Published:Updated:

"சினிமா பார்க்கிறதை குறைச்சிட்டே இருக்கேன் !”

இயக்குனர் மணிகண்டன்டி.அருள் எழிலன், ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன்

ரையோடு சப்புக்கொட்டிக் கிடக்கிறது காசிமேடு கடல். சென்னை காசிமேடு பிரதான சாலையை ஒட்டியிருக்கும் அந்தக் குடியிருப்பில், பாதி வீடுகள் இடிந்து கிடக்கின்றன; மீதி வீடுகளில் தைக்கப்பட்ட உரச் சாக்குகள்தான் சுவர்களாகப் படபடக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அந்தக் குடியிருப்பில், எஞ்சியிருக்கும் மிகச் சில குடும்பங்களில் பெரிய காக்கா முட்டை, சின்னக் காக்கா முட்டையின் குடும்பங்களும் அடக்கம். 'காக்கா முட்டை’ படம் பேசும் கூவம் நதிக்கரையோர மக்களின் வாழ்க்கை, சென்னையின் எந்தக் குப்பத்தில் வாழும் பூர்வகுடிகளுக்கும் பொருந்தும். 

'டேய் ரமேஷு... விக்னேஷு... தோனி உன்னான்ட என்னடா சொன்னாரு?’, 'அடுத்து என்ன படம்டா?’ என அக்கம்பக்கத்தினரின் விசாரிப்புகள், அந்தச் சிறுவர்களை வெட்கத்தில் ஆழ்த்துகின்றன.

''அப்ப கடல் இவ்வளவு கிட்டத்துல இல்லை; இந்தக் கருங்கல் குவியல் சுவரும் கிடையாது. நான் பசங்களைத் தேடி இங்க வரலை; என் கதைக்கான ரெஃபரன்ஸ் போட்டோ எடுக்கத்தான் இங்கே வந்தேன். வந்த இடத்துல இந்தப் பசங்களைப் பார்த்தேன். அப்பவும் இவங்களை நடிக்கவைக்கத் தோணலை. இந்த மாதிரி பசங்கதான் எனக்கு வேணும்னு சுத்திட்டு இருந்தப்போ, 'இவனுங்களையே நடிக்கவெச்சா என்ன?’னு தோணிச்சு. அப்போதான் 'காக்கா முட்டை’ உண்மையிலயே ஆரம்பிச்சதுனு சொல்லலாம்'' - சிறுவர்களைப் பிடித்த கதையில் இருந்து 'காக்கா முட்டை’ கதையை ஆரம்பித்தார் இயக்குநர் மணிகண்டன்.

''எனக்கு சொந்த ஊர் உசிலம்பட்டி பக்கம், விளாம்பட்டி. விவசாயம்தான் பரம்பரைத் தொழில். ஆனா, அப்பா கான்ஸ்டபிள். அவருக்கு அடிக்கடி டிரான்ஸ்ஃபர் போடுவாங்க. 10-வது படிக்கிறதுக்குள்ள நாலு ஸ்கூல் மாறிட்டேன். மதுரையில தமிழ்நாடு பாலிடெக்னிக்ல சேர்ந்த முதல் வருஷம் அப்பா இறந்துட்டார். காரணம் குடிப்பழக்கம். அதனாலேயே இந்த நிமிஷம் வரை மது, சிகரெட்டை நான் தொட்டதே இல்லை; இனியும் தொட மாட்டேன். காரணம், யாரோ ஒரு நடுத்தர வயது மனிதர் போதையில தள்ளாடி நடந்து போறதைப் பார்த்தா, 'ஒரு தகப்பன், தன் பிள்ளைகளைத் தவிக்கவிடத் தயாராகிட்டு இருக்கார்’ங்கிற வலி, மனசை அறுக்கும். அதனாலேயே அதெல்லாம் நான் பழகலை.

   "சினிமா பார்க்கிறதை குறைச்சிட்டே இருக்கேன் !”

