Published:Updated:

"வாழ்க்கை வாழ்வதற்கே !”

ம.கா.செந்தில்குமார்படம்: ஜெ.வேங்டராஜ்

'' 'ஞ்சலி’ ஆரம்பிச்சு 'ஆயுத எழுத்து’ வரை ஒவ்வொரு படத்தின் வேலை ஆரம்பிக்கிறப்பவும் மணி சார் என்னைக் கூப்பிடுவார். ஆனா, நான் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்ச பிறகு, அவர் என்னைக் கூப்பிடவே இல்லை. இனி, நான் அவரை விடுறதா இல்லை. அடுத்த படத்துக்கு அவர் தயாராகிட்டார்னு தெரிஞ்சா, நேரா போய் நின்னுடுவேன். 'கடல்’ படம் வரைக்கும் அவர்கிட்ட வாய்ப்பு கேட்டிருக்கேன். இனியும் கேட்பேன். 'என்னடா... இவன் சோகக் கதை சொல்வான்னு பார்த்தா, வேற சினிமா ஓட்டுறானே’னு பார்க்கிறீங்களா?!'' - மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து கேட்டு மனு செய்திருக்கும் சோகம் மறந்து கலகலவெனச் சிரிக்கிறார் கிருஷ்ணா. 'அலிபாபா’ தொடங்கி 'யாமிருக்க பயமே’ வரை நல்ல கதை, நச் ஸ்க்ரிப்ட் தேடித் தேடி நடிப்பவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனது 'அஞ்சலி’ படத்தில். 

"வாழ்க்கை வாழ்வதற்கே !”

''நானும் அண்ணன் விஷ்ணுவர்தனும் சாந்தோம் செயின்ட் பீட்ஸ்ல படிச்சுட்டு இருந்தோம். தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, சூர்யா, கார்த்தி எல்லாரும் அங்க சூப்பர் சீனியர்ஸ். 'நல்லா ஆடத் தெரிஞ்ச பசங்க வேணும்’னு சொல்லி எங்க ஸ்கூல்ல இருந்து, நான், விஷ்ணு உள்பட அஞ்சு பேரைக் கூட்டிட்டுப் போனாங்க. அப்படித்தான் 'அஞ்சலி’ படத்துல நடிச்சோம். அடுத்து 'டெரரிஸ்ட்’, 'உதயா’னு தொடர்ந்து நடிச்சேன். 'தளபதி’ படத்துக்கு போட்டோஷூட் நடந்துச்சு. ஒரு மஞ்சள் துண்டை, எனக்கும் ரஜினி சாருக்கும் போத்தி போட்டோஸ் எடுத்தாங்க. 'சின்னக் குழந்தை எப்படி தாதா சூர்யாவா மாறுறான்?’னு சொல்றதுக்காக சின்ன வயசுல நடக்கிற விஷயங்கள் ஸ்க்ரிப்ட்ல இருந்தது. அப்புறம்,

'ஒரே ஒரு ஷாட்தான் வைக்கப்போறேன். அதுக்கு நீ வேண்டாம்டா’னு சொல்லிட்டார் மணி சார். அதனால அந்த டெஸ்ட் ஷூட் போட்டோதான் எனக்கு மிச்சம்!

அப்புறம் லயோலாவுல பி.காம்., அமெரிக்காவுல எம்.பி.ஏ முடிச்சுட்டு அங்கேயே சின்ன பிசினஸ் பண்ணேன். நிறையக் காசு வந்துச்சு. ஆனா, வாழ்க்கை வெறுமையா இருந்துச்சு. டான்ஸ் ஆடத் தெரியும்... கேமரா கூச்சம் இல்லை. அண்ணன் படம் பண்ணிட்டிருக்கான். அதனால நடிக்கலாம்னு முடிவுபண்ணி சென்னை வந்து வாய்ப்பு தேடினேன். அப்போ 88 கிலோவில் பிரமாண்டமா இருப்பேன். வெறும் பச்சைக் காய்கறிகளா சாப்பிட்டு, 70 கிலோவா இளைச்சு அப்பா தயாரிப்பிலேயே 'அலிபாபா’ நடிச்சேன். உதயம் தியேட்டர்ல முதல் நாள் முதல் ஷோ.  மொத்தம் எட்டு பேர். அதுல மூணு காதல் ஜோடிங்க. என் கண்ணுல தண்ணி வந்துருச்சு. 'அலிபாபா’ நல்ல படம்தான். ஆனாலும் ஓடல. படத்தின் இந்தி ரைட்ஸை சமீபத்துலதான் வித்தோம். இங்கே ஓடாத ஒரு படத்துக்கு, பெரிய விலை கொடுத்திருக்காங்க.

"வாழ்க்கை வாழ்வதற்கே !”

