Published:Updated:

சினிமா விமர்சனம் : எங்கேயும் எப்போதும்

எங்கேயும் எப்போதும்-

விகடன் விமர்சனக் குழு

சினிமா விமர்சனம் : எங்கேயும் எப்போதும்

விகடன் விமர்சனக் குழு

Published:Updated:
எங்கேயும் எப்போதும்-
##~##

காதலும் விபத்தும் 'எங்கேயும் எப்போ தும்’ நிகழலாம்!

எதிர்பாராத கணத்தில் நிகழும் ஒரு விபத்து, சிலரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் சிதைத்துக் குலைக் கிறது என்பதைச் சொல்லும் படம். இந்த இழப்பும் துயரமும் நம்மில் யாருக்கும் 'எங்கேயும் எப்போதும்’ நடக்கும் என்பதை அழுத்தமாகச் சொல்லி அதிரவைத்ததில், அறிமுக இயக்குநர் சரவணனுக்கு அடிக்கலாம் ஒரு வெல்கம் சல்யூட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் பேருந்தில் அனன்யா. ஒரு நாள் சிநேகிதத்தில் காதல் பூத்த காதலனைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் தன் ஊருக்கே திரும்புகிறார். காதலன் சர்வாவோ (அறிமுகம்) அனன்யாவைத்  திருச்சியில் தேடிக் கிடைக்காமல், சென்னை செல்லும் பேருந்தில் திரும்புகிறார். அதே பேருந் தில் காதலி அஞ்சலியுடன் பயணிக் கிறார் ஜெய். இவர்களோடு இன்னும் விதவிதமான பயணிகள். இந்த இரண்டு பேருந்துகளும் வழியில் மோதி விபத்துக்குள்ளாக, பயணிகளின் வாழ்க்கை என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்.

சினிமா விமர்சனம் : எங்கேயும் எப்போதும்

ஒரு விபத்தை இவ்வளவு விலாவாரியாக இதற்கு முன் தமிழ் சினிமாவில் பார்த்தது இல்லை. சினிமா சென்டிமென்ட்டுகளைத் தாண்டி படத்தின் முதல் காட்சியே பதற அடிக்கிற விபத்து. க்ளைமாக்ஸுக்கான விபத்தை முதலிலேயே சொல்லிவிட்ட பிறகும் கொஞ்ச மும் விறுவிறுப்பு குறையாமல் பயணிக்கும் திரைக்கதை படத்தின் மிகப் பெரிய பலம்!

இரண்டு சுவாரஸ்யமான காதல்கள், அதன் உள்ளே ஊடுருவும் பேருந்து விபத்து. இந்த ஒற்றை வரிக் கதையை அழகான திரைக்கதை ஆக்கியதில் இஞ்ச் இஞ்ச்சாக மிளிர்கிறது இயக்குநரின் உழைப்பு.

காதலர்கள் நால்வரில் நச் இச்எனக் கவர்பவர் அஞ்சலி. படபட தடதடவென அவர் ஜெய்யை டீல் பண்ணுகிற அழகுக்கே பெரிய ட்ரீட் கொடுக்கலாம். வேலைக்கு ஆள் எடுப்பதுபோல அனைத்துக் கட்ட சோதனைகளும் முடிந்த பிறகு, போனால் போகிறது தொனி யில் ''ஐ லவ் யூ'' என்று சொல்லும் தோரணையாகட்டும், ''நீ கல்யா ணத்துக்கு அப்புறம் கட்டிக்கோ... நான் இப்பவே கட்டிக்கிறேன்'' என்று ஜெய்யை இறுக்கிக்கொள்ளும் ஆளுமையாகட்டும், வெடிக்கும் விம்மலையும் கண்ணீரையும் கட்டுப்படுத்திக்கொண்டு, இறுதிக் காட்சியில் டாக்டரிடம் கலங்குவது ஆகட்டும்... பொண்ணு என்னமா நடிக்குது?!  

'சுப்ரமணியபுர’த்துக்குப் பிறகு ரசிக்கவைக்கிறார் ஜெய். திருச்சி மொட்டை மாடி பேச்சுலராகக் கூச்சமும் சங்கோஜமுமாக ஊர்ப் பையனைக் கண் முன் நிறுத்துகிறார். வீட்டுக்குள் நின்று கொண்டே தூரத்து மொட்டை மாடியில் அஞ்சலியைப் பார்த்துக் கையாட்டுவது,     அஞ்சலி அணியும் நிறத்தில் சட்டை அணிவது, ''யோவ்... யோவ்... காபி ஆறிப் போச்சு'' என்று காபி ஷாப்பில் பொருமுவது, அஞ்சலி கோபப்படச் சொல்ல, மிகவும் முயற்சித்து ''வர மாட்டேங்குதுங்க'' என்று வழிவது எனக் கில்லி பெர்ஃபார்மன்ஸ்!

