Published:Updated:

“சம்பூகிட்ட வெச்சுக்காத வம்பு !”

பா.ஜான்ஸன்

க்கட தேசத்தில் 'ஸ்பூஃப் ஃபீவர்’ மெதுமெதுவாகக் கொதிகொதிக்கிறது! 

'தமிழ் படம்’ மூலம் தமிழ் சினிமாக்களையே கலாய்த்தார்களே... அதுபோல கலாய் சினிமாக்களில் நடிப்பவர் சம்பூர்ணேஷ் பாபு. இதற்கு முன்பு 'ஹ்ருதய கலேயம்’ தெலுங்குப் படம் மூலம், ஆந்திராவையே பதறவைத்தவர், இப்போது 'சிங்கம் 123’ என்ற தெலுங்குப் படம் மூலம் 'அதுக்கும் மேலே’ எகிறி அடித்திருக்கிறார்.

சமூகத்தில் உள்ள அத்தனை அசுத்தங்களையும் விளக்குமாறால் கூட்டித் தள்ளி, குப்பையில் போடும் 'சூப்பர் காப்’ சிங்கம் (சம்பூ). உலகத்தின் 'மோஸ்ட் வான்டட் கிரிமினல்’ சிங்கராயகொண்டாவில் இருக்கும் லிங்கம். அவனை அழிக்க மாஃபியாவுக்கு மலேரியா வரவைக்கும் வீரன், டெரரிஸ்ட்டுக்கே டெரர் கொடுக்கும் சூரனான சம்பூவை, அங்கு பொறுப்பேற்கச் சொல்கிறார் உள்துறை அமைச்சர்.

   “சம்பூகிட்ட வெச்சுக்காத வம்பு !”

'என்னாது... சிங்கராயகொண்டாவா? அங்கதான் உங்க அப்பாவைக் கொன்னவன் இருக்கான்’ என உடனே ஃப்ளாஷ்பேக் கதை சொல்கிறார் சம்பூவின் அம்மா. 'இவ்வளவு நேரம் டிக்கெட் கன்ஃபர்ம் ஆனதும் போலாம்னு இருந்தேன். ஆனா, இப்போ ஃபுட்போர்டு அடிச்சாவது போயே தீருவேன்’ என ஃபோர்ஸாகக் கிளம்புகிறார் 'சிங்கம் போலீஸ்’. அதன் பின்னர் 'சிங்கம் ஸ்s லிங்கம்’ அடிதடி சரவெடிதான் மீதிக் கதை.

தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார்கள் பாலகிருஷ்ணா, ரவிதேஜா, பவன்கல்யாண், மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லுஅர்ஜுன், பிரபாஸ்... என ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. அத்தனை பேரையும் தௌசண்ட் வாலாவில் கோத்து காமெடி வெடிக்கிறார் சம்பூ. பத்தாதற்கு ரஜினி ஸ்டைலில் நடப்பது, 'கத்தி’ விஜய் போல சிறை மேப் பார்த்துத் திட்டமிடுவது... என கோலிவுட்டையும் கொத்து பரோட்டா போடுகிறார்.

   “சம்பூகிட்ட வெச்சுக்காத வம்பு !”

'நான் பொறந்தப்பவே போலீஸ் டிரெஸ்ஸோடு பொறந்தவன்’, 'எமோஷனோடு டியூட்டி பார்க்கிறவனுக்கு புரமோஷன் தானா வரும்டா’, 'ஒரு தடவை சிங்கம் அடிச்சா, அடி வாங்கினவன் ஒண்ணு கோமால இருப்பான்... இல்லை மார்ச்சுவரியில இருப்பான்’, 'கொசு, தாகம் எடுத்தாலும் ரத்தம்தான் குடிக்கும்; பசிச்சாலும் ரத்தம்தான் குடிக்கும். இப்போ நான் உன் ரத்தத்தைக் குடிக்கிறேன்டா’, 'எமனுக்கு ரெஸ்ட் இருக்காதுனு என்கவுன்ட்டரை நிறுத்தினேன். அதை ரீ-ஸ்டார்ட் பண்ணவைக்காதீங்கடா’ என, படம் முழுக்க முன்னர் ஹிட்டடித்த பன்ச்களையே சித்ரவதைக்குள்ளாக்கிச் சிதறவைக்கிறார்.

இப்படி ஒன்றரை மணி நேரம் முழுவதும், படம் முழுக்க இருட்டு தியேட்டரில் அசட்டுக் காமெடிதான். அதில் உங்கள் மூஞ்சி மேலேயே குத்துவிடும் முத்தான இரண்டு காட்சிகள் இங்கே...

வில்லன் குரூப், சம்பூவைத் துப்பாக்கியால் சுட... கான்ஸ்டபிளிடம் 'புல்லட் வந்த துப்பாக்கி, சுட்ட ஆளு, அந்தத் துப்பாக்கியை வித்தவன் எல்லாருடைய டீடெய்லும் எனக்கு வேணும். புல்லட் நம்பர் 7.2.3.4/கி’ என சம்பூ கூறுவார். 'புல்லட் நம்பர் எப்படி சார் தெரியும்?’ என கான்ஸ்டபிள் அசந்துபோய் கேட்க, 'புல்லட் டிராவலிங்ல இருந்தப்பவே நோட் பண்ணிட்டேன்’ என்பார் நம்ம சூப்பர் காப்.

   “சம்பூகிட்ட வெச்சுக்காத வம்பு !”

சம்பூவை அடித்துத் துவைத்து, சாக்கு மூட்டையில் கட்டி ஒரு கிணற்றுக்குள் போடுவார்கள். 'உலகத்தையே காப்பாற்ற வந்த சிங்கம் காணாமல்போனதில் இருந்து, சின்னக் குழந்தைகள் பால் குடிப்பதைக்கூட நிறுத்திருச்சு’ என மீடியா பரபரக்க, மறுபுறம் மக்கள் கடவுளிடம் 'சிங்கம் ரிட்டர்னு’க்காக பிரார்த்தித்துக்கொண்டிருப்பார்கள். சாக்குப்பையில் இருந்து சம்பூ வெளியேறி கடலுக்கு வந்து, அங்கு இருந்து பயணித்து ஆப்பிரிக்காவில் இருக்கும் நீச்சல் குளத்தில் இருந்து எழுந்து வருவார். அந்த ஆந்திரா டு ஆப்பிரிக்கா பயணம்... சம்பூவால் மட்டுமே சாத்தியம்!

இதில் என்ன ஆச்சர்யம் என்றால், கலர் கலர் சினிமாக்களை 'ஆஹா... ஓஹோ...’ எனக் கொண்டாடும் மனவாடுகள், இந்தக் கிண்டல் சினிமாவையும் கொண்டாடுவதுதான்.