Published:Updated:

எல்லையில... அல்லையில... கொல்லையில ..!

தோட்டா ஜெகன், ஓவியம்: கார்த்திகேயன் மேரி

எல்லையில... அல்லையில... கொல்லையில ..!

தோட்டா ஜெகன், ஓவியம்: கார்த்திகேயன் மேரி

Published:Updated:

'நானும் மதுரக்காரன்தான்டா...’ என விஷால் வேட்டியை மடிக்க, 'எலே பசுபதி... விடுறா வண்டிய’ என சரத்குமார் போட்டி புடிக்க, கோலிவுட்டுக்குள்ள ஒரே குண்டக்க மண்டக்க! 

'நைட்டுனா அதுக்கு நிச்சயமா விடிவு உண்டு... ஃபைட்டுனா நிச்சயமா அதுக்கு முடிவு உண்டு’னு பேசித் தீர்க்க அழைக்கிறார் நம்ம ஆதீனம். 'ஏன்டா திங்குறீங்க மேகி... காலையில கரைச்சுக் குடிங்க ராகி’னு சங்ககால பெருமையைப் பேசி சென்டிமென்ட்டா செட்டில்மென்ட் முடிக்க வர்றாங்க சரத்குமாரும் ராதாரவியும். 'பழைய அம்பாசிடர் காரை எல்லாம் நெளியவிடு... ஆடி காரு அட்டகாசமா வருது வழியவிடு’னு புது குரூப்புக்குப் பேச வர்றாங்க விஷாலும் கார்த்தியும். இனி... கச்சேரி ஸ்டார்ட்ஸ்!

ராதாரவி: ''அய்யா பெரியவங்களே... எத்தனையோ படத்துல நாட்டுக்கு பங்கம் வரக் கூடாதுனு போராடினவரு எங்க சரத். அவரால மட்டும்தான் நடிகர் சங்கத்துக்காகப் போராட முடியும். கழுத்து நரம்பு புடைக்க, கன்னச் சதை துடிக்க, முஷ்டியை மடக்கி மூஞ்சில குத்துனா, அடியாளுங்க எல்லாம் ஆங்கிரிபேர்டுகிட்ட அடி வாங்கின பன்னிக்குட்டிங்க மாதிரி சிதறிப்போவாங்க; டெம்பிள் ரன்ல கரடி வந்து கழுத்தைப் புடிச்ச மாதிரி பதறிப்போவாங்க. இப்படிப்பட்ட ஆக்ஷன் ஹீரோவை விட்டுட்டு, 'சண்டகோழி’ படத்துல சிக்கன் சாப்பிட சிதம்பரத்துக்குப் போயிட்டு, பஸ்ல பிரச்னை பண்ணிட்டு வந்த தம்பிய எல்லாம் எங்களால தலைவரா ஏத்துக்க முடியாது. 'பசங்க’னு ஃபீல் குட் படம் எடுத்த பாண்டிராஜையே, ஆத்திரக்கார ஆனந்த்ராஜாவாக்கிற இந்தக் கால வெடலைப் பசங்களை நம்பி, சங்கத்தை எப்படிக் கொடுக்கிறது?

எல்லையில... அல்லையில... கொல்லையில ..!

ஆதீனம்: ''தம்பி, ராதா சொல்றதும் நியாயமாத்தான் இருக்கு. தலன்னா ஹம்பிள், தளபதின்னா சிம்பிள், முருகப்பெருமான்னா டெம்பிள்... இப்படித்தானே காலங்காலமா இருக்கு. 'நடிகர் சங்கம்’கிறது, ஒரு லிட்டருக்கு 100 எம்.எல்னு டி.வி.எஸ்-ஸுக்குப் போடுற ஆயில் இல்லப்பா; எம்.ஜி.ஆர்., சிவாஜி சேர்ந்து கட்டிவெச்ச கோயில். அதுக்கு சரத்தான் கரெக்ட். அவருகிட்ட அல்லையில குத்து வாங்கின எல்லைத் தீவிரவாதிங்க எல்லாம், இன்னமும் கொல்லையில போயிக்கிட்டு இருக்காங்கனு பேசிக்கிறாங்க. அதையும் நாம கவனத்துல கொள்ளணும்ல!''

கார்த்தி: ''சாமி, செத்த சும்மா இருங்க. நீங்க 'ஆம்பள’ படம் பார்க்கலையா? ஹெலிகாப்டர் பறக்கிறதுக்கு ஆயிரம் அடி மேல, ஏரோப்ளேன் பறக்கிறதுக்கு ஐந்நூறு அடி கீழ... ஜீப் பேனட் மேல பட்டன் போடாத சட்டை போட்டுட்டுப் பறந்து வந்தவரு எங்க விஷால். அவரைப் பத்தி நாக்கு மேல பல்லு போட்டுப் பேசாதீங்க. பொல்லாப்பு ஆகிரும்!''

ஆதீனம்: ''சொன்னாரு சொன்னாரு சிவபெருமான் கனவுல சொன்னாரு!''

