Published:Updated:

"ரெஸ்ட் எடுக்கணும்... அம்மாகூட இருக்கணும் !”

மனம் திறக்கும் சத்யராஜ்டி.அருள் எழிலன், படம்: கே.ராஜசேகரன், ஓவியம்: ஹாசிப்கான்

''24 வயதில் நடிக்க வந்தேன். எம்.ஜி.ஆர் மாதிரி ஒரு சரித்திரப் படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் பெரிய கனவு. அந்தக் கனவு 'பாகுபலி’ மூலம், என் 60 வயதில் நிறைவேறியிருக்கிறது. 'அமைதிப்படை’ படத்தைப் பார்த்த பிறகு  நடிகர் திலகம் என்னை 'வாய்யா அமாவாசை’னு கூப்பிடுவார். 'வேதம் புதிது’ படம் வந்த பிறகு புரட்சித் தலைவர் என்னை 'என்ன பாலுத் தேவரே...’ என்பார். ரொம்ப வருஷத்துக்குப் பிறகு எல்லோரும் என்னை 'கட்டப்பா’னு கூப்பிடும்போது நிறைவா இருக்கு!'' - சத்யராஜிடம் பெருமிதம் தெரிகிறது .

'கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றான்?’ என்ற கேள்வியோடு முடிகிறது 'பாகுபலி’ படம். கட்டப்பாவுக்கும், 'பாகுபலி’ வம்சத்துக்குமான உள்ளார்ந்த உறவோடு தொடங்கப்போகிறது 'பாகுபலி’ இரண்டாம் ஆட்டம். தமிழ், தெலுங்கு என கையில் 10 படங்களோடு பரபரப்பாக இருக்கும் சத்யராஜை, ஒரு சின்ன இடைவெளியில் சந்தித்தேன்.

''கதை சொல்றதுக்காக ராஜமௌலி என்னைச்  சந்திச்சார். ரொம்பத் தயக்கத்தோட, 'ஒரு சீன்ல  நீங்க முழங்காலிட்டு, ஹீரோவின் காலை உங்க தலை மேல் தூக்கிவெச்சுக்கணும். அதுல நடிப்பீங்களா?’னு கேட்டார். 'கதைக்கு தேவைன்னா, அவசியம் நடிப்பேன்’னு சொன்னேன். முழுக் கதையையும் கேட்டதும், அந்தக் காட்சிக்கு அதுதான் பொருத்தமானதுனு தோணுச்சு. 'பாகுபலி’யின் முக்கியத்துவத்தை அதைவிட நச்சுன்னு எப்படிச் சொல்றது? ஏற்கெனவே 'பெரியார்’ படத்தில் செருப்பால் அடிவாங்குறதுபோல நடிச்சிருக்கேன். 'திருமால் பெருமை’ படத்தில் அண்ணன் சிவகுமார் கால் விரலில் இருக்கும் ஒரு சின்ன வளையத்தை, எடுக்க முடியாத நடிகர் திலகம் சிவாஜி, தன் வாயால் கடித்து எடுப்பார். மூன்று முறை தேசிய விருது பெற்ற மோகன்லால், 'சிறைச்சாலை’ படத்தில் அம்ரீஷ் பூரீயின் ஷூவை நாவால் நக்கித் துடைப்பார். ஆக திரைப்படத்தின் கதைக்கும் கேரக்டருக்கும் எது பொருந்துமோ அதைச் செய்வதுதான் நடிகனின் வேலை.''

"ரெஸ்ட் எடுக்கணும்... அம்மாகூட இருக்கணும் !”

'' 'பாகுபலி’ அனுபவம் எப்படி இருந்தது?''

''சினிமாவுக்கு வந்த இந்த 38 வருஷத்துல, எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம்... தாடி, மீசை வெச்சு நடிக்கிறது. அது ரொம்ப எரிச்சலான விஷயம். 'பெரியார்’ படத்துக்குப் பிறகு நான் தாடி, மீசை வெச்சு நடிக்கலை. ராஜமௌலி, நூறு நாட்கள் கால்ஷீட் கேட்டார். அத்தனை நாட்களும் தாடி மீசையோடு இருக்கிறதை நினைச்சாலே, பீதியா இருந்தது. ஷூட்டிங் ஆரம்பிக்கிறப்போ, இந்தப் பக்கம் ராணா, அந்தப் பக்கம் பிரபாஸ் ரெண்டு பேரும் போட்டி போட்டு சிக்ஸ் பேக் வெச்சிருந்தாங்க. கதைப்படி, நானும் ஒரு முக்கியத் தளபதி. சிக்ஸ்பேக் இல்லாட்டியும் கொஞ்சமாச்சும் அவங்களுக்கு இணையா இருக்கணும்ல... ஒரு பக்கம் தாடி, மீசை பத்தின பயம். இவங்க வேற பக்கத்துல நின்னு உடம்பைக் காட்டி மிரட்டுறாங்க. நைட் 10 மணிக்கு மேல ராஜமௌலியைத் தனியா தள்ளிட்டுப்போய், 'சார்... கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க. அவங்க சிக்ஸ் பேக் வெச்சிருக்காங்க. எனக்கு 60 வயசு. அவங்களைப் பார்க்கும்போது காம்ப்ளெக்ஸ் வருது’னு பேசி, இதுலேர்ந்து எஸ்கேப் ஆகலாமானு பார்த்தேன். ஆனா அவர் 'முழுக் கையையும் மறைக்கிற மாதிரி கை வெச்ச சட்டை போட்டுக்கலாம் சார்’னு சொல்லிட்டார். அந்த காஸ்ட்யூமே எனக்காக உருவாக்கப்பட்டதுதான்.''

