'காக்கா முட்டை’ பாட்டியை மறக்க முடியுமா? காக்கா முட்டை எடுப்பதற்காக அந்தப் பையன், அம்மாவுக்குத் தெரியாமல் சோற்றை அள்ளி பேன்ட் பாக்கெட்டில் திணித்துக்கொள்ளும்போது, பாட்டி கொடுக்கும் ரியாக்ஷன் அத்தனை அழகு. எங்கே இருக்கிறார் பாட்டி? எனத் தேடிச்சென்றால், ''50 வருஷமா இந்த சினிமாக்குள்ளதான் கெடக்கேன். இப்பத்தான் வெளிச்சம் கிடைச்சிருக்கு'' என்கிறார் வெற்றிலையை மென்றபடி. இந்தப் பாட்டியின் பெயர் சாந்திமணி.

''என் உண்மையான பேரு சரோமி தைரியம். பேருக்கு ஏத்த மாதிரி தைரியமான ஆளுதான். பிறந்து வளர்ந்தது எல்லாமே சேலம். என்னோட பிறந்தவங்க ஆறு பேர். எல்லாரும் படிச்சு நல்ல நிலையில, பெரிய பெரிய வேலையில இருக்காங்க. எனக்கு மட்டும் சின்னப் பிள்ளையிலேர்ந்து சினிமா மேல கொள்ள ஆசை. அப்போ எங்க தெருவுல தெருக்கூத்து நடக்கும். அதைப் பார்த்துப் பார்த்து, எனக்கு சினிமா ஆசை அதிகமாயிடுச்சு. எப்படியாவது பெரிய சினிமா நடிகையா ஆகிரணும்னு ஒரு வெறி. சுத்தி இருக்கிறவங்க எல்லாரும், 'மெட்ராஸுக்குப் போனாதான் சினிமாவுல நடிக்க முடியும்’னு சொன்னாங்க. ஒருநாள், எங்க அக்கா வேலைக்குப் போய் சம்பாதிச்சு வெச்சியிருந்த 400 ரூபாய் சம்பளப் பணத்தை எடுத்துக்கிட்டு ரயில் ஏறிட்டேன். சினிமாவுல நடிகையாகி, அவர்கூட சேர்ந்து நடிக்கணும், இவர்கூட சேர்ந்து நடிக்கணும்னு ஏகப்பட்டக் கனவுகள். ஆனா, மெட்ராஸ்ல எனக்குத் தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்கன்னு ஒருத்தரும் கிடையாது. நடிப்பு ஆர்வத்துல அதெல்லாம் மனசுல இல்லை.

சேலத்துல இருந்தப்போ அங்கே மாடர்ன் தியேட்டருக்கு எஸ்.ஆர்.ஜானகி அம்மா வருவாங்க. அப்போ பழக்கம். சென்னை வந்ததும் அவங்க வீட்டை விசாரிச்சு, போய் நின்னேன். எனக்கு முழு ஆதரவு கொடுத்தது அந்த அம்மாதான். 'முதல்ல நாடகத்துல நடி. அப்பதான் நடிப்புன்னா என்னன்னு தெரியும்’னு சொல்லி 'குடந்தை மணி நாடக கம்பெனி’யில் சேர்த்துவிட்டாங்க. மேடையேறி பேசவே அவ்வளவு பயம் எனக்கு. அதனாலேயே பீச்சுல போய் உட்கார்ந்து, டயலாக்கை சத்தம்போட்டுப் பேசிப் பழகச் சொல்வார் குடந்தை மணி. அவர் அப்போ, நாடகங்களுக்கு அசோசியேட் ரைட்டரா இருந்தார்... நடிக்கவும் செய்வார். ஒரு நாடகத்துல அவர் ராஜாவாவும் நான் ராணியாவும் நடிச்சோம். ரெண்டு பேரும், கிட்டத்தட்ட 20 நாடகங்கள்ல சேர்ந்து நடிச்சோம். ஒரு கட்டத்துக்குப் பிறகு கம்பெனியில பெரிய நஷ்டம். யாருக்கும் சம்பளம் கொடுக்க முடியாத நிலைமை. நடிப்பு கத்துக்கிற ஆர்வத்துல நான் சம்பளமே வாங்காம நடிச்சேன்.