கார்த்தி: ''ஆங்... அது! இந்தப் பக்கம் அந்தப் பக்கம்னு கை ரெண்டு, அதுக்கு நடுவுல முதுகுத்தண்டு, இந்த கேப்புக்குள்ள ஒரு அருவா தோப்பையே வெச்சுக்கிட்டு சுத்துறவரு எங்க விஷால். தலைவராக, இதுக்கு மேல என்ன தகுதி வேணும்? 'தாமிரபரணி’, 'பூஜை’லாம் பார்த்தீங்கள்ல! பேசாம பாஷை வராது, தேய்க்காம தோசை வராது, நடிகர் சங்கத்த அடையாம ஆசை தீராது சார்!''

ஆதீனம்: ''ஆமா தம்பி, நீங்க சொல்றதும் சரிதான். மடத்துல 'பூஜை’னு ஒரு சி.டி கிடந்துச்சு. நானும் ஏதோ சாயந்திர பூஜை, சரஸ்வதி பூஜைனு நினைச்சுப் போட்டா, நம்ம விஷால் தம்பி, கடப்பாரையில இருந்து கார் பம்பர் வரை எது கிடைச்சாலும் எதிர்ல இருக்கிறவன் மண்டையப் பொளந்து கூறு போட்டுட்டு இருந்தாரு. டி.வி-யை மியூட்ல வெச்சும் அவரு கத்துறது காதுக்குள்ள குத்துச்சு தம்பி!''

ராதாரவி: ''என்னய்யா பெருசா ஜீப்புல பறந்தாரு... ஜீன்ஸ்ல நடந்தாருனு பேசிட்டி ருக்கீங்க. 'பருத்திவீரன்’ல பச்சப்புள்ள பிரியாமணியைக் காப்பாத்த முடியலையே உங்களால... நீங்க எப்படி இவ்வளவு பெரிய சங்கத்தைக் காப்பாத்துவீங்க? புல் முளைச்சு பாதை இல்லாமப் போகலாம் தம்பி. ஆனா, ஃபுல் அடிச்சும் போதை இல்லாமப் போகக் கூடாது. தீக்குள்ள விரல வெச்சா சுடும்... டீக்குள்ள விரல வெச்சா கெடும்னு சொல்றேன். உங்களுக்குப் புரியலை... புரியிற மாதிரி சொல்லவா? 'ஐயா’ படத்துல துடைச்சு வெச்ச விளக்காட்டம் நாங்க அறிமுகப்படுத்தின நயன்தாராவை, 'சத்யம்’ படத்துல சிங்கிள் பாட்டு சிலுக்காட்டம் உரிச்சுவெச்ச நீங்க எப்படி இந்தச் சங்கத்தைக் கட்டிக் காப்பாத்துவீங்க?''

விஷால்: ''நயன்தாராவை விடுங்க...

சரத் சார் மட்டும் 'அர்ஜுனா அர்ஜுனா... அம்பு விடு அர்ஜுனா...’னு அதிரம்பள்ளி அருவியே அதிர்ந்து, அங்க இருந்த குருவிகள் எல்லாம்

எல்லையில... அல்லையில... கொல்லையில ..!

பறந்து போற அளவுக்கு நமீதாவோடு ஆடலியா... இல்ல நக்மாவோடுதான் ஆடலியா? 'சூரியவம்சம்’ படத்துல தேவயானி டிரைவருக்குத் தப்பான வழி சொன்ன இவரு, எப்படிச் சங்கத்தைத் தெம்பான வழியில கொண்டுபோவாரு? ஹல்லோ... நானும் மதுரக்காரன்தான்!''

சரத்: ''அப்ப நாங்க என்ன மலேசியாக்காரங்களா? 'நாட்டாமை’ படத்துல நான் மட்டும் டீச்சர் வீட்டுக்குப் போகாம இருந்திருந்தா, படம் எப்பவோ முடிஞ்சிருக்கும். நடிகர் சங்கத்துல நீங்க மூக்கை நுழைக்காம இருந்திருந்தா, பிரச்னை எப்பவோ விடிஞ்சிருக்கும். 'தப்பு செஞ்சாரு’னு பெத்த அப்பாவையே 'நட்புக்காக’ படத்துல தள்ளிவெச்சவன் நானு. ஆனா, 'மெட்ராஸ் ஜெயிலைப் பார்க்கணும் சித்தப்பு’னு சொன்ன 'பருத்திவீரன்’ கார்த்தியோடு சுத்துறது நீங்க. ஆரத்தி எடுக்கிற தட்டா இருக்கிறதும்... அதுல விழுற துட்டா இருக்கிறதும் அவங்கவங்க விருப்பம்!''

விஷால்: ''ராதாரவி மட்டும் என்ன பண்ணாரு? 'அண்ணாமலை’ படத்துல இருந்து, 'கூட்டிக் கழிச்சுப் பாரு... கணக்கு சரியா வரும்’னு சொல்லிக்கிட்டே இருக்காரே தவிர, இதுவரை சங்கத்துக் கணக்கை கண்ணுல காமிச்சாரா?''

