Published:Updated:

கங்கையில் மிதக்கும் அந்த பரிசு !

பா.ஜான்ஸன்

கங்கையில் மிதக்கும் அந்த பரிசு !

பா.ஜான்ஸன்

Published:Updated:

நீங்களும் உங்கள் ஏரியாவில் வசிக்கும் யாரோ ஒருவரும் முதல்முறையாகச் சந்தித்துக்கொள்ளும் முன்னர், உங்கள் இருவர் வாழ்விலும் நடந்த சில நிகழ்ச்சிகள் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தப்பட்டது என்றால், நம்ப முடியுமா? அந்தச் சாத்தியத்தை மிக யதார்த்தமான கதையாகச் சொல்கிறது 'மாஸான்’! 

இந்தக் கதையில் மொத்தம் ஐந்து பேர்; நாலரை பேர் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். நான்கு பேர் மற்றும் ஒரு சிறுவன். இவர்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை. தேவி, தன் காதலனுடன் ஹோட்டல் அறை ஒன்றில் உல்லாசமாக இருக்கும்போது, போலீஸ் வந்துவிடுகிறது. காதலன், போலீஸுக்குப் பயந்து கழிவறைக்குச் சென்று தற்கொலை செய்துகொள்கிறான். அந்தக் காவல் அதிகாரி, தேவியின் தந்தையை அழைத்து, 'மூன்று லட்சம் கொடுத்தால், இந்த வழக்கில் இருந்து உன் மகளை விடுவிக்கிறேன்’ என்கிறார்.

கங்கையின் மறுகரையில் வசிப்பவன் தீபக். கங்கைக் கரையில் பிணங்களை எரிப்பதுதான், குடும்பத் தொழில். அந்தக் குடும்பத்துக்கு இது பெருமையான தொழிலாக இருக்கவில்லை. தன் மூத்த மகனைப்போல இளைய மகன் தீபக் ஆகிவிடக் கூடாது என்பதால், அவனை டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் படிக்கவைக்கிறார் தந்தை. தீபக்குக்கு உயர்சாதிப் பெண் ஷாலுவுடன் காதல். இந்தக் காதல் என்ன ஆகிறது? தேவியின் தந்தை மூன்று லட்சத்தை ஏற்பாடு செய்தாரா? ஒன்றுக்கு ஒன்று சம்பந்தப்படாத இந்தக் கேள்விகள், சிறிய அழகான பின்னலில் இணைந்து விலகுகின்றன படத்தில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கங்கையில் மிதக்கும் அந்த பரிசு !

கங்கையில் சில்லறையைத் தூக்கி எறிந்து, அதிகச் சில்லறை எடுக்கும் சிறுவன் மீது பந்தயம் கட்டுவது, இரவு - பகல் என ஷிஃப்ட் பிரித்து பிணம் எரிப்பவர்கள், எப்போதும் அணையாமல் பிணங்களை எரிக்கும் நெருப்பு, கங்கையைச் சுற்றி நடக்கும் பரிவர்த்தனைகள்... என, படம் முழுக்க கங்கையும் கங்கை சார்ந்த பகுதிகளுமாக விரிகிறது. எளிமையான இரு கதைகள். அவை இரண்டும் மெல்லியதாக உரசிக்கொள்ளும் ஓர் இடம் அத்தனை சிலிர்ப்பு.

படத்தின் மிகப் பெரிய பலம் கதாபாத்திரங்கள். தேவியாக நடித்திருக்கும் ரிச்சா சந்தா, அவ்வளவு சுவாரஸ்யம். உணர்ச்சி வேகத்தில் கிளம்பி காதலனுடன் நெருங்குவது, அதுவே வினையாகி இன்னொருவன் 'நீ என்னுடன் படுக்க வா’ என அழைக்கும்போது, எந்தச் சலனமும் இல்லாத முகத்துடன் அவனைக் கடந்துசெல்வதுமாக அத்தனை கச்சிதம். செல்போன் வழியே இந்தி மற்றும் உருதுக் கவிதைகள் சொல்லும் காதலியிடம், 'வாவ் சூப்பர்’ எனப் புரியாத கவிதையைப் புகழ்ந்து, 'இப்போ நாம ஃப்ரெண்ட்ஸ்தானே?’ எனத் தயங்கியபடியே கேட்பது, அவளது ஃபேஸ்புக் பக்கத்தை கலர் பிரின்ட் எடுத்துப் பத்திரப்படுத்திக்கொள்வது என, தீபக்காக நடித்திருக்கும் விக்கி கௌஷல் அசத்தியிருக்கிறார். 'நான் என்ன மனுஷனா... மாடா? எவ்வளவு வேலைதான் செய்யுறது?’, 'என் காசுல நான் செலவு பண்றேன். உங்களுக்கு என்ன?’ எனச் சீறும் சிறுவன் ஜோன்தா கதாபாத்திரம், படத்தில் இன்னொரு சுவாரஸ்யம்.

கங்கையில் மிதக்கும் அந்த பரிசு !

'மாஸான்’ உருவாக மிக முக்கியக் காரணமாக இருந்தவர் வருண் குரோவர். ஐ.ஐ.டி பட்டதாரி வருணும் அனுராக்கின் சிஷ்யர்தான் படத்தின் இயக்குநர் நீரஜ் கெய்வான். தன் முதல் படத்துக்கான கதையைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பத்தில் இருந்தபோது, 'நீ இப்போ எதைப் பத்தியும் யோசிக்காத. நாம கொஞ்சம் பயணிக்கலாம்’ என காசிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு மலிவான ஹோட்டல் ஒன்றில் தங்கி, ஒரு வாரம் காசியின் நீள அகலங்களில் கதை தேடும்போது, நீரஜ் மனதில் பட்டென ஒரு ஐடியா உதித்திருக்கிறது. அங்கு பிணம் எரிப்பவர்களில் யாராவது ஒருவருக்கு ஒரு பெண்ணுடன் காதல் உண்டானால் என்ன நடக்கும், புராதான பெருமை பேசும் நகரத்துக்குள் ஒரு பெண் செக்ஸ் ஸ்கேண்டலில் சிக்கினால் என்ன நிகழும்... இப்படி எல்லாம் புது ரூட் பிடித்திருக்கிறார்கள். இரண்டு நேர்கோட்டுக் கதைகள் ஒரு வெட்டில் இணைந்து விலகும் ஒன்லைனை நீரஜ் விவரிக்க, அதற்கு திரைக்கதை வடிவம் கொடுத்தார் வருண். கேன்ஸ் வரை சென்று இரண்டு விருதுகள் வாங்கிய 'மாஸான்’ படத்துக்கு இப்போது பாலிவுட்டின் பிரபலங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்திருக்கிறார்கள்.

'மாஸான்’ என்றால் 'மயானம்’ எனப் பொருள். படத்தின் திருப்பம் ஒவ்வொன்றிலும் முக்கியக் கதாபாத்திரமாக இணைந்து அத்தனை அமைதியாக இருக்கிறது அந்த மயானம்... தேவி, பிரிக்காமலே கங்கையில்விட்ட காதலனின் பரிசுப்பொருளைப்போல!