Published:Updated:

“நடிகர் திலகத்தை நாம கஷ்டப்படுத்திட்டோம் !”

நா.சிபிச்சக்கரவர்த்தி, ம.கா.செந்தில்குமார் படம்: கே.ராஜசேகரன்

''மாடியில இருக்கிற ஹால் முழுக்க, பையன் ஃபைஸலுக்கு ஒதுக்கிட்டோம். அந்த விபத்துல இருந்து அவன் இன்னும் முழுமையா மீளல. ஒரு விபத்து, ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் எப்படி முடக்கிடும்னு அந்தத் துயரத்தை அனுபவிச்சாதான் புரியும். ஆனா, எதிரிக்குக்கூட அந்த நிலைமை வேண்டாங்க'' - விபத்தில் சிக்கிய மகனைப் பற்றி கேட்ட நொடியில் கண்களில் நீர் திரள்கிறது நாசருக்கு. 

சொந்த சோகம் உள்ளுக்குள் உலுக்கினாலும் பிரமாண்ட 'பாகுபலி’ நடிப்பு, நடிகர் சங்க வம்புதும்பு... எனப் பரபரத்துக்கொண்டிருக்கிறார். வில்லத்தனத்தின் அத்தனை வடிவங்களையும் சினிமாவில் வெளிப்படுத்தியவர், நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் 'சீனியர் ஹீரோ’வாக முஷ்டி முறுக்கி நிற்கிறார். சுமார் 30 வருடங்களாக தமிழ் சினிமாவின் 'ஆக்டிவ் ஆர்ட்டிஸ்ட்’டாக இருப்பவரிடம் பல கதைகள் பேசியதில் இருந்து...

'அநேகமாக உங்க கேரியரின் பிரமாண்ட சினிமா 'பாகுபலி’யாத்தான் இருக்கும். அந்த அனுபவம் எப்படி இருக்கு?''

''எத்தனையோ பிரமாண்ட படங்களில் நடிச்சிருந்தாலும், 'பாகுபலி’ மறக்கவே முடியாத அனுபவம். 'இம்சை அரசன்’, 'உத்தம வில்லன்’னு வரலாற்றுப் படங்களில் நடிக்க எனக்கு எப்பவும் பிடிக்கும். அந்த எக்ஸ்ட்ரா உற்சாகத்தோடுதான் 'பாகுபலி’யில் நடிச்சேன். மாசக்கணக்கா ஷூட்டிங் நடந்தாலும், அந்தக் களைப்போ மலைப்போ சுத்தமா தெரியலை.  ஒவ்வொரு நாள் செட்டுக்குள் நுழையும்போதும் பெரிய தொழிற்சாலைக்குள் நுழைவதுபோல இருக்கும். அவ்வளவு பிரமாண்டம்.

தெலுங்கு, தமிழ்னு ஒரே நேரத்துல ரெண்டு மொழிகளில் தயாரானதால் ஷூட்டிங்கில் பல காமெடிகள் நடக்கும். தெலுங்கில் எடுக்கும்போது பிரபாஸும் ராணாவும் பிரமாதப்படுத்துவாங்க. நானும் சத்யராஜும் திணறுவோம். அதுவே தமிழ்ல நாங்க ரெண்டு பேரும் பின்னியெடுக்க, அவங்க முழிச்சுட்டு இருப்பாங்க. இப்படி ஏகப்பட்ட தமாஷ்!''

   “நடிகர் திலகத்தை நாம கஷ்டப்படுத்திட்டோம் !”

'' 'பாகுபலி’ படத்தில் அப்படி என்னதான் பிரமாண்டம்?''

''ஒரு படத்துக்கான பிரமாண்டம்கிறது, வெறும் செட்ல மட்டும் இல்லை; கதாபாத்திரத்தின் இயல்புகளை உள்வாங்கி, அதை நடிப்பால் வெளிப்படுத்துற மனித உணர்ச்சிகளில்தான் இருக்கு.

'தேவர் மகன்’ படத்தை பிரமாண்டமான படம்னு சொல்ல முடியாது. கிராமத்து வீடு, வயக்காடுனுதான் கதை நகரும். ஆனா, படம் முடிஞ்சு வெளியே வரும்போது மனசுக்குள்ள பிரமாண்டமான ஒரு அலை அடிக்கும் பாருங்க... அந்த அளவுக்கு படம் முழுக்க உணர்ச்சிக் கொந்தளிப்புகள் நிறைந்திருக்கும். 'பாகுபலி’ படத்தைப் பொறுத்தவரை, விஷ§வலில் இருக்கும் அதே அளவு பிரமாண்டம் உணர்ச்சிகளிலும் இருக்கும்!''

'ஒரு படம் 100 நாட்கள் ஓடுறதையும் பார்த்திருக்கீங்க... இப்போ '3 நாட்கள் ஓடும்’ ட்ரெண்டிலும் நடிச்சுட்டிருக்கீங்க. என்ன வித்தியாசம் உணர்றீங்க?''