பாலிடெக்னிக் முடிச்சுட்டு, 2001-ம் வருஷம் சென்னைக்கு வந்து போல்ட்- நட் தயாரிக்கும் கம்பெனியில் 1,500 ரூபாய் சம்பளத்துக்கு சூப்பர்வைஸர் வேலையில் சேர்ந்தேன். தயாராகும் எல்லா நட்டுகளும் 3.5 எம்.எம் இருக்கானு சோதிக்கும் வேலை. அதைச் சிறப்பா பண்ணேன்னு பதவி உயர்வும் கொடுத்தாங்க. ஆனா, வேலை செம போர். நாலே மாசத்துல உசிலம்பட்டிக்கு ஓடிட்டேன்.

நான் கொஞ்சம் பெயின்டிங் பண்ணுவேன்; டிசைன் போர்டுகள் வரைய ஆரம்பிச்சேன். ஃப்ளெக்ஸ் பேனர்கள் வந்து அந்தத் தொழிலை நசுக்க, கேமராவைக் கையில் எடுத்தேன். அங்கே தேனி ஈஸ்வர் மாதிரி ஒரு சிலர்தான் போட்டோகிராஃபியை ஒரு கலையா பண்ணுவாங்க. அதைப் பார்த்துப் பார்த்து நானும் போட்டோஸ் எடுத்தேன்.

ஒருமுறை கேரளாவுக்கு டூர் போனப்ப, சாதாரண ஒரு கேமராவில் படம் எடுத்தேன். பிரின்ட் போடக் கொடுத்திருந்த லேபில் அதைப் பார்த்த ஒரு போட்டோகிராஃபர், 'எந்த கேமராவில் எடுத்தீங்க? ஃபிரேம் எல்லாம் சூப்பரா இருக்கு’னு சொன்னார். பெயர் தெரியாத, முகம் நினைவில்லாத அவரோட பாராட்டு, எனக்கு அப்போ பெரிய உற்சாகமா இருந்தது. பிறகு, பகவான்னு ஒரு போட்டோகிராஃபர்கிட்ட சேர்ந்தேன். அப்புறம் சிவப்பிரகாசம்னு ஒரு போட்டோகிராஃபர்கிட்ட வேலைக்குச் சேர்ந்ததுதான் எனக்குப் பெரிய திருப்புமுனை. 'நீ கல்யாண போட்டோ எடு. அதுல, ஒரு ரோலுக்கு அஞ்சு போட்டோ உன் தேவைக்கு எடுத்துக்கோ’னு சொன்னார். இப்படி ஒவ்வொரு ரோல்லயும் அஞ்சஞ்சா எனக்குப் பிடிச்ச விஷயங்களை எடுக்க ஆரம்பிச்சேன். அதை பிரின்ட் போட்டு ஒவ்வொரு படத்தின் ப்ளஸ், மைனஸ் சொல்லி அவரே வித்தையைக் கத்துக்கொடுத்தார்.

   "சினிமா பார்க்கிறதை குறைச்சிட்டே இருக்கேன் !”

சினிமாவுல சேர்ற ஆசை வந்தப்ப அவரே சில தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார். அதன் மூலமா ஒளிப்பதிவாளர் ஆர்.திவாகர்கிட்ட சேர்ந்தேன். 'பார்த்திபன் கனவு’, 'சதுரங்கம்’ படங்கள்ல அவர்கிட்ட வேலை பார்த்தேன். அப்புறம் 'பூ’ படத்தில் அசோசியேட் கேமராமேன். தனியா படம் பண்ணலாம்னு நினைச்சப்போ, ஃபிலிம் ரோல் காலம் முடிவுக்கு வந்து டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடங்கி இருந்தது. அதனால ராஜீவ் மேனன் சாரின் 'மைண்ட் ஸ்க்ரீன் இன்ஸ்டிட்யூட்’ல சேர்ந்து ஒளிப்பதிவு கத்துக்கிட்டேன்.''

''ஒளிப்பதிவாளராகலாம்னு வந்தீங்க. ஆனா, இயக்குநரானது எப்படி?''