சினிமா விமர்சனம் : எங்கேயும் எப்போதும்

அனன்யா - சர்வா காதல் ஒரு நாளில் பூக்கும் அழகான ஹைக்கூ. செல்போன்கூட இல்லாமல் சென்னை வரும் கிராமத்துப் பெண் அனன்யா வுக்கு, வழிகாட்டி உதவ வரும் சர்வாவுடன் படிப்படி யாக மலரும் அன்பில் நெகிழ் வும் மகிழ்வுமான சுவாரஸ்ய அனுபவங்கள் ஏகம்!

அக்கா தடதடவென முகவரி சொல்ல, திருதிருப்பதும்... ஹோட்டல் தட்டில் முகம் பார்த்து பொட்டு திருத்துவதும், பேருந்தில் சர்வா அருகில் உட்கார எழுந்துவரும் நேரத்தில் நிறுத்தம் வந்துவிட, கண்களில் ஏமாற்றத்தைப் பிரதிபலிப்பதுமாக குட்டிச் சுட்டி எக்ஸ்பிரஷன்களால் மனதைக் கொள்ளைகொள்கிறார்.

வேலையை விட்டுவிட்டு, ஒரு சந்தேகப் பேர்வழியோடு அலைய வேண்டி இருக் கிறதே என்று முதலில் எரிச்சல் அடைந் தாலும், பின்பு அனன்யாவின் வெகுளித் தனத்தில் இம்ப்ரெஸ் ஆகும் இடங்களில் சென்னை இளைஞனாக இயல்பாக ஈர்க்கிறார் சர்வா. விபத்தில் சிக்கி ஐ.சி.யூ-வில் இருக்கும் அனன்யாவிடம், ''என் லவ்வைச் சொல்ற நேரத்தைப் பார்த்தியா?'' என்று கலங்கித் ததும்பும் இடம் மென்சோகக் கவிதை!

சென்னையோ, திருச்சியோ, நெடுஞ்சாலையோ அந்தந்த இடங்களிலேயே உலவும் உணர்வைக் கொடுத்திருக்கிறது இயக்குநர் சரவணன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், எடிட்டர் கிஷோரின் கூட்டணி.

அனன்யாவின் அக்கா, ஒரு பேருந்துப் பயணத்தில் செல்போன் நம்பர் பரிமாறி சிநேகிதக் காதல்கொள்ளும் ஜோடி, துபாய் வேலையை விட்டுவிட்டு முதன் முதலாகத் தன் குழந்தையைப் பார்க்க விரையும் அன்பான அப்பா, புது மனைவியைப் பிரிய மனம் இல்லாமல் தவிக்கும் கணவன், பஸ்ஸுக்குள் அங்கும் இங்கும் அலைந்து லூட்டி அடிக்கும் சுட்டிக் குழந்தை என சின்னச் சின்ன கேரக்டர்களிலும் சுவாரஸ் யம் புதைத்து இருக்கிறார்கள்.

''உன்கிட்ட சொன்னது வழி... என்கிட்ட சொன்னது அட்ரஸ்'', ''எனக்கு ஏட்டுனா... உங்களுக்கு மட்டும் அவர் டி.ஐ.ஜி-யா?'', ''இனி சென்னைன்னாலே, உனக்கு அவன்தானே ஞாபகத்துக்கு வருவான்'' என வசனங்கள் எளிமையும் இனிமை யுமான க்ரீட்டிங் கார்டு ஈர்ப்பு!  

கதையுடன் பயணித்து நம்மையும் உற்சாகம் தொற்றிக்கொள்ளவைக்கிறது சத்யாவின் இசை. 'சொட்டச் சொட்ட’, 'கோவிந்தா..’,  'உன் பேரே தெரியாதே’ பாடல்கள் உதட்டில் ஒட்டிக்கொள்ளும் ரகம். படபடப்பும் தடதடப்புமான ஒரு பயணத்தை, வெகு இயல்பான மக்கள் கூட்டத்தை அப்படியே அள்ளி அடைத்து காட்சிக்கு வைத்திருக்கும் வேல்ராஜின் கேமராவுக்கு ஆகப் பெரிய சபாஷ்.  

படத்தின் இறுதியில் வரும் ''அப்பா ப்ளீஸ், வேகமாப் போகாதீங்க'' என்கிற சிறுமியின் குரல் ஓட்டுநர்கள் மனதில் எதிரொலித்தாலே, 'எங்கேயும் எப்போதும்’ நிகழும் விபத்துகளின் எண்ணிக்கை ஏகமாகக் குறையும்!