Published:Updated:

டிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்

டிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்

டிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்

டிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்

Published:Updated:

கோலிவுட்டின் இந்த வார 'ஹிட் பேய்’ குடியிருப்பது 'டிமான்ட்டி காலனி’யில்! 

'பாழடைந்த பங்களாவுக்குள் புகுந்தால் பேய் அடிக்கும்’ என்ற சங்க காலக் கதைதான். ஆனால், அதை ஓர் அழுக்கு அறைக்குள் அடக்கிய திகில் திரைக்கதை மூலம் 'பகீர்’ விசிட்டிங் கார்டு அடித்திருக்கிறார், அறிமுக இயக்குநர் அஜய் ஞானமுத்து.

100 வருடங்களுக்கு முன் சென்னை ஆழ்வார்பேட்டையில் வாழ்ந்த டிமான்ட்டி என்கிற போர்த்துக்கீசிய வியாபாரி, சில துர்நிகழ்வுகளால் மனநலம் பாதிக்கப்பட்டு தன்னையும் தன் குடும்பத்தினரையும் அழித்துக்கொள்கிறார். அந்த வீட்டுக்குள் அவர்கள் இன்னும் ஆவியாக உலவுவதாக வதந்தி. ஒரு மழை இரவில், அருள்நிதி அண்ட் கோ அந்த வீட்டுக்குள் செல்கிறார்கள். அவர்களுடன் தொற்றிக்கொள்கிறார்கள் டிமான்டி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அண்ட் கோ. அருள்நிதியின் ஒற்றை அறை வீட்டுக்குள் இருந்து அவர்களை வெளியேறவிடாமல் டிமான்ட்டி நடத்தும் ரத்த வேட்டையே... படம்!

டிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்

ஆச்சர்யம்... 70 சதவிகிதப் படம், ஓர் அறைக்குள் நடக்கிறது. படத்தில், ஹீரோயின் இல்லை; 'ஃப்ளாஷ்-கட்’டில் ஸ்தம்பிக்கவைக்கும் ஷார்ப்-கட் காட்சிகள் இல்லை; 'டேய்ய்ய்ய்... டூய்ய்ய்’ உச்சஸ்தாயி அலறல்கள் இல்லை; அகோர கிராபிக்ஸ் முகங்கள் இல்லை. ஆனாலும், திடுக் வெடுக்கென உலுக்குகிறான் டிமான்ட்டி. மிக முக்கியமாக காமெடி, காதல், டூயட்... போன்ற வேகத் தடைகள் இல்லாத நெடுஞ்சாலைப் பயணமாகப் பறபறக்கிறது திரைக்கதை!

நண்பர்கள் நால்வருக்குமே சரிசம அங்கீகாரம். அதில் 'ஜில்லு... ஜில்லு’ எனக் கொஞ்சும் 'பாக்கெட் மணி பாய் ஃப்ரெண்டா’கவும், பேயுடனான போராட்டத்தில் 'பொறுத்தது போதும்... பொங்கியெழு மனோகரா’வாகவும் ஈர்க்கிறார் புது மாப்பிள்ளை அருள்நிதி. மொக்கை போங்கு வாங்கிய பிறகும், 'கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும்?’ என விசாரிக்கும் ரமேஷ் திலக்தான் படத்தின் சிரிசிரிச் சித்தப்பு. 'பிள்ளப்பூச்சி’கணக்காகத் திரியும் அபிஷேக், அந்தத் திடுக் திருப்பத்துக்குப் பிறகு காட்டும் ரியாக்ஷன்... அள்ளு!

ஒற்றை அறையின் ஒவ்வொரு மூலையிலும் திகில் ஆங்கிள் பிடிக்க, பேய்த்தனமாகச் சுழன்றிருக்கிறது அரவிந்த் சிங்கின் கேமரா. புவன் ஸ்ரீனிவாசனின் படத்தொகுப்பும் சின்னாவின் பின்னணி இசையும் கூட்டணி அமைத்து மிரட்டுகின்றன.

டிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்

மழை இரவு, நாடி ஜோதிடம், டி.வி-யில் பேய் படம், ஓஜா போர்டு சமிக்ஞைகள்... என அடுத்தடுத்து திடுக் அத்தியாயங்களை வைத்திருக்கும் போது, அந்த முதல் 20 நிமிட காமாசோமா சம்பவங்கள் ஏன்? அருள்நிதியை 'கால் பாய்’ போல காட்ட நினைத்து, ஆனால் கலாசாரம் மீறாத ஏதோவொரு கட்டத்துக்குள் பொருத்துகிறார்கள். 'படத்துக்கு ஓர் ஆவி வேண்டுமே’ என்ற சம்பிரதாயத்துக்காகக் கடக்கிறது அந்தப் போர்த்துக்கீசியத் தொழிலதிபர் ஃப்ளாஷ்பேக்.

கிச்சுகிச்சு மூட்டும் 'சிரிப்புப் பேய்’களுக்கு நடுவே, 'டொம்... டொம்’ எனத் துப்பாக்கியை இடித்து, பேய்களுக்குரிய கெத்தை மீட்கிறான் இந்த 'டிமான்ட்டி’!

- விகடன் விமர்சனக் குழு