால்டை பல காட்சிகளில் தோன்றவைத்திருக்கிறார்கள். மற்ற நேரங்களில் 'சால்ட் அண்ட் பெப்பர்’ லுக்கில் அதிரடிப்பாராம் அர்னால்டு!

எல்லா ‘வுட்’ லயும் வூடுகட்டி அடிக்கிறாங்கோ !

ஜுராஸிக் வேர்ல்டு (ஹாலிவுட்)

உலகமே பார்க்காத ஓர் உயிரினம், சினிமா, வீடியோ கேம்ஸ், தீம் பார்க், விளையாட்டுச் சாமான்கள்... என நீக்கமற நிறைந்திருக்கிறது என்றால், அது டைனோஸராகத்தான் இருக்கும். 'ஜுராஸிக் பார்க்’ முதல் பாகத்தில் ஜான் ஹாமண்ட் ஆசைப்பட்டபடி 'ஜுராஸிக் பார்க்’, பொது மக்கள் பார்வைக்காகத் திறக்கப்படுகிறது. ஆரம்ப அமளிதுமளிகளுக்குப் பிறகு பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைகிறது. அதனால், பார்க்கின் தில் திகிலை அதிகரிக்க, மூர்க்கமான டைனோஸர்களை உருவாக்கி, பார்வையாளர்களை ஈர்க்கிறார்கள். வழக்கம்போல மனிதனைத் தாண்டி யோசிக்கும் அந்த உயிரினங்கள், தீவை சின்னாபின்னாமாக்குகின்றன. மாட்டிக்கொண்ட பார்வையாளர்கள் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதே சினிமா. டால்பின்கள்போல நீச்சல் குளத்தில் ஷோ காட்டும் டைனோஸர்கள், மனிதனின் லாப வெறிக்காக ஹைபிரீடு செய்யப்படும் டைனோஸர்கள் எனக் குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒருசேர மிரளவைக்கும் அளவுக்குப் படம் உருவாகியிருக்கும் குஷியில் திளைத்துக்கிடக்கிறது படக்குழு!

எல்லா ‘வுட்’ லயும் வூடுகட்டி அடிக்கிறாங்கோ !

மினியன்ஸ் (ஹாலிவுட்)

'டெஸ்பிகபுள் மீ’ படங்களில் வரும் காமெடி அடிமைகள்தான் 'மினியன்ஸ்’. உலகத்தின் நம்பர் 1 வில்லனான 'க்ரூ’விடம் வேலை செய்வார்கள் இந்தக் காமெடியன்கள். இவர்களை வைத்து வெளியாகும் 'ஸ்பின் ஆஃப்’ படம்தான் மினியன்ஸ். அதாவது 'டெஸ்பிகபுள் மீ’ படத்தின் மூன்றாவது பாகம், 2017-ம் ஆண்டில்தான் வெளியாகுமாம். அதுவரை மினியன்களை யாரும் மிஸ் பண்ணக் கூடாது என்பதாலேயே இந்தப் படம். மினியன்ஸ், எப்போதும் வில்லன்களிடம் வேலை செய்பவர்கள். ஆனால், ஒருகட்டத்தில் எல்லா வில்லன்களும் மனம் திருந்த, மினியன்கள் ஒரு தனித் தீவில் செட்டில் ஆகிறார்கள். அந்த வாழ்க்கை அவர்களுக்குப் போரடிக்க, புது வில்லனைக் கண்டுபிடித்து அவனிடம் வேலைக்குச் சேர முடிவெடுக்கிறார்கள். ஆரம்பிக்கிறது வில்லனைத் தேடி ஒரு பயணம்.

ஸ்கார்லெட் என்கிற பெண் வில்லனிடம் வேலை கிடைக்கிறது மினியன்களுக்கு. முதல் அசைன்மென்ட், அரசியின் கிரீடத்தைக் கொள்ளையடிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளின்போது ராணியிடம் செம மாத்து வாங்கி சொதப்புகிறார்கள். அந்த மினியன்களை வைத்துக்கொண்டு ஸ்கார்லெட் படும்பாடே, ஆக்ஷன் காமெடி காக்டெயில்! 

எல்லா ‘வுட்’ லயும் வூடுகட்டி அடிக்கிறாங்கோ !