''அப்போ செங்கல்பட்டில் இருந்து சென்னைக்குள் நுழைய மூணு மணி நேரம் ஆகும். ஆனா, இன்னைக்கு நாற்கரச் சாலையில் அரை மணி நேரத்துல வர முடியுதே! 100 நாட்களில் வந்த வருவாய், வெள்ளி, சனி, ஞாயிறுனு மூணே நாட்களில் வரும்போது வருத்தப்பட என்ன இருக்கு? அப்போ எம்.ஜி.ஆர் நடிச்ச படத்துக்கு 100 பிரின்ட்ஸ் போடுறதை அதிசயமாப் பேசுவாங்க. இன்னைக்கு சின்ன பட்ஜெட் படம்கூட 200 பிரின்ட்டுக்கு அதிகமாத்தான் போடுறாங்க. இப்போதைய சூழ்நிலையில், ஒரு படம் 100 நாட்கள் ஓடலையேனு கவலைப்பட எதுவுமே இல்லை!''

'முன்னாடி எல்லாம் நாடகங்கள்ல நடிச்சிட்டு, அப்புறம்தான் சினிமாவில் வாய்ப்பு தேடுவாங்க. ஆனா, இன்னைக்கு அப்படி எந்த 'லைன் ஆஃப் கன்ட்ரோலும்’ இல்லை. இதை எப்படிப் பார்க்கிறீங்க?''

''சினிமாவுல இப்போ ஆக்டிங் ட்ரெண்டே மாறிருச்சு. அதை ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும். ஆனா, இப்போ ஒரு கேரக்டருக்கு ரோட்ல போற ஒருத்தர் சரியா இருப்பார்னு தோணினா, உடனே அவரைக் கூப்பிட்டு நடிக்கவெச்சுடுறாங்க. ஒரு சீனியர் நடிகர் தேவைனு நினைச்சா மட்டுமே, என்னைப் போன்றவர்களை நடிக்கக் கூப்பிடுறாங்க.

27 வருஷமா நடிச்சுட்டிருக்கேன். ஒவ்வொரு தலைமுறை இளைஞர்களும் ஒரு நடிகரை ஒவ்வொரு விதத்தில் அணுகும்போது புதுப்புது விஷயங்களைக் கத்துக்கிறேன். ஆனா, ஒரு இயக்குநர் நினைச்சா யாரையும் நடிக்கவைக்க முடியும்கிறதுதான் இப்போதைய நிலைமை. இது என்ன ட்ரெண்ட்னு எனக்குப் புரியவே இல்லை.

   “நடிகர் திலகத்தை நாம கஷ்டப்படுத்திட்டோம் !”

நடிப்புங்கிற கலை, முறையான பயிற்சியின் மூலம்தான் கைவரும். நடிகனா ஆகணும்னு நான் சின்ன வயசுல கனவு கண்டதுகூட இல்லை. ஆனா, காலமும் நேரமும் என்னை நடிகனா ஆக்கிருச்சு. 'நடிப்புதான்’னு தீர்மானிச்சதும் அதற்கான முறையான பயிற்சிகளை எடுத்துக்கிட்டேன். நடிப்பு பற்றிய என் புரிதலை... ரசனையை, அப்பப்போ தரம் உயர்த்திக்கிட்டும் இருக்கேன். ஆனா, யாரும் எந்த முறையான பயிற்சியும் இல்லாமல் சினிமாவில் நடிக்கலாம்னு இப்போ இருக்கிற நிலைமை, சினிமாவுக்கு ஆரோக்கியம் இல்லை!''

'' 'அவதாரம்’ மாதிரியான படங்களுக்கு இன்னைக்கு ஒரு ஸ்பேஸ் இருக்கே. மீண்டும் இயக்குவீங்களா?''

''அந்த எண்ணம் இருக்கு. நிறைய ஸ்க்ரிப்ட்ஸ் எழுதிவெச்சிருக்கேன். 'பிணை’னு ஒரு முழுநீள மாற்று சினிமாவுக்கு வசனம் எழுதிட்டிருக்கேன். அது, வீரப்பன் பத்தின கதை. தமிழில் கவனிக்கக்கூடிய ஒரு படைப்பா இருக்கும். மத்தபடி நடிப்பே எல்லா நேரத்தையும் எடுத்துக்குது!''

'சமீபத்தில் பார்த்ததில் பிடித்த படம் எது?''