இதுக்கு இடையில எனக்கும் குடந்தை மணிக்கும் காதல். ரெண்டு பேரும் வேற, வேற மதம். ரெண்டு பேர் வீட்டுலயும் கடுமையான எதிர்ப்பு. அவர் என் பேரை 'சாந்தி’னு மாத்தி, எப்படியோ பேசி ஒருவழியா அவங்க வீட்டுல சம்மதம் வாங்கிட்டார். கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கல்யாணத்துக்குப் பிறகு 'நமக்கு சினிமாவே வேண்டாம்’னு அவரோட சொந்த ஊரான கும்பகோணத்துக்கு அழைச்சுட்டுப் போனார். 15 வருஷங்களா சினிமாவைவிட்டே விலகியிருந்தேன். ஆனா, மனசுக்குள்ள சினிமா ஆசை மட்டும் விட்டுப்போகலை. எந்த நேரமும் அந்த நினைப்புதான். 'சினிமாவுல நடிக்கணும்னு வந்துட்டு இப்படி ஏதோ ஒரு ஊர்ல புருஷன், குடும்பம்னு சிக்கிக்கிட்டோமே’னு தோணும். எத்தனையோ நாள் அழுதிருக்கேன்.

கல்யாணமாகி அஞ்சு வருஷமா எனக்குக் குழந்தையே இல்லை. அப்புறம் ஒரு பெண் குழந்தை பொறந்துச்சு. அடுத்தடுத்து நாலு பிள்ளைங்க. நாலையும் வளக்கிறதுதான் வாழ்க்கைனு ஆயிடுச்சு. அதை ஏத்துக்கிட்டு வாழ ஆரம்பிச்சுட்டேன். ஆனா, என் புருஷனோட கொடுமையைத் தாங்க முடியலை. குடும்ப வறுமை, சம்பாதிக்க முடியாத கோபத்தை எல்லாம் என் மேல காட்ட ஆரம்பிச்சார். தினசரி அடி. அவருக்கு சினிமாவுல டைரக்டர் ஆகணும்னு ஆசை. 'நீ என்கூட சேர்ந்ததுனால தான் என்னால சினிமாவுல ஜெயிக்க முடியலை. தரித்திரம் புடிச்சவ’னு போட்டு அடிப்பார். 'பிள்ளைகளை விட்டுட்டு எங்கேயாவது ஓடிப்போயிடு’னு அடிப்பார். எனக்கு ஆதரவாப் பேச அந்த வீட்டுல யாருமே இல்லை. எங்க வீட்டுக்கும் போக முடியாது. சொல்பேச்சுக் கேட்காம சினிமாவுக்கு ஓடிப்போனவ, எந்த மூஞ்சியோட அங்கே போய் நிற்கிறது? ஒருநாள், பிள்ளைகளை அவர்கிட்ட விட்டுட்டு மெட்ராஸுக்கு ரயில் ஏறினேன். முதல் தடவை சேலத்துல இருந்து மெட்ராஸுக்குக் கிளம்பினப்போ என் மனசு முழுக்க சினிமா ஆசை நிரம்பி இருந்துச்சு. ரெண்டாவது தடவை கும்பகோணத்துல இருந்து ரயில் ஏறினப்போ, எனக்கு சினிமாவைத் தவிர வேற வழி இல்லை.

மெட்ராஸ் வந்து கோடம்பாக்கத்துல ஏ.எஸ்.மணிங்கிறவர் வீட்டுல தங்கி, சான்ஸ் தேட ஆரம்பிச்சேன். துணை நடிகையா, கூட்டத்துல ஒரு ஆளா வாய்ப்பு கிடைக்கும். அப்போ தமிழ், தெலுங்குனு எல்லா படங்களும் மெட்ராஸ்லதான் எடுப்பாங்க. அதனால நிறைய வேலைகள் கிடைக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்கள்ல நடிச்சிருக்கேன். அந்தக் காலத்துல நான் நல்லா ஹைட், வெயிட்டா இருப்பேன். அதனால என்னை ஸ்டன்ட் நடிகையா மாத்திட்டாங்க. பல நடிகைகளுக்கு டூப் போட்டிருக்கேன். குதிரையை ஓட்டக் கத்துக்கிட்டு குதிரை ஓட்டுற சீன்ல நடிச்சிருக்கேன். ஒரு நாளைக்கு 500 ரூபாய் வரைக்கும் தந்தாங்க. என்ன பணம் கிடைச்சாலும் ஏ.எஸ்.மணிகிட்ட கொடுத்துடுவேன். அவர்தானே தங்க இடம் கொடுத்து ஆதரிச்சவர்! குழந்தைங்க வளர ஆரம்பிச்சதும் ஒவ்வொருத்தரா என்கிட்ட வர ஆரம்பிச்சாங்க. பிள்ளைகளுக்கு மட்டும் தனி வீடு பார்த்துக் குடிவெச்சுட்டு, நான் தொடர்ந்து கோடம்பாக்கத்துலயே தங்கியிருந்து நடிச்சேன். எத்தனையோ படத்துல கும்பல்ல ஒருத்தரா நடிச்சிருக்கேன். யாருக்கும் என்னை அடையாளம் தெரியாது'' என, தன் அரை நூற்றாண்டு வரலாற்றை மென்மையான குரலில் பகிர்ந்துகொள்கிறார் சாந்திமணி பாட்டி.