''இயக்குநர் ஆசை எப்பவுமே மனசுல இருந்தது இல்லை. கார்த்திக் சுப்புராஜ், நலன் குமரசாமி போன்ற பல நண்பர்களின் குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணிட்டிருந்தேன். அப்ப 'விண்ட்’னு குறும்படத்துக்கான ஐடியா யோசிச்சு வெச்சிருந்தேன். 'நான் கேமரா பண்றேன். நீங்க இயக்குறீங்களா?’னு ஒவ்வொரு நண்பர்கள்கிட்டயும் அந்த லைன் சொல்லி திரைக்கதை பண்ணச் சொன்னேன். ஆனா, அவங்க எல்லாரும் வேற வேற வேலைகள்ல இருந்தாங்க. அதனால நானே படத்தை எடுத்துரலாம்னு முடிவெடுத்து, விஜய் சேதுபதியை வெச்சு அந்தக் குறும்படத்தை எடுத்தேன். அதுக்கு நல்ல வரவேற்பு.

'மீண்டும் ஒரு புன்னகை’னு ஒரு குறும்படம் பண்ணேன். அதுக்கும் நல்ல வரவேற்பு. இதெல்லாம்தான் ஒரு படத்தை இயக்கலாம்னு நம்பிக்கை கொடுத்தது. நடுவுல திருமணம்... அதுல சில பிரச்னைகள்னு ரெண்டு வருஷங்கள் என் பையனோடு மட்டுமே இருக்கவேண்டிய சூழல். அது ரொம்ப மோசமான காலம். அந்தத் துயரமான காலத்தில் யோசிச்சு உருவாக்கின கருதான் 'காக்கா முட்டை’!''

''படத்தில் போறபோக்குல நீங்க உணர்த்த விரும்பிய விஷயங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைச்சதா?''

''அபாரமா கிடைச்சது. வீட்டுக்கு வெளியே ஒரு பல்பின் மேலே தொங்கும் கோலா பாட்டில், ஆஸ்பெஸ்டாஸ் கூரை மேல் ஓடாத சைக்கிள், அதுக்கு மேலே வேகமா ஓடும் மேகம், வீட்டில் பாட்டியின் சின்ன வயசு போட்டோ மட்டுமே இருப்பது, நாய்குட்டி விலை போகாதுனு தெரிஞ்சதும் அதைக் கீழே விடுறதுனு எல்லா விஷயங்களும் பலருக்குப் புரிஞ்சிருக்கு. படம் முழுக்கவே பெரிய பையன் மட்டும்தான் கரி எடுப்பான். சின்னவன் சும்மா கூடப் போயிட்டு வருவான். ஆனா பாட்டி இறந்த பிறகு, சின்னவன் படுக்கையில சிறுநீர் கழிக்கிறதை நிறுத்தின பிறகு, ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பையைத் தூக்கிட்டு கரி அள்ளப் போவாங்க. இப்படி நிறைய விஷயங்களை குட்டிக் குட்டியா சேர்த்திருந்தேன்.''

   "சினிமா பார்க்கிறதை குறைச்சிட்டே இருக்கேன் !”

''மறக்க முடியாத பாராட்டுக்கள்?''

''படம் ரிலீஸான அன்னைக்குச் சாயங்காலம் என் அக்கா மதுரையில ஒரு ஆட்டோவுல போயிருக்காங்க. 'காக்கா முட்டை’ பட டைரக்டரோட அக்கானு தெரிஞ்சதும் அந்த ஆட்டோக்காரர் அக்காகிட்ட காசு வாங்கலையாம். அக்கா போன்ல சொல்லி அழுதுச்சு.

அப்புறம் விகடன் விமர்சனம். ஒரு முதல் பட இயக்குநருக்கு விகடன் விமர்சனத்துல 60 மார்க் கிடைச்சது எவ்வளவு பெரிய சந்தோஷம்னு எப்படிச் சொல்ல முடியும்னு தெரியலை. விமர்சனத்துல 'நம் சினிமா’னு எழுதியிருந்தது மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்தது.''

''இந்தப் படம் சொல்ற செய்தியை ரசிகர்கள் கடைப்பிடிப்பாங்கனு நம்பிக்கை இருக்கா?''

