விகடன் விமர்சனக் குழு
காதலர்களைச் சேர்த்துவைக்க உதவும் ஹீரோவிடம் ஒருவன் வந்து, அவர் காதலித்த பெண்ணையே தன்னுடன் சேர்த்துவைக்கச் சொன்னால்... அது என்ன மாயம்?
'உண்மையாகக் காதலிக்கிறீர்களா... காதலி கண்டுகொள்ளவில்லையா? நாங்க இருக்கோம்’ என 'சூப் பாய்ஸ்’களை அழைக்கிறது 'உன்னால் முடியும் தம்பி’ டீம். செமத்தியாக மழை, மாயப் பிம்பம் என மேஜிக் சீன்கள் போட்டு காதலர்களைச் சேர்த்துவைக்கிறது விக்ரம் பிரபு அண்ட் கோ. அவர்களிடம் கோடீஸ்வரன் நவ்தீப், தான் காதலிக்கும் கீர்த்தி சுரேஷை தன்னுடன் சேர்த்துவைக்குமாறு கேட்கிறார். கீர்த்தி யார்... விக்ரம் பிரபுவின் கல்லூரித் தோழி... கிட்டத்தட்ட காதலி. விக்ரம் பிரபு, நவ்தீப்புடன் கீர்த்தியைச் சேர்த்துவைத்தாரா அல்லது அவரே சேர்ந்தாரா என்பதை நாடகத்துக்குள் நாடகம் போட்டுச் சொல்கிறார்கள்.
பலப்பல தமிழ் சினிமா அரைத்த மாவில், பீட்சா செய்திருக்கிறார் இயக்குநர் விஜய். விக்ரம் பிரபு, நவ்தீப் சந்தித்த பிறகு எந்தத் திருப்பமும் இல்லாமல், லகான் குதிரை கணக்காகப் பயணிக்கிறது படம். எந்த அளவுக்கு என்றால், குட்டித் தூக்கம் போட்டு எழுந்தாலும், திரைக்கதை இம்மியும் நகராமல் அதே இடத்தில் இருக்கும் அளவுக்கு!

ஆக்ஷன், காமெடி என மியூசிக்கல் சேர் விளையாட்டில் 'ரொமான்ஸ் ஸீட்’ பிடித்திருக்கிறார் விக்ரம் பிரபு. இறுக்கமாக நின்றபடி 'முகமொழி’களிலேயே ஸ்கோர் செய்யவேண்டிய ஆசிட் டெஸ்ட். பார்ட்டி பாஸ்.
அழகி... கீர்த்தி சுரேஷ். ஃபேஷன் மினுங்கல் இல்லை... டூயட் சிணுங்கல் இல்லை. இயல்பாக, இன்ஸ்டன்ட்டாக ஈர்க்கிறார். கன்னக்குழி வெட்கமோ கன்னம் அப்பும் சோகமோ... எதுவும் பொருந்துகிறது கீர்த்திக்கு. சீரியஸ் சினிமாவைக் கொஞ்சமாச்சும் 'சிரி’யஸ் ஆக்குவது பாலாஜியின் ஒன்லைனர்கள் மட்டுமே. பாலாஜியும் 'எஃப்.எம்’ வேகம் குறைத்து சினிமா மீட்டர் பிடித்திருக்கிறார்.

வேலை இல்லாதவர்கள் நாடக ஆர்வம், சின்னச்சின்ன ஐடியாக்கள் பிடித்து காதல் விதைக்கும் முயற்சிகள், ஹாக்கியில் பவர் ப்ளே கிரிக்கெட் என நடுநடுவே 'வாட் எ ஐடியா சார்ஜி!’ ஆனால், மற்ற சமயங்களில் நாடகம், நாடகத்துக்குள் நாடகம் என 'டிராமா மோடு’.
'ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்... 'இசையமைப்பாளர்’ ஜி.வி என்ன ஆனார்? காதலும் காதல் சார்ந்த சினிமாவுக்கு கிரீட்டிங் கார்டு அழகு சேர்க்கிறது நீரவ் ஷா ஒளிப்பதிவு.
கல்லூரி சமயம் காதலைச் சொல்ல தோழி தடையாக இருந்தாள் ஓ.கே. அவளுக்கே கல்யாணமான பிறகும் காதலை வெளிப்படுத்த என்ன தயக்கம் ப்ரோ?
இரண்டரை மணி நேரத்துக்கும் குறைவாகத்தான் இருக்கிறது படம். ஆனாலும், நாலு மணி நேரம் பார்த்த எஃபெக்ட் இருக்கிறதே... அது என்ன மாயம்?!