''ஷூட்டிங் ஸ்பாட்டில் உங்களோட அரட்டைக் கச்சேரி ரகளை தாங்க முடியலையாமே?''

''கிட்டத்தட்ட 100 நாட்கள் ஷூட்டிங். ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்தது. நாசர் செட்டுக்குள் வரும்போதே கையெடுத்துக் கும்பிட்டபடி, 'ஞானியே வணக்கம்’னுதான் வருவார்.  நான் பதிலுக்குக் கிண்டல் பண்ணுவேன். நான், நாசர், ரம்யா கிருஷ்ணன், எல்லோருமே காமெடி பண்ணி சிரிச்சுட்டிருப்போம். ஒரு கட்டத்துல ராஜமௌலி என்னைக் கூப்பிட்டு ரொம்பத் தயங்கி, 'சார், ஷூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப ஜோக் அடிச்சுச் சிரிக்காதீங்க. மூட் கெட்டுப்போகுது’னு சொன்னார்.  அப்புறமாதான் கொஞ்சம் அடக்கிவாசிச்சோம்.''

''சரி, தமிழ் சினிமாவில் உங்களோட இடம் எது?''

''சினிமாவுக்கும் ஆடியன்ஸுக்கும் ஒரு வில்லன் நடிகரும் முக்கியம் என்பதை நான் உருவாக்கினேன். 'ஒரு வில்லன் எப்படி இருக்கணும்னா, சத்யராஜ் நடிச்ச 'நூறாவது நாள்’,  'விக்ரம்’, 'மிஸ்டர் பாரத்’, 'அமைதிப்படை’, 'இசை...’ அப்படினு சொல்றாங்கல்ல... இதுதான் நான் எனக்காக உருவாக்கின இடம். அந்த இடம் அப்படியே இருக்கு.''

"ரெஸ்ட் எடுக்கணும்... அம்மாகூட இருக்கணும் !”

''பாலிவுட்டில் அமிதாப் மாதிரி கோலிவுட்டில் நீங்க இருக்கீங்க. ஆனால் அமிதாப்புக்கு இந்தியில் கிடைக்கிற வெரைட்டியான கேரக்டர்கள் உங்களுக்கு இங்கு கிடைக்கலையே?''

''ஒரு சினிமா நடிகரா, தொழில்ரீதியா எப்பவும் எனக்கு இன்ஸ்பிரேஷன் அமிதாப் பச்சன்தான். அது எந்த அளவுக்கு என்கிட்ட இருந்துச்சுனா... அவரோட ஒரு தோள்பட்டை கொஞ்சம் இறங்கி இருக்கும். ஒரு பக்கம் லேசா சரிஞ்சமாதிரி அவர் ஓடுறது அவ்வளவு அழகா இருக்கும். அதையே நானும் ஃபாலோ பண்ணினேன். 'பாகுபலி’யிலேயும் அப்படி ஓடினப்போ ராஜமௌலி கூப்பிட்டு, 'உங்க தோள்பட்டை இறங்கியிருக்கு. அப்படி வேணாம். ஒரு பாறை  மாதிரி நீங்க ஒடணும்’னு சொன்னார். அந்த அளவுக்கு நான் அமிதாப் வெறியன். இந்தியில் 'சீனிகம்’, 'பா’, 'ஷமிதாப்’, 'பிக்கு’ மாதிரி, அமிதாப்பை மனதில் வெச்சு கதை பண்றாங்க. எனக்கு அப்படிச் சொல்லணும்னா, 'பெரியார்’, 'ஒன்பது ரூபாய் நோட்டு’, சமீபத்தில் வந்த 'இசை’ மாதிரியான படங்களைச் சொல்வேன்.''

''இப்போ நீங்க  நடிக்கும்  கேரக்டர்கள் உங்களுக்குச் சலிப்பை ஏற்படுத்துதா?''

''எப்பவும் தொழிலை சலிப்பா பார்க்க மாட்டேன். 'நண்பன்’, 'ராஜாராணி’, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, 'இசை’ எல்லாமே எனக்கு பெயர் வாங்கிக்கொடுத்த படங்கள்தான். அதே நேரம் இந்த ஒரு மாசத்துல மட்டும் தமிழ், தெலுங்கில் 25 படங்களை  வேண்டாம்னு மறுத்திருக்கேன். எல்லா படத்துலயும் நான் ஹீரோவுக்கு அப்பா, இல்லைன்னா ஹீரோயினுக்கு அப்பா. 'இதேபோன்ற ஹீரோயின் அப்பா வேடத்தில்  வேறு படங்களில் நடிக்க மாட்டேன்’னு கையெழுத்தும் கேட்கிறாங்க. அட, தமிழ் சினிமாவுல ஹீரோயின் அப்பாவுக்கு காதலைப் பிரிக்கிறதைத் தவிர வேற என்ன வேலை? இதுக்குக் கையெழுத்து வேறயா?''

