Published:Updated:

இன்று நேற்று நாளை - விகடன் விமர்சனம்

இன்று நேற்று நாளை - விகடன் விமர்சனம்

பிரீமியம் ஸ்டோரி

நிகழ்ந்தபடியே இருக்கும் கடந்த/நிகழ்/எதிர்காலங்களுக்கு 'டைம் மெஷின்’ மூலம் டாக்ஸி ட்ரிப் அடிக்கும் ஜாலி சவாரி! 

ஹாலிவுட் ஸ்பெஷல் 'டைம் மெஷினை’ கோலிவுட்டில் தரை இறக்கி, பட்ஜெட் சவாரி அடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ரவிக்குமார்.

2065-ம் ஆண்டில் ஆர்யா உருவாக்கும் டைம் மெஷின், 2015-ம் ஆண்டில் சோதனை ஓட்டத்தின்போது விஷ்ணு விஷால், கருணாகரன் இருவரிடம் சிக்கிக்கொள்கிறது. லோக்கல்

விஞ்ஞானி மூலம் அதை இயக்கும் வித்தையை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். டைம் மெஷின் மூலம் தொழில்/காதல் என அனைத்து விஷயங்களிலும் 'நல்ல நேரத்தை’ உருவாக்கிக்கொள்கிறார்கள். ஒருகட்டத்தில் அந்த விளையாட்டே வினையாகிவிட, முக்காலமும் இணையும் புள்ளியில் என்ன நடக்கிறது?

இன்று நேற்று நாளை - விகடன் விமர்சனம்

செம ஃபேன்டசி கதை. எந்தக் காலத்துக்கும் செல்ல முடியும் என்ற ஃப்ரீ-ஹிட் வாய்ப்பு கையில் இருந்தாலும், 'ஸ்ட்ரீட் கிரிக்கெட்’போல அடக்கப்பட்ட எல்லைக்குள் பயணிக்கிறது படம். அதிலேயே காமெடி, ஆக்ஷன், த்ரில் சேர்த்து கலகல கலாட்டாவாக நகர்கிறது திரைக்கதை!

'சொன்ன வேலையைச் செய்தால் போதும்னா என்னைக் கூப்பிடுங்க பாஸ்’ எனச் சொல்வார்போல விஷ்ணு. சொன்னதை மட்டும் எந்த பங்கமும் இல்லாமல் செய்திருக்கிறார். ஹோம்லி மல்லி, மியா ஜார்ஜ். திடுக் திருப்பத்தின்போது மியாவுக்கு நேரும் சிக்கலில் நம்மைப் பதறவைக்கிறார்; முந்தைய காட்சிகளில் வசீகரிக்கிறார். 'அம்மாம் பெரிய கண்களை’ உருட்டி உருட்டியே சிரிப்பு மூட்டுகிறார் கருணாகரன். மிக்ஸி சர்வீஸ் விஞ்ஞானியாக வரும் டி.எம்.கார்த்திக் 'ஆல்ஃபா ரிப்போர்ட்டிங்’ என அள்ளு டெசிபல் கிளப்புகிறார்.

டைம் மெஷின் படங்களில் முன்னும் பின்னுமாக அலைபாயும் திரைக்கதையை அடக்குவதில்தான் சக்சஸ் சீக்ரெட்டே இருக்கிறது. அதைக் கச்சிதமாகக் கையாண்டுள்ளனர். 'டைம் மெஷினை வெச்சுக்கிட்டு... கால் டாக்ஸி நடத்திக்கிட்டு இருக்கோம்’ எனப் படத்தின் வசனமே கிண்டலடித்தாலும், குழப்பம் இல்லாமல் லாஜிக் உதைக்காமல் சுவாரஸ்யம் சேர்க்கிறது திரைக்கதை. ஆனாலும், டைம் மெஷின் பயணத்துக்கான பிரமிப்பு ஏற்படவில்லை. தான் பிறப்பதை தானே மியா பார்க்கும்போதும், வில்லனைக் கொல்லும் அந்த கேரக்டரும்தான் மினி சுவாரஸ்யம்!

இன்று நேற்று நாளை - விகடன் விமர்சனம்

ஷேர் மார்க்கெட் நிலவரத்தைக் கவரும்போது மட்டுமே டைம் மெஷின் எதிர்காலம் செல்கிறது. மற்ற சமயங்களில் மடிப்பாக்கத்துக்கும் கொட்டிவாக்கத்துக்குமாக ட்ரிப் அடிப்பதோடு சரி. இதனாலேயே, 'நிகழ்காலம் மட்டும் அல்ல, கடந்தகாலமும் எதிர்காலமும்கூட நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது’ என்ற டைட்டில் கார்டு வரிகளைத் தவறவிட்டால், குழப்பம் நிச்சயம்!

தீம் சாங்கிலும் பின்னணியிலும் ஈர்க்கிறது 'ஹிப்ஹாப்’ ஆதியின் மெல்லிசை.

ஷங்கர் லெவல் படத்துக்கு, தங்கர் லெவல் பட்ஜெட் கிடைத்ததுதான் வருத்தம்!

நேரத்தை ஒரு புள்ளியில் நிறுத்தி விளையாடும் இந்த டைம் மெஷினில் போகலாம்,  ஒரு ஜாலி ட்ரிப்!

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு