Published:Updated:

ரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்

ரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்

அதான் தலைப்பே உணர்த்துகிறதே... காதல்தான் கதை!

காதலிக்கும் மனம் இருந்தால் போதும்... வாழ்ந்துவிடலாம் என்கிறார் 'ஹைட்டு வெயிட்டு’ ஜெயம் ரவி. 'காதலிக்கவே பணம் இருந்தால்தான் ஆச்சு என்கிறார் 'க்யூட்டி பியூட்டி’ ஹன்சிகா. இறுதியில் என்ன நடக்குமோ, அதுவே நடக்கிறது. இடையில் ரவி-ஹன்சிகாவின் 'டாம் அண்ட் ஜெர்ரி’ கலாட்டா!

'ரிச் பாய்’ என நினைத்து 'ஜிம் பாய்’ ரவியைக் காதலிக்கிறார் ஹன்சிகா. உண்மை தெரிந்ததும் விலகி, வசதியான குடும்பப் பையனுடன் நிச்சயம் செய்துகொள்கிறார். ஆனால், அந்தக் கல்யாணம் நல்லபடியாக நடக்க, தனக்கு ஹன்சிகாபோலவே ஒரு பெண்ணை செட் செய்யவேண்டும் என ரவி அடம்பிடிக்க... ஹன்சிகாவும் ஆள் பிடிக்க... காதலின் வலிமை சொல்லும் க்ளைமாக்ஸுடன் சுபம்!

கிளாசிக் காதல் காட்சிகளின் அணிவகுப்பு மூலம் டைட்டிலிலேயே காதல் ஜுரத்தைப் பற்றவைக்கிறார் அறிமுக இயக்குநர் லக்ஷ்மன். ஆனால், கதையில்தான் அது பற்றிக்கொள்வேனா என்கிறது. சம்பிரதாய சம்பவங்களுடன் ரவி-ஹன்சிகா இடையே பூக்கும் காதலில் எந்த கரன்ட்டும் இல்லை!

ரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்

காதலர்கள் இல்லை. ஆனால், ரவி-ஹன்சிகா இடையிலான கெமிஸ்ட்ரிதான் படத்தின் 'டண்டணக்கா’ கெத்து. ஹன்சிகா... அத்தனை ஃப்ரெஷ்! திமிர் தெனாவெட்டும் குறும்புச் சேட்டையுமாக ஈர்க்கிறார். அவரது விழி மொழிகளுக்குக் குரல் மொழியால் இனிமை சேர்க்கிறது சவீதாவின் பின்னணிக் குரல். முன்பாதி முழுக்க போங்கு வாங்கிவிட்டு, பின்னர் 'ஐ வான்ட் மோர் எமோஷன்’ எனக் கலாய்க்கும்போது மெர்சல் செய்கிறார் ரவி. பௌர்ணமி தருணத்துக்கான ரிகர்ஸலில் இருவரிடமும் 'பச்சக்... பச்சக்’ நெருப்பு. 'என்னது ஃபார்ம் ஹவுஸா... ரெண்டு பேருமா?’ எனத் தோன்றும் ஒரே காட்சியிலும் சிக்ஸர் வெளுக்கிறார் ஆர்யா.

ரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்

'ரோமியோ-ஜூலியட்’ என, காதல் புகழ் பாடும் ஜோடியின் பெயர் மட்டும் போதுமா? படத்தில் ஜோடிகள் இடையே காதலுக்கான அந்த ஃபீல் வேண்டாமா? 'காசு இருந்தால்தான் காதலிப்பேன்’ என்கிறார் ஹன்சிகா.

'நீ யாரையும் கட்டிக்கோ... எனக்கு உன்னைப்போல ஒரு ஃபிகர் பிடிச்சுக் கொடு’ என்கிறார் ரவி. அதிலும் அழிச்சாட்டியமாக ஒரு பெண்ணின் கண், உதடுகளை ஹன்சிகாவுடன் ஒப்பிடுகிறார். பெண்கள் என்ன கார், பைக்கா பாஸ்... அழகு, நிறம் பார்த்துத் தேர்ந்தெடுக்க? தனக்கு நிச்சயிக்கப்படும் வம்சி கிருஷ்ணாவை, ஹன்சிகா நிராகரிக்கும் காரணம்... சுத்த சின்னப்புள்ளத்தனம்!

இமான் இசையில் 'டண்டணக்கா...’ ரிப்பீட் சாய்ஸ். எஸ்.சௌந்தரராஜன் ஒளிப்பதிவு, கிரீட்டிங் கார்டு பதிவு.

இடையில் சில சஸ்பென்ஸ் தவிர, திரைக்கதையின் மற்ற அனைத்துத் திருப்பங்களும் எதிர்பார்ப்பில் இருந்து இம்மியும் பிசகாமல் அரங்கேறுகின்றன.

அதனாலேயே 'மற்றும் பல’ காதல் சினிமாக்கள் வரிசையில் இடம்பிடிக்கிறான் இந்த ரோமியோ!

- விகடன் விமர்சனக் குழு