'பாபநாசம்’ படத்தோட வெற்றி உங்களுக்கு ஏதேனும் கதவைத் திறந்திருக்கா?

''கமல் சார் ஒரு கதவைத் திறந்துவிட்டிருக்கிறார். 'ஷட்டர்’ என்ற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக் 'நைட் ஷோ’ படத்தில் நான் ஹீரோவாக நடிக்கிறேன். த்ரில்லராகவும் குடும்பக் கதையாகவும் இருக்கும். எடிட்டர் ஆண்டனி முதன்முதலா இயக்குநராகி, இயக்குநர் ஏ.எல். விஜய் தயாரித்திருக்கிறார்.''

''சினிமாவுக்கு வந்து 38 வருஷங்கள் ஆச்சு. இப்போ உங்க  வாழ்க்கை லட்சியம் என்ன?''

"ரெஸ்ட் எடுக்கணும்... அம்மாகூட இருக்கணும் !”

''இதை சீரியஸா கேட்டீங்களோ... இல்லை கலாய்க்கக் கேட்டீங்களோ தெரியாது. ஆனா சீரியஸா இதுக்கு பதில் சொல்லணும். என்னால தினசரி ஷூட்டிங் போக முடியாது. மாசத்துக்கு 10 நாளாவது ஓய்வு வேணும். என் பேரன், தீரனோடு விளையாடணும். ஆங்... என் லட்சியம் என்னனு கேட்டீங்கள்ல, குன்னூர் பக்கம் வண்டிச்சோலையில் இருக்கிற

என் வீட்டுக்குப் போய் இயற்கை சூழலில்  வாழ்க்கையை அனுபவிக்கணும். அப்புறம், சென்னை வாழ்க்கையோடு ஒட்ட முடியாம கோயம்புத்தூர்ல இருக்கிற அம்மாவோடு இருக்கணும். இதுதான்... இதுதான் இப்போ என்  மனநிலை.''

''வாரிசுகள் கோலோச்சும் தமிழ் சினிமாவில், உங்க மகன் சிபியை ஒரு நல்ல இடத்துக்குக் கொண்டுவர சிரமப்படுறீங்களா?''

''நான் எதற்குச் சிரமப்படணும்? 'நாய்கள் ஜாக்கிரதை’ படத்துக்குப் பிறகு அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் வருது. இப்போ 'ஜாக்ஷன் துரை’ படமும் நிச்சயம் ஹிட் ஆகும்.வாரிசு என்ற அடையாளம் அரசியலில் வேண்டுமானால் வெற்றியைக் கொடுக்கும். அது  சினிமாவுக்கு உதவாது. ரசிகனுக்கும் நடிகனுக்கும் இருக்கும் நேரடி உறவில், யார் யாரை ஜெயிக்கிறாங்க என்பதைப் பொருத்தது அது. சிபி அந்த இடத்துக்கு வந்துட்டிருக்கார். அதை அவர்தான் தொடர்ந்து செய்யணும்.''

''தமிழ் சினிமாவில் நடந்துள்ள மாற்றங்களை எப்படிப் பார்க்கிறீங்க?''

''இந்த மாற்றங்கள் எல்லாம் என் சமகாலத்துல நடப்பது மகிழ்ச்சி. ஒரு பக்கம் பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா... போன்றவர்கள் தமிழ் சினிமாவை உயர்ந்த இடத்துக்குக் கொண்டுபோனதுபோல, இப்போ  'சுப்ரமணியபுரம்’, 'சூது கவ்வும்’, 'பீட்சா’, 'ஜிகர்தண்டா’, 'காக்கா முட்டை’ என மிகப் பெரிய மாற்றங்களை புதியவர்கள் வித்திட்டிருக்கிறார்கள். இதை வரவேற்கிறேன்.''

"ரெஸ்ட் எடுக்கணும்... அம்மாகூட இருக்கணும் !”

''சாதியைச் சொல்ல கூச்சப்பட்ட காலம் போய், இப்போ வெளிப்படையாவே பெயருக்குப் பின்னால் சாதியைச் சுமக்கும் தலைமுறை உருவாகிருச்சே?''

''இளைஞர்கள் சாதி உணர்வில் இருந்து வெளியே வரணும். அதுதான் அவங்களுக்கும் சமூகத்துக்கும் நல்லது. என்னைப் பொறுத்தவரை எனக்குனு ஒரு சாதி இல்லை. எனக்கு ஒரு சாதி இருக்குன்னு நம்பி, என்னை சாதி விழாவுக்கு அழைச்சப்போ, அதை நிராகரிச்சவன் நான். இப்போ வரை சாதிக்கு வெளியே வாழுறேன். சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயத்துல நம்பிக்கை இல்லை. எம்மதமும் எனக்கு சம்மதம் இல்லை.''

அடுத்த கட்டுரைக்கு