எம்.ஜி.ஆர் காலத்தில் தொடங்கி தனுஷ் காலம் வரையிலும் தமிழ் சினிமாவின் கதவுகளை இடைவிடாமல் தட்டிக்கொண்டிருக்கும் பாட்டியை அடையாளப்படுத்தியிருக்கிறது 'காக்கா முட்டை’.

''நடிகர் சங்கத்துல மெம்பரா இருக்கிறதால பாட்டி வேஷம்னு சொல்லிக் கூப்பிட்டாங்க. என்னோடு சேர்த்து மொத்தம் 27 பேர் வந்திருந்தாங்க. எல்லாரையும் வரிசையா நிக்கவெச்சு மணிகண்டன் என்னை செலெக்ட் பண்ணார். ஷூட்டிங்ல கலந்துக்கிட்டப்போதான் எனக்கு மட்டும் கேமரா வெச்சாங்க. எனக்கு டயலாக் எல்லாம் குடுத்தாங்க. அது நிஜமா, பொய்யானு எனக்கு நம்பவே முடியலை. ஷூட்டிங் முடிஞ்சு ஒரு வருஷம் கழிச்சும் படம் ரிலீஸ் ஆகலைன்னதும் ரொம்பக் கஷ்டமாப்போச்சு. சரி, இதெல்லாம் சினிமாவுல சகஜம்னு நினைச்சு விட்டுட்டேன்.

என் மூத்த பொண்ணு பேர் கற்பகம். அவளுக்கும் என்னைப் பார்த்து சினிமா மேல ஒரு ஆசை. சின்னச் சின்ன கேரக்டர்ல நடிச்சா. டப்பிங் பேசப் போனா. அவளுக்கு திடீர்னு உடம்பு சரியில்லாமப்போச்சு. ஆஸ்பத்திரியில சேர்த்துப் பார்த்தோம். ஆனா, காப்பாத்த முடியலை. பெத்தப் பிள்ளையோட சாவை என் கண்ணால பார்த்தேன். இன்னைக்கு நான் நடிச்ச 'காக்கா முட்டை’ படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆகி எல்லாரும் பாராட்டுறாங்க. இதைப் பார்க்க என் பொண்ணு இல்லாமப்போயிட்டா'' என்று, கன்ன மேட்டில் வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார்.

'' 'காக்கா முட்டை’ ரிலீஸ் ஆன முதல் நாளே, மினி உதயம் தியேட்டர்ல போய், பேரன், பேத்தி களோடு பார்த்தேன். என்னைத் திரையில பார்க்கும்போது என்னால சந்தோஷத்தைக் கட்டுப்படுத்த முடியலை. நான் நடிக்கிறதை மக்கள் ரசிச்சு, கை தட்டுறதைப் பார்த்து அப்படியே மிதக்குற மாதிரி இருந்துச்சு. படம் முடிஞ்சு வெளியில் வந்ததும் அப்படியே என்னை ரவுண்டு கட்டித் தூக்கிட்டாங்க. 'பாட்டி இங்க வாங்க’னு பிடிச்சு இழுத்து, கூட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டாங்க. இப்போ செத்துப்போனாக்கூட நிம்மதியா சாவேன்; அவ்ளோ சந்தோஷம். எனக்கு இப்போ 76 வயசு. 15 வயசுல சினிமா ஆசை வந்துச்சு. ஒரு கை தட்டலுக்காக

50 வருஷமா சினிமாவுல போராடியிருக்கேன். இத்தனை நாள் பட்ட கஷ்டம் எல்லாம் இப்போ கண்ணுக்குத் தெரியலை. நினைச்சதை அடைஞ்சுட்டா அதுக்கு மேல என்ன இருக்கு? சாகுற வரைக்கும் நடிக்கணும். அதுதான் என்னோட ஒரே ஆசை!''