''இந்தி சினிமா 'பிக்கு’. மலச்சிக்கலில் கஷ்டப்படும் ஒரு முதியவரைப் பத்தின கதை. ஒரு பெண் சின்னக் கருவா எழுதின அந்தக் கதையை, சினிமாவா எடுக்க முடியும்; அதுல அமிதாப் பச்சனை நடிக்கவெச்சு ஹிட் பண்ணவும் முடியும்கிற நம்பிக்கையே எனக்கு ஆச்சர்யமா இருந்தது. அந்தப் படம் பார்த்துட்டு வெளியே வரும்போது, 'இந்த மாதிரியான கதைகளை நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு நாம கொடுக்கவே இல்லையே. 'இன்னும் நடிக்கணும்’கிற ஏக்கத்தோடவே அவரைக் கடைசிக் காலத்துல கஷ்டப்படுத்திட்டோம்’கிற வருத்தம் மனசை அழுத்தியது. அந்த ஸ்டைல் படங்கள் தமிழ்லயும் வரணும். குடும்பத்துல இருக்கும் எல்லாரோட ரசனைக்குமான படங்களும் வரணும்!''

'நடிகர் சங்கத்தில் என்னதான் பிரச்னை?'

''சில வருஷங்களுக்கு முன்னாடி ஈழப் பிரச்னைக்காக சினிமா நடிகர்கள் ஒண்ணுசேர்ந்து உண்ணாவிரதம் இருந்தோம். அப்போ நடிகர் சங்க இடத்தை ஆக்கபூர்வமா பயன்படுத்தவும், உறுப்பினர்களோடு கலந்து பேசவும் சிறப்புக் கூட்டத்துக்கு நேரம் கேட்டு நடிகர் சங்கத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினோம். அந்தக் கடிதத்தை நான்தான் தயாரிச்சேன். அதுக்கு விஷால், கார்த்தி, ஜெயம் ரவினு இளம் நடிகர்கள் பலரும் உதவினாங்க. அப்போது நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதில் இருந்த பிரச்னை, நீதிமன்றத்தில் உள்ள வழக்கு இது எதுவுமே இளம் நடிகர்களுக்குத் தெரியாது. ஆனா, இவங்க எல்லாரும் சங்கத்துக்கு எதிரா செயல்படுறதா நினைச்சு, அந்தக் கடிதத்தை வாங்க ராதாரவி மறுத்தார். இதுதான் பிரச்னையின் ஆரம்பம்.

'உள்ளே என்னதான் சிக்கல்?’னு விசாரிச்சா, பகீர்னு வந்து விழுது தகவல். நடிகர் சங்கம் இருந்த இடத்துல ஒரு காம்ப்ளெக்ஸ் கட்ட சரத்குமாரும் ராதாரவியும் தனியார் நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டிருக்காங்க. ஆனா, அதைப் பத்தி பொதுக்குழுவிலோ, செயற்குழுவிலோ விவாதிக்கவே இல்லை. தன்னிச்சையா அவங்களே முடிவெடுத்து ஒப்பந்தம் போட்ட பிறகு, சங்கத்துல தீர்மானம் நிறைவேற்றிருக்காங்க. அந்த ஒப்பந்தம் போடும்போது ஒரு நடிகர், நடிகைகூடவா சாட்சிக் கையெழுத்து போட முன்வரலை? இதுல இருந்தே ஏதோ தப்பு நடந்திருக்கும்னு தெரியலையா? இதைச் சொன்னால், சரத்குமாரும் ராதாரவியும் எங்களை விரோதிகள் மாதிரி பார்க்கிறாங்க; வசை வார்த்தைகளால் திட்டுறாங்க. அது அப்படி அப்படியே வளர்ந்து, இப்போ தேர்தல் போட்டி வரைக்கும் வந்திருச்சு!''

'நடிகர் சங்கத் தேர்தலில் நீங்க போட்டியிடப் போவதாகச் செய்தி வருதே... உண்மையா?''

''அது தேர்தல் சமயத்துலதான் தெரியும். நாங்க எல்லோரும் சும்மா ரெண்டு நாட்கள் கத்திட்டு ஒதுங்கிருவோம்னு நினைச்சிருப்பாங்க. ஆனா, விடாப்பிடியா நாங்க போராடுறதால இப்போ தப்பை மறைக்கப் பார்க்கிறாங்க. ராதாரவி மேல தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த வெறுப்பும் கிடையாது. ஆனா, அவர் பொறுப்பு ஏத்துக்கிட்டிருக்கிற பதவிக்கேத்த மாதிரி செயல்படுறாரா? அதுதான் இப்போ எங்க கேள்வி!

எங்க தரப்பில் இருந்து இது தொடர்பா இனி யாரும் ஊடகங்களில் பேசக் கூடாதுனு தூது அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தினாங்க. ஆனா, மறுநாளே, தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கி அரைப் பக்கத்துக்கு அறிக்கை வெளியிடுறார் சரத்குமார். அவங்க பேசலாம்... ஆனா, நாங்க வாய் திறந்து எதுவும் சொல்லக் கூடாதுனா எப்படி?

நடிகர்கள் அல்லாத பலரையும் சங்கத்துல சேர்த்து வாக்கு வாங்கி ஜெயிச்சுரலாம்னு நினைக்கிறாங்க. உண்மையை எவ்வளவு நாட்கள்தான் மறைக்க முடியும்? அது சீக்கிரமே வெடிச்சு வெளியே வந்துடும்!''