ஹமாரி அதூரி கஹானி (பாலிவுட்)

வித்யா பாலனுக்கு இப்போது அதிஅவசியத் தேவை, ஒரு பிளாக்பஸ்டர் ஹிட். அதனால், கிளாசிக், பரிசோதனை முயற்சி சினிமாக்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு, மாஸ் பல்ஸ் பிடிக்கும் காதல் சப்ஜெக்ட் பிடித்திருக்கிறார். இதற்காக 'ஆஷிக்’, 'ஏக் வில்லன்’ போன்ற ஹிட் படங்களின் இயக்குநர் மோஹித் சூரியுடன் இணைந்திருக்கிறார் வித்யா. 'ஹமாரி அதூரி கஹானி’ நிஜ சம்பவத்தை மையப்படுத்திய காதல் கதை. தன் சொந்த தாத்தா - பாட்டியின் காதல் கதையை வைத்து உருவாகும் சினிமாவில் நடிக்கிறார் பேரன் இம்ரான் ஹாஸ்மி.

'முத்தப் புகழ்’ இம்ரானுடன் எதற்கும் அஞ்சாத வித்யா சேர்ந்தால் கேட்க வேண்டுமா என்ன? படத்தில் ஒரு காட்சியில் வித்யா பாலனை ஒரு கதாபாத்திரம் அறைய வேண்டுமாம். 'சீன் ரொம்ப ரியலா வரணும். அதனால என்னை நிஜமாவே அறைஞ்சுடுங்க’ என அறையைக் கேட்டு வாங்கி நடித்தாராம் வித்யா. ஆனால், படத்தில் அப்படியான 'வன்முறை’யைவிட 'அகிம்சை’யை போதிக்கும் முத்தக் காட்சிகள்தான் அதிகம். அவற்றுக்கும் 'ரியல்’ உழைப்பைக் கொட்டியிருக்கிறாராம் வித்யா!

எல்லா ‘வுட்’ லயும் வூடுகட்டி அடிக்கிறாங்கோ !

டபுள் பேரல் (மல்லுவுட்)

மல்லுவுட்டின் ஸ்டைல் சினிமா 'டபுள் பேரல்’. படத்தின் மேக்கிங், வசூல்... இரண்டிலும் அழுத்த முத்திரை பதிப்பவர் இயக்குநர் லால் ஜோஷ். இவர் இயக்கிய 'ஆமென்’ கேரளாவில் சரவெடி ஹிட். அந்தப் படம் வெளியாகி இரண்டு வருடங்களுக்குப் பிறகு லால் இயக்கத்தில் வெளியாகவிருக்கிறது 'டபுள் பேரல்’.

'சின்ஸியர் ஆக்டர்’ ப்ருத்விராஜ் ஆக்ஷன் அவதாரத்தில் ஜொலிப்பது படத்தின் இன்னொரு ஸ்பெஷல். 'ஹாலிவுட் படங்கள்னு சொல்ல மாட்டேன். ஆனா, அதுக்கும் மேல மலையாள நேட்டிவிட்டியோடு ஒரு ஆக்ஷன் படம் பண்ணணும்னு ஆசை. அந்த மனநிலையை செட் பண்ணிக்கவே பல மாசம் ஆச்சு. அதான் பட ரிலீஸுக்கு இவ்ளோ நாளாகிருச்சு. இந்தப் படம் ஜெயிக்குதோ இல்லையோ... அது பற்றி கவலை இல்லை. நான் ஆசைப்பட்ட மாதிரி ஒரு ஆக்ஷன் படம் பண்ணிட்டேன்!’ என இப்போதே சிலாகிக்கிறார் லால்!

பாகுபலி (டோலிவுட்)

ஜேம்ஸ் கேமரூன் பாதி, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மீதி கலந்து செய்த கலவையாக உருவாகிக்கொண்டிருக்கிறார் தெலுங்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. மெகா பட்ஜெட், பல வருட உழைப்பு, ஒரே நேரத்தில் உருவாகும் இரண்டு பாகங்கள், இந்திய சினிமா பார்க்காத கிராபிக்ஸ், ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும்; ஆங்கிலம், இந்தி, மலையாள மொழிகளில் டப்பாகும் எனப் பல 'பில்ட்அப்’களுடன் தந்தியடிக்கின்றன 'பாகுபலி’ செய்திகள்.