திரும்பவும் அப்பா தயாரிக்க 'கற்றது களவு’ நடிச்சேன். அது 'சிங்கம்’ படத்தோடு சேர்ந்து ரிலீஸ் ஆச்சு. 'ஏம்ப்பா சிங்கத்தோடு ரிலீஸ் பண்றீங்க?’னு கேட்டாங்க. 'ஜூவுக்குப் போனா, சிங்கத்தை மட்டுமா பார்ப்பீங்க... எலி, மான்னு பார்ப்பீங்கள்ல? அப்படி என்னையும் பார்ப்பாங்க’னு சொன்னேன். ஆனா, ரசிகர்கள் சிங்கத்தை மட்டுமே பார்த்துட்டுப் போயிட்டாங்க. அடுத்து 'கழுகு’ கதை வந்துச்சு.  ஆனா, அப்பாகிட்ட பணம் இல்லை. எல்லாத்தையும்தான் முதல் ரெண்டு படங்கள்லயே அழிச்சுட்டோமே. கதை கேட்டவங்களும், 'இது டாக்குமென்ட்ரி மாதிரி இருக்கு. ஏற்கெனவே உங்க அப்பா காசை அழிச்சுட்ட. இன்னும் என்ன?’னு கேட்டாங்க. ஆனாலும் அப்பாவே தயாரிச்சார். அப்ப மிஷ்கின் சார் மட்டும் 'இந்தப் படத்துல நீ வெளியில வருவடா. எனக்கு நம்பிக்கை இருக்கு’னு சொன்னார். அவர் சொன்னது அப்படியே நடந்துச்சு!''

''ஏன் உங்க அண்ணன் இயக்கத்தில் ஆரம்பத்துலயே நடிச்சிருக்கலாமே?''

''கேட்டேனே! 'அலிபாபா’ ரிசல்ட் தெரிஞ்சதுமே விஷ்ணுகிட்டதான் போனேன். அப்ப அவன் 'சர்வம்’ பண்ணிட்டிருந்தான். 'என்னை வெச்சு நீ ஒரு படம் பண்ணு’னு சொன்னேன். 'டப்பிங் ரொம்ப மோசமா இருக்கு. இம்ப்ரூவ் பண்ணு’னு சொல்லிட்டான். அண்ணியும், 'நீ ஆளே மாறணும். இந்த கலர் காஸ்ட்யூம் போடு. இதெல்லாம் போடாத’னு சொன்னாங்க. அப்படி படிப்படியா என்னை நானே மாத்திக்கிட்டு ஓட ஆரம்பிச்சேன்.  சமீபத்துலதான், 'சொந்த பேனர்ல ஒரு படம் பண்றேன். நடிக்கிறியா?’னு விஷ்ணு கேட்டான். சந்தோஷமாகிட்டேன். அடுத்து, 'இன்னொரு ஹீரோவும் இருக்கார்’னு சொன்னான். 'அதானே பார்த்தேன்’னு நினைச்சுக்கிட்டேன். விகடன்ல கதையா வந்த 'யட்சன்’ தொடர்கதை. அதுலதான் என்னை ஆர்யாகூட நடிக்கவெச்சான். உண்மையைச் சொல்லணும்னா, அங்கேதான் நிறையக் கத்துக்கிட்டேன். அண்ணன் வேலையில காட்டுற சின்சியாரிட்டி பிரமிக்க வெச்சுது. 'யட்சன்’ல என் நடிப்பு பார்த்துட்டு அண்ணன் ஹேப்பி!''

''சினிமா கேரியர்ல ஸ்டெடி ஆகிட்டீங்க. பெர்சனல் லைஃப்ல என்ன பிரச்னை. இத்தனைக்கும் காதல் திருமணம்தானே?''

"வாழ்க்கை வாழ்வதற்கே !”

''ரெண்டு பேருக்கும் பிடிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். 16 மாசம் சேர்ந்து வாழ்ந்தோம். ஆனா, என்ன பிரச்னைனு டீட்டெய்லா பேச சங்கடமா இருக்கு. ஏன்னா, நான் மட்டும் இல்லை... இன்னொருத்தரும் இந்த விஷயத்துல சம்பந்தப்பட்டிருக்காங்க. நாம வாழ்றது ஒரு தடவைதான். அதைச் சந்தோஷமா வாழ்ந்துட்டுப்போகலாமேனு தோணுச்சு. ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும், 'என்ன முடிவுபண்றதா இருந்தாலும் பொறுமையா யோசிச்சு முடிவுபண்ணு. டைம் எடுத்துக்கோ. முடிவைத் தள்ளிப்போடு’னு சொன்னாங்க. 'கவலைப்படாதே. இதுவும் கடந்துபோகும்’னு நிறைய ஆறுதல்கள். ஆனா, என் வாழ்க்கையை நான்தானே வாழ்ந்தாகணும். அது எப்படி வழிநடத்துதோ, அப்படியே வாழ்ந்துட்டுப்போறேன்!''

அடுத்த கட்டுரைக்கு