''நம்ம ஊர்ல பெரும்பாலான குழந்தைகளுக்கு வயசுக்கான வளர்ச்சி இல்லை. ஊட்டச்சத்து குறைபாடு. அதான் உயரமா, போஷாக்கா வளர பொருள் விக்கிறோம்னு விளம்பரம் பண்றாங்க. 'நீங்க வாழ்க்கையில ஜெயிக்கணும்னா இதைக் குடிங்க... வளருவீங்க’னு சொல்றது சரியா? 'நீங்க சிவப்பாகணுமா... இந்த க்ரீம் தடவுங்க’னு பல வருஷமா வித்துட்டே இருக்காங்களேனு நம்ம மக்களுக்குப் புரியலையா? இதைத்தான் 'காக்கா முட்டை’ மூலமா சொல்லணும்னு நினைச்சேன். ஆனா, அதெல்லாம் எத்தனை பேருக்குப் போய் சேர்ந்துச்சுன்னு தெரியலை. படத்தைப் பார்த்துட்டு, 'ஜாலியா இருந்துச்சு... நல்ல படம்’னு சொல்லிட்டு மறுபடியும் அந்த மாதிரி விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்தா, இந்தப் படத்தால எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஆனா, நிறையப் பேர் போன் பண்ணி 'என் குழந்தை, 'இனி பீட்சா வேணாம்பா’னு சொல்லுச்சு’னு சந்தோஷமா சொல்றாங்க. அது ஒரு சின்ன திருப்தி.''

'' 'காக்கா முட்டை’ பட ரிலீஸுக்கு முன்னாடியே அடுத்த படத்தையும் முடிச்சுட்டீங்களாமே!''

'' 'காக்கா முட்டை’க்குப் பிறகு அடுத்த படத்தையும் அதே மாதிரி எதிர்பார்ப்பாங்களேனு தோணுச்சு. ஆனா, கடைசி வரை நான் ஒரு ஃபிலிம் மேக்கரா வேற வேற ஜானர்ல படங்கள் பண்ண ஆசை. அதான் 'காக்கா முட்டை’க்கு நேரெதிரா ஒரு கதையை எடுத்து சினிமா பண்ணிட்டேன். ஒரு கொலையும் அது சார்ந்த சம்பவங்களும்தான் படம். 'குற்றமே தண்டனை’னு பேர். விதார்த் நடிச்சிருக்கார். ஒரு சிறுகதையை அடிப்படையா வெச்சு எழுதின கதை. இதுபோல தமிழ் இலக்கியங்கள்ல இருந்து சில கதைகளை சினிமா ஆக்கணும்னு ஆசை.''

''புத்தகம் நிறைய வாசிப்பீங்களா... சினிமா நிறையப் பார்ப்பீங்களா?''

''எனக்கு ரெண்டும் பிடிக்கும். ஆனாலும் சினிமா பார்க்கிறதைக் குறைச்சிட்டே இருக்கேன். அதுவும் கமர்ஷியல் படங்கள் பார்க்கிறது இல்லைனு தீர்மானமா இருக்கேன். ஏன்னா, நிறையப் படங்கள் பார்த்தா அது நிச்சயம் நமக்குள் பாதிப்பை உண்டாக்கும். அதனால நல்ல சினிமாக்களை மட்டும் பார்க்கலாம்னு எண்ணம். அதே சமயம் உலக சினிமாக்கள் பார்க்கிறதால மட்டும் நல்ல சினிமா எடுத்துரலாம்னு நான் நம்பலை. வாசிப்புப் பழக்கம் என்னை உற்சாகமா வெச்சிருக்கும். ஏன்னா வாசிப்பு அனுபவம், நம்ம ரசனையை அடுத்தடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோகும்; ஒரு வாழ்க்கையைப் படிக்கக் கொடுக்கும். நாம் நேசிச்சு வாசிச்சதை சினிமா மொழியில் சமரசம் இல்லாமல் எடுத்தால் எல்லா படங்களும் 'காக்கா முட்டை’தான்!''