'எனக்கு மகாபாரதத்தை சினிமா ஆக்கணும்!’ என, முன்னர் விகடன் பேட்டியில் சொல்லியிருந்தார் ராஜமௌலி. அதற்கான ட்ரெய்லர் முயற்சிதான் இந்தப் படம் என்கிறது 'பாகுபலி’ படக்குழு. இதுவரை ஷிவடு, பல்லால தேவா, அவந்திகா, தேவசேனா, அஸ்லாம் கான், கட்டப்பா... என, படத்தின் கதாபாத்திரங்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கே அலறிக்கொண்டிருக்கிறது ஆந்திரா. 'படத்தை மெதுவா கண்ல காட்டுங்க... இப்போ டீஸரையாவது ஓட்டுங்க’ என மெசேஜ் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் மனவாடுகள். படம் பற்றிய பில்ட்அப்களை மட்டும் நம்பியே, படத்தின் சாட்டிலைட் உரிமையை 25 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது தெலுங்கு சேனல் ஒன்று!

எல்லா ‘வுட்’ லயும் வூடுகட்டி அடிக்கிறாங்கோ !

சிரஞ்சீவி 150 (டோலிவுட்)

'சீரஞ்சீவி, தன் 150-வது படத்தில் நடிக்கிறார்’ - இவ்வளவுதான் நியூஸ். படத்தின் வியாபாரம் எகிறியடிக்கிறதாம். டோலிவுட்டின் மாஸ்டர் இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கும் படத்தில் நடிக்க, நயன்தாராவை இப்போதைக்கு டிக் அடித்துவைத்திருக்கிறார்களாம். படத்தின் தயாரிப்பாளர், சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா. 'கதை என்ன, என் கேரக்டர் என்ன... எது பற்றியும் கவலை இல்லை எனக்கு. ஆனா, படம் கலெக்ஷன்ல இதுக்கு முந்தின எல்லா ரெக்கார்டையும் உடைக்கணும்!’ என்பது மட்டும் சிரஞ்சீவியின் 'அன்புக்கட்டளை’!

C10H14N2 (சாண்டல்வுட்)

'கிரௌடு ஃபண்டிங்’ மூலம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மொத்த இந்தியத் திரையுலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த படம் 'லூசியா’. அதுவரை யாரும் கண்டுகொள்ளாத கன்னட சினிமாவை, மற்ற மொழி சினிமாக்காரர்களும் சினிமா ரசிகர்களும் தன் 'லூசியா’ மூலம் கவனிக்க வைத்தார் அந்தப் பட இயக்குநர் பவன்குமார். அவரது அடுத்த படம்தான் 'C10H14N2’. இந்தப் படத்துக்கும் அதே 'கிரௌடு ஃபண்டிங்’ முறையில்தான் பைசா தேத்தியிருக்கிறார்கள். இதுவரை சேர்ந்திருக்கும் பணம் 1 கோடியே 79 லட்சம். C10H14N2  என்பது, நிக்கோடினின் வேதியியல் குறியீடு. 'அந்தக் குறீயிடு எதைக் குறிக்கிறதோ அதுதான் படம். இது என் கனவுப்படம்’ என பவன்குமார் சொல்ல, 'கனவை வைச்சு எடுத்த 'லூசியா’வே மிரட்டுச்சு; அப்போ பவனோட கனவுப்படம் எப்படி இருக்கும்!’ என குறுகுறுத்துக் கிடக்கிறார்கள் 'நியூ வேவ் சினிமா’ ரசிகர்கள்!

எல்லா ‘வுட்’ லயும் வூடுகட்டி அடிக்கிறாங்கோ !

சிங்கம் 123 (டோலிவுட்)

'நாடி, நரம்பு, ரத்தம், சதை எல்லாத்துலயும் சினிமா வெறி உள்ள ஒருத்தனாலதான் இப்படியொரு படம் நடிக்க முடியும்!’ - சம்பூர்ணேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த 'ஹ்ருதய கலேயம்’ படம் பார்த்து வயிறு வலிக்க சிரித்துக்கொண்டே இப்படிச் சொல்லிவிட்டு அவருக்கு 'பர்னிங் ஸ்டார்’ எனப் பட்டம் கொடுத்துக் கொண்டாடியது டோலிவுட். அதையே ஆசீர்வாதமாக எடுத்துக்கொண்ட சம்பூர்ணேஷ், இப்போது தனது அடுத்த அடியை சிங்கக் கர்ஜனையுடன் எடுத்து வைத்திருக்கிறார். 'சிங்கம் 123’ - இதுதான் படத்தின் டைட்டில். 'பிரஷர் பண்ணா அடங்கிப் போக, நான் பிரஷர்குக்கர்ல இருக்கிற பருப்பு இல்லை... கேஸ் ஸ்டவ் மேல இருக்கிற நெருப்பு’ என பன்ச்களை டிரெய்லரிலேயே கொளுத்திப் போட்டுக்கொண்டிருக்கிறார் சம்பூ. ஆரவாரிக்கிறது ஆந்திரா!