Published:Updated:

இனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்

இனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்

'இனிமே இப்படித்தான்... அக்காங்’ என, கெத்தாக 'ஹீரோ’ சவாரி அடித்திருக்கிறார் சந்தானம்! 

அதே ரைமிங் காமெடி, அதே டைமிங் பன்ச், அதே மொக்கை ஃப்ரெண்ட்ஸ், அதே குடும்ப சென்டிமென்ட்... ஆனால், ஹீரோ மட்டும் சந்தானம்!

'வெட்டி ஆபீஸர்’ சந்தானத்துக்கு, மூன்று மாதங்களுக்குள் திருமணம் முடிக்கவேண்டிய கட்டாயம். வீட்டில் பார்க்கும் பெண்களைப் பிடிக்காமல், காதல் கண்மணியைத் தேடுகிறார் சந்தானம். திடுக்கென அவருக்கு வீட்டில் பார்த்த பெண்ணும் செட்டாக, காதலித்த பெண்ணும் ஓ.கே சொல்ல... குறித்த முகூர்த்தத்தில் யாருக்கு தாலி கட்டுகிறார் என்பதே அமளிதுமளி காமெடி!

'ஏன்... ஹீரோக்கள் (காதலில்) ஜெயிக்க உதவிட்டே இருக்கணும்? அதை வெச்சு நானே ஜெயிக்க மாட்டேனா (சினிமாவில்!)?’ எனத் துணிந்து களம் இறங்கிவிட்ட சந்தானம், 'ஸ்லிம் அண்ட் ட்ரிம்’மாக செம கூல். பெற்றோரிடம் எகிறுவதும் நண்பர்களிடம் தொகுறுவதும் 'ஹை ஹீல்ஸ்’ மாட்டி ஆக்ஷனில் 'எல் போர்டு’ அடிப்பதுமாக ஹீரோ கேரக்டரில் வெரைட்டி காட்டுகிறார்.

'ஹீரோ’ சந்தானம் அடக்கிவாசிக்க, உதார்விட்டு உதை வாங்கும் காமெடியனாக வூடுகட்டி அடிக்கிறார் தம்பி ராமையா! 'மாப்ள... மாப்ள...’ என்றபடி, மச்சானுக்குப் பயந்தபடி, மிலிட்டரியிடம் பரேடு வாங்கியபடி அள்ளு கிளப்புகிறார். அழகாக உலவுவது... சந்தானத்தைக் காதலிப்பது... ஆஷ்னா, அகிலா இருவருக்குமான கனகச்சித பியூட்டி டியூட்டி.

இனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்

மிலிட்டரிமேனிடம் கை கொடுக்கும்போது எல்லாம் 'கரும்பு மெஷினுக்குள்ள கைவிட்ட மாதிரி’ சந்தானமும் தம்பி ராமையாவும் உதறுவது, ஹோட்டலில் மனோகருடன் சந்தானம் அடிக்கும் லூட்டி என, படம் தேங்கும்போது எல்லாம் 'காமெடி கியர்’ தட்டி நகர்த்துகிறார்கள்.

தமிழ் சினிமா சில காலம் மறந்திருந்த 'ஈவ் டீசிங்’ கலாசாரத்தை வைத்துதான் அசட்டு பன்ச் அடிக்க வேண்டுமா படத்தின் ஹீரோ? படத்தில் பெண்களை இந்த அளவுக்குக் கேலி, கிண்டல் செய்திருப்பது டூ மச்! 'பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்’டாக சந்தானம் ஜோடி தேடலாம். ஆனால், தன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நாயகிகளுக்கு மட்டும் அறிவுரைகளைப் போதிப்பது சரியா? வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் படங்களைப் பார்க்க பெண்களை அழைக்கும் அக்கறையும் கரிசனமும், அவர்களைக் காட்சிப்படுத்துவதிலும் தேவை!

இனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்

படத்தின் ரகசிய ஹீரோ, காமெடி ஒன்லைனர்கள்.  'அவன் லவ் பேர்ட்ஸையே தனித்தனிக் கூண்டுல வளர்க்கிறவன்’, 'என்னங்கடா மண்டை இது... மழை பேஞ்சா வைக்கிற கல்லு மாதிரி’, 'ஓஓஓனு கத்திட்டே இருக்கான்ப்பா... ஜெய்ஹிந்த் பார்ட்-3 ஓடிட்டு இருக்கு’ என வசனங்களில் செம கிச்சுகிச்சு. நடுவே, 'ஏன்டா அவார்டு ஃபங்ஷனுக்கு வந்த மாதிரி அழுவுற?’ என 'யாருக்கோ’ பன்ச் வேறு!

கட்டக்கடைசியில் சந்தானத்துக்கு வில்லன் யார் எனப் பார்த்தால்... அட, தம்பி ராமையா!

இப்படி ஹீரோவும் வில்லனும் செம லந்து கொடுத்தால், இனிமே இப்படியே இருக்கலாம்போல!

- விகடன் விமர்சனக் குழு