ஆதீனம்: ''தம்பிகளா... தம்பிகளா... தேரை இழுத்து தெருவுல விட்டாலும் பரவாயில்லை. இப்படி காஸ்ட்லி காரை இழுத்து கடல்ல விடுறீங்களே. உங்க பீட்சாவுக்கு ஆயா சுட்ட தோசையே பரவாயில்லப்பா!''

ராதாரவி: ''ஏம்ப்பா தம்பிகளா... சும்மா பேசணும்னு ஏதாவது எகனைமொகனையா பேசாதீங்க. 'சின்னதம்பி’ படத்துல மனோரமாவுக்கே மாப்பிள்ளை பார்த்துட்டு வந்தவன் நான். அதுவே 'பிசாசு’ படத்துல பெத்த பொண்ணு பேயாக, அதுக்கு வேப்பிலை அடிச்சவன். ஆனா, உங்காளு என்ன பண்ணாரு தெரியுமா? 'ஆயிரத்தில் ஒருவன்’ல ரெண்டு பொண்ணுகளை வெச்சுக்கிட்டு, 'உம் மேல ஆசதான்...’னு உருண்டு புரண்டு ஆடினாரு. நான் அப்படியா கூத்தடிச்சேன்? ஏதோ நாலு படத்துல ரேப்புக்கு டூப் போடாம நடிச்சுட்டா, நான் கெட்டவனாகிடுவனா? ஸ்க்ரீன்ல நம்மளை வில்லனாப் பார்த்தா, பார்க்கிறவங்க கால் நடுங்கணும் தம்பி. உங்க ஃப்ரெண்டு மாதிரி தமன்னா இடுப்பைப் பார்த்துட்டு, கிள்றதுக்கு கை நடுங்கக் கூடாது. ஆங்..!''

விஷால்: ''அவர் பண்ண மத்த விஷயங்களை மறைச்சிருவீங்களே! பெங்களூர்ல பார்த்த பெண்ணை பம்பாய் வரைக்கும் கார்ல கூட்டிட்டுப் போய் பாதுகாப்பா விட்டுட்டு வந்த ஆளு சார் அவர். டப்பா ஆம்னி வேன்ல டக்கர் அனுஷ்காவை வெச்சுக்கிட்டு அஞ்சு சுமோவைத் தாண்டி 500 கிலோமீட்டர் போனவரு அவரு. இப்படி பெண்களுக்காக வாரத்துல ஆறு நாள், வருஷத்துல பாதி நாள் உழைக்கிற எங்களைத் தப்பாப் பேசாதீங்க!''

சரத்: ''ஹேய் கய்ஸ்... மத்ததெல்லாம் விடுங்க.. ராஜ்கிரண் எம்புட்டுப் பெரிய மனுஷன்! நாலு ஆட்டை வெட்டி இலையில கொட்டி வெச்சாலும், ஒரு பார்ட்டையும் மிச்சம் வெக்காம சாப்பிடுறவரு அவரு. ஆடு, கோழி எல்லாம் ரோட்டுல கல்லு பட்டுச் செத்தாலும் சாகலாமே தவிர, ராஜ்கிரண் பல்லு பட்டுச் சாகக் கூடாதுன்னு லட்சியமே வெச்சிருக்கிற அளவுக்கு அபாயகரமான ஆளு. ஃபுல் டைமா நல்லி எலும்பைக் கடிக்கிறதும், பார்ட் டைமா வில்லனுங்க நெஞ்செலும்பை உடைக்கிறதுமா வாழுறவரு அவரு. அப்படிப்பட்டவரையே, 'கொம்பன்’ படத்துல அறைஞ்ச, மரியாதை இல்லாத ஆளுதானே இந்த கார்த்தி!''

கார்த்தி: ''இரும்புல லாரி செஞ்சு கரும்பை ஏத்தலாங்க. ஆனா, கரும்புல லாரி செஞ்சு இரும்பை ஏத்த முடியாது. இப்ப எதுக்கு தேவை இல்லாம பேசறீங்க? வாங்க... தேர்தல்லயே மோதிக்குவோம்!''

ஆதீனம்: ''ஐயோ நிறுத்துங்க. டாஸ்மாக் பார்ல பாட்டு வைக்காத தமிழ்ப் படமா... நடிகர் சங்கத்துக்குள்ள இவ்வளவு கலப்படமா?''

ராதாரவி: ''தோ பார்டா..! நீங்க மட்டும்தான் பன்ச் சொல்வீங்களா... நாங்களும் சொல்வோம்ல! லேடீஸ் சட்டைக்கு பேரு ஜாக்கெட்டு... அதுல இருக்காது பாக்கெட்டு!''

ஆதீனம்: ''அய்யா வேணாம்யா... பன்ச் மட்டும் வேணாம்யா. ஆடி அடங்கிப்போன என் நாடி நரம்பைக்கூடத் தேடிக் குத்துதுய்யா உங்க டயலாக்கு. நான் குழந்தையா வாக்கிங் பழகுறப்ப ஷூட்டிங் ஆரம்பிச்ச 'வாலு’ ரிலீஸ் ஆகட்டும்... தேர்தலுக்கு நல்ல நாளா நான் பார்த்துக் குறிச்சுத் தர்